ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கோவை குடிநீர் தனியார் வசம் விபரங்கள்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 22 ஜூன், 2018, முற்பகல் 11:29
பெறுநர்: நான்

கோவையில் ​​தனியார் மயமாக்கப்படுகிறதா குடிநீர் விநியோகம்?: மக்கள் குழப்பம்

கோவை: 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக கோவை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

16 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர்-I, பில்லூர்-II , ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களின் மூலம் சுமார் 220 எம்.எல்.டி தண்ணீர் தினமும் பெறப்படுகிறது.
நபருக்கு 13 லிட்டர்
அணைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு ஒரு நபருக்கு 13 லிட்டர் குடிநீர் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் குடிநீர் அளவு மீட்டர் கருவிகளின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டு, குடிநீர் கட்டணம் மாநகராட்சியால் வசூலிக்கப்படுகிறது.
போதுமான அளவு தண்ணீர் அணைகளில் இருந்து பெறப்பட்டாலும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறையும், சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாயில் ஏற்படும் சேதத்தினாலும், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளாலும் மாநகராட்சிக்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்படுவதோடு, 30 சதவீத குடிநீர் வீணாவதாக கூறப்படுகிறது.
குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று மொத்தம் இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளால் பல லிட்டர் குடிநீர் திருடப்படுகிறது.

புது ஒப்பந்தம்
இதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கவும், பழுதடைந்த குழாய்களை துரிதமாக சரிசெய்யவும், பிரத்தியேக தொலைபேசி எண் மூலம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு தங்குதடையின்றி குடிநீரைப் பகிர்ந்திடவும், கடந்த பிப்ரவரி மாதம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனத்துடன் சுமார் 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது.
இதற்கு முன்பு, கடந்த 2012-ம் ஆண்டு தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் முதல்முறையாக குடிநீர் விநியோகத் திட்டத்தை சுயஸ் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து, மெட்ரோ நகரங்களான பெங்களூரூ, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றை விட அதிகமான நிதி ஒதுக்கீட்டில் கோவையில் குடிநீர் பகிர்மான பணிகளை மேற்கொள்ள இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வீடு வீடாகச் சென்று குடிநீர் பயன்பாடு மற்றும் விநியோக அளவு பற்றிய தகவல்களை திரட்டும் பணிகளை தனியார் நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் துவங்கப்பட்ட இந்த ஆய்வில் அணைகளில் இருந்து தற்போது பெறப்படும் குடிநீர் அளவு, குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படும் அளவு, வர்த்தக இணைப்புகளுக்கு வழங்கப்படும் அளவு குறித்த தகவல்களையும், வீட்டின் உரிமையாளர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடிநீர் இணைப்பு எண், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது? குடியிருப்பு பகுதியின் மொத்த மக்கள் தொகை, வர்த்தக இணைப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சூயஸ் நிறுவனத்தினர் சேகரித்து வருகின்றனர்.

மக்கள் அச்சம்
இந்நிலையில், தனியார் நிறுவனத்தினரிடம் குடிநீர் விநியோகப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், வருங்காலத்தில் குடிநீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
"குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை தேவை. எனவே குடிநீர் விநியோகத்தை சேவை அடிப்படையில் மட்டுமே அரசு செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது இந்த சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், லாப நோக்கத்தில் மட்டுமே அதன் செயல்பாடுகள் இருக்கும். ஏதேனும் புகார் என்றாலும், அதை தனியாரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய தனியார் வசம் ஒப்படைப்பது, மக்களுக்கு கூடுதல் பிரச்சனையாக மட்டுமே அமையும். மேலும், மொத்த குடிநீர் விநியோகமும் நவீனமயம் ஆக்கப்படுவதால், கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.
மீட்டர் கருவிகள் பொருத்தப்படாமல் செயல்பட்டு வரும் பொது குடிநீர் குழாய்களின் நிலை பற்றி எந்த விளக்கமும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இவற்றை அதிகம் பயன்படுத்துவது ஏழை எளிய மக்கள் மட்டுமே. இதனால், அதிகம் பாதிக்கப்படுவதும் இவர்கள் தான்." என்கிறார் வழக்கறிஞர் இரா.முருகவேள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "24 மணி நேர குடிநீர் சேவை என்பது அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம். நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அனுமதி பெறாத குடிநீர் குழாய்களை கண்டுபிடிக்கவும், பழுதடைந்த குழாய்களை கண்டறிந்து மாற்றிடவும், தானியங்கி மீட்டர்களை பொருத்திடவும், பொதுமக்களின் புகார்களை சரி செய்யும் பணிகளுக்கு மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரி மற்றும் கட்டணம் ஆகியவை மாநகராட்சியால் மட்டுமே முடிவு செய்யப்பட்டு வசூலிக்கப்படும்." என்றார்.

கோரிக்கை
குடிநீர் குழாய் இணைப்புகள் பராமரிப்பு மற்றும் குடிநீர் பகிர்மான பணிகளுக்காக மட்டுமே தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்கு வந்து தகவல்களை பெற்று செல்லும் இந்த நிறுவனத்தால் கட்டணம் உயர்த்தப்படும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் மக்கள் குடிநீர் பயன்பாடு பற்றிய தகவல்களை பகிரவும் மறுத்து வருகின்றனர்.
ஸ்மார்டாக மாறிவரும் கோவை நகருக்கு 24மணி நேர குடிநீர் சேவை அவசியம் என்றபோதும், அப்பார்ட்மெண்ட் முதல் குடிசையில் வசிப்பவர்கள் வரை யாரையும் பாதிக்காதவாறு இந்த திட்டத்தை செயல் படுத்த வேண்டியது மாநகராட்சியின் கடமை. எனவே, செயல்படுத்தப்படவிருக்கும் புதிய குடிநீர் சேவை குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி தெளிவாக விளக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக