திங்கள், 9 அக்டோபர், 2017

படிக்காத பறையர் நேர்மை உலகமே கிடைத்தாலும் பழி வேண்டாம் சொல்லாடல் அப்படியே இலக்கியம்

நன்றி: பதிவு திரு. பழனி தீபன் அவர்கள்
நம்புவீர்களா...?
ஒரு மொழியின் மீது பற்று தேவையா? அது வெறும் கருவி தானே...? சில
பகுத்தறிவில் வேகவைத்த அறிவு கொழுந்துகளின் கேள்வி இது.
இன்று நில மோசடி தொடர்பாக ஒரு வழக்கு. மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில்.
வழக்கு இதுதான்.
அண்ணன் தங்கை மீது புகார் கொடுத்துள்ளார். தனக்கு உரிமையுள்ள 0.5 சென்ட்
நிலத்தை தங்கை மோசடியாக பட்டா மாற்றம் செய்து கொண்டார் என்று. பரையர்
வகுப்பு.
நான் அந்த தங்கையின் சார்பாக வழக்கறிஞராக சென்றிருந்தேன்.
விசாரணை ஆரம்பித்தது அந்தப் பெண்ணிடம்.
அந்தப் பெண்ணின் கூற்று: ”ஐயா, எனக்கு சொந்தமான நிலத்தைதான் நான் பட்டா
மாற்றம் செய்து கொண்டேன். அந்தப் பழிக்கு நான் ஆளாக மாட்டேன். உலகமே
வந்தாலும் அந்தப் பழியை நான் செய்ய மாட்டேன். எவ்வளவு நேரமென்றாலும்
இங்கு இருக்கிறேன். என் மேல் உள்ள பழி இன்றோடு கழிய வேண்டும்...”
இந்தப் பெண்மணியின் சொல்லாடலைக் கண்டு எனக்கு அதிர்ச்சியும் வியப்பும்
ஒருங்கே ஏற்பட்டது.
ஆமாம். இதே வசனம்.... கவித்துமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக
எழுதப்பட்ட ”உண்டாலம்ம இவ்வுலகம்....” என்கிற புறநானூற்றுப் பாடலில் ”
”பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்...” வருகிறதே....
அட... அதே சொல்லாட்சி.... அதே கருத்து. பழி, உலகம்... மூவாயிரம்
ஆண்டுகாலமாக மாறாத அதே இளமையோடு எனது தமிழ்.
வெளியே வந்தவுடன் அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ”என்னம்மா படித்திருக்கிறாய்...?”
”நான் எங்கே சார் படிச்சேன்.... கைநாட்டுதான்....”
புரிந்தது.
மொழி என்பது வெறும் கருவி அல்ல. அது ஒரு இனத்தின் பண்பாட்டையும்
நாகரிகத்தையும் ஒருவனது மூளையில் உட்கார்ந்துக்கொண்டு.... மரபணுக்களை
அதற்கேற்றவாறு தயார் செய்யும் உயிர் ஆற்றல். வழி வழியாக கடத்தப்படுவது.
ஆக... ஒரு இனத்தின் வாழ்வியலின் வெளிப்பாடே அந்த இனத்தின் மொழியின்
கட்டமைப்பைப் பொறுத்துதான்.
இந்த மொழி கட்டமைப்புதான் ஒரு தமிழச்சியை அவள் கைநாட்டாக இருந்தாலும் சரி
கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவளாக இருந்தாலும் சரி ”கற்பு” என்பதற்கு
ஒரு மதிப்பு கொடுத்து, அதை வாழ்வியலின் முதன்மைக் கோட்பாடாக உருவாக்கி
கொள்ள முடிகிறது. இப்படி பல கோட்பாடுகளை அந்த மொழியே அநத மக்களுக்கு
காலங்காலமாக வழங்கி வருகிறது. இதனையே நாம் ஒரு இனத்தின் நாகரிகம்
என்கிறோம்.
அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே....?
மலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக