சனி, 15 ஏப்ரல், 2017

சமண படுக்கைகளும் - தமிழ் பிராமி கல்வெட்டுகளும் எடக்கல்

புகழூர்க் கல்வெட்டு:-
கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

'புகழூர்க் கல்வெட்டு' என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.

இக் கல்வெட்டில் பெயர் குறிக்கப்பட்டுள்ள சேர மன்னர்கள், கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பவர்களாவர். இவர்களில் கோ ஆதன் சேரல் இரும்பொறையின் மகனே பெருங்கடுங்கோ. இளங்கடுங்கோ பெருங்கடுங்கோவின் மகன். இக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.

கல்வெட்டில் (பிராமி எழுத்துகளில்) இடம்பெற்றுள்ள செய்தி:

“ யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல் ”
இதில் கூறப்படும் 'கோ அதன் செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் 'பெருங்கடுங்கோ' என்பது 'பாலை பாடிய பெருங்கடுங்கோ'வையும், இவன் மகன் 'இளங்கடுங்கோ' என்னும் பெயர் 'மருதம் பாடிய இளங்கடுங்கோ'வையும் நினைவூட்டுகின்றன.

இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் 'பிட்டன்', 'கொற்றன்' என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

மாங்குளம் கல்வெட்டுகள்:-
மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் "பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்" என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.

பெரும்பாலும் இக் கல்வெட்டுச் செய்திகள் அனைத்துமே பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன[1].

கல்வெட்டு 1
நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை) அமைத்துக் கொடுத்துள்ளார்.
கல்வெட்டு 2
நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.
கல்வெட்டு 3
வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்னும் ஒரு முத்து வணிகன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது.
கல்வெட்டு 4
நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.
கல்வெட்டு 5
சந்திரிதன் கொடுபித்தோன்.
கல்வெட்டு 6
இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்:-
எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பன கேரள மாநிலத்தில் உள்ள எடக்கல் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கபட்ட நான்கு தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களைக் குறிக்கும். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் மலபார் மாவட்டத்தின் காவல் துறை அதிகாரியாக இருந்த போசெட் (Fawcett) என்பவர் 1894 ஆம் ஆண்டில் இதைக் கண்டு பிடித்தார்.[1] அவர் இவற்றைக் கவனமாக வரைபடமாக வரைந்துகொண்டதுடன் ஒளிப்படங்களையும் எடுத்து இந்திய தொல்லியல் துறையில் கல்வெட்டியலாளராக இருந்த ஹல்ச் (Hultzsch) என்பவரிடம் கையளித்தார். ஹல்ச் இதனைப் படியெடுத்து வெளியிட்டார். 1901 ஆம் ஆண்டில் போசெட்டும் இது குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். ஹல்ச் இக் கல்வெட்டை வாசிக்க முயன்றாராயினும் அது வெற்றியளிக்கவில்லை. பின்னர் சுமார் 100 ஆண்டுகள் இது கவனிக்கப்படாமல் இருந்தது.

1995 ஆம் ஆண்டிலும், 1996 ஆம் ஆண்டிலும் ஐராவதம் மகாதேவன், அப்பகுதிக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் கிறுக்கல்களால் பழுதுபட்டுப் போயிருந்த அக் கல்வெட்டைப் பார்வையிட்டதுடன் அதை வாசித்து வெளிப்படுத்தினார். இவற்றில் ஒன்றில் "சேர" என்னும் சொல் காணப்படுகிறது. "சேர"என்ற சொல்லுக்கான மிகப்பழைய கல்வெட்டுச் சான்று இது என்பதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

இக்கல்வெட்டுக்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

நன்றி :- விக்கிபீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக