சனி, 29 ஏப்ரல், 2017

பரிதிமாற்கலைஞர் பார்ப்பனர் தமிழறிஞர்

aathi tamil aathi1956@gmail.com

23/4/15
பெறுநர்: எனக்கு
பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்
6.7.1870
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண
சாஸ்திரி' எனும் தனது வடமொழிப் பெயரை
நீக்கிவிட்டு 'பரிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில்
சூட்டிய முதல் பெருமகனார் ஆவார். (சூரிய
=பரிதி, நாராயணன்= மால், சாஸ்திரி= கலைஞர்)
தூயதமிழ் காத்திட நின்ற வகையில் தனித்தமிழ்
இயக்கத்தின் தொடக்கப்புள்ளி என்றே இவரை
அழைக்கலாம்.
உயர்தனிச்செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு
முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு
அறிவித்தவர். அது மட்டுமின்றி பிரித்தானியரால்
திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கு தமிழர்கள்
அடிபணியக் கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை
செய்தவர்.
ஆரியகுலத்தில் பிறந்தாலும் தமிழராய் தமிழுக்காய்
வாழ்ந்து மடிந்திட்ட பரிதிமாற் கலைஞர் அவர்தம்
எழுதிய 'தமிழ்மொழி வரலாறு' நூலில், "ஆரியர்கள்
தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும்
மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை
தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே
தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர்.
தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே
எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன
தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!" என்று
குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை
அவர்கள் சிறு வயது முதலே பரிதிமாற்கலைஞரின்
தமிழ்த் துடிப்பை அறிந்தவர். பரிதிமாற்கலைஞர்
குறித்து அவர் கூறியது வருமாறு:
"பிராம்மணராயிருந்து, சாஸ்திரயென்னும் பட்டம்
புனைந்திருந்தும் திராவிட மொழியில் இவ்வளவு
ஆர்வங்கொண்டு, அதை நீர் ஆராய்ந்திருப்பது நமக்கு
ஓரளவு விந்தையே அளிக்கின்றது. உம்மைத் 'திராவிட
சாஸ்திரி' என்று அழைத்தல் சாலப் பொருந்தும்"
என்றார். (திராவிட என்றால் பார்ப்பனரை குறிக்காது
என்று குருட்டுப்பாடம் ஒப்பிக்கும் திராவிடர்கள்
இதை அழுத்தமாக மனதில் பதிந்திடுக!) அவரின்
விருப்பப்படி 1902இல் 'மதிவாணன்' எனும் கதை
நூலினை பரிதிமாற் கலைஞர் உயர்தனிச் செம்மொழி
நடையில் எழுதி வெளியிட்டார்.
இவர் பிறந்த மதுரை நகரம் தமிழுணர்ச்சியற்று
கிடந்ததை வேதனையோடு பின்வருமாறு
தெரிவித்தார். "தாய்மொழியாகிய தமிழினை மறந்து
செல்வப் பொருளீட்டலிலேயே காலம் போக்கியுழலும்
மதுரையாகிய தாம் பிறந்த நகர்கிரங்கியாற்றாது
பாடியது"
1901ஆம் ஆண்டு மே24 இல் மதுரையில் பாஸ்கர
சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைச்சாமி
தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம்
நிறுவப்பட்டது. இச்சங்கம் 'செந்தமிழ்' எனும்
திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான்
பரிதிமாற் கலைஞர் "உயர்தனிச் செம்மொழி தமிழே!"
என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப்
பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்தில் இருந்து, தமிழை
நீக்கி விடுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
இதை அறிந்த பரிதிமாற் கலைஞர் உடனடியாக
கோவையில் இருந்த பூரணலிங்கம் பிள்ளை அவர்களுக்கு
சென்னை வரும்படி தந்தி அடித்தார். இதற்குக் காரணம்
இரண்டு நாளில் நடைபெற உள்ள ஆசிரியர் சங்கக்
கூட்டத்தில் அனைவரும் இதை எதிர்க்க வேண்டுமென்று
விரும்பியதாகும். அதன்படி பூரணலிங்கம் பிள்ளை
அவர்களோடு சேர்ந்து வாடகை வண்டியை எடுத்துக்
கொண்டு கிளம்பினார். இருவரும் ஒவ்வொரு
உறுப்பினரையும் இருக்குமிடந் தேடி சந்தித்து
தமிழை காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டனர். சங்கக்
கூட்டத்தில் தாய்மொழியே வென்றது. இருவர்
பட்டபாடு வீண்போக வில்லை. பிறகு மீண்டும்
இவ்விருவரும் மதுரைக்குச் சென்று பாண்டித்துரை
தேவர் அவர்களை சந்தித்தனர். மதுரைத்
தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒரு தீர்மானம்
நிறைவேற்றித் தந்தி மூலம் அனுப்பச் செய்தனர். இதன்
முடிவாகத் தமிழ் கட்டாயப் பாடமாக சென்னைப்
பல்கலைக்கழத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
இன்றைய தமிழ்நாட்டில் குழந்தை தவழும் முன்பே
ஆங்கிலப்பள்ளியில் சேர்த்திடும் கொடுமை உள்ளது.
இதனை எதிர்த்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பே
வேதனையோடு அவர் கூறுவதைக் காண்போம். " ஐந்து
வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர்
தமிழ்வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி ஏற்கும்
மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று
நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்."
பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப்பணியை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கூட போற்றத்
தவறவில்லை.
"முத்தமிழ் வல்லவன் பரிதிமாற்கலைஞன்
நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே
நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே
ஈடு செய்வேனோ என்று துடித்தான்
இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்"
என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக