சோழன் கோச்செங்கணான்
by கார்த்திக் செயராம் on Wed Nov 18, 2015 2:42 pm
முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர்(1). வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்(2). கோச்செங்கட்சோழனைக் கணைக்கால் இரும்பொறையுடன் தொடர்புபடுத்திக் கூறுவது போலவே, சேரமான் கோக்கோதை மார்பனுடன் தொடர்புபடுத்திப் பேசுவாரும் உளர். அப்பெருமானைச் சைவத்தில் தழைத்த நாயன்மார்களுள் ஒருவனாய்க் கொண்டாடிவரும் அதே நேரத்தில், அவனைத் திருமால் அடியவனாய்ச் சிறப்புப் பெற்றவன் என்று கூறுவாரும் உளர்(3). அவன் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா, திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன(4). இவற்றையெல்லாம் வரலாற்று இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு தெள்ளத் தெளிய நடுவு நிலையில் நின்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கோச்செங்கட்சோழனைப் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு, களவழி நாற்பது, சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பதிக்ங்கள், பெரிய திருமொழி, திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம், திருவானைக்கா புராணம், கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற இலக்கியங்களில் காணலாம். அன்பில் செப்பேடுகளில் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன(5). இது தவிர திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கன்னியாகுமரிக் கல்வெட்டுகளும் செங்கணானைக் கரிகாலன் வழித்தோன்றலாகவும், ஒன்பதாம் நூற்றாண்டினனான விசயாலயச் சோழனுக்கு முன்னோனாகவும் இடையில் வைத்துக் கூறுகின்றன(6).
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வைத்து நோக்கும்போது கோச்செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவன் என்பது உறுதியாகின்றது. ஆய்வாளர்களுக்குள் இதில் கருத்து மாறுபாடு இல்லை. அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவனா அல்லது சங்க காலத்திற்குப் பிறகு வாழ்ந்தவனா என்பதே ஆய்வுக்குரிய செய்தியாகும். கோச்செங்கட்சோழன் சங்க காலத்தில் வாழ்ந்தவன் என்று ஆய்வுரை செய்யும் பெருமக்கள் அதற்காக எடுத்துக் கொள்ளும் காட்டுகள் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பும்(7), களவழி நாற்பது ஏட்டின் உரைகாரர் எழுதிய பின்குறிப்புமேயாகும்(8). இவற்றைத் தெளிவாகக் காண்போம்.
"குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத்தானெ". (9)
இப்புறப்பாடலின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்று காணப்படுகிறது. இந்த அடிக்குறிப்பு, இப்பாடலைப் பாடிய, புலவர் எழுதியதன்று என்பது, 'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள அடிக்குறிப்புகள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அவை பல இடங்களில் பொருத்தமற்று விளங்குவது கண்கூடு. புறம் 389ஆம் செய்யுளில்,
"ஆதனுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீடே
வீறுசால் நன்கல நல்குமதி பெரும"
என வரும் தொடர்களைக் கண்டதும், 'ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார் பாடிய பாட்டு' என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது(10). இங்கு 'ஆதனுங்கன் போல நீயும்' என வரும் தொடரே, ஆதனுங்கன் உவமைக்காக மேற்கொள்ளப்பட்ட பெயர் என்பதை விளக்குகிறது. இவ்விளக்கத்தைக் கொள்ளாமல் இது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு எனப் பிழையான அடிக்குறிப்பு செய்திருப்பது போலவே, பிழைபட்ட இடங்களும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளும் பலவாகும். இத்தகைய அடிக்குறிப்புகளில் ஒன்றாகவே செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பையும் கொள்ளலாம்(11).
மேலும் பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்களால் உரை எழுதப்பெற்று, கழகத்தால் வெளியிடப்பட்ட புறநானூற்றுப் பதிப்பில் இப்பாடலின் அடிக்குறிப்பு மாறிக் காணப்படுவது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. 'இது நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது' என்று அடிக்குறிப்பு மாறியுள்ளது. இப்பதிப்பின் முன்னுரையில் அவ்வை சு.துரைசாமி அவர்கள், உ.வே.சா அவர்களின் பதிப்புக்கும் தம் பதிப்புக்கும் உள்ள மாறுபாடுகளை விளக்குகையில் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடியிலிருந்து இம்மாற்றங்களைச் செய்ததாகக் குறிக்கிறார்கள்(12). இப்படிப் பதிப்புக்குப் பதிப்பு மாறும் அடிக்குறிப்புகளைக் கொண்டு ஒரு மாமன்னனின் காலத்தை நிறுவுவது அறிவுடைமையாகாது.
களவழி நாற்பது நூலின் இறுதியில் அதன் பழைய உரையாசிரியர், 'சோழன் கோச்செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்று குறிப்பிடுகிறார்(13).
தமிழ் நாவகர் சரிதையில், கணைக்கால் இரும்பொறையால் பாடப்பட்டதாகக் கூறப்படும் புறநானூற்றின் 74-ஆம் பாடல், 'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு' என்ற அடிக்குறிப்புடன் காணப்படுகிறது(14). இது குறித்து டாக்டர் மா. இராசமாணிக்கனாரவர்களும், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், தங்கள் நூல்களில் விரிவாகவே குறிப்பிடுகின்றார்கள்(15).
புறநானூற்றின் அடிக்குறிப்பு, 'கணைக்கால் இரும்பொறை சிறையில் இறந்தான்' என்று குறிப்பிடுகின்றது, தமிழ் நாவலர் சரிதையில் அச்செய்யுளின் அடியில், 'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது(16).
ஒட்டக்கூத்தர் தாம் பாடிய மூன்று உலாக்களிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.
"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)
"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)
"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)
இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,
"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.
இவ்விலக்கியச் சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றன. சேரன் சோழனின் சிறையில் இறந்தான் என்ற புறநானூற்று அடிக்குறிப்பும், சேரன் பொய்கையாருக்கு எழுதிவிடுத்த இப்பாட்டு கேட்டுப் பொய்கையார் களவழி பாட, செங்கணான் சேரனைச் சிறைவிட்டு அரசளித்தான் என்று தமிழ் நாவலர் சரிதையும், சோழன் சேரனைப் பொய்கையார் பாடலுக்கு விடுதலை செய்தான் என்று ஏனைய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. இவற்றில் எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று தெளிவு காண வேண்டும்.
நன்றி :- முகநூல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக