செவ்வாய், 4 ஜூலை, 2017

அமைதிப்படை செய்த அட்டூழியம் தொடர் ஈழம் ஹிந்தியா ராஜீவ் கீற்று தொடர் IPKF

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு 15.10.87 இன்று சிங்கள இராணுவத்தால் நடமாட முடியாத இடங்களிலெல்லாம் ஆட்லரி செல் விழுந்து வெடித்தது. இந்தியப் படையினர் கண்மூடித் தனமாகச் செல் அடித்ததனால் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர். பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் வீதியோரங்களிலும், மர நிழலிலும் தங்கியுள்ளனர். இவ்விடங்களில் ஏராளமான பெண்களை இந்தியப் படையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். இதில் 11 பெண்களது சடலங்கள் ஒரு அறையினுள் காணப்பட்டன. உடைகள் இல்லாத நிலையில் பெண்களின் சில உறுப்புகள் வெட்டப்பட்டும், மனிதப் பல் அடையாளங்கள் காணப்பட்ட நிலையிலும் இருந்தன. (இதில் திருமணமான பெண்களும் அடங்குவர்) 40 பெண்களை இந்தியப் படையினர் இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கவச வாகனத்தால் அடையாளம் தெரியாதவாறு நெரித்துக் கொன்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சந்திவெளி என்னும் இடத்தில் வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணி வெடித் தாக்குதலில் 3 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் வந்த டிரக் முற்றாகச் சேதமடைந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம் வெளியில் தமிழர்களின் 300 வீடுகளை எரித்த இந்தியப் படையினர் அங்குள்ள சர்வோதயத்தில் இருந்த 25 அப்பாவித் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். இதே இடத்தில் விடுதலைப் புலிகள் இவர்கள் மீது மேற்கொண்ட கண்ணி வெடித் தாக்குதலில் 24 இந்தியப் படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அவர்களின் டிரக் வண்டி முற்றாகச் சேதமுற்றது.

கிரான், வாழைச்சேனை, சந்திவெளி, முறக் கொட்டாஞ் சேனை, வந்தாறு மூலை ஆகிய இடங்களில் இந்தியப் படையினர் ஏராளமான இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி யதுடன் அவர்களது உடைகளைக் களைந்து வீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து, நிற்க வைத்து அவமானப்படுத்தியுள்ளது.

கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில் தேடுதல் நடத்திய இந்தியப் படையினர் இரு அப்பாவிப் பொது மக்களைக் கொன்றுள்ளனர்.

முறக்கொட்டாஞ்சேனை ரெயில் நிலைய அதிபர் சுப்பிரமணியம், சந்திவெளி பேக்கரி உரிமையாளர் ராம் ஆகியோரது வீடுகள் உட்பட ஏராளமான தமிழர்களது வீடுகளில் நகைகள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பேக்கரி உரிமையாளர் வீட்டில்

28 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு தங்க மாலைகளையும் எடுத்துள்ளனர்.

மாலை 2 மணியளவில் தெல்லிப்பழைக்கும் மல்லாகத்துக்கும் இடையில் வைத்து இந்திய அமைதி காக்கும் படையினரின் செயின் கவச வாகனத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் வண்டி பாவிக்க முடியாத அளவுக்குச் சிதறியது. அதன் சில பாகங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றனர்.

15 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் முறிகண்டியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 6 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சாவகச்சேரி புதுக்காட்டுச் சந்தியிலும் 6 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.

14, 15 ஆம் தேதிகளில் நாவற்குழி முகாமிலிருந்து வெளியே வந்த இந்திய அமைதி காக்கும் படையினர் மீது விடுதலைப் புலிகளால் 6 தடவையாக மேற் கொள்ளப்பட்ட “கிளைமர்” கண்ணிவெடித் தாக்கு தல்களினால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலத்த இழப்புக்களுடன் முகாம் திரும்பினர்.

15 ஆம் தேதி நடைபெற்ற மோதலின்போது ஜேம்ஸ், பீரிஸ் ஆகிய இரு விடுதலைப் புலிகள் இயக்க வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

16, 17.10.87

16, 17 ஆம் தேதிகளில் மட்டக் களப்பில் இந்திய அமைதி காக்கும் படையினரால் 10 இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். இவர்களில் 7 பேர் மரணமடைந்துள்ளனர். மீதி மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. மேலும் சில பெண்களைக் காணவில்லை. இப்பகுதிகளில் இருந்த தமிழர்களின் 200 வீடுகளை இந்திய அமைதி காக்கும் படையினர் தீ வைத்துக் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடும் தாக்குதலில் இந்தியப் படையினருக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது.

17 ஆம் தேதி கல்லுண்டா வெளியில் நடைபெற்ற மோதலில் 36 இந்தியப் படையினர் கொல்லப் பட்ட னர். ஒரு ஜீ.பி.எம்.ஜீ. உட்பட பல ரைபிள்களையும், 10,000-க்கும் மேற்பட்ட ரவைகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். கோப்பாயில் நடந்த சண்டையில் ஒரு மோட்டாரும், ஆறு செல்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டன. 16 ஆம் தேதி நடைபெற்ற மோதலின்போது விடுதலைப் புலிகளின் தரப்பில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த காப்டன் அசோக் வீரமரணமடைந்தார்.

உரும்பிராய்ப் பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த வாழைத் தோட்டங்கள் மற்றும் பயிர்கள் எல்லாம் முற்றாக அழிந்துவிட்டன. செயின் கவச வாகனங்களைத் தோட்டங்களுக் கூடாகச் செலுத்தி பயிர்களையெல்லாம் நாசம் செய்த இந்திய அமைதி காக்கும் படையினர் 14 இளம் பெண்களைப் பிடித்துச் சென்றனர். இந்திய அமைதி காக்கும் படையினரின் அராஜகத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து வரும் விடுதலைப் புலிகள் அவர்களிட மிருந்து பறித்தெடுத்த ஆயுதங்களையும், ரவைகளை யும் வைத்தே தொடர்ந்து போராடுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கிரான், கொம்மாந்துறை, சம்பு வெளி, சித்தாண்டி ஆகிய இடங்களில் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அப்பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகளையும் எரித்தனர். அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். கண்ணுமுனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 24 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். ரவைகள் நிரம்பிய 3 எல்.எம்.ஜீ. மகசீன்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

17 ஆம் தேதி இரவு உரும்பராயில் 16 இளம் பெண்களை இந்திய அமைதி காக்கும் படையினர் பிடித்துச் சென்றனர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக