வெள்ளி, 21 ஏப்ரல், 2017

குமரி கன்யாகுமரி போராட்டம் நேசமணி துப்பாக்கிச்சூடு கொலை மலையாளி 1956 மண்மீட்பு

தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 57-வது வயது
Post by டார்வின் on Tue Nov 06, 2012 3:44 pm



தமிழகத்தின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், முக்கனிகள் விளையும் பசும்சோலைகள், முத்தமிழ் சிறந்த மக்கள் என இம்மாவட்டத்திற்கு தனிச் சிறப்புகள் உண்டு. தமிழகத்தின் மணிமுடியில் அலங்கார கிரீடமாய் ஜொலிக்கும் இந்த மாவட்டம் முன்பு கேரளாவுடன் இணைந்திருந்தது. இங்கு தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்த பின்பும் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக இம்மாவட்டம் இருந்ததால் அப்போது கேரளாவுடன் சேர்க்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

தொலை நோக்கு திட்டங்கள் மறுக்கப்பட்டன. குறிப்பாக இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வுரிமை தடுக்கப்பட்டது. ஆண்கள் தலைப்பாகையும், பெண்கள் மேலாடையும் அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்க்கல்வி மறுக்கப்பட்டு மலையாளம் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பெருவாரியாக வசித்த தமிழர்கள் கிளர்ந்து எழுந்தனர். சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கை போக்க போராட்டத்தில் குதித்தனர். இதற்காக 1945-ம் ஆண்டில் `திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு உதயமானது.

இவர்கள் குமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர். `குமரி தந்தை' என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி இப்போராட்டக் களத்தில் தீவிரம் காட்டினார். குறிப்பாக குமரி மக்களை சாதிய அடிப்படையில் பிரித்துப் பார்த்த மேல்தட்டு மக்களை ஆக்ரோஷமாக எதிர்த்தார். இரட்டை இருக்கை, இரட்டை குடிநீர் பானை போன்ற முறைகளை ஒடுக்க கடுமையான போராட்டங்களில் குதித்தார். 1948-ம் ஆண்டு நித்திரவிளை அருகே உள்ள மங்காட்டில் குமரி மாவட்ட மீட்புப் போராட்டம் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது காவல் துறையினர் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் பலியானார்கள். இந்த சம்பவம் போராட்டத்தின் வீரியத்தை நாட்டுக்கே வெளிச்சம் போட்டு காட்டியது. விளைவு கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, மூணாறு, தேவிக்குளம் பகுதிகளிலும் கிளர்ச்சி வெடித்தது. எங்கும் ஆர்ப்பாட்டம், மறியல் என மாநிலமே கொந்தளித்தது. இதனால் அந்த பகுதிகளிலெல்லாம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு போராட்டக்குழு அஞ்சவில்லை.

தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அணி அணியாக போராட்டக் களத்தில் குதித்தனர். குமரியில் இருந்து போராட்டக்காரர்கள் நேசமணி தலைமையில் பீர்மேட்டிற்கே சென்று தமிழர் பகுதியை தமிழகத்துடன் இணை என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் கன்னியாகுமரி எங்கும் மக்கள் கொதித்து எழுந்தனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போராட்டம் வேகம் எடுத்தது. 1954-ல் மார்த்தாண்டம், புதுக்கடை பகுதிகளில் ஊர்வலமும், மறியல் போராட்டமும் நடந்தது. அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அருளப்பன் , செல்லப்பாபிள்ளை உள்பட 9 பேர் உயிர் இழந்தனர். இவர்களின் உயிர் இழப்பு தென்திருவிதாங்கூர் அரசுக்கு பேரிடியாக மாறியது. ஒட்டு மொத்த மக்களும் அரசுக்கு எதிராக திரும்பியதால் ஆட்சியாளர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

1956-ம் ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கும் முடிவுக்கு திருவிதாங்கூர் அரசு இசைந்தது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களையும் இணைத்து கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1956 நவம்பர் 1-ந்தேதி இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜரால் கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது. இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. மைதானத்தில் கோலாலமாக நடந்தது. அன்று இந்த மாவட்டம் உதயமாக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுக்கடையில் இவர்களுக்கு நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பேச்சிப்பாறை அணை, தொட்டில் பாலம் என விவசாயிகளின் நலன் காக்கும் பணிகள் நடந்தன. கடற்பரப்பையும், மலை வளத்தையும் காக்க எண்ணிலடங்கா திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனால் இந்தியாவிலேயே கல்வி அறிவுமிக்க மாவட்டம் என்ற புகழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்தது. இதனால் மக்கள் கண்ணியத்துடன் வாழ தொடங்கினர். இப்படி மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட குமரி மாவட்டம் தமிழகத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட 57-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு பாடுபட்ட தீரர்களையும் தியாகிகளையும் இந்த நேரத்தில் நினைவுக் கூர்வது அவசியம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந்தேதியை தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

குமரி மாவட்டத்தில் இன்று மலையாள மொழி பேசும் மக்களும் பல்வேறு சமயங்களை பின்பற்றுவோரும் சகோதரர்களாக இணைந்து வாழ்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக