சனி, 29 ஏப்ரல், 2017

இடுக்கி தமிழர் பற்று நேரடி பயணம் 1956 மண்மீட்பு மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

18/4/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
மீள் பதிவு:
=========
சேர நாடு தான் ஆனால்...!!!???
=========================
முன்னுரை:
===========
உலகை வென்றவன் தமிழன். எளிதில் எவராலும் வீழ்த்த
முடியாதவன் தமிழன். பின் ஏன் வண்டிக்காளையாக
மாறி வீணாகிப் போனான்? எல்லாம் 19 மற்றும் 20
ஆகிய நூற்றாண்டுகள் தமிழர்களை கிந்திய
தேசியத்துக்கு காவடி தூக்க வைத்தது. தமிழன் தடம்
புரண்டான். போலி தேசியம் அவனை துரத்தியது,
ஓடினான், திராவிடம் அவனை கால் இடரச் செய்தது,
விழுந்தான். கிந்தியமும் திராவிடமும் அவனை
கூறு போட்டன. எப்போது விழிப்பான், விழித்து
எழுவான் ?? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இடுக்கி
மாவட்டத்தில் நான் மேற்கொண்ட பயணம் தமிழன்
விரைவில் எழுவான் என்பதை உணர்த்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம்:
================
கேரள மாநிலத்தில் மிகப் பெரிய மாவட்டம் இடுக்கி
ஆகும். 4,479 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட
இம்மாவட்டம் 11,29,000 மக்கட் தொகை கொண்டதும்
ஆகும். இடுக்கி மாவட்டம், தேவிகுளம், தொடுபுழை,
உடும்பன்சோலை மற்றும் பீர்மேடு ஆகிய வட்டங்களை
உள்ளடக்கியது. இயற்கை எழில் கொஞ்சும் இம்மாவட்டம்
ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணை இம்மாவட்ட
எல்லையில் அமைந்துள்ளது. தேவிகுளம், உடும்பன்சோலை
மற்றும் பீர்மேடு ஆகிய வட்டங்கள் தமிழர்கள்
பெரும்பான்மையாக வசிக்கும் வட்டங்கள் ஆகும்.
தொடுபுழை வட்டத்தில் தமிழர்களை விட மலையாளிகள்
கூடுதலாக வசிக்கின்றனர்.
தேவிகுளம் வட்டம்:
==================
1774 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இவ்வட்டம்
கோவை மாவட்டத்தின் தென் பகுதியிலும், திண்டுக்கல்
மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும் தேனி
மாவட்டத்தின் வட மேற்கு பகுதியையும் எல்லையாகக்
கொண்டு அமைந்துள்ளது. அடிமலி, காந்தளூர்,
மாங்குளம், மறையூர், மூணாறு, பள்ளிவாசல்,
வட்டாவாடை, வெள்ளத்தூவல் ஆகிய ஊர்களைக் கொண்டது.
இதில் பள்ளிவாசல் மற்றும் வட்டாவாடை ஆகிய
ஊர்களில் மலையாளிகள் கணிசமாக உள்ளனர்.
இவ்வட்டத்தில் தமிழர்களான பள்ளர்களே
பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் மொத்த
மக்கத்தொகையில் 28% ஆவர். பழங்குடியினர் 9%,
நாயர்கள் 5%, ஈழவர் 7%, கொங்கு வெள்ளாளர் 6%,
நாடார்கள் 15% (மலங்கரை கத்தோலிக்கர்), முஸ்லிம்கள்
5%, வெள்ளாளர் 6%, செட்டிகள் (தமிழர்) 3%, இதர
கிறித்தவர்கள் 16%. பள்ளர், பளியர்,
காட்டுநாயக்கர், கொங்கு வெள்ளாளர், நாடார்,
செட்டியார், வெள்ளாளர் ஆகியோர் தமிழர் ஆவர்.
அதாவது மொத்த மக்கட் தொகையில் இவர்கள் 69% ஆவர்.
எஞ்சியோரில் தமிழும் மலையாளமும் பேசும் மக்களும்
அடக்கம். நாயர்கள் மற்றும் ஈழவர்கள் ஆகியோர்
மலையாளம் மட்டுமே பேசும் இனக்குழுவினர் ஆவர்.
மூணாறு சிறந்த கோடைவாழ் தலமாகும்.
உடும்பன்சோலை வட்டம்:
=======================
1071 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இயற்கை
எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளைக் கொண்டதுமாக உள்ள
உடும்பன்சோலை வட்டம் ஒரு மாசற்ற தமிழர்ப்
பகுதியாகும். பைசன்வேலி, சின்னக்கானல்,
இரட்டையார், நெடும்கண்டம், பாம்பாடும்பாறை,
ராஜக்காடு, சந்தனப்பாறை, உடும்பன்சோலை,
கஞ்சியார், கட்டப்பனை, கொன்னத்தடி, மரியபுரம்,
வத்திக்குடி, சாக்குப்பள்ளம் ஆகிய ஊர்களைக்
கொண்டது உடும்பன்சோலை வட்டம் ஆகும். இவ்வட்டத்தில்
மலபார் கத்தோலிக்க நாடார்கள் (25%)பெரும்பான்
மையாக உள்ளனர். எஸ்.ஐ யூ.சி நாடார்கள் 15%, பள்ளர்
10%, பழங்குடியினர் 1%, செட்டியார் 3%, ஈழவர்
9%, நாயர் 3%, முஸ்லிம்கள் 5% சிரியன்
கத்தோலிக்கர் 7%, கம்மாளர் 3%, பறையர் 6%,
வெள்ளாளர், பிரமலை கள்ளர், மறவர் மற்றும் இதரர்
13% ஆவர். இயற்கை எழில் கொஞ்சும் இவ்வட்டத்தில்
தமிழர்கள் 70% உள்ளனர். காபி மற்றும் தேயிலைத்
தோட்டங்கள் இங்கே அடுக்கடுக்காக உள்ளன.
பீர்மேடு வட்டம்:
==============
1,286 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வட்டம்
பீர்மேடு வட்டம் ஆகும். இவ்வட்டம், ஏலப்பாறை,
கொக்கயார், குமுளி, பீர்மேடு, பெருவந்தானம்,
உப்புத்துறை, வண்டிபெரியார் ஆகிய ஊர்களைக்
கொண்டது. இங்கு மலங்கரை கத்தோலிக்க நாடார்கள்
மற்றும் எஸ்.ஐ யூ.சி நாடார்கள் 30%, சிரியன்
கத்தோலிக்கர் 12%, பள்ளர் 22%, பறையர் 7%,
பழங்குடியினர் 3%, முஸ்லிம்கள் 5%, ஈழவர் 10%,
பிரமலை கள்ளர் மற்றும் இதரர் 11% உள்ளனர்.
தமிழர்கள் இங்கு 70% உள்ளனர். செறிவாக தேயிலைத்
தோட்டங்களைக் கொண்டது இவ்வட்டம். தமிழரான
ஏ.வி.தாமஸ் அவர்களால் ஏ.வி.டி தேயிலைத்
தொழிற்சாலை நிறுவப்பட்டு தற்போது பாரிய
பரப்பில் நடத்தப் பட்டு வருகிறது.
கே.எம்.பணிக்கரின் தோட்டங்கள் இங்கு இருந்தமையால்
இப்பகுதியை ஜவஹர்லால் நேருவிடம் தனக்கிருந்த
நெருக்கத்தை பயன்படுத்தி பணிக்கர் கேரளத்துடன்
இணைக்க வைத்தார். மார்ஷல் நேசமணியின் பட்டியலில்
பீர்மேடு வட்டம் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.
சிறந்த காடு மற்றும் மலை வளம் மிக்கது பீர்மேடு
ஆகும்.
மொழிவாரி மாநில ஆணையம்:
=============================
மொழி வாரி மாநிலங்கள் உருவாக்க என்று ஓர் ஆணையம்
1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.பசல் அலி,
கே.எம். பணிக்கர் என்ற மாதவ பணிக்கர் மற்றும்
ஹெச்.என். குன்ஸ்ரூ ஆகியோர் அடங்கிய இக்கமிஷன்
மொழி வாரி மாநிலங்கள் அமைக்க சில பரிந்துரைகள்
மேற்கொண்டது. இப்பரிந்துரைகள் ஒருதலைப்
பட்சமானதும் தமிழர்களுக்கு எதிரானதுமாக
அமைந்தது. அப்படியான நேரத்தில் தமிழர்கள்
செறிவாக வாழ்ந்த பகுதிகள் வேறு
மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அங்கு வசித்த மக்கள் வேறு வழியின்றி தாய்
மொழியாம் தமிழுடன் அந்த மாநிலங்களின்
மொழிகளையும் கற்க வேண்டிய துர்பாக்கிய நிலையை
அடைந்ததோடு அம்மாநிலங்களில் இரண்டாதர
குடிமக்களாகவும் வந்தேறிகளாகவும் பாவிக்கப்
பட்டார்கள். இன்று வரை இருமோழியாளர்களாகவே
வாழ்ந்தும் வருகின்றனர்.
இந்த மூன்று வட்டங்களிலும் தமிழர்களே
பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதால் இவ்வட்டங்களை
தமிழகத்தோடு இணைத்திடக் கோரி மக்கள் பாரிய
போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் கேரள
அரசு தமிழர்களுக்கு உரிய உரிமைகளை அளித்திட
முன்வந்துள்ளது. தமிழ் வழிக் கல்வி இவ்வட்டங்களில்
மக்களுக்கு கிட்டுகிறது. இருப்பினும் இங்குள்ள
மக்கள் தங்களை மலையாளிகள் இரண்டாந்தர
குடிமக்களாகவே நடத்துவதாக கருதுகின்றனர்.
தற்போது பீர்மேடு மற்றும் தேவிகுளம் சட்டமன்ற
உறுப்பினர்களாக தமிழர்கள் உள்ளனர். பீர்மேடு
தொகுதியில் பிஜிமோள் (கத்தோலிக்க நாடார்),
மற்றும் தேவிகுளம் தொகுதியில் ராஜேந்திரன்
(பள்ளர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மார்ஷல் நேசமணியும் டி.டி.என்.சி யும்
===================================
துவக்க காலங்களில் மார்ஷல் நேசமணியின் தமிழ்நாடு
திருவாங்கூர் காங்கிரஸ் கட்சி இடுக்கி
மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தேவிகுளம்
மற்றும் பீர்மேடு ஆகிய தொகுதிகளில் மார்ஷல்
நேசமணி கடும் பரப்புரை செய்து தமிழர்களின்
கோட்டையாக மாற்றி வைத்திருந்தார்.
கே.எம்.பணிக்கரின் இன வெறி இப்பகுதியை
கேரளத்துடன் இணைத்தது. பெருந்தலைவர் காமராஜர்
இவ்வட்டங்களை தமிழகத்தோடு இணைப்பதற்கு முனைப்பு
காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிற்குள் தான்
உள்ளது என்ற தேசிய மனப்பான்மை கொண்ட
பெருந்தலைவர் காமராஜரின் அறிக்கை இன்று வரை
விமர்சனம் செய்யப்படுகிறது.
முல்லைப்பெரியார் பிரச்சனை:
==========================
பெரியாறு, முல்லையாறு இவைகளின் தோற்றம்
பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை மலைப்பகுதிகள்
ஆகும்.நீர்ப்பிடிப்பு பகுதிகள் இங்கே உள்ளதால்
கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது.
மலைவளம், நீர்வளம் மிக்க இவ்வட்டங்கள் தமிழகத்தோடு
இணைந்தால் முல்லைப்பெரியார் சிக்கல் முற்று
பெறும்.
முடிவுரை:
=========
தமிழர் பலர் திரைப்படத்தின் மீது கொண்ட மோகம்
காரணமாக இவ்வட்டங்களைப் பற்றி நினைத்துப்
பார்ப்பதே இல்லை. நான் இவ்வட்டங்களில் சந்தித்த பத்து
நபர்களில் ஏழு நபர்கள் தமிழர்களாகவே உள்ளனர்.
இவர்களின் விருப்பம் தமிழகத்தோடு இணையவேண்டும்
என்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டுத் தமிழர்களும்,
இடுக்கித் தமிழர்களும் ஒன்றிணைந்தால் இப்பகுதி
தமிழர் வசமாகும்.

1 கருத்து: