சனி, 29 ஏப்ரல், 2017

ஜஸ்டிஸ் பிராமண கூட்டணி திரா ஈவேரா ஆதரவு நீதிக்கட்சி

aathi tamil aathi1956@gmail.com

25/6/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
பிராமணர்களோடு கூட்டணி வைத்த நீதிக்கட்சி!
'அந்திமழை' ஏட்டில் (சூன் 2015) வெளி வந்த ஒரு
கட்டுரை..!
நீதிக்கட்சி என அழைக்கப்படும் 'தென்னிந்திய நல
உரிமைச் சங்கம்' பிராமணர் அல்லாத மக்களின்
நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.
பதவி, கல்வி, அதிகாரம் ஆகியவைகளை
பிராமணரல்லாத மக்களுக்குப் பெற்றுத் தரும்
நோக்கில் உருவானது. இதில் பிராமணர்களைக்
கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது அடிப்படை
விதி என்பதைச் சொல்லி திராவிட இயக்கத்தினர்
எப்பொழுதும் ஒளிவட்டம் சூட்டுவது உண்டு. ஆனால்
அப்படியா நடந்துள்ளது?
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் படி
1919ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி
முறையில் சென்னை மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்ற
இவர்கள் முன்நிறுத்திய 'பிராமணரல்லாதோர் நலன்'
பங்காற்றியது. ஆனால் குறுகிய காலத்தில் இவர்களின்
சந்தர்ப்பவாதம் அம்பலப்பட்டது.
நீதிக்கட்சியில் இருந்து 1923ஆம் ஆண்டு பிரிந்த
சி.ஆர்.ரெட்டி உள்ளிட்ட குழுவினர் 'ஜனநாயக நீதிக்
கட்சி' என்ற ஒன்றைத் துவக்கி தாங்கள் தான் உண்மையான
பார்ப்பனரல்லாதோர் இயக்கம் என்று உரிமை
கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், அப்பொழுது
ஆட்சியில் இருந்த பனகல் அரசர் பனங்கன்டி
ராமராயநிங்கார் தலைமையிலான அமைச்சரவைக்கு
எதிராய் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு
வருகின்றனர்.
கொள்கை பெரிதா? பதவி பெரிதா? என்றெல்லாம்
விவாதம் நடத்திக் கொண்டிராமல் பனகல் சட்டென்று
ஒரு முடிவுக்கு வந்தார். யாரை எதிரியென்று
சொல்லி இயக்கத்தை ஆரம்பித்தனரோ அந்தப்
பார்ப்பனர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். 'தி
இந்து' கஸ்தூரி அய்யங்காரின் ஆதரவைப் பெற்றதோடு
மற்றொரு காங்கிரஸ் பத்திரிகையாளர் பணிக்கருக்கு
சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பதவியளித்து
பதவியைக் காப்பாற்றினார். பல்வேறு சலுகைகளை
அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்
அளித்து பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். (The
politics of south india 1920 - 1937 By
Christopher John Baker, page 70)
அது மட்டுமல்ல, 1926இல் அறநிலையக் குழுவிற்கு
முதல் தலைவராக நீதிபதி சர்.டி.சதாசிவ ஐயர்
நியக்கமிக்கப்பட்டு, ஐயர்-ஐயரல்லாதார் உறவு
பலப்படுத்தப்பட்டது.
1926இல் ஆறாண்டு கால ஆட்சியை நீதிக்கட்சி
இழந்தது. திரும்பவும் அதிகாரத்தை க் கைப்பற்ற
பிராமணர்களுடன் கைகோர்க்க நீதிக்கட்சியினர்
தயாராய் இருந்தனர். 1928 மதுரையில் ஜனவரி மாதம்
கூடிய நீதிக்கட்சி 10வது மாநாட்டில்
பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்னும்
தீர்மானம் பனகல் அரசரால் கொண்டு வரப்படுகிறது.
ஆனால் தோற்கடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து
1929ஆம் ஆண்டு நெல்லூரில் நடைபெற்ற நீதிக்கட்சி
11வது மாகாண மாநாட்டில் இந்த தீர்மானம் கொண்டு
வரப்பட்டு தோல்வி அடைந்தது.
1930ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ்
மாநாட்டு தீர்மானப்படி சென்னை மாகாணத்திலிருந்த
காங்கிரஸ் மத்திய சட்ட சபை உறுப்பினர்கள் டாக்டர்
யூ.ராமராவ் மற்றும் ராமதாஸ் பந்துலு ஆகியோர்
ராஜினாமா செய்து விட்டனர்.
அதனால் காலியான இரண்டு இடத்திற்கு நடைபெற்ற
தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி ஏ.ராமசாமி
முதலியாரையும் டி.ஆர்.ராமச்சந்திர ஐயரையும்
நிறுத்துகிறது. எத்தனையோ 'திராவிடர்கள்' இருக்க
டி.ஆர்.ராமச்சந்திரய்யரை அனுப்ப வேண்டிய அவசியம்
ஏன் வந்தது? டி.ஆர்.ராமச்சந்திரய்யர் இந்து
வருணாசிரம ஸ்தாபன தலைவர். சனாதன தர்மத்தை
வலியுறுத்தி பிராமண தர்ம மாநாட்டினைக் கூட்டி
வந்தவர். இவரைத் தான் தங்கள் பிரதிநிதியாய் மத்திய
சட்டசபைக்கு நீதிக்கட்சி அனுப்பியது.
அது மட்டுமல்ல தஞ்சை ஜில்லா சார்பில் இந்திய
சட்டசபைக்கு சர்.சி.பி.ராமசாமி ஐயர்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் நீதிக்கட்சி
ஆதரவு தந்தது. இனியும் இந்த கள்ள உறவு எதற்கு
என்று நினைத்தனரோ என்னவோ தெரியவில்லை. 1934
செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலி ராஜா
தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்
பிராமணர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம்
என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1967ஆம் ஆண்டு
அறிஞர் அண்ணாவின் தி.மு.க. ராஜாஜியின்
சுதந்திராக் கட்சி உடன் ஏற்படுத்திக் கொண்ட
கூட்டணிக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின்
முன்னோர்கள் அடிகோலிவிட்டனர்.
(கு.காமராஜ், -வழக்குரைஞர் மற்றும் அரசியல்
ஆய்வாளர்- அவர்கள் "அந்திமழை" இதழில் சூன் 2015
எழுதிய கட்டுரை இது.)
குறிப்பு: இக்கட்டுரையாளர் நீதிக்கட்சி நடத்திய
1929ஆம் ஆண்டு நெல்லூர் மாநாடு குறித்து
எழுதுகையில் அதில் கலந்து கொண்ட பெரியாரை ஏனோ
தவிர்த்து விட்டார். பெரியாரும் பிராமணர்களை
கட்சியில் சேர்த்துக் கொள்ளவே விரும்பினார்.
பிராமணர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளும்
தீர்மானம் தோல்வி கண்ட போது 'எனது தோல்வி' என்று
குறிப்பிட்டு 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல்
எழுதினார். அது வருமாறு: "நெல்லூர் மகாநாட்டில்
பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்
கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல
உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால்
பிரேரேபிக்கப்பட்டு, என்னால் ஆமோதிக்கப்பட்டு அது
விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில்
தோல்வியடைந்து விட்டது."
அது மட்டுமல்ல, 1929இல் செங்கற்பட்டில் நடத்திய
முதல் சுய மரியாதை மாநாட்டிலும், 1930இல்
ஈரோட்டில் நடத்திய சுயமரியாதை மாநாட்டிலும்
தெலுங்குப் பிராமணரான மணத்தட்டை சேதுரத்தின
ஐயர் என்பவர் முன்னிலை வகித்ததாக "திராவிட
இயக்கத்தின் பிளவுகள்" என்ற நூலில் (பக்கம் 86இல்)
பேராசிரியர் கோ.கேசவன் குறிப்பிடுகிறார்.
பிராமணர் எதிர்ப்பில் நீதிக்கட்சியினரின் அரசியல்
எப்படி சந்தர்ப்பவாதம் கொண்டதோ அப்படியே
பெரியாரின் பிராமணர் எதிர்ப்பு அரசியலும்
சந்தர்ப்பவாதம் கொண்டது என்பதை கட்டுரையாளர்
சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னும் கட்டுரை
சிறப்பு பெற்றிருக்கும்.

திராவிடம் ஆதரித்த பிராமணர்கள் வேட்டொலி 
ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக