வெள்ளி, 21 ஏப்ரல், 2017

1962 ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..! போர் தலாய்லாமா காஷ்மீர் நேரு

1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!
Post by டார்வின் on Wed Oct 24, 2012 6:09 pm
இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்து வந்த சீனா, 1962_ல் இந்தியா மீது திடீரென்று படையெடுத்தது. இப்படி படையெடுத்ததற்கு பின்னணி என்னவென்றால் சீனாவால் விரட்டி அடிக்கப்பட்ட திபெத் தலைவர் தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததுதான். இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத் 1959_ம் ஆண்டு வரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது.

புத்த மதத் தலைவரான தலாய்லாமா நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். (ஒரு தலாய்லாமா இறந்ததும் திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய்லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்). அதாவது இறந்த தலாய்லாமா மறுபிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய்லாமா 1935_ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14_வது தலாய்லாமா.) 1959_ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத் மீது சீனா படையெடுத்து அந்த நாட்டை சீனாவுடன் சேர்த்துக்கொண்டது. தலாய்லாமா தன் ஆதரவாளர்கள் 9 ஆயிரம் பேருடன் இந்தியாவுக்கு ஓடி வந்தார்.

நேரு தலைமையிலான இந்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. தலாய்லாமாவை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சீனா கோரியது. அதற்கு நேரு மறுத்துவிட்டதால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தலாய்லாமாவுக்கு அடுத்த தலைவராக இருந்த பஞ்சன்லாமா சீன ஆட்சிக்கு அடி பணிந்து திபெத்திலேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் 1962 செப்டம்பர் 19_ந்தேதி இந்தியாவின் வட கிழக்கு எல்லைப்பகுதியிலும் (நேபா) லடாக் பகுதியிலும் சீனப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா மீது சீனா படையெடுக்கும் என்று கனவிலும் கருதாத நேரு சீனா இப்படி முதுகில் குத்திவிட்டதே என்று மனம் நொந்தார். போர் நடைபெற்ற இடம் இமயமலை அடிவாரம். தரை மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் கடும் குளிர் காலத்தில் இப்போர் நடந்தது. இந்திய ராணுவ வீரர்கள் தாய் நாட்டைக் காக்க தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வீரப்போர் புரிந்தனர்.

சீனா பெரும் படையுடனும் நவீன ஆயுதங்களுடனும் வந்து தாக்கியதால் இரண்டு முனைகளிலும் இந்திய ராணுவம் பின்வாங்க நேரிட்டது. போர் காரணமாக இந்தியாவில் முதல் முறையாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவியது. சீனாவின் படையெடுப்பை உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டித்தன. இதன் காரணமாக சீனா நவம்பர் 21_ந்தேதி போர் நிறுத்தம் செய்வதாகத் தானாகவே அறிவித்தது.

சீனாவின் பகுதிகளை ஏற்கனவே இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்ததாகவும் அவர்களை பழைய இடத்துக்கு விரட்டுவதே தங்கள் நோக்கம் என்றும் அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்றும் சீனா கூறியது. "போரில் பிடித்த இடங்களில் இருந்து சீனப்படைகள் வாபஸ் ஆகிவிடும். அந்தப்பகுதி ராணுவம் இல்லாத சூனியப் பிரதேசமாக இருக்கவேண்டும். (அதாவது இந்தியப்படைகள் கைப்பற்றிக்கொள்ளக் கூடாது) ஆக்கிரமிப்பு செய்தால் திருப்பித் தாக்குவோம்" என்று கூறிவிட்டு படைகளை சீனா வாபஸ் பெற்றது.

இந்தியாவின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து கொண்டிருந்த நேருவின் புகழுக்கு சீனப்படையெடுப்பின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

பாராளுமன்றத்தில் முதன் முதலாக நேரு மந்திரிசபை மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நேரு ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வற்புறுத்தினர்.

"நட்புடன் இருந்த சீனா நம்பிக்கைத் துரோகம் செய்ததால் நமக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது. இனி இத்தகைய நிலை ஏற்படாது. இந்தியாவிடம் எந்த நாடாவது வாலாட்டினால் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் பலப்படுத்தப்படும்" என்று நேரு பதிலளித்தார். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றது.

அதுவரை இந்தியாவை தொழில் துறையில் முன்னேறச் செய்ய பாடுபட்டு வந்த நேரு, ராணுவ பலம் மிக்க நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். "இந்தியாவை வல்லரசு நாடாக்கவேண்டும்" என்று உறுதியுடன் செயல்படலானார். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்காக அதிகத் தொகை ஒதுக்கப்பட்டது.

நவீன போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. முப்படைகளுக்கும் அதிக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். "இனி போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு தோல்வி ஏற்படக்கூடாது" என்ற உறுதியுடன் நேரு வகுத்தத் திட்டங்களால் இந்திய ராணுவத்தின் பலம் படிப்படியாக உயர்ந்தது
நன்றி மாலைமலர்,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக