வியாழன், 27 ஜூலை, 2017

மழவர் கொள்ளைக்காரர் பழனி மன்னன் வேள் ஆவி முருகன் போன்ற போர்த்திறம் வழிப்பறி இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 7
பெறுநர்: எனக்கு
அகநானூறு
பாடல் 1 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்
#1 பாலைத் திணை - பாடியவர்: மாமூலனார் - மரபு வழி மூலம்
துறை – பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது
தலைவி: “ ‘பிரியலம்' என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ”
வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ
லுருவக் குதிரை மழவ ரோட்டிய
முருக னற்போர் நெடுவே ளாவி
யறுகோட்டி யானைப் பொதினி யாங்கட்
5 சிறுகா ரோடற் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியல மென்ற சொல்தா
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருட் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
10 வழற்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி
னிழற்றேய்ந் துலறிய மரத்த வறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி
னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச்
15 சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்
றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுற்
கடல்போற் றோன்றல காடிறந் தோரே
அகம் #1. சொற்பிரிப்பு மூலம்
வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண்
5 சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக
10 அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
15 சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே
அடிநேர் உரை
வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய, முருகனைப் போன்ற நல்ல
போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின் அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய
யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
5 சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த சாணைக்கல் போல்
(உன்னைப்) ‘பிரியமாட்டேன்' என்ற சொல்லைத் தாம் மறந்துவிட்டாரோ! தோழி!
(என்) சிறந்த மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப்
பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக - நிலம் பிளக்குமாறு
10 தீயைப் போல் வெம் கதிர்கள் பசுமையே அற்றுப்போகும்படி எரித்தலால்
(தம்)நிழல் குறைந்து உலர்ந்துபோன மரங்களைக் கொண்ட - பாறைகள் காய்ந்து
நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய - ஒருவரேனும் அவ்வழியே
செல்பவர் இல்லாததால், வழிப்பறிசெய்வோரும் சோர்ந்திருக்கும்
15 வறண்ட நிலத்தின் பொலிவற்ற பாதைகளை உடைய - ஆடும் கிளைகளிலுள்ள நாரற்ற
முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள் சுழற்றி அடிக்கும் கடுமையான
காற்று மேலெழும்ப, சிதறலுண்டு, உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று
நுரைத்தெழ, முன்பகுதிக் கடல் போன்று தோன்றும் காட்டினைக் கடந்து
சென்றோர். பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது பாடலின் பொருள்
அமைந்திருக்கும் முறை (வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல் உருவக் குதிரை)
மழவர் ஓட்டிய
(முருகன் நல் போர் நெடு வேள்) ஆவி (அறு கோட்டு யானை) பொதினி ஆங்கண் (சிறு
காரோடன்) பயினொடு சேர்த்திய கல் போல் -‘பிரியலம்' என்ற சொல் தாம்
மறந்தனர்கொல்லோ! தோழி! (சிறந்த வேய் மருள் பணைத்) தோள் நெகிழச் -சேய்
நாட்டுப் பொலம் கல வெறுக்கை தருமார்- (நிலம் பக அழல் போல் வெம் கதிர்
பைது அறத் தெறுதலின் நிழல் தேய்ந்து) உலறிய மரத்த, அறை காய்பு, (அறு
நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின் உகு நெல் பொரியும்) வெம்மைய,
(யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய) சுரம் புல்லென்ற ஆற்ற,
(அலங்கு சினை நார் இல் முருங்கை) நவிரல் வான் பூ (சூரல் அம்) கடு வளி
எடுப்ப (ஆர்உற்று உடை திரைப் பிதிர்வின் பொங்கி) முன் கடல் போல்
தோன்றல-காடு இறந்தோரே.
அரும்சொற்பொருள்:
ததைந்த - சிதைந்த, மலர்ந்த; கண்ணி - ஆண்கள் தலையில் அணியும் மாலை;
ஒண் < ஒள் - சிறந்த, ஒளிர்கின்ற; கழல் - (ஆண்கள்)கால்களில் அணியும்
வளையம்,தண்டை; உருவ - அச்சம்தருகின்ற; மழவர் - இளைய போர்வீரர்,
மழநாட்டைச் சேர்ந்தவர்; காரோடன் - சாணைபிடிப்பவன்; பயின் -
அரக்கு,பிசின்; கல் - (இங்கு)சாணைக்கல்; வேய் - மூங்கில்; பணை - பருத்த;
பொலம் - பொன்; வெறுக்கை - செல்வம்; பைது - பசுமை; பிதிர்வு - சிதறல்
விளக்கம்
மழவர் என்போர் மழபுலம் எனப்படும் நாட்டைச் சேர்ந்தோர்.
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே உள்ள, காவிரியின் வடகரைப்பகுதியே அது.
கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி
அது. கடைச்சங்க கால வள்ளல்களுள் ஒருவனான ஓரி என்பவன் மழவர் பெருமகன்
எனப்படுகிறான். இவர்கள் நெடுவேல் மழவர் (புறம் 88/3), வெள்வேல் மழவர்
(அகம் 269/4), எனவும், நோன் சிலை மழவர் (அகம் 119/9), வீளை அம்பின்
விழுத் தொடை மழவர் (அகம் 131/6) எனவும் அழைக்கப்படுவதால் விற்போர்,
வேல்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் எனலாம். மேலும் இவர்கள் உறுகண்
மழவர் (அகம் 121/11), கடுங்கண் மழவர் (337/11), வன்கண் மழவர் (187/7)
எனவும் கூறப்படுவதால் கொடிய தன்மையுடைவர் என்றும் அறியலாம்.
மேலும், இவர்களைப்பற்றி:
கடும் கண் மழவர் களவு உழவு எழுந்த - அகம் 91/11
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் - அகம் 35/4
பயம் நிரை தழீஇய கடும் கண் மழவர் - அகம் 309/2
என்ற குறிப்புகள் காணப்படுவதால், இவர்களுள் ஒருசாரார் சிறுகுழுவினராக
வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர் எனலாம்.
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி - மது 687
உருவக் குதிரை மழவர் ஓட்டிய - அகம் 1/2
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி - அகம் 61/12
என்ற அடிகளால் அவ்வப்போது மழவர்கள் பெருமன்னர்களால்
துரத்தியடிக்கப்பட்டனர் எனலாம். மழ களிறு, மழ விடை என்ற சொற்களில் மழ
என்பது இளமை என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே மழவர் என்பதற்கு இளையோர்
என்ற பொருளும் இவ்விடங்களில் கூறப்படுவதுண்டு.
பொதினி:
பொதினி என்பது இன்றைய பழனி என்பது பலர் கருத்து. ஆவி என்ற வேள்குடிக்
குறுமன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர். இவருள் நெடு வேள் ஆவி என்பவன் மிகச்
சிறந்தவன். இவனைப்பற்றிய குறிப்பே இங்கு காணப்படுகிறது. மதுரையையும்,
முசிறியையும் இணைக்கும் அன்றைய நெடுவழியின் இடையில் இருப்பது பழனி. இந்
நெடுவழியின் வழியேதான் யவனரின் பாண்டிய நாட்டுடனான வணிகம் நடைபெற்றது.
இந்த வணிகத்தின் முக்கிய பொருள்களில் ஒன்றான கண்ணாடிக் கற்கள் (glass
stones), விலைகுறைந்த மணிகள் (semi precious stones) ஆகியவற்றை நன்கு
தீட்டிப் பளபளப்பாக்கி அவற்றைக்கொண்டு அணிகலன்கள் செய்யும் தொழிற்சாலைகள்
பழனி அருகில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் இருந்ததற்கான சான்றுகள்
அகழ்வாய்வு மூலம் கிடைத்துள்ளன. இங்கே 1.43 மி.மீ அளவேயுள்ள மிகச் சிறிய
மணிகள் துளையுடன் காணப்படுகின்றன.
மணிகளைப் பட்டைதீட்டுவதற்கும், அவற்றில் துளையிடுவதற்கும் நுண்ணிய சாணைக்
கற்கள் வேண்டும். வட்ட வடிவிலான சாணைக் கற்களின் உட்புறத்தை அரக்கில்
பதித்து அதனை ஓர் அச்சில் கோத்துச் சுழவிடுவார்கள்.
இன்றைக்கும் இத்தகைய சாணைக்கற்களோடு, சாணை பிடிப்பதற்காக, “சாணை
பிடிக்கலையோ .. சாணை” என்று தெருக்களில் கூவி வருவோரைச் சிற்றூர்களில்
காணலாம். அச்சு வேகமாகச் சுழலும்போது சாணைக்கல் கழன்றுவிடாதபடி அதனை
அச்சுடன் இறுக்கப் பிடித்துக்கொள்ள அரக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அரக்குத்தான் இங்கு பயினி எனப்படுகிறது. எவ்வளவு சுழன்றாலும்
அரக்குடன் சேர்ந்த சாணைக்கல் கழன்றுவிடாதது போல், உன்னைவிட்டும் நான்
பிரியமாட்டேன் என்று தலைவன் கூறியதாகத் தலைவி கூறுகிற பின்னணி இதுதான்.
பழனி வழியே செல்லும் நெடுவழி வணிகர்களைக் கொள்ளையடிக்கவரும் மழவர்களை
நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்ற செய்திதான் இங்கு கூறப்படுகிறது.
பொதினி ஆங்கண் என்பதைச் சிறுகாரோடன் என்பதற்கு அடையாகக் கொள்ளாமல்,
‘பொதினி ஆங்கண் .. .. பிரியலம் என்ற சொல்' எனக்கொண்டு, தலைவன் பொதினியில்
கூறிய சொல் என்று உரைகள் காணப்படுகின்றன. ஆனால் பொதினியில் உள்ள
சிறுகாரோடனின் சாணைக்கல் என்று கொள்வது வரலாற்று நோக்கில்
பொருந்திவருவதாகக் காணப்படுகிறது.
1. உவமை நயம்
அ. சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல்
இந்த உவமையின் நயத்தையும், அதன் வரலாற்று விளக்கத்தையும் பொதினி என்பதன்
கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில் காண்க. பொதினி என்பது
அறுகோட்டு யானைப் பொதினி எனப்படுகிறது. திருவிழா போன்ற
நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் யானையின் தந்தங்களை அறுத்து
அவற்றின் கூர் மழுங்கச்செய்து, பின்னர் அவற்றில் பூண்கள் இட்டு
அழகுபடுத்துவார்கள். இதுவே அறுகோட்டு யானை எனப்படுகிறது. யானையின்
தந்தத்தைச் சாதாரணக் கத்தி கொண்டு அறுக்க முடியுமா? அதற்கு மிகவும்
கூர்மையான வாள் வேண்டும். அதுவும் அடிக்கடி கூர்மையாக்கப்பட வேண்டும்,
அதற்குச் சாணைபிடிப்பவன் மிக அருகில் இருக்கவேண்டும். பொதினியில்
இருக்கும் இந்த யானைகளுக்கு உரிமையாளன் வேள் ஆவி. இந்த வேள் ஆவி மிகச்
சிறந்த வீரன். முருகனைப் போன்று சூர் மருங்கு அறுப்பதில் வல்லவன்.
முருகன் சூரர்களை விரட்டியடித்தது போல், ஆவி மழவர்களை விரட்டியடித்தவன்.
இந்த மழவர்களும் இலேசுப்பட்டவர்கள் அல்ல. அச்சம் தரும் வகையில்
குதிரையில் விரைவாக வருபவர்கள். அச்சத்தோடு குதிரையைப் பார்க்கும்போது
அதனைச் செலுத்தும் அவர்கள் கால்களைப் பார்க்கிறோம். அவற்றில் கழல்கள்
மின்னுகின்றன. இந்தக் கால்களுக்குச் சொந்தக்காரன் யார் என்று மேல் நோக்க,
அவர்களின் தலையைப் பார்க்கிறோம். தலைமுடியை இறுக்க முடிந்து, அதைச்
சுற்றிப் பூ மாலையைக் கட்டியிருக்கிறார்கள். அன்றைய கொள்ளைக்காக,
அதிகாலையில் புறப்படுவதற்கு முன்னர் அன்று அலர்ந்த பூக்களைக் கொண்டு மாலை
செய்திருக்கிறார்கள். முற்றும் மலராத அந்தப் பாதி மலர்களினின்றும் தேன்
எடுக்க வண்டுகள் மொய்க்கின்றன. இப்போது இந்தப் பாடலை முதலிலிருந்து
படித்துப்பாருங்கள். ‘பிரியலம் என்ற சொல்'லுக்குக்
கொடுக்கப்பட்டிருக்கும் இத்தனை அடைமொழிகளின் சிறப்பு இப்போது புரிந்ததா?
ஆ. நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே
பிரிந்த தலைவன் சென்ற நிலம் வறட்சி மிக்கது. அந்த வறட்சியிலும் பூத்து
நிற்கும் நவிரல் என்னும் முருங்கை மரத்தின் பூக்கள் சூறைக் காற்றால்
அலைக்கழிக்கப்பட்டு, சிதறிப் பறக்கின்றன. ஆங்காங்கே குவியலாய்க்
கிடக்கும் அந்தப் பூக்கள் தரைக்காற்றால் தள்ளுண்டு, முன்னும் பின்னும்
தத்தித்தத்தி நகர்கின்றன. அது அலைகளால் தூக்கியெறியப்பட்ட கடல் நுரை
சிதறுவது போல் காணப்படுவதால், அந்தச் சுரமே ஒரு கடற்கரைப் பகுதி போலக்
காட்சியளிக்கிறது.
ஆமாம், அந்த வெப்பக் காட்டில் - சுனைகளும் வற்றிக் காய்ந்துபோன - நிலம்
எல்லாம் வெடித்துப்போன - இடத்தில் முருங்கை மட்டும் பூத்து நிற்குமா?
முருங்கை மரம் ( Moringa Oleifera) எந்த வறட்சியான சூழ்நிலையிலும்
காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது என்கின்றனர் தாவரவியலார். ஆக,
புலவர் உண்மைக்கு மாறாக ஒன்றனையும் கூறவில்லை.
2. பாடலின் சிறப்பு
புலவர் பாடவந்தது பிரிவினால் தலைவி இரங்கிக் கூறுவதை. இது பாலைத்
திணையின்பாற்படும்.
பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்கொல்லோ தோழி
-------------------------------
------------ காடு இறந்தோரே
என்ற அடிகளில் பாலைத்திணையின் உரிப்பொருளான, பிரிதலும், பிரிதல்
நிமித்தமும் என்பதை இந்த அடிகளில் நேரடியாக உணர்த்துகிறார் புலவர்.
பாலைக்கு முதற்பொருளான நிலம் பாலை நிலம் - அதாவது, வறண்ட பகுதி.
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்
----------------------------------------------------------------
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற
என்ற அடிகளில் பாலைநிலத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்
புலவர். பாலைக்குரிய சிறுபொழுது நண்பகல்.
அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்
உகு நெல் பொரியும் வெம்மைய
என்ற அடிகளில் கடுமையான நண்பகலினையும் நம் கண்முன் காட்டுகிறார்.
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி
என்ற அடிகளில் பாலைநிலைத்திற்கே உரித்தான நவிரல் மரம், அதன் பூ, சூறைக்
காற்று ஆகிய பாலை நிலக் கருப்பொருள்களையும் சிறப்பாகக்
கொண்டுவந்துள்ளார். இப்படி, ஒரு திணைக்குரிய உரிப்பொருள், முதற்பொருள்,
கருப்பொருள் ஆகிய மூன்றனையும் நேரிடையாகக் கொண்டு பாலைத் திணையைச்
சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுவதாலோ என்னவோ, இது அகநனூற்றில்
முதற்பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
தலைவியின் பிரிவுத் துயரத்தைப் பாடவந்த புலவர், பிரிவுத் துயரத்தின்
கொடுமையைச் சொல்லாமல், பாலை நிலத்தின் கடுமையைக் கூறுவதன் காரணம் என்ன?
19 அடிகள் உள்ள இந்தப் பாடலில், பாலை நிலத்தின் கொடுமை மட்டுமே 10
அடிகளில் கூறப்படுகிறது! முருங்க மரத்தின் வெள்ளைப் பூக்கள் காற்றால்
உதிர்ந்து கடல்நுரை போல் பொங்கி வந்தால் என்ன சிறப்பு? இதன் மூலம் புலவர்
வேறொரு செய்தியைக் கூறவருகிறார். தலைவனின் பிரிவால் வாடிய தலைவியின்
உள்ளம், அவனது நீடிய பிரிவால் உடைந்துபோக ஆரம்பிக்கிறது (நிலம் பக). அழல்
போன்ற வெம்மையான துயரம் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லாத அளவுக்குச்
சுட்டுப் பொசுக்குகிறது (அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்).
அதனால் அவள் தனது நலம் தேய்ந்து உலர்ந்த மேனியளானாள் (நிழல் தேய்ந்து
உலறிய மரத்த). ஏக்கத்தில் காய்ந்த அவளின் பசுமையான எண்ணங்கள் பசையே
இல்லாமல் வாடிப் புலர்ந்து போயின (அறை காய்பு, அறு நீர்ப் பைம் சுனை ஆம்
அறப் புலர்தலின்). இனிய நினைவுகள் ஏக்கப் பெருமூச்சால் பொரிந்துபோயின
(உகு நெல் பொரியும் வெம்மைய). அவளின் நெருங்கிய உறவினர்கள் வந்து போவது
ஏறக்குறைய நின்றுபோனதால் (யாவரும் வழங்குநர் இன்மையின்), வீடே களையிழந்து
காணப்படுகிறது (சுரம் புல்லென்ற ஆற்ற). அத்துணை துயரத்திலும் ‘பிரியலம்'
என்று அவன் சொல்லிய சொல் ஒன்றே உள்ளத்தில் மலர்ந்து நிற்கிறது.
இருப்பினும், பிரிவுத்துயரம் சூறைக்காற்றாய் சுழற்றியடிக்க (சூரல் அம்
கடு வளி எடுப்ப) அந்த இன்பமும் கொஞ்சம் கொஞ்சமாக சிதறிப்போகிறது (உடை
திரைப் பிதிர்வின் பொங்கி). துயரக்கடலின் விளிம்பில் நிற்கும் (முன் கடல்
போல் தோன்றல) அவளின் எண்ண அலைகளால் சிதறடிக்கப்படும் வெள்ளிய நுரை போன்ற
அந்த இனிய நினைவுகளால் அவள் உள்ளம் பொங்கி விம்முகிறது. இப்பொழுது
படித்துப்பாருங்கள், ‘நிலம் பக' என்பதிலிருந்து ‘கடல் போல் தோன்றல'
என்பது வரையிலான அடிகளை. புலவர் இங்கே கூறியிருப்பது பாலையின் கடுமையையா
அல்லது பிரிவின் கொடுமையையா என்பது தெரியும். இங்கே எந்த உவமையையும்
புலவர் நேரிடையாகக் கூறவில்லை. இருப்பினும் பாலையின் கடுமையைக் கூறும்
அடிகளின் உள்ளே பிரிவின் கொடுமை உறைந்திருக்கிறது. இதையே உள்ளுறை உவமம்
என்கிறோம். சங்கப்புலவர்கள் இப்படிக் கூறும் உத்தியில் கைதேர்ந்தவர்கள்.
சங்க இலக்கியத்தின் தனிச் சிறப்பே இதுதான் எனலாம்.
“என்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறீர்களா?” என ஒருநாள் தலைவி
தலைவனைக் கேட்கிறாள். “இல்லை இல்லை” என்று மறுக்கிறான் அவன். அத்துடன்
இல்லாமல், “சாணை இயந்திரத்தில் பிசின் கொண்டு ஒட்டப்பட்ட சாணைக்கல் போல்
நான் எப்போதும் உறுதியாக உன்னுடனேயே இருப்பேன்” என்றும்
வாக்குக்கொடுக்கிறான். இந்த அருமையான உவமையுடன் புலவர்
நிறுத்தியிருக்கலாம். அந்தச் சாணை இயந்திரத்தை இயக்கும் சிறுகாரோடன்
பொதினியைச் சேர்ந்தவன். அங்கு கொம்புகள் அறுக்கப்பட்ட யானைகள் இருக்கும்.
அந்த யானைகளுக்கு உரியவன் நெடுவேள் ஆவி என்பான். அவன் முருகனைப் போல்
(பகைவரை முறியடிக்கும்) போர்த்திறத்தில் சிறந்தவன். மேலும், வண்டுகள்
மொய்க்கும் பூமாலையைத் தலையிலும், விளங்குகின்ற கழல்களைக் கால்களிலும்
அணிந்து, அச்சந்தரும் குதிரைகளின் மேல் வரும் மழவர்களை விரட்டியவன்”
என்றெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் தரவேண்டியதன் காரணம் என்ன? - அதுவும்
ஓர் அகப்பாடலில்! இதைப் போன்ற பாடல்கள் அகநானூற்றில் இன்னும் உண்டு.
சங்கப் புலவர்கள் தேவையில்லாதவற்றைக் கூறமாட்டார்கள். வார்த்தைச்
சிக்கனத்தில் அவர்கள் வல்லவர்கள். இதற்குரிய காரணம் நன்கு விளங்கவில்லை.
சங்கப்புலவர்கள் அன்றைய மன்னர்களின் வீரத்தை அகப்பாடல்களிலும் புகழ்ந்து
மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம். அல்லது இதனையும் உள்ளுறை
உவமமாகவும் கொள்ளலாம். சேய்நாட்டிலிருந்து அச்சம்தரும் வகையில் இங்கு
வந்து, இங்குள்ள செல்வத்தை அள்ளிச்செல்ல எண்ணிய மழவர்களை, தன் யானைகளின்
கொம்புகள் அற்றுப்போகும்படி போரிட்டு விரட்டியடித்த நெடுவேள் ஆவியைப் போல
நான் இல்லையே!, மாறாக, சேய்நாடு சென்று, அங்கு என்னை மறந்து, அச்சம்தரும்
வகையில் பிரிவுத் துயரை அனுப்பி, இளமை நலம் என்னும் என் அழகுச் செல்வத்தை
அது நெகிழ்த்துவிட, என் மன உறுதி அற்றுப்போகும்படி நான் அப்
பிரிவுத்துயருடன் போரிட்டு அதனை வெல்லமுடியாமல்
கலங்கிக்கொண்டிருக்கின்றேனே! என்று தலைவி புலம்புவதாகவும் கொள்ளலாம்.
3. துயரத்திலும் ஓர் இகழ்ச்சி – மூங்கில் தோள்
---------- ---------- ------------- சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலம் கல வெறுக்கை தருமார்
தலைவன் எதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான்? சிறந்த, மூங்கிலைப் போன்ற
பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப் பொன் அணிகலன்களாகிய செல்வத்தை
ஈட்டிவருவதற்காக. இயற்கையான தனது அழகைத் தான் இழக்க, அதற்குச் செயற்கையாக
அழகூட்ட, பொன் அணிகலன்கள் வாங்கப் போய்விட்ட தலைவனே, நீ அவற்றைக்
கொண்டுவருவதால் என்ன பயன் என்ற தலைவியின் ஏளனக் குறிப்பு இதில்
தோன்றவில்லையா? ‘கண் விற்றுச் சித்திரம் வாங்குவரோ?' என்ற புதுமைக்
கவியின் கூற்று நினைவுக்கு வரவில்லையா? காட்டு மூங்கிலில் பருத்தது வேய்.
அதன் ஒரு கணுவைப் பாருங்கள். அதைப் போல் இருக்கிறதாம் தலைவியின் தோள்.
செல்வர் வீட்டுப் பெண்கள் தோள்களில் வங்கி எனப்படும் வந்திகை என்ற நகையை
அணிந்திருப்பார்கள். அதைத் தவிர வேறு பலவிதமான தங்க நகைகளையும்
வாங்குவதற்குத் தலைவன் சென்றிருக்கிறான். இத்தனையையும் தலைவிக்குப்
பூட்டி அழகு பார்க்க அவனுக்கு எண்ணம். ஆனால், பிரிவு என்னும் துயரம்
அவளின் தோளை மெலிந்துவிடச் செய்தபின், அந்தத் தோள்களைப் போலவே அவள்
மேனியும் அழகிழந்துபோகவே அந்த நகைகளால் என்ன பயன் என்று கேட்கும்
தலைவியின் குரலில் ஏக்கம் மட்டுமல்ல இகழ்ச்சியும்
பொதிந்துகிடக்கிறதல்லவா!
சங்க இலக்கியங்களில் பெண்களின் தோளை மூங்கிலுக்கு ஒப்பிட்டுக் கூறும்
வழக்கம் உண்டு. தோள் என இங்கு குறிப்பிடப்படுவது, முழங்கைக்கும் மேலே
உள்ள பகுதி. கழுத்துக்கும் முழங்கையின் மேல்பகுதிக்கும் இடையே உள்ள
பகுதியையும் தோள் எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது
கையின் மேல்பகுதியே. பச்சை மூங்கில் அதன் மென்மைக்கும், வனப்புக்கும்,
எழிலுக்கும், நேரான தன்மைக்கும், உருண்டு திரண்ட உருவத்துக்கும்,
பெண்களுடைய தோளுக்கு ஒப்பிடப்படுகிறது என்பதைக் கீழ்க்கண்ட அடிகள்
உணர்த்தும்.
வேய் புரை மென் தோள் – குறி 242
வேய் வனப்புற்ற தோளை நீயே – நற் 82/2
வேய் புரைபு எழிலிய விளங்கி இறை பணைத் தோள் – பதிற் 65/8
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
வேய் எனத் திரண்ட தோள் – கலி 57/1
இங்கே புலவர் குறிப்பிடுவது வேய் மருள் பணைத் தோள். மருள் என்பது வெறும்
உவம உருபு மட்டும் அல்ல. மருள் என்பதற்கு, மயங்கு, மனக்கலக்கம் அடை,
வெருளு, வியப்படை என்றெல்லாம் பொருளுண்டு. மற்றவர்கள் இந்தத் தோளைப்
பார்க்கும்போது, இது மூங்கிலோ என்று மனம் தடுமாறி, வியப்படையத் தக்கதான
தோள் என்ற பொருளைத் தரும். அல்லது, இது என்ன தோளா, மூங்கிலா என்று
ஏனையவர்கள் வெருளத்தக்கதான தோள் என்றும் பொருள் கொள்ளலாம்.
எழுதியவரமுனைவர் பாண்டியராஜா பரமசிவம் மின்னஞ்சல் முகவரி: <pipiraja@gmail.com>
-- Geetha Sambasivam 06:13, 23 அக்டோபர் 2012 (UTC)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக