செவ்வாய், 4 ஜூலை, 2017

அமைதிப்படை செய்த இனப்படுகொலை 2009 கு முன்னோடி ஒப்பீடு கீற்று தொடர் ராஜீவ் ஹிந்தியா


(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-10)
“ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய மெய்க்காப்பாளர்கள் பிரபாகரனுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே வலிமையான ஒரு சுவரைப் போல நின்றார்கள். இறுதியில் அந்த முகாமை இந்தியத் துருப்புகள் கைப்பற்றின. ஆனால் தளம் 14-ன் 17 மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, பிரபாகரன் வன்னிக் காட்டிற்குள் தப்பிச் செல்ல போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவே இந்திய அமைதிப்படை முதலும் கடைசியுமாக தளம் 14-ஐ கைப்பற்றிய சம்பவமாகும்.

பிரபாகரனை ஒரு மாபெரும் வாழும் சகாப்தமாக உருவாக்கிய அவரின் சுயநலம், இரக்கமின்மை, ராணுவ செயல் திட்டங்கள், மற்றும் புத்திசாலித் தனமான காய்நகர்த்தல்கள் போன்றவை இந்திய அமைதிப் படைக்கு நிகழ்ந்த சோக முடிவில் தெளிவாக வெளிப்பட்டன” என்று “இந்திய அமைதிப் படை” பற்றி எழுதுகிறார் ராஜிவ் சர்மா!

• பிரபாகரன் சுயநலம்

• இரக்கமற்ற குணம்

• ராணுவ செயல் திட்டங்கள்

இவைகளால் இந்திய அமைதிப்படை மோசமான முடிவை சந்தித்துவிட்டதாக, நூலாசிரியர் மிகவும் கவலைப்பட்டு, தனது தேசபக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். தளம் 14-அய் இந்தியப் படை சுற்றி வளைத்த நிலையில் பிரபாகரன் தப்பி விட்டாரே என்ற கவலையின் ஆதங்கம், அவரது எழுத்தில் பளிச்சென வெளிப்படுகிறது.

‘இந்திய அமைதிப்படை’ ஈழத்தில் நடத்திய அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள், மக்கள் மீது திணித்த படுகொலைகள் சர்வதேச அரங்கில் ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலமானது பற்றி எல்லாம் நூலாசிரியருக்கு கவலை இல்லை. ஏதோ, ஈழத் தமிழர்களின் ‘பாதுகாவலர்களாக’ முகமூடி தரித்துக் கொண்டு, இலங்கைக்குப்போய் வடக்கு-கிழக்கு மாநிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தனக்கு ‘தலையாட்டக் கூடிய’ ஒரு பொம்மை ஆட்சியை துப்பாக்கி முனையில் நடத்திய தேர்தல் வழியாகத் திணித்து, தனது அதிகாரத்துக்குக் கட்டுப்பட மறுத்து, மக்கள் விடுதலையை மட்டுமே முன்னிறுத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தை கூண்டோடு ஒழிக்க சபதமேற்று செயல்பட்டது தான் இந்திய ராணுவம்! இது அமைதிப்படை அல்ல; கொலைக்காரப் படை!

இப்போது ஈழத் தமிழர்கள் மீது இழைத்த போர்க் குற்றங்கள் இனப்படுகொலைகளுக்காக உலக அரங்கில் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசுக்கு இந்த “பாடங்களை” நடைமுறையாக கற்றுத் தந்ததே, இந்திய “அமைதிப்படை” தான் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ராஜபக்சேயின் ‘முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு முன்னோடி வழிகாட்டி இந்திய அரசும் அதன் “அமைதிப்படை”யும் தான்!

இந்திய “அமைதிப்படை” ஈழத்தில் நடத்திய வெறியாட்டங்களை எழுதப் போனால் அது பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு நீண்டு கொண்டே போகும். அவற்றை இந்தப் பகுதியில் விரித்து எழுத இயலாது. ஆனாலும், இன்று ராஜபக்சே, நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய ராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும் முன் வைக்கிறோம்.

• ‘சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய ராணுவமும் ஈழத்தில் நடத்தியது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது; அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர். அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; நிதர்சனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியாவின் ‘தூர்தர்ஷன்’ அதிகாரிகள் கேட்டுப் பெற்று ஒளிபரப்பிய சம்பவங்களும் உண்டு. முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்.

• மருத்துவமனைகளை ராஜபக்சேயின் ராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது. அதைத் தான் இந்திய ராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7)

“அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.
நெல்லிப்பாளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மணிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.

• சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான்! இந்திய ராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.

• ராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை ராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.

“வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர். (தி ஏஜ் ஏடு 16.10.87)

மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் அய்.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்! இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987, பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை!

• விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதானப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள ராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே; சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான். வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நாவலாய் என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அய்.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

கேள்வி : விடுதலைப் புலிகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சியில், தீட்சித் அணுகுமுறை எப்படி இருந்தது?

பதில் : தீட்சித் ஒரு முறை என்னிடம், பிரபாகரனை சுட்டுவிடு என்றார். மன்னிக்கவும், என்னால் முடியாது என்று நான் கூறி விட்டேன். இது அவரது உத்தரவாகவே இருந்தது. சில பணிகளுக்காக, என்னை சந்திக்க 12 மணிக்குக்கூட, பிரபாகரன் வந்தார். அதைப் பயன்படுத்தி, சுட்டுவிடுமாறு சொன்னார். தனக்கு, மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவைத்தான் கூறுகிறேன் என்றார். ‘உங்களுடைய உத்தரவை நான் செயல்படுத்த முடியாது. நாங்கள் வெள்ளைக் கொடியின் கீழ் சந்தித்துப் பேசுகிறோம்; வெள்ளைக் கொடியின் கீழ் பேசும்போது, யாரையும் சுட முடியாது’ என்று பதில் சொன்னேன்.

Question : What was Dixit’s approach to your attempts to buy peace with LTTE.

Harkirat Singh : Once he (Dixit) said, shoot Prabaharan. I said, Sorry, I don’t do that. When he came to meet me at 120 Clock at night for some work, he said “shoot him. General, I have told you what I have (been) ordered”. I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag” (Rediff.com).

• ‘போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய ராணுவம் தான்.

21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திரிகோண மலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக