செவ்வாய், 30 ஏப்ரல், 2019

ஈழம் கிழக்கு மதமோதல் தொடங்கியது எப்படி விரிவான தொடர்

Thiruchchelvam Kathiravelippillai, Nalliah Vasanthan மற்றும் 87 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 12
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கானநடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில் செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர். தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல் விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தினாலும் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததனால் அது பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின் நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால் பார்க்கப்பட்டது. அச்சத்தின் காரணமாக கோரப்படும் நிதியினை வழங்காவிட்டாலும் தம்மால் இயன்ற நிதியினை வழங்கினார்கள். இச்செயற்பாடுகள் முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களை தூர விலக்குவதற்கு துணை செய்தன. ஆட்சியாளர்களும் அதனைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை எளிதாக்கினார்கள்.
அதேவேளை 1982 ஆம் ஆண்டு கிண்ணியா மக்கள் வங்கி ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினால் பெரும்தொகைப் பணம், நகை என்பன கொள்ளையிடப்பட்டன. இந்நடவடிக்கைக்கு ஈரோசிலிருந்து பிரிந்துசென்று ஈ.பீ.ஆர.எல்.எஃப் உடன் இணைந்து கொண்ட கந்தளாயைச் சேர்ந்த சின்னவன் தலைமை தாங்கினார். இந்நடவடிக்கைகக்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் பின்னர் முக்கிய நபராக விளங்கிய சுபத்திரனும் பங்கேற்றார். சின்னவன் காரைநகர் கடற்படைத்தளத் தாக்குதலில் இன்னுயிரை ஈர்ந்தவர்.
1983 இல் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மதுபோதையில் காவல்துறை கைது செய்தது. கைதுசெய்யப்பட்ட காரணம் அறியாது தானாகவே கிண்ணியா வங்கிக்கொள்ளைச் சம்பவம் பற்றி மதுபோதையில் உளறியதனால் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கிய பலர் காவல்துறையினரால் 1983 இல் கைது செய்யப்பட்டு தண்ணடனை அநுபவித்து 1988 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். இக்கொள்ளையில் முஸ்லிம் மக்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை.
ஆனாலும் முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்த வண்ணமும் இருந்தனர். காடுகளில் முகாமிட்டிருக்கும் போராளிகளுக்கு உணவு, உடை என்பற்றைக் கொண்டு கொடுக்கும் பெரும்பணியினை முஸ்லிம்கள் செய்தனர். தமிழர்கள் கொண்டு செல்லும் போது ஐயம் காரணமாக படையினரால் கைதுசெய்யப்பட வாய்ப்புகளிருந்ததனால் முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகளிவில் உதவினார்கள். விறகு வெட்டச்செல்லுதல், வயல்களுக்குச் செல்லுதல், மீன், நண்டு பிடிக்கச் செல்லுதல் என்ற போர்வையில் பொருட்கள் கைமாறப்பட்டன.
கிண்ணியா கண்டலடியூற்றிலிருந்து உப்பாற்றில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மீன் , நண்டு பிடிப்பதற்காக செல்வது என்ற போர்வையில் சென்று பொருட்களை ஒப்படைத்து வருவார்கள்.இதனை அறிந்த படையினர் உப்பாறு துறையடியில் அதிகாலையிலேயே சென்று நிலையெடுத்துக் காத்திருந்தனர். இதனை அறியாது கண்டலடியூற்றைச்சேர்ந்த ஆறு பேர் பொருட்களுடன் வள்ளத்துக்கு அருகில் சென்றவுடன் இராணுவத்தினரை கண்டதும் பிடிபட்டால் கையும் மெய்யுமாக பிடிபடுவோம் என்பதை உணர்ந்து ஓடத்தொடங்கினர். நிற்குமாறு படையினர் விடுத்த கட்டளையை அவர்கள் செவிசாய்க்கவில்லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு பேரில் “அப்துள் லத்தீப் கலீம்“ என்பவர் குண்டு பட்டு சாவடைந்தார். ஏனைய ஐவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டு தண்டனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு பல சம்பவங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றன.
கண்டலடியூற்றைச் சேர்ந்த ராப்டீன், முஸ்தபா ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை இரகசியமாகக் கொண்டு சேர்ப்பவர்கள். அவர்கள் இராணுவ கெடுபிடி காரணமாக சில நாட்கள் செல்லவில்லை. அதனையறியாத விடுதலைப் புலிகள் அவர்கள் இருவரையும் தேடி வந்து சுட்டக்கொன்றனர். இந்நடவடிக்கை கண்டலடியூற்று மக்களை விடுதலைப் புலிகள் மீது வெறுப்பினை ஏற்படுத்திய சம்பவமாக பதிவானதுடன் விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பதற்கும் தயங்கியதுடன் யாரும் அவ்வாறு செயற்பட முன்வரவில்லை.
-------------------------------------------------------

தொடர் – 13
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது. 
1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர். இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகும். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலங்கேணியிலிருந்து 12 கி.மீ.தூரத்திலுள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்குச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை.
1985.11.17 ஆம் நாள் அதிகாலை 5.00 மணியளவில் தனது மாட்டு வண்டியில் தனது இளைய மகன் மற்றும் எருமை மாடுகளை மேய்ப்பதற்காக தன்னுடனிருக்கும் பெடியன் ஆகியோருடன் இராசையா கணேசபிள்ளை புறப்பட்டு செல்லுகின்ற போது காலை 5.10 மணியளவில் ஆலங்கேணியிலிருந்து மாவுசாப்பா துறைவழியால் செல்வதற்காக 2 கி.மீ.தூரத்திலுள்ள பூவரசந்தீவில் அப்போது இஸ்மெயில் என்பவரது தேநீர்க்கடை இருந்த இடத்திற்கு முன்னால் படையினர் மாட்டுவண்டிலை நிறுத்தினர். பெயரைக் கேட்டவுடன் வண்டிலில் இருந்து இறக்கி ஓர் இடத்தில் அமரச் செய்தனர். மகனும் மாடு மேய்கும் பெடியனும் சிறுவர்களாக இருந்தமையினால் அவர்களை படையினர் கண்டுகொள்வில்லை அவர்களைத் துரத்தி விட்டனர். இருவரும் மாட்டுப்பட்டி இருக்குமிடத்தை நோக்கி சென்றனர். கணேஸ் என்றழைக்கப்படும் கணேசபிள்ளை விடுதலைப் புலிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்பவர். சரியான ஆதாரங்களுடனேயே படையினருடன் கூடவே வந்த பசீரினால் தகவல் வழங்கப்பட்டதுடன் பசீரும் கூடவே வந்திருந்தார். பசீர் முன்னிலையில் கணேஸ் கைதுசெய்யப்பட்டு காலையில் ஆலங்கேணிக்கு கொண்டுவரப்பட்டார். சுற்றிவளைப்பு பி.ப.3.00 மணி வரை நடைபெற்றது. சுற்றிவளைப்பு நிறைவில் 28 பேர் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய ஊர்களில் இருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் மாத்திரம் ஈரோஸ் போராளி. 21 பேர் பூசா முகாமிற்கு அனுப்பப்பட்டனர். கணேசபிள்ளை, சீனிக்குச்சியர் என்றழைக்கப் பட்ட தங்கராசா சீந்தாத்துரைமகன் உட்பட ஏழுபேர் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டனர். உண்மையில் அவர்கள் சுரேஸ் காசிமினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. 
இந்தச் சுற்றிவளைப்பு தமிழ் மக்களிடையே உண்மையில் அக்காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் உளவியல் ரீதியான பாதிப்பினையும் ஏற்படுத்தியது. விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தி கைது மூலம் இவ்வூர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 
இச்சுற்றிவளைப்பில் முஸ்லிம் ஊர்காவல்படையினர் ஈடுபட்டதனால் முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் ஏற்பட்டது. முஸ்லிம் மக்களை விரோதிகளாகப் பார்க்கும் நிலை தோன்றியது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குடும்பமாக ஈச்சந்தீவிலிருந்த காளியப்பர் குடும்பம் விளங்கியது. விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் தங்கி உணவு உண்ணும் இடமாக அக்காலத்தில் அவரது வீடு விளங்கியது. 1986 இன் முற்பகுதியில் அதிகாலை வேளையில் சுரேஸ் காசிம் தனது சகாக்களுடன் காளியப்பர் வீட்டுக்குச் சென்று அவரது “கன்னி“ என்ற பெயரையுடைய மகளை அவர்களது வீட்டுச் சுவரோடு சேர்த்து அவரது மார்பகங்களை இலக்கு வைத்து சுட்டுக்கொன்றார்.
அன்றைய நாள் தருமலிங்கம் மற்றும் கறுத்த ஐயா என்றழைக்கப்பட்டமயில்வாகனம் ஐயா ஆகியோரும் அப்பம்தின்னி அப்பா என்றழைக்கப்பட்டஇராசேந்திரம் அவர்களது தேநீர்க்கடைக்கு முன்னால் (தற்போது ஆலங்கேணி நூலகம் இருக்குமிடத்தில்) சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இறவடிச்சேனை என்ற இடத்தில் 1986 இல் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக இருந்த புலேந்திஅம்மான் என்பவரால் முன்பள்ளி அமைக்கப்பட்டது. அப்பள்ளியினை அமைப்பதற்குத் தேவையான நிதியுதவியினை கந்தையப்பாவின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். மாலை வேளையில் எதிர்பாராத விதமாக இறவடிச்சேனைக்குசுரேஸ்காசிம் அணியினர் வந்து கந்தையப்பாவின் மூத்த மகளான கௌரி என்பவரை வன்புணர்வுக்குட்படுத்தியதோடு அவரைச்சுட்டும் கொன்றனர்.
இந்நடவடிக்கைகளில் முஸ்லிம் ஊர்காவல்படையினரும் இணைந்திருந்தனர். பசீருடன் வேறு சிலரும் பங்கேற்றிருந்ததனை தமிழ் மக்கள் தம் கண்களினால் கண்டனர். இதனால் இப்பகுதியில் வசித்த தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. முஸ்லிம்கள் தம்மைக் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரசினால் ஊதியம் பெறுகின்றார்கள் என்ற எண்ணம் மறைக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது எதிர்ப்பு ஏற்பட்டமை அரசிற்கு கிடைத்த வெற்றியாகும்.
----------------------------------------
தொடர் – 14
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட ஊராகும்.முழுமையாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிருந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொருட்களை விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்து சென்றிருந்தார்கள். இக்கொள்வனவிற்கு தென்னவன் மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(அதில் சில பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
1984 டிசம்பர் 30 ஆம் நாள் கென்ற்பாம் என்ற சிங்கள குடியேற்ற ஊரில்29 பேரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இம் மூன்று தாக்குதல்களினால் புல்மோட்டை, தென்னவன்மரபுஅடி ஆகிய ஊர்கள் அச்சத்தில் இருந்தன. அவ்வாறான நிலையில் புல்மோட்டைக்கு துணிகரமாக வந்த விடுதலைப் புலிகள் அங்குள்ள முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றார்கள்.
புல்மோட்டை முஸ்லிம் மக்கள் அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுடனும்நல்லுறவை தொடர்ந்து பேணிவந்திருந்தனர். அங்கு ஆட்சியாளர்களினால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதனை மறுக்கமுடியாது. புல்மோட்டையிலுள்ள முஸ்லிம் மக்கள் பேசுகின்ற மொழியினை வைத்து அவர்கள் தமிழ் மக்களா அல்லது முஸ்லிம் மக்களா என இன்றும் பிரித்தறியா முடியாத நிலை உள்ளமையானது அங்கு தமிழ்பேசும் மக்களின் உறவின் ஆழத்தினைப் புரிந்து கொள்வதற்கான சான்றாகும்.
நாய்களின் குரைத்தல் ஒலி தென்னவன்மரபுஅடி ஊரின் நடுவிலும் உரத்து ஒலித்தது. ஊர்மக்களின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டு பதவிசிறிபுர பகுதியில் இருந்து வந்த ஆயுததாரிகளால் எழுப்பப்பட்டனர். அனேகமாக வயது வேறுபாடின்றி, ஆண்பெண் என்ற பால் வேறுபாடின்றி சிறுவர் முதியோர் என்ற பேதம்இன்றி அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். கையிலிருந்த துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர்.சிலர் உயிரச்சம் காரணமாக தப்பிப்பதற்காக அருகிலிருந்த காடுகளை நோக்கி ஓடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டனர். அன்று முழுவதும் அவ்வூர் அல்லோலகல்லோப்பட்டது. தென்வன்மரபுஅடி ஊரில் அன்றைய நாள் 15 பேரை காடையர்கள் சுட்டுக்கொன்றனர். 12 பேர் காயமடைந்தனர். தென்னவன்மரபுஅடிஎன்ற ஊருக்கு அருகாமையில் இருந்த ஊரான “அமரவயல்“ (இவ்வூரின் பெயர் தற்போது திருக்கோணமலை மாவட்டத்தில் வசிக்கின்ற பலருக்கு அப்படியொரு தமிழ் ஊர் இருந்ததா? என்பதே தெரியாமல் உள்ளது என்பதே உண்மை) என்ற ஊர் வரை இத்தாக்குதல் நீண்டிருந்தது. இவ்விரு ஊர்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என காடையர்கள் அச்சமூட்டினர். அப்போது இவ்வூர்களின் விதானையாராக பணியாற்றிய சி.வைரமுத்து என்பவரின் ஆலோசனையினடிப்படையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் நாலாம் நாள் ஆண்டாண்டு காலமாக தாம் வாழ்ந்த மண்ண விட்டு வடக்கு நோக்கி இரவிரவாக காட்டுவழியால் தமது கைகளால் கொண்டு செல்லக் கூடிய பொருட்களை எடுத்தக்கொண்டு சென்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள “பொன்னகர்“ என்ற ஊரில் வசிக்கத் தொடங்கினார்கள்.இன்றுவரை பொன்னகரில் தான் அநேகமான தென்னவன் மரபுஅடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அன்றைய நாள் தாக்குதலின் நிறைவில் புல்மோட்டைக்கு வந்த காடையர்கள் பொருட்கள் விற்பனை செய்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்திச் சென்றனர். ஆனால் அவர்களை தாக்குவதற்கு தலைமையேற்று வந்தவர் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலின் முதலாவது அடி வெற்றிகரமாக ஆட்சியாளர்களால் காடையர்கள் மூலமாக நிவர்த்திக் கப்பட்டது.
அச்சமூட்டுதல், பிரித்தாளுதல் , ஒருசாராரை தமது கைக்குள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர் ஆண்ட ஆட்சியாளர்கள். வடக்கு கிழக்கு மக்களது பலத்தினை குறைப்பதற்காக தென்னவன்மரபுஅடி ஊரிலிருந்து மக்களை வெளியேற்றியதுடன் மணலாறு என்ற பாரிய குடிறயேற்றத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தினை செயற்படுத்தத் தொடங்கினர்.
விவசாய அபிவிருத்தி என்ற போர்வையே மணலாறு (வெலிஓயா) குடியேற்றத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.
---------------------------------------------
தொடர் – 15
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் அவர்களிடையேயான உறவுகள் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தி தீவிரமான பரப்புரைகளில் ஈழப் புரட்சி அமைப்பு(ஈரோஸ்) ஈடுபட்டது.
தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக்கொண்டதுமான அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகும்.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும்நம்மவரே ” என்ற ஈரோசின் கருத்துக்கள் தமிழ் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால் ஈர்க்கப்பட்டது. இக்கருத்துகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் அமைப்புடன் அதிகளவில் இணைந்தார்கள்.
“ஈழவர் எனப்படுவோர் இலங்கையிலே வசிக்கின்ற தமிழ் பேசும் மக்களாவர்.ஈழவர்எனக் குறிப்பிடப்படுவோர் ஈழ நாட்டைத் தாயகமாகக் கொண்டவரையேயாகும். மொழிவாரி அடிப்படையில் ஓர் இனம் அதுவும் தமிழினம் முக்கியமாக ஈழந்தன்னை தம் தாயகமாகக் கொண்ட மக்கள் தம்மை ஈழவர் என அழைப்பதில் தவறெதுவுமில்லை. இவர்கள் பேசும் மொழி தமிழ் மொழி, தமிழைப் பேசுவோரெல்லாம் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள் உலகில் பல நாடுகளில் வாழ்கின்றனர். முக்கியமாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி, மொரீசியஸ் ஏன் ஆபிரிக்காவில் கூட வாழுகிறார்கள் , இவர்கள் எல்லோரும் தமிழைத் தம் தாய் மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருந்தாலும் இவர்கள் எல்லோரும் ஈழவர் அல்ல. ஈழத்தை மட்டும் பிறப்பாலும். சுவீகாரத்தாலும் தாயகமாகக் கொண்டவர்களே ஈழவர்கள்“என ஈரோசின் தாபகரான அமரர் இ.இரத்தினசபாபதிஅவர்களினால் எழுதப்பட்டு ஈழ ஆய்வு நிறுவனத்தினால் 1984 செப்ரம்பரில் பதிப்புச் செய்யப்பட்ட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாலஸ்தீன மக்களின் மொழி அரபு. அவர்கள் “அரபு பாலஸ்தீனம்“கோரவில்லை. சவுதி அரேபிய மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு சவூதி அரேபியா“ இல்லை. சிரியா மக்கள் அராபியர். அவர்கள் பேசும் மொழி அரபு. அங்கு “அரபு சிரியா்“ இல்லை. ஈராக் மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு ஈராக் இல்லை“
தேசிய அந்தஸ்து கோரும் போது –மக்கள்- மொழி அடிப்படையில் இணைந்து நாடு கோருகிறார்கள். இதனாலேயே நாமும்
”நாம் ஈழவர்
நமது மொழி தமிழ்
நமது நாடு ஈழம் ” எனப் பகருகிறோம் என்ற ஈரோசின் கருத்துக்கள் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க வழிகோலியதோடு மட்டுமல்லாது இரு சமூகங்களையும் ஒன்றாக ஈழக் கோரிக்கையை முன்னிறுத்திய முற்போக்கான புரட்சிகரமான போராட்டத்தினை நோக்கிச் செல்வதற்கு வழிகோலியது.
ஈரோஸ் அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் அமைப்பு கலைக்கப்படும் வரை அமைப்புடன் சேர்ந்து இயங்கினார்கள்.
ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் படையினரின் திட்டமிட்ட செயற்பாடகளினால்உட்புகுத்தப்பட்டாலும் அவர்கள் இனங்காணப்பட்டு மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால் அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னாட்களில் ஈடுபட்டார்கள். அவ்வாறு செயற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் அல்லது பிற இடங்களிற்குச் சென்று வாழ்ந்து பின்னர் மீண்டும் வந்து தங்களது குடும்பங்களுடன் வாழ்கின்றார்கள்.
ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. எதுவித துன்புறுத்தல்களிலும் ஈடுபடாது பொதுமக்களின் மீது அக்கறையுடன் அவர்களது நலனிற்காக செயற்படுகின்ற அமைப்பு என்ற நற்பெயரை தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் வழங்கியிருந்தார்கள். அதன் பிரதிபலிப்பாகவே 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாகப் போட்டியிட்டு பெற்றுக்கொண்டது. தேர்தலில் விருப்பு வாக்கு நடைமுறை இருந்தாலும் வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு மாத்திரமே புள்ளடியிடுமாறு ஈரோஸ் மக்களைக் கோரியிருந்தது.
அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களும் இணைந்து (விடுதலைப் புலிகள் தவிர்ந்த) போட்டியிட்டார்கள். TULFஇலிருந்து ஒரு உறுப்பினரைக்கூட நேரடியாக வடக்குக் கிழக்கில் பெற முடியாமல் போனது. தேசியப் பட்டியல் மூலமாக ஒரு உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமரர் அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
ஈரோசில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாஃப் பசீர் சேகுதாவூத் ஒருவர். திருக்கோணமலை மாவட்டத்ததைச் சேரந்த திருக்கோணமலை இந்தக் கல்லூரி ஆசிரியர் ஜனாஃப் பசீர் மற்றையவர்.
ஈரோசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மலையகத்தைச் சேர்ந்த திரு.மலையப்பன் இராமலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
இத்தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான திரு. இரா சம்பந்தனும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
திருக்கோணமலை மாவட்ட தமிழ்பேசும் மக்கள் ஈரோஸ் சுயேட்சைக்குழு மூலமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை திருக்கோணமலை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைத்தார்கள். கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம் குறிப்பாக புல்மோட்டை ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்கள் கணிசமான வாக்குகளை ஈரோஸ் அமைப்பிற்கு வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கட்சி முதன்முறையாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது இத்தேர்தலிலேயாகும்.
------------------
தொடர் – 16
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம்
உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம்,
புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற
குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை
மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில்
நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி
நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும்
தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக
தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல்
கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர்
தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில்
தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு
வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.
தம்பலகமத்திலுள்ள வயல்நிலங்கள் எருமை மாடுகளின் உதவியினால்
பண்படுத்தப்பட்டன. அவ்வேலைகளில் தம்பலகமத்திலுள்ள மேற்குக்கொலனி,
சிறாஜ்நகர் மற்றும் கிண்ணியா போன்ற இடங்களில் வசித்த முஸ்லிம் மக்கள்
தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே
வயல்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வயல் விதைப்பு தொடங்கி அறுவடை
முடிந்து சுடடித்து நெல் உரியவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று
சேர்க்கும் வரையான நடவடிக்கைகளில் தொழிலாளர்களாக முஸ்லிம்களே
ஈடுபட்டுள்ளனர்.
1950 – 1970 களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்திய வம்சாவழி
வந்த தனவந்தர்களும் இணைந்து நெல் வணிகத்தில் ஈடுபட்டதுடன் நெற்செய்கை
யிலும் ஈடுபட்டு பின்னர் அரிசி ஆலைகளையும் தம்பலகமத்தில் நிறுவினார்கள்.
பொற்கேணியில் இலங்கைநேசன் அரிசி ஆலை, லோகராஜா அரிசி ஆலை (எல். ஆர்.எஸ்.
அரிசி ஆலை), கோவிலடியில் இராசலெட்சுமி அரிசி ஆலை என்பன இவ்வாறு உருவாகிய
அரிசி ஆலைகளாகும்.
இராசலெட்சுமி அரிசி ஆலை சின்னராசா என்பவரால் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு
உரித்தான காணியில் அமைக்கப்பட்டிருந்தது. மில்லுச் சின்ராசர் என மக்கள்
அவரை அழைத்தனர். பின்னர் அவ்வரிசி ஆலை மூடப்பட்டு தம்பலகமத்தில் இருந்த
ஒரேயொரு திரைப்பட மாளிகை அவ்விடத்தில் இயங்கியது. வன்செயல் காலங்களில்
அநாதரவாக இருந்த அவ்விடத்தில் தற்போது சுகாதார மருத்துவ அதிகாரி
தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
தம்பலகமத்தில் உள்ளவர்களாலும் அரிசி ஆலைகள் தொடங்கப்பட்டன. முள்ளியடியில்
சமேஸ்வரி அரிசி ஆலை, நடுப்பிரப்பன்திடலில் தங்கராசாப்போடியார் அரிசி ஆலை,
நாயன்மார்திடலில் நாகேஸ்வரி அரிசி ஆலை என்பன தொடங்கப்பட்டன.
அக்குறணையைச் சேர்ந்தவர்களால் புதுக்குடியிருப்பில் “லக்கி அரிசிஆலை“
தொடங்கப்பட்டது. இது முஸ்லிம் மக்களால் தொடங்கப்பட்ட அரிசி ஆலையென்பதுடன்
இதுவே இறுதியாக உருவாக்கப்பட்ட அரிசி ஆலையுமாகும்.
1985 மே மாதம் கடவாணையில் விடுதலைப்புலிகளால் நிலக்கண்ணிவெடித் தாக்குதல்
நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடவாணையில் முகாமிட்டிருந்த கடற்படையினர்
எட்டுப் பேர் மடிந்தனர். அந்தச் சத்தம் தம்பலகமத்தில் கேட்ட முதலாவது
பாரிய வெடிப்புச் சத்தம் என்பதுடன் இவ்வாறுதான் கண்ணிவெடிச்சத்தம்
இருக்கும் என்பதை தம்பலகமம் மக்கள் தெரிந்து கொண்ட முதலாவது
சந்தர்ப்பமுமாகும்.
பொற்கேணி, பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, சிப்பித்திடல்,
கரைச்சைத்திடல், வர்ணமேடு, முள்ளியடி, நடுப்பிரப்பன்திடல்,
நாயன்மார்திடல், ஐயனார்திடல், மாக்கைத்திடல், குஞ்சடப்பன்திடல், கோவிலடி
ஆகிய ஊர்களில் இருந்த மக்கள் கிண்ணியா நோக்கி இடம்பெயர்ந்தனர்.
பத்தினிபுரம், பாரதிபுரம், முள்ளியடி, பொற்கேணி ஆகிய ஊர்களில் வசித்த
மக்கள் தம்பலகமத்திலுள்ள கோவிலடி , பட்டிமேடு, கள்ளிமேடு ஆகிய ஊர்களில்
தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
1985 ஜுன் 10 ஆம் நாள் “எல்.ஆர்,எஸ். அரிசிஆலை“ படையினரால்
சுற்றிவளைக்கப்பட்டது. படையினருடன் பெருமளவிலான சிங்கள-முஸ்லிம்
இளைஞர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரர்கள்
இணைந்திருந்தனர். அரிசி ஆலையில் இருந்த நான்கு 12 வயதுக்குக் குறைந்த
குழந்தைகள் மற்றும் 06 பெண்கள் உட்பட 33 பேர் கைகள் பிணைக்கப்பட்டு
பொற்கேணி பக்கமாக அழைத்துச் செல்லப்படுகின்றபோது பொற்கேணியில் உள்ள
“வளர்மதி கூப்பன்கடை“ என அனைவராலும் அழைக்கப்பட்ட நாவலர் வீதிச்
சந்திக்கருகில் குடியிருந்த மணியம் அவர்களின் துணைவி மற்றும் இரு
பெண்பிள்ளைகள் வீதியில் நின்றமையால் அவர்களின் கைகளும் பிணைக்கப்பட்டு
கல்மெட்டியாவிலுள்ள பாடசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். அழைத்துச்
செல்லப்பட்டவர்களில் அரிசி ஆலை உரிமையாளர் திரு.லோகராஜா அவர்களின் 68
வயது தாயாரும் ஒருவர். நடக்கமுடியாத நிலையிலும் அவரையும் அழைத்துச்
சென்றார்கள். அழுதழுது வீதி வழியால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பாடசாலையில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் வைத்திருந்த போது பல முஸ்லிம்
தலைவர்கள் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
பாடசாலையில் அதிபர் மற்றும் சிங்கள பொது மக்களும் விடுதலை செய்யுமாறும்
கோரினர். அனைவரையும் விடுதலை செய்கிறோம் என உறுதியளிக்கப்பட்டு கைகள்
அவிழ்த்து விடப்பட்டனர். காலை 06.00 மணிக்கு கைது செய்யப்ட்டவர்களுக்கு
மாலையில் உணவு வழங்கப்பட்டது.
அன்றிரவு அனைவரும் அடித்தே கொல்லப்பட்டனர். 36 உயிர்கள் கண்ணிவெடியில்
உயரிழந்த கடற்படையினருக்கு ஆறுதலளிப்பதற்காக காணிக்கையாக்கப்பட்டனர்.
-------------------------------
தொடர் – 17
தம்பலகமத்திலிருந்து மக்கள் அச்சம் காரணமாக கிண்ணியாவிற்கு இடம்பெயர்ந்த
போது அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவை முஸ்லிம் மக்கள்
வழங்கினர்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிண்ணியாவில் சுரங்கல், கச்சக்கொடித்தீவு,
அரைஏக்கர், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை ஆகிய ஊர்களில்
அதிகளவிலும் மஹாமம்மாதிரிக்கிராமம், சின்னக்கிண்ணியா, பெரிய கிண்ணியா
போன்ற ஊர்களிலும் அடைக்கலம் புகுந்தார்கள். இதற்கான காரணம் தமிழ் –
முஸ்லிம் மக்களிடையே அக்காலத்தில் மிக நெருங்கிய தொடர்புகள் , உறவுகள்
இருந்தமையாகும்.
முஸ்லிம் மக்கள் தங்கள் வீடுகளின் ஒரு பகுதியினை தமிழ் மக்கள்
வசிப்பதற்கு வழங்கினார்கள் அல்லது அவர்களது காணிகளில் தற்காலிக குடிசைகள்
அமைத்து வசிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார்கள்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் வீடுகளில் குடியிருந்த
இச்சந்தர்ப்பத்தினை ஈரோஸ் அமைப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
முஸ்லிம் இளைஞர்களை தமது அமைப்பில் அதிகளவில் சேர்த்துக்கொண்டார்கள்.
ஈரோஸ், புளொட், அமைப்பின் உறுப்பினர்கள் ஆயுதமின்றியே பொதுவாக
நடமாடுவார்கள். ஏனைய அமைப்புகள் ஆயுதங்களின்றி நடமாடுவது மிகக்குறைவு.
அந்நாட்களில் ஆயுதம் தமது அமைப்புகளிற்கான ஆட்களை கசர்ச்சிகாட்டி
சேர்க்கின்ற மிகப்பெரிய ஆயுதமாக பாவிக்கப்பட்டது. அமைப்புகளுக்கு
செல்லுகின்ற இளைஞர்கள் பலர் கொள்கை அடிப்படையில் இணையவில்லை. அவர்களது
சுழ்நிலைக்கேற்ப எவரது அமைப்பு முந்துகின்றதோ அல்லது யாருடைய கவர்ச்சியான
போக்கு அவர்களுக்கு பிடிக்கின்றதோ அவ்வமைப்புகளில் சேர்ந்தார்கள்.
அவ்வாறு சேர்வதற்கு முக்கிய காரணங்களாக இருந்தது அரச படையினரே. அரச
படையினரின் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளும் தமிழ்
இளைஞர்களை தமிழ் விடுதலை அமைப்புகளில் சேர்வதற்கு நிர்ப்பந்தித்தன.
ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப், புளொட் அமைப்புகளின் கொள்கை
ஈர்ப்பாலும் நடைமுறை ரீதியாகவும் இணைந்தார்கள்.
ஈரோஸ் அமைப்பின் பரப்புரைகள் இஸ்லாமிய புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால்
பெரிதும் கவரப்பட்டமையினால் தான் ஈரோஸ் அமைப்பில் அதிகளவான இஸ்லாமிய
இளைஞர்கள் இணைந்தார்கள்.
பல இளைஞர்கள் ஈரோஸ் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டமை ஆட்சியாளர்களுக்கு
உவப்பான செயற்பாடுகளாக இருக்கவில்லை. கிண்ணியாவில் பசீரின் தலைமையில்
இயங்கிய மறைமுகப்படையும் ஊர்காவல்படையும் சுரேஸ்காசிமின் வழிகாட்டலில்
முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்விடுதலை அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள்
சேர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைகளில் இறங்கினர்.
தமிழ் விடுதலை அமைப்புகளில் இணைந்த இஸ்லாமிய இளைஞர்களின் விபரங்கள்
திரட்டப்பட்டன. அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு
அச்சுறுத்தல் விடுத்தனர். விடுதலை அமைப்புகளிற்குச் சென்றவர்களை
“மீண்டும் தம் வீடுகளுக்கு அழைத்துவருமாறும் இல்லாவிட்டால் குடும்ப
உறுப்பினர்களுக்கு பாதிப்புகள் வரும்“ என அச்சமூட்டினர். சிலரை
துன்புறுத்தியும் உள்ளனர்.
ஆனால் கிண்ணியாவிலிருந்து விடுதலை அமைப்புகளிற்குச் சென்ற இஸ்லாமிய
இளைஞர்கள் எவரும் அமைப்புகளிலிருந்து தம்வீட்டிற்குத் திரும்பவில்லை
என்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. கிண்ணியாவிலிருந்து
ஈரோஸ் அமைப்பிலேயே அதிகளவான இளைஞர்கள் இணைந்திருந்தனர்.
தம்பலகமத்திலிருந்து இடம்பெயர்ந்து கிண்ணியாவில் வாழ்ந்துகொண்டிருந்த
தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் அடிக்கடி சுற்றிவளைப்புகளுக்கு
உள்ளாகின. சில இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறான சுற்றிவளைப்புகள் முஸ்லிம் மக்களுக்கு தொல்லையாக இருப்பதாக
படைத்தரப்பு மூலமாக பரப்பப்பட்ட பரப்புரைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில்
பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..
தம்பலகமம் மக்கள் தாமாக தம்பலகமத்திற்கு வீடு திரும்பும்வரை கிண்ணியா
மக்கள் யாரையும் தமது வீடுகளுக்குச் செல்லுமாறு கோரவில்லை.
கிண்ணியாவிலிருந்து தான் தமிழ்பேசும் மக்களது பிரிவினையும் ஆரம்பித்தது
என்பதனை முன்னர் பார்த்தோம். அதற்கான காரணம் இருதரப்பும் ஆட்சியாளர்களின்
திட்டமிட்ட செயற்பாடுகளை அறியாது பலியாகியமையேயாகும். மீண்டும்
கிண்ணியாவிலிருந்தே ஒற்றுமைக்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுவதே சிறப்பாகும்.
----------------------------
தொடர் – 18
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை விகிதத்தினை
குறைப்பதற்காக திட்டமிட்டவகையில் தென்பகுதியில் வசித்த சிங்கள் மக்கள்
அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் அல்லை, கந்தளாய், முதலிக்குளம் (மொரவெவ),
குமரேசன்கடவை(கோமரங்கடவெல) பெரியவிளாங்குளம் (மஹாதிவுல்வெவ), சாலியபுர,
கல்மெட்டியாவ, ஜெயந்திபுர, மஹாவலிகம….. போன்ற இடங்களில்
விவசாயக்குடியேற்றங்கள் என்ற போர்வையில் சிங்கள மக்கள்
குடியேற்றப்பட்டனர்.
இந்நடவடிக்கை மூலமாக சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்தமையினால்
அரசியல் ரீதியாகவும் திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்
பின்நாட்களில் அதிகரித்தது.
கந்தளாய், மொரவெவ, கோமரங்கடவெல, சேருநுவர ஆகிய பிரதேசசபைகள் ஏறத்தாள
தனியான சிங்கள மக்களின் பிரதேசசபைகளாகின.
திருக்கோணமலை மாவட்டத்தில் எண்ணிக்கையில் 90 வீதமாக இருந்த தமிழ் பேசும்
மக்கள் 70 வீதமாக்கப்பட்டதுடன் 30வீதமான உள்ளுராட்சிமன்றங்கள் தனியான
சிங்கள மக்களின் கைகளுக்குச் சென்றது.
இவ்வாறான குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்புகள் இன்றியே
நடைபெற்றன. இக்குடியேற்றங்களால் “நமக்கென்ன பாதிப்பு வரப்போகின்றது “ என
தமிழ்பேசும் மக்கள் வாளாதிருந்தனர்.
80 களில் தமிழ் பேசும் மக்களிடையேயான பிளவினைப் பயன்படுத்தி
ஆட்சியாளர்கள் மிகவும் இரகசியமான முறையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப்
பிரிப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டார்கள். வடக்கையும் கிழக்கையும்
தொடுக்கின்ற ஊராக தென்னவன்மரபுஅடி ஊர் விளங்கியது. அவ்வூரிலிருந்து
மக்களை 03.12.1984 இல் வெளியேற்றியதனை முன்னர் பார்த்தோம்.
அதற்கு முன்னர் 1984 நடுப்பகுதியில் மணலாறுப்பகுதியிலிருந்த 42 ஊர்கள்
படையினரால் 48 மணிநேரத்தினுள் தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டனர்.
ஆரியகுண்டம்,கும்பகர்ணன்மலை,கொக்குச்சான்குளம்,கொக்குத்தொடுவாய்,வெடுக்கன்மலை
போன்ற ஊர்களிலிருந்த மக்களே படையினர் ஆமட்கார்களில் ஒலிபெருக்கிகள்
மூலமாக வெளியேற்றப்பட்ட மக்களாவர். அவர்கள் இன்றுவரை அவர்களது
ஊர்களுக்குத் திரும்பமுடியாத வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு
அவ்வூர்களில் அநேகமான ஊர்களின் பெயர்கள் சிங்களப்பெயர்களாக உள்ளன.
அத்தோடு திருக்கோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட காட்டுப்
பிரதேசம் துப்பரவாக்கப்பட்டு மணலாறு என்ற இடத்தினை மையமாக வைத்து
இரகசியக்குடியேற்றமொன்றினை 1984 இல் தொடங்கினார்கள்.
இக்குடியேற்றத்திற்கு தொடக்கத்தில் அநுராதபுர சிறையிலிருந்து 150
சிறைக்கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் குடியேற்றினார்கள். பின்னர்
மேலும் 150 குடும்பங்களையும் குடியேற்றினார்கள்.
இத்திட்டத்தினை உண்மையில் அவ்வேளை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதே
உண்மையாகும். 1986 இன் இறுதிப்பகுதியில் ஈரோஸ் அமைப்பிற்கு இத்தகவல்
கிடைக்கப்பெற்றது. ”மணலாறு வெலிஓயாவாக மாறப்பேகிறது” ,”வடக்கு கிழக்கு
மாகாணங்கள் துண்டாடப்படுகின்றன” என்ற வாசகங்களுடன் திருக்கோணமலை
மாவட்டமும் முல்லைதீவு மாவட்டமும் பிரிக்கப்படுவது போன்ற படத்துடன் கூடிய
சுவரொட்டிகளை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஈரோஸ் அமைப்பு ஒட்டியது.
1988 ஏப்ரல் 04 ஆம் நாள் மணலாறு என்ற இடம் “வெலிஓயாவாக“ மாற்றப்படுவதாக
சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. சிங்கள் மக்கள் அதிகளவில்
குடியேற்றப்பட்டார்கள். சிறப்புப் படையினர் (Special Forces)
அப்பிரதேசத்தில் ஜெனரல் ஜனகபெரேரா தலைமையில் நிலை நிறுத்தப்பட்டனர்.
“படையினர் பாதுகாப்பிற்கு மக்கள் , மக்கள் பாதுக்காப்பிற்கு படையினர்“
என்ற கோட்பாட்டினை உருவாக்கி ஜனகபுர,சிங்ஹபுர, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற
ஒவ்வொரு ஊரின் இடையிலும் சிறப்புப் படையின் முகாம் அமைக்கப்பட்டது.
குடியேற்றப்பட்ட மக்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும்
அரசினால் வழங்கப்பட்டன. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது படையினர்
நீர்த் தாங்கிகள் மூலமாக இலவசமாக நீர்விநியோகத்தினை மக்களுக்கச்
செய்தனர்.
திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக தற்போது தமிழ்பேசும் மக்களது உறவு
விரிசல் அதிஉச்சநிலைக்குச் செல்வதற்கு முன்னர் ஆட்சியாளர்களின் கபட
நோக்கினை உணர்ந்து தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக இருசமூகங்களின்
இளைஞர்கள் தம்மிடையேயான உறவினை வளர்த்தெடுப்பதற்கு உளப்பூர்வமான
நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் மொழி அடிப்படையிலேனும்
இணங்காவிடில் இரு சமூகங்களின் இருப்பும் எதிர்வரும் ஆண்டுகளில்
கேள்விக்குறியாக்கப்படலாம்.
--------------------------
தொடர் – 19
கிண்ணியாவில் ஆலங்கேணி இடிமண் என்பன தமிழ்பேசும் மக்களின் அயல் அயல்
ஊர்கள். 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறந்த உறவுநிலை இருந்தது. 1984 இன்
முற்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை உருவாக்குவதற்கான
முயற்சி மொசாட்டின் வழிகாட்டலில் முதன்முதலாக நடைபெற்றது. அது
வெற்றியளிக்காவிட்டாலும் விரிசலுக்கான அத்திவாரம் இடப்பட்டதில்
வெற்றிகொண்டது.
கண்டல்காடு என்ற இடத்தில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் இடையே
காணி தொடர்பான சிக்கல் எழுந்தது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி புதிதாக
பஸீர் தலைமையிலான மறைமுக இயங்குநிலையிலிருந்த ஊர்காவல்படையினர் 1984 இன்
நடுப்பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது இடிமண், குட்டிக்கரைச்சை போன்ற
இடங்களில் வைத்து தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பதிலுக்கு அப்பாவி
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களும் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
தாக்குதல் சிலநாட்கள் தொடர்ந்தன. சில தமிழ் மக்கள் ஊர்காவல் படையினரால்
பிடித்து வைக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் மதத்
தலைவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டார்கள். முடியாது போக அப்போது கிண்ணியா
காவல்துறை நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்த தென்னக்கோன் அவர்களிடம்
முறையிட்டு அவரது முயற்சியினால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்
மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எனினும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக
கண்டல்காட்டில் மரக்கறித் தோட்டச்செய்கையில் ஈடுபடுகின்ற தமிழர்கள்
எவரையாவது கொல்வது என திட்டமிடப்பட்டு கண்டல்காட்டு துறையடையில்
சுடுகலன்களுடன் (Shot Guns ) காத்திருந்தனர் பஸீர் மற்றும் கூவல் ஆகிய
ஊர்காவல் படையினர் தலைமையில் குழுவினர்.ஆலங்கேணியைச் சேர்ந்த லிங்கராசா
மற்றும் ஒப்பிலார் மகன் சின்னராசா ஆகியோர் தோட்டத்திலிருந்து வீடு நோக்கி
வருகின்ற போது இருவரும் சுடப்பட்டும் தலையில் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
ஆற்றினுள் உடல்களை வீசி விட்டுச்சென்றனர். (ஒப்பிலார் அப்போது விடுதலைப்
புலிகள் அமைப்பிற்கு வழிகாட்டியாக செயற்பட்டவர். பின்னர்
இந்தியப்படைகளுடன் விடுதலைப் புலிகளை காட்டிக்கொடுத்தவர். 1988 இல்
ஆலங்கேணி அம்மன்கோவிலுக்கு முன்னால் வைத்து நான்கு விடுதலைப்புலிகள்
கொண்ட அணியினால் நண்பகல் 01.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
கொல்லப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் இந்தியப்படையின்
முகாம் கிராமசபை கட்டடத்தில் இருந்தது. அந்நேரத்தில் துணிகரத் தாக்குதலாக
இத்தாக்குதல் மக்களால் பேசப்பட்டது. )
முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்களை வெறுப்பூட்டும் நடவடிக்கைகள்
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இரு சமூகங்களும் திட்டமிட்ட
சதிச்செயற்பாடுகளுக்கு இரையாகிக் கொள்ளத்தொடங்கின.
ஆலங்கேணியைச் சேர்ந்த அமரர் முருகுப்பிள்ளை துரைநாயகம் தயிர் வியாபாரம்
செய்யும் ஒருவர். தனது ஆறு பெண்பிள்ளைகளை வயளர்ப்பதற்காக தனது ஈருளியில்
தயிரினை திருக்கோணமலை நகரத்திற்கு எடுத்துச்சென்று அதில் வரும்
வருமானத்தில் வாழ்பவர். 1986.09.26 ஆம் நாள் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்
போது காலை 07.00 மணிக்கு தயிர் விற்பனைக்கு செல்வதற்கு புறப்படுகையில்
கைதுசெய்யப்பட்டார். இடிமண்ணைச் சேர்ந்த கூவல் எனும் ஊர்காவல்படை வீரரால்
அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆலங்கேணி சித்திவிநாயகர் ஆலயத்தின்
மடப்பள்ளிக்குள் கைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுத்து
கொல்லப்பட்டார்.
துரைநாயகம் அவர்களின் கொலை நடைபெற்று ஐந்தாவது நாள் விடுதலைப் புலிகளின்
ஆலங்கேணிப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த சுனில் என்பரால் இடிமண்
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வருகின்ற போது பள்ளிவாசலிலிருந்து 50
மீற்றர் தூரத்தில் வைத்து கூவல் சுட்டுக்கொல்லப்பட்டார். கூவல்
சுட்டுக்கொல்லப்படுவதற்கு முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு
உதவியிருந்தனர்.
சாவாறு எனுமிடத்தில் எருமைப்பட்டி வைத்திருந்த வீரசிங்கம் மற்றும்
பொன்னம்பலம் ஆகியோர் மாவுசாப்பா துறையடியால் 1987.03.19 ஆம் நாள்
வீடுநோக்கி வந்துகொண்டிருந்த போது புகாரியடியில் வசித்த லாசினார் மகள்
வெள்ளையன் தலைமையிலான ஊர்காவல்படை வீரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை
செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். (வெள்ளையன் 1990 இல் பொன்னாங்காணி
என்ற இடத்தில் இராணுவத்துடன் சென்று முற்றுகை நடவடிக்கையை முடித்து
வருகின்ற போது நிலக்கணியில் அகப்பட்டு ஒற்றைக்காலை இழந்து பின்னர் காலில்
இருந்த காயம் காரணமாகவே சாவடைந்தார்.) கொல்லப்பட்டவர்களின் உடலங்களை
சோமசுந்தரம் என்பவர் கண்டு எடுத்துவந்து உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
சோமசுந்தரம் அச்சம் காரணமாக கண்ணடல்காட்டுக்கு தனது பட்டியை இரண்டு
நாட்களின் பின்னர் மாற்றியிருந்தார். 1987.03.23 ஆம் நாள் அவரது
பட்டிக்குச்சென்ற ஊர்காவல்படை வீரர்களான வெள்ளையன், சின்னக் கிண்ணியாவைச்
சேர்ந்த துவான் அணியினர் சோமசுந்தரம் என்பவரை கொன்றனர்.
இந்நாட்களில் இரவு வேளைகளில் படையினர் மீதான அச்சம் காரணமாக தமிழ்
இளைஞர்கள் கண்டல்காடு , இறவடிச்சேனை , தளவாய் போன்ற இடங்களுக்கு மாலை
வேளைகளில் சென்று இரவை அங்கு கழித்துவிட்டு காலையில் ஊருக்குத்
திரும்புவது வழக்கம். 1987 மே மாதத்தில் ஈச்சந்தீவைச் சேர்ந்த
சித்திரவேல் மகன் மற்றும் அவரது நண்பர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது
ஈச்சந்தீவிற்கு பின்னாலிருக்கும் வண்ணான்வயல் என்ற இடத்தில்
ஊர்காவல்படையினரால் மறிக்கப்பட்ட போது தன்னிடமிருந்து கைக்குண்டை அவர்களை
நோக்கி சித்திரவேல் மகன் வீச இரு ஊர்காவல்படையினர் சாவடைந்து இருவர்
காயமடைந்தனர்.(அப்போது விடுதலைப் புலிகளால் தமது ஆதரவாளர்களாக இருக்கும்
சில இளைஞர்களின் பாதுகாப்பு கருதி கைக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன)
சித்திரவேல் மகன் கைக்குண்டு வீசியது ஊர்காவல்படையினர் காதுகளுக்கு
எட்டியது. பஸீர் தலைமையிலான அணி ஆலங்கேணியில் விசித்த சித்திரன் அவர்களது
வீட்டிற்கு நள்ளிரவு 01.00 மணிக்கு சென்று சித்திரனை பிடித்து
சுட்டுக்கொன்றனர். சித்திரவேல் என்பவருக்குப் பதிலாக சித்திரன் என்பவர்
கொல்லப்பட்டார். சித்திரன் அவர்களின் பெயர் அப்போது பிரபலமானது. அவரது
மகன் புளொட் அமைப்பில் இருந்தார். அதனால் தவறான புரிதலுடன் சித்திரன்
கொல்லப்பட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களிடையேயான உறவில் புலப்படா
விரிசல்களுக்கு வழிகோலின.

31 ஆகஸ்ட், 2018, பிற்பகல் 7:27 · பொது