வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சைவம் சமணம் மோதல் பல்லவர் மதமாற்றம் மகேந்திர பல்லவன் அப்பர்

மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!
Post by சாமி on Thu Aug 09, 2012 9:15 am
சைவ சமயத்தின் குருமுதல்வர்களாக நால்வர் பேசப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் ஆவர். இவர்களில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இவர்களது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விருவரில் அப்பர் மூத்தவர். இவர் முத்தியடையும்போது வயது 81. இவர் இளம் வயதில் சமண சமயத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அச்சமயத்தில் சார்ந்தார். திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்) என்ற ஊரில் சமண சங்கம் சார்ந்தவர், அதில் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அதன் தலைமைப் பீடத்தில் பொறுப்பேற்று தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

இவர், பின்னாளில் கடும் சூலைநோயால் அவதியுற்றபோது சமணசமயத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் பலிதமாகவில்லை என்ற காரணத்தால் சைவசமயத்தில் ஊற்றமாய் இருந்த தமக்கு இருந்த ஒரே பற்றுக்கோடான உடன்பிறப்பான திலகவதியாரிடம் வந்தார். அவர் திருநீறிட்டு திருவதிகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சூலைநோய் நீங்கி புத்துணர்வு பெற்று சைவ சமயத்தை மீண்டும் சார்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமணர்கள் காஞ்சியில் அப்போது அரசாண்ட சமணப் பற்றினனாய் விளங்கிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று முறையிட்டு அப்பரைக் கொல்ல ஏவினார்கள். அதன்வழி மகேந்திரவர்மனும் அப்பரைக் கற்பலகையில் கட்டி கடலில் இட்ட போது இவர் சைவசமய மூல மந்திரத்தை ஓதி கடலில் கல்மிதக்கச் செய்து திருப்பாதிரிப்புலியூரில் கரையேறினார்.

இதன்பின்னும் அப்பரைக் கொல்லும் திட்டத்தைச் சமணர்களும், மகேந்திரவர்மனும் தொடர்ந்தனர். செங்கல் சூளையில் இட்டு சிலநாள் கழித்து அப்பர் இறந்திருப்பார் என்று எண்ணியபோது சூளையில் இருந்து எவ்வித பாதிப்பின்றி இவர் வெளிவந்தார். யானையை விட்டு கொல்லப்பார்த்தனர்; யானை இவரை வணங்கி வலம் வந்து சென்றுவிட்டது. நஞ்சு கொடுத்துப் பார்த்தனர்; நஞ்சு அமுதமாக மாறியது.

இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து, மகேந்திரவர்மன் மனம் மாறி அப்பரின் இணையடிகளைப் பணிந்தான். இன்னல் பல தந்த இவனையும் அப்பர் ஏற்றார். இதனால் மக்களிடையே சமணச் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது; சைவம் எழுச்சி பெற்றது. செல்லுமிடந்தோறும் அப்பரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சைவ அடியார்களின் எண்ணிக்கை புத்தெழுச்சி பெற்றது.

அப்பர் நாடு முழுவதும் தலயாத்திரை செய்து தலங்கள்தோறும் உரைத்தமிழ்மாலை எனப் போற்றப்படுகின்ற அருந்தமிழ்ப் பாடல்களை உணர்வு பெருகப் பாடினார். இவை பிற்காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றில் சேர்க்கப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது.                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக