செவ்வாய், 10 அக்டோபர், 2017

சமணர் கழுவேற்றம் பொய் விவாதம் சைவம் உரையாடல் 1

June 5, 2014
- ஒரு அரிசோனன்
பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச்
செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் [1] கவனிக்கிறார்
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும்
சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது.
“சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல்
அவரது வாய் முணுமுணுக்கிறது.
“என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று
நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத்
திருப்பிப் பார்க்கச் செய்கிறது.
சிதமபரம் கோயில் சிற்பம்- சமணர் கழுவேற்றம்
“வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று
இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
“அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச் செய்தது?
காண்பியும்!” என்று மீண்டும் கேட்கிறார் சேக்கிழார்.
சமணர்கள் கழுவேற்றப்படும் சிற்பத்தைக் காண்பிக்கிறார் பாலசுப்பிரமணிய
சிவாச்சாரியார்.
அதை உற்றுப் பார்த்த சேக்கிழார், “இந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது
என்பதற்கு உம்முடைய தரப்புக் கருத்து என்னவோ?” என்று வினவுகிறார்.
“இறைவனின் அருளை வேண்டி அடியார்கள் குழுமும் புனிதமான இடம் இது! இதில்
கொலைத் தொழிலைக் காட்டும் சிற்பம் தேவைதானா?”
“இது சரித்திரம் அல்லவா? காழிப் பிள்ளையாருடன் [2] அனல் வாது, புனல் வாது
புரிந்து தோற்ற அமணர்கள் விரும்பிப் பெற்ற தண்டனைதானே இது? அவர்கள்
சைவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்காதே?” என்று அச்
சிற்பம் அங்கு இருப்பது பொருத்தமானதே என்ற தனது கருத்தை வெளியிடுகிறார்
சேக்கிழார்.
“இது பாண்டியரை உயர்த்தும் சரித்திரம் அல்லவா?  சோழ நாட்டில், அதுவும்
கோவில் என்றாலே தில்லை என்று பெயர்பெற்ற, கூத்தபிரான் களிநடமாடும்
பொன்னம்பலப் பிரகாரத்தில் பாண்டியர் புகழ் பாடவேண்டுமா?  ஏதோ ஒரு
பாண்டியச் சிற்பி யாரும் அறியாத வண்ணம் இச் சிற்பத்தைச் செதுக்கி விட்டது
போலல்லவா இருக்கிறது!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தன் வாதத்தை வேறு
பக்கம் திசை திருப்புகிறார்.
“உம் சோழ நாட்டுப் பற்றை நாம் மெச்சுகிறோம். சைவத்துக்கு வந்த இடர்
எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றைத்தான் இச் சிற்பம் காட்டா
நிற்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன், தான் சென்ற வழி தவறு என்று
உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச் சமயத்தார் தாமே
விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான் உலகுக்குக்
காட்டுகிறது.
“ஆகவே, நீர் உமது நோக்கை விரிவுபடுத்தும். பாண்டியன் என்ற குறுகிய நோக்கை
விடுத்து — தமிழன், அதுவும் தமிழ்ச் சைவனாகப் பிறந்து புறசமயத்தைத்
தழுவிய அரசன் – சோழ இளவரசி ஒருவராலும், சோழ வளநாட்டில் அவதரித்த காழிப்
பிள்ளையாராலும்தான் சைவத்திற்குத் திரும்ப ஈர்க்கப்பட்டு, அரசநெறியை
நிறைவேற்றிய வரலாறு என்ற பெருநோக்குடன் இச்சிற்பத்தைக் கண்ணுற்றால் — இது
சைவ நாயன்மார்களில் ஒருவரான — சோழ இளவரசியாகப் பிறந்து,
பாண்டிமாதேவியாகப் பரிணமித்த மங்கையர்க்கரசியாரின் சைவத் தொண்டைச்
சிறப்பிக்கும் சிற்பம் என்று உமக்குப் புரிய வரும். இது நாம் எழுதப்
போகும் திருத் தொண்டர் புராணத்தின் ஒரு பகுதி என்றும் அறிந்து கொள்வீர்!”
என்று விரிவுரை ஆற்றுகிறார் சேக்கிழார்.
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனுக்கும்
சைவம் மீட்ட ராணி மங்கையர்க்கரசியாருக்கும்,
அமைச்சர் குலச்சிறையாருக்கும்
ஆசி வழங்கும் ஞானசம்பந்தப் பெருமான்
“பொறுமையுடன் எனது அறியாமையை அகற்றியதற்கு மிக்க நன்றி, சேக்கிழார்
பெருமானே!” என்று குழைந்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், “தங்கள்
வருகைக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லையே?” என்று வினவுகிறார்.
“நாம்தான் அதைப்பற்றியும் கூறினோமே, நீர் கவனத்தைச்
சிதறவிட்டிருக்கிறீரே! நீர் இந்தச் சிற்பத்தைப் பற்றித் தமக்குத் தாமே
பேசி, அதற்கு நாம் விளக்கம் கொடுத்தபோது, இங்கு வந்ததற்கான காரணத்தைக்
கூறிவிட்டோமே!” என்றதும், பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் முகம்
மலர்கிறது.
“தாங்கள் இங்குதான் திருத்தொண்டர் புராணத்தை எழுத இருக்கிறீர்களா?”
“அம்பலவாணன் அடியெடுத்துக் கொடுத்து, அதை நாம் எழுதத் துவங்கவேண்டும்
என்று மனதிற்குள் ஒரு வேண்டுதல். வாரும், இறைவன் முன்பு அமர்ந்து
பேசுவோம்!” என்று அழைக்கிறார் சேக்கிழார்.
அவரை வரவேற்க வந்த தில்லை அந்தணர்கள் சிலரையும் அன்பு கலந்த புன்னகையுடன்
தடுத்துவிடுகிறார்.  இருவரும் சற்றுத்தள்ளி, நடராஜரின் திருஉருவம்
கண்ணில் படும், அதே சமயம் மனித நடமாட்டம் குறைவான இடத்தில் அமர்ந்து
கொள்கிறார்கள்.
“ஓய், சிவாச்சாரியாரே! நீரும் நானும் ஒன்றையேதான் விரும்புகிறோம். தமிழ்
என்றும் அழியாமல் எல்லோராலும் பேசப்படவேண்டும், தமிழ் மறைகள் அனைவராலும்
ஓதி உணரப்படுதல் வேண்டும் என்பதுதான் அது. அநபாயச் சோழரும் அதற்காகவே
திருத்தொண்டர் புராணம் எழுதி முடிக்கும்வரை தில்லையிலேயே இருக்கும்படி
என்னைப் பணித்துவிட்டார்.
“உமக்குத் தமிழில் இருக்கும் ஆர்வம் நான் அறியாததல்ல. எனவே, உம்மையும்
தமிழையும், சைவத்தையும் ஒருங்கே வளர்க்கும் இப்பணியில் சேர்த்துக்கொள்ள
விரும்புகிறேன். ஆகையால், திருத்தொண்டர் புராணம் எழுதுவதற்கு நீர் ஒரு
உதவி செய்யவேண்டும்!” என்று சேக்கிழார் சொன்னதும், “சேக்கிழார் பெருமானே!
இதைவிடப் பெரும் பேறு, வேறு என்ன எனக்குக் கிடைக்க இருக்கிறது? தாங்கள்
திருவாய் மலர்ந்து அருளுங்கள்!” என்று பணிவாகப் பதிலிறுக்கிறார்
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
“நீர்தான் எனது எழுத்தராக இருக்க வேண்டும்!”
“பெரும் பேறு பெற்றேன் பெருமானே! திருத்தொண்டர் புராணத்தைத் தங்கள்
வாயிலாக முதன்முதலாகச் செவியுறும் நல்வாப்பு யாருக்குக் கிடைக்கும்?
அதையும் தாங்கள் சொல்லச் சொல்ல நானே எழுதுவது என்றால்… என்
மயிர்க்கால்கள் புல்லரிக்கின்றன!” பாகாய்க் கரைகிறார் பாலசுப்பிரமணிய
சிவாச்சாரியார்.
அருகில் நிற்கும் பணியாளரைப் பார்த்து சேக்கிழார் சைகை செய்கிறார்.
பணியாளர் தான் வைத்திருக்கும் ஒரு துணிக்கட்டை பாலசுப்பிரமணிய
சிவாச்சாரியாரிடம் கொடுக்கிறார். சேக்கிழாரின் தலை அசைப்பைக் கண்ணுற்று,
பணியாளர் இவர்கள் பேச்சு தன் காதில் விழாத தூரத்தில் நின்று கொள்கிறார்.
“ஓய், சிவாச்சாரியாரே! பதனிடப்பட்ட பனை ஓலைகளும், நல்ல எழுத்தாணியும்
இத்துணிக்கட்டில் உள்ளன. எனவேதான் இதை உம்மிடம் கொடுக்கச் செய்தோம்.
முதல் அடி எடுத்துக் கொடுக்கும்படி அம்பலவாணனை இறைஞ்சிக்
கொண்டிருக்கிறேன். அவர்தான் கருணை காட்டவேண்டும்!” என்று பயபக்தியுடன்
சொல்கிறார்.
“கட்டாயம் நடக்கும், பெருமானே! அவருடைய நாயன்மார்களைப் பற்றி அல்லவா
தாங்கள் திருமுறை எழுதப் போகிறீர்கள்! கட்டாயம் அம்பலவாணர் அடி எடுத்துக்
கொடுப்பார்!” பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடமிருந்து பரவசத்துடன் பதில்
வருகிறது.
அப்பொழுது நடராஜருக்குத் தீபாராதனை நடக்கிறது.  அந்த ஒளியில் அவரது
திருஉருவம் தகதகவென்று மின்னுகிறது. இருவரும் எழுந்து நிற்கிறார்கள்.
“அவனது ஒளியைப் பாரும்.  அவனது தலையில் மின்னும் பிறை நிலாவைக் காணும்.
அவன் தலையில் தரித்துக் கொண்டிருக்கும் கங்கையைக் கவனியும். இம்மாதிரியான
சோதியை நான் இதுவரை கண்டதே இல்லை. எப்படி ஆனந்த தாண்டவம்
ஆடிக்கொண்டிருக்கிறான்! அவனது சிலம்பு அணிந்த திருவடிகள்தான் நமக்கு
எப்படித் தரிசனம் கொடுக்கின்றன! நோக்கும்!” என்று சேக்கிழார் சொல்லி
முடித்தவுடன் அவர்களைச் சுற்றிப் பல இடங்களில் கோவில் மணிகள்
ஒலிக்கின்றன.
திடுக்கிட்டுத் திரும்பிய சேக்கிழார் சுற்றுமுற்றும் பார்க்கிறார். மணி
ஓசையில் அவரது மனமும், இதயமும், சிந்தனையும் லயிக்கின்றன. மெல்ல அவரது
முகம் மலர்கிறது. தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார். கையை உயர்த்தி,
நடமிடும் நாயகனான நடராஜனை நோக்கிக் கூப்புகிறார்.
“கேட்டீரா, ஓய்? அம்பலவாணன் அடி எடுத்துக் கொடுத்துவிட்டான்!
திருத்தொண்டப் புராணத்திற்கு முதல் அடியைக் கூறிவிட்டான்! தனது கோவில்
மணிகளின் ஒளியின் மூலமாக முதல் அடி எடுத்துக் கொடுத்து, என் அடியார்களின்
புகழைப் பாடு, என்னை எழுது, திருமுறையாக எழுது என்று ஊக்குவிக்கிறானே!
உமது காதில் அது விழுகிறதா?” என்று ஆனந்தப் பரவசத்துடன் கேட்கிறார்
சேக்கிழார்.
“பெருமானே! என் காதில் கோவில் மணிகள் ஒலிக்கும் சத்தம்தான் கேட்கிறது.
வேறொன்றும் கேட்கவில்லையே! இறைவன் கோவில் மணிகள் மூலம் தங்களுக்குப்
பகிர்வது தங்களது தவப் பயன்! என்மாதிரி ஒன்றுமில்லாத ஞானசூனியனுக்கா அதை
உரைப்பான்?” என்று குறைப்பட்டுக் கொள்ளுகிறார்.
“கவனமாகக் கேளும், ஓய்! உமாமகேசனின் உரை உமக்கும் ஒலிக்கும்! அவனது
மணிகளின் ஒலியை நன்றாகக் கவனித்துச் சொல்லும், ஓய்!” என்று
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரை உற்சாகத்துடன் தூண்டுகிறார்.
“அப்படியே!” என்று பயபக்தியுடன் கேட்ட பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்,
“டாண், டாண் என்றுதான் கேட்கிறது.” என்கிறார்.
“மேலெழுந்தவாரியாகக் கேட்காதீர்! உற்றுக் கவனியும். மணிகள் அடித்த பிறகு
எழும் அதிர்வுகள் என்ன சொல்கின்றன என்று உட்சென்று கவனியும்!”
கண்களை மூடிக்கொண்டு கவனத்தை மணியோசைகள்பால் செலுத்துகிறார்
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
சிதம்பரம் ஆடல்வல்லான்
“டாண், டாண் என்று ஒலி எழுப்பிய பின்பு மணிகளிலிருந்து, ஓம், உம், கெம்,
ஓம், லம், லாம், லாம், கெம், என்று பலவாறு அதிர்வுகள் கிளம்புகின்றன.
எனக்கு சொற்கள் ஒன்றும் விளங்கவில்லையே?” என்று இறைவனின் சொல்லை அறிய
இயலாத ஆதங்கத்துடன் சேக்கிழாரை வினவுகிறார்.
“அதேதான், அதேதான்!” என்று உற்சாகத்துடன், உவகையுடன் சொல்கிறார்
சேக்கிழார். “நானும் நீர் கெட்ட ஒலி அதிர்வுகளைத்தான் கேட்டேன். மணி
ஓசையின் அதிர்வு எப்போதும் ஓம் என்று பிரணவ ஒங்காரத்துடன்தான் முடியும்.
ஒவ்வொரு மணிக்கும் தனிப்பட்டதான அதிர்வு உண்டு. ‘ம்’ என்ற ஒலியை முடிவாக
வைத்துக் கொள்வோம். நீர் கேட்ட பல அதிர்வுகளை எழுத்துக்கள் என்று
வைத்துக்கொண்டு, ‘ம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியை எடுத்து
விட்டோமானால், மிஞ்சும் ஒலிகளை ‘உ’, ‘ல’, ‘கெ’, ‘லா’, என்று வரிசைப்
படுத்தலாம். பிரணவத்தின் ‘ம்’ கடைசி ஒலியானால், ‘உலகெலாம்’ [3] என்ற சொல்
நமக்கு அம்பலவாணனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது,
பார்த்தீரா!” என்ற சேக்கிழாரின் விளக்கத்தைக் கேட்டு அயர்ந்துவிடுகிறார்
பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
ஆடலழகனான ஆனந்த சபேசன் தன் அலகிலா விளையாட்டை நிகழ்த்திய நேர்த்தியை
எண்ணி உள்ளம் பூரிக்கிறார். உற்சாகத்துடன் மேலும் தொடர்கிறார்
சேக்கிழார்.
“நமக்கு இறைவனார் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ என்ற சொல்லை
வைத்துக்கொள்வோம். சற்றுமுன் அவனது தரிசனத்தைப் பற்றி வர்ணித்தேன். அதை
வைத்து முதல் செய்யுளைச் சொல்கிறேன், எழுதிக்கொள்ளும்.” என்று
பரபரக்கிறார். உடனே துணிக்கட்டை அவிழ்த்து, ஓலைகளையும், எழுத்தாணியையும்
தயாராக வைத்துக்கொண்டு தலை அசைக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
சேக்கிழார் மெய்மறந்து துவங்குகிறார்…
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி மேனியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
“உலக மக்கள் அனைவரும் இறைவன் தங்களுக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்து
அவனைத் துதி பாடிவர வல்லவன், அவனது தலை முடியில் புனித நீரைப் பொழியும்
கங்கை இருக்கிறாள், பிறை நிலா அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அவனிடமிருந்து எழும் ஜோதிக்கு எதையும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாது.  அவன்
தில்லையில், பொன்னம்பலத்தில் என்றும் ஆடிக்கொண்டிருப்பவன், அவனது
மலர்போன்ற, ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஒலிக்கின்ற, சிலம்புகள் அணிந்த
திருவடியை வாழ்த்தி வணங்குவோமாக!” என்று முடிக்கிறார்.
“ஆகா, ஆகா, அருமை! அருமை!” என்று ரசித்தவாறே முதற் செய்யுளை எழுதி
முடிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.
கவிதை வெள்ளம் சேக்கிழாரிடமிருந்து அருவியாகப் பெருக்கெடுக்கிறது.
திருத்தொண்டர் புராணம் உருப்பெறுகிறது.
.
விளக்கக் குறிப்பு:
[1] இந்தச் சிற்பம் தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரில் செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சிற்பத்தின்
நிழற்படமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
[2] சீர்காழியில் பிறந்த சைவ சமய குரவரான திருஞானசம்பந்தரை, அவர் பிறந்த
ஊரைச் சிறப்பித்து, ‘காழிப் பிள்ளையார்’ என்று அன்புடன் அழைப்பது
வழக்கமாக இருந்துவருகிறது.
[3] திருத்தொண்டர் புராணத்தைத் துவக்க அசரீரி வாயிலாக இறைவனே
சேக்கிழாருக்கு ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு
கூறுகிறது.
குறிச்சொற்கள்: காழிப் பிள்ளையார் , சமணர் கழுவேற்றம், சிதம்பரம் கோயில்,
சேக்கிழார், சைவ மறுமலர்ச்சி,
திருஞானசம்பந்தர், திருத்தொண்டர் புராணம், நாயன்மார், பாலசுப்பிரமணிய
சிவாச்சாரியார், பெரிய புராணம்,
மங்கையர்க்கரசியார்
37 மறுமொழிகள் அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்
ஒரு அரிசோனன் on June 5, 2014 at 10:35 am
தலைப்பு தவிர வேறு எதுவும் இல்லையே? வலையில் ஏற்றுவதில் ஏதாவது குழப்பமா?
சேக்கிழான் on June 5, 2014 at 11:36 am
திரு. அரிசோனன் அவர்களுக்கு,
வலையேற்றுவதில் ஏற்பட்ட சிறு பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது. நன்றி.
JANAVI PUTHTHIRAN on June 5, 2014 at 12:47 pm
திரு அரிசோனன் அவர்களுக்கு, தங்களின் கட்டுரைகளை விரும்பிப்படிக்கும்
நபர்களுள் நானும் ஒருவன்.சேக்கிழார் அவர்களின் தொண்டினை மிக நயம்பட
யெழுதியுள்ளீர்கள்.நான் 1962 வருஷம் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது இந்த
பெரியபுராண முதல் பாடலை மனனம் செய்தது இன்னும் ஞாபகத்தில் உள்ளது
.எக்காரணம் கொண்டும் தமிழில் சந்திப்பிழை வரக்கூடாது என நினைப்பவன் . சில
சொற்கள் மாறினால் பொருள் முழுவதும் மாறுபடும் என்பதனை தாங்களும்
அறிவீர்கள் .
இப்பாடலை வெட்டி ஒட்டி இருக்கிறேன்.
1. பாயிரம்
1. உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் 0001-1
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 0001-2
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் 0001-3
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 0001-4
தமிழ் ஒரு ஒப்பில்லா மொழி . சற்று கவனம் எடுத்து பதியுமாறு
கேட்டுக்கொள்கிறேன் .இங்கு ஆங்கிலத்தில் அடித்து தமிழில் மாற்ற மிகவும்
கடினமாக உள்ளது .வேறு சுருக்கமான வழி இருந்தால் தெரிவிக்கவும் .நன்றி .
Sridhar on June 5, 2014 at 1:36 pm
ஐயா !! அற்புதம் !! ஆனால் இவ்விடத்தில் “அலகில்” சோதியன் – அழகில் அல்ல
க்ருஷ்ணகுமார் on June 5, 2014 at 1:45 pm
ஸ்ரீமான் அரிசோனன், அழகான புனைவு.
புனைவு என்ற வரை சரி. ஒரு விஷயத்தை சரித்ரம் என்று நிறுவ அதிக ப்ரயாசை
தேவை. இந்த வ்யாசம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட விஷயத்தை சரித்ரம் என்று
கூறுவது ஏற்க முடியாத விஷயம். தோழர் அருணன் அவர்கள் செம்மலர் என்ற
சஞ்சிகைக்கு சமணர் கழுவேற்றம் பற்றி எழுதிய ஒரு வ்யாசத்திற்கு இடதுசாரி
சார்புடைய மதிப்பிறிகுரிய ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்த க்ருஷ்ணன் அவர்கள்
மறுப்பு எழுதியதாகவும் அது செம்மலர் சஞ்சிகையில் பதிவேறாததாகவும்
அன்னாரது முகநூல் பக்கத்தில் வாசித்தது நினைவுக்கு வந்தது. இது விஷயம்
சம்பந்தமாக மேற்படி தகவல்கள் அன்னாரின் எழுத்துக்கள் வாயிலாக :-
———————————————-
திரு அருணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு
ஒன்று ‘செம்மலர்’ பத்திரிகையில் எழுதியிருந்தார் என்று நண்பர்கள் மூலம்
அறிந்தேன். அதைப் படித்தவுடன் அவரது மறுப்புக்கு
எதிர்வினை எழுதி செம்மலருக்கு அனுப்பியிருந்தேன். இதுவரை எந்தத் தகவலும்
இல்லை. இது நான் அனுப்பியிருந்த எதிர்வினை. திரு அருணனுடைய கட்டுரைப்
பகிர்ந்து கொண்டவர்கள், இதையும் பகிர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
திரு அருணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற கட்டுரைக்கு எழுதிய
மறுப்பு எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மறுப்பு என்பது
வசைபாடுதலே என்ற பரம்பரையில் வந்திருப்பவர் என்பதை அருணன் தனது கட்டுரை
மூலம் நிறுவ முயல்கிறார். எனக்கு வசைபாடும் திறமை இல்லை என்பதை
தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கட்டுரையில் சமணர்கள் படுகொலை செய்யப்பட்ட்தற்குப் போதுமான
ஆதாரங்கள் இல்லை என்பதற்கு நான் கூறிய காரணங்கள் இவை:
1. நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் சம்பந்தருக்கு 350
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள். கழுவேற்றப்பட்ட கதை இவர்களால்தான்
முதலில் சொல்லப்படுகிறது. எனவே கதையின் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து
விடுகிறது.
2. சம்பந்தர், அப்பர் தேவாரங்களில் கழுவேற்றப்பட்டதற்கு அகச்சான்றுகள் இல்லை.
3. பல்லவ, பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து
எந்த ஆதாரமும் இல்லை.
4. சமணர்கள் இலக்கியங்களிலேயோ கல்வெட்டுகளிலேயோ இந்தச் சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.
5. சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் சமணக் கல்வெட்டுகள்
இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த
நூற்றாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன.
6. இந்தக் காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்
சம்பவம் நடந்திருக்க வாய்ய்பு இல்லை என்கின்றனர். இவர்களுள் ரொமிலா
தபாரும் ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும்
அடங்குவர்.
இந்தக் காரணங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் நான் இந்துப் பழமைவாதி என்று
அழைக்கப்படுகிறேன். ரொமிலா தபார் அவர்களும் இந்துப் பழமைவாதி என்று
அழைக்கப்படுவார் என்று நம்புகிறேன்.
இவற்றைத் தவிர என்னை அதிகம் படிக்காதவன், முட்டாள் என்று நிறுவுவதற்கு
அருணன் சில நிலைகளை எடுக்கிறார்.
1. கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, குலச்சிறையார் போன்றவர்கள் அவர்களைச்
சம்பந்தர் சந்தித்தது வரலாற்று உண்மையல்ல என்று கூறலாமே. ஏன் கூறவில்லை?
2. மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் சமயச் சண்டைகள்
பேசப்படவில்லையா?
3. திரு சாட்டர்ஜி சொல்லியிருப்பதாக அருணன் எழுதியிருப்பது இது: ஏழாவது
நூற்றாண்டிலும் இந்த மதம் தமிழ்நாட்டில் தனது பெரும் பிரபல்யத்தைத் தக்க
வைத்திருந்தது. இது யுவான் சுவாங்கின் வாக்குமூலத்தால் நேரடியாக உறுதி
செய்யப்பட்டுள்ளது. சோழ, திராவிட, மல கூட எனும் இந்தியாவின் மூன்று தென்
ராஜியங்களிலும் கணக்கற்ற திகம்பரர்களும், அவர்களது வழிபாட்டுத்தலங்களும்
இருந்ததை அவர் கண்டார்.
4. தமிழகத்தில் சமணர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள்.
5. வைணவர்களும் கழுவேற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கு
உதாரணம் வைகுந்தப் பெருமாள் கோவிலில் இருக்கும் கழுவேற்றச் சிற்பத்தைப்
பற்றி இராசமாணிக்கனார் கூறியிருப்பது.
6. மதுரையிலே சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் எனப் பெரிய புராணத்தில்
வருவது மட்டும்தான் “கதை”! மற்றதெல்லாம்? அதெல்லாம் தெரியாது. இடைஞ்சலான
பகுதிக்கு மட்டும்தான் ஆதாரங்கள் கேட்கப்படும்.
இவற்றிற்கு எனது பதில்:
1. கூன்பாண்டியன், குலச்சிறையார் இவர்களைச் சம்பந்தர் சந்தித்ததற்கு
எந்தச் சரித்திரச் சான்றுகளும் இல்லை என்பது உண்மை. இருக்கிறது என்று
நான் எங்கு சொல்லியிருக்கிறேன்? மங்கையர்க்கரசியைப் பற்றி சம்பந்தர்
பாடியிருப்பதால் அவர்கள் இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வாதத்திற்கும் சண்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது என நான்
நம்புகிறேன். மணிமேகலையில் வரும் இந்தக் காதையில் வரும் தருக்கப்பகுதிகள்
வடமொழியில் இருக்கும் திங்நாகரின் நியாயப் பிரவேசத்திலிருந்தோ அல்லது
தர்மகீர்த்தியின் நியாயபிந்துவிலிருந்தோ எடுக்கப்பட்டவை என்று
வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுகிறார். எனவே இவை கதைக் களத்தில் உண்மையாக
நடந்திருக்க முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் மணிமேகலை இந்த
வாதங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை நான் இங்கு தருகிறேன்:
”என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு
நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன்” (சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை, 277-288)
“இங்ஙனம் கூறி வந்த எல்லாச் சமயங்களையும் மணிமேகலை கேட்டு இவர்கள் கூறுவன
அறமல்லவாயினும் யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப்பவள்” – ந மு
வெங்கடசாமி நாட்டார் உரை. எனவே மணிமேகலை சமயச் சண்டைகளை விரும்பாதவள்
என்பது தெளிவு.
3. இது யுவான்சுவாங் காஞ்சிபுரத்தைப் பற்றிஎழுதியிருப்பது. அவர்
சொல்லியிருப்பதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்: There are some hundreds of
Sangaramas and 10,000 priests… There are eighty Deva temples and many
heretics called Nirgranthas. மாலகூடம் என்று அழைக்கப்படும் இன்றைய
மதுரையைச் சுற்றிய பகுதிகளைப் பற்றி எழுதும் போது அவர் சொல்வது இது:
There are many hundred Deva temples and a multitude of heretics mostly
belonging to Nirgranthas. நிர்கிரந்தா என்பவர்கள் சமணர்கள் என்பதில்
ஐயம் இல்லையென்றாலும் அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களைப் பற்றி அவர்
எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. தேவா கோவில்கள் என்று அழைக்கப்படுபவை
இந்துக் கோவில்கள். பல இடங்களில் பாசுபதர்களால் வழிபடப்படுபவை என்று
யுவான்சுவாங் சொல்கிறார். எனவே சமணர்களுக்கு கணக்கற்ற
வழிப்பாட்டுத்தலங்கள் இருந்தன என்று யுவான் சுவாங் எழுதவில்லை. அவர்கள்
இருந்தார்கள் என்பதை ஒரே வரியில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.
4. தமிழகத்தில் சமணர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள் என்பது திரு
அருணனின் கூற்று மட்டுமே. இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
5. வைகுந்தப் பெருமாள் கோவிலை நன்கு ஆராய்ந்து எழுதிய டெனிஸ் ஹட்ஸன் இந்த
சிற்பத்திற்கும் வைணவ மதத்திற்கும் தொடர்பு இருப்பதாக்க் கூறவில்லை.
மாறாக அரசன் தண்டனைகளை நிறைவேற்றுபவன் என்பதைச் சிற்பம் குறிக்கிறது
என்கிறார். பல்லவ வரலாற்றின் மிகப் பெரிய வல்லுனர்களில் ஒருவரான சி.
மீனாட்சியும் இவ்வாறே கருதுகிறார்.
6. நான் பெரிய புராணத்தின் எந்தக் கூற்றையும் ஏற்கவில்லை. ஆதாரம்
இல்லாமல் புராணங்களை நான் நம்பச் சொல்லவில்லை. எழுதியிருப்பதை ஒழுங்காகப்
படித்திருந்தால் நான் சம்பந்தர் சார்பிலேயோ அல்லது சைவ, வைணவ சமயங்களில்
சார்பிலேயோ நிற்கவில்லை என்பது புரிந்திருக்கும். மதச் சண்டைகள்
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன என்பதையும் நான் எழுதியிருக்கிறேன்.
ஜைன மதம் என்றுமே மக்களது மதமாக இருந்திருக்க முடியாது என்பதற்கு நான்
கூறும் காரணங்கள் இவை:
1. நிலம் சார்ந்து இருக்கும் உழைக்கும் மக்களால் சிறு உயிர்களைக் கூட
கொல்லாமல் வாழ்க்கை நடத்தவே முடியாது. அவ்வாறு செய்யாதே என்று
கண்டிப்பாகக் கூறும் மதம் எப்படி மக்களைச் சார்ந்ததாக இருக்க முடியும்?
2. மாறாக,வைணவ, சைவ மதங்களில் ”தப்பித்து’ச் செல்வதற்கு ஏராளமான வழிகள்
இருந்திருக்கின்றன. இதிகாசங்களும் புராணங்களும் மக்களை ஈர்க்கக் கூடியதாக
இருந்திருக்கின்றன. பக்தி இயக்கம் மக்களை கோவில்களின் பக்கம்
திருப்பியது. குறிப்பாக வெள்ளாள நில உடைமையாளர்களும், பிராமணர்களும்
பக்தி இயக்கம் பக்கம் திரும்பியதால் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும்
வைணவ சைவ மதங்கள் பக்கம் திரும்பினார்கள்.
தமிழகத்தில் ஜைனர்கள் அருகிப் போனதின் காரணம் தமிழக வணிகர்கள்
சைவர்களாகவோ வைணவர்களாகவோ மாறிப்போனதுதான். அரசர்களின் உதவியும்,
செல்வந்தர்களின் உதவியும் இல்லாமல் சமணமதத்தினரால் தமிழகத்தில் இயங்கி
இருக்கவே முடியாது. எனவே அவர்களை அழித்தொழிக்க வேண்டிய தேவை இல்லை.
இப்படி நான் கூறுவதினால் வைணவ, சைவ மதங்கள் வன்முறையில் ஈடுபடவேயில்லை
என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்முறை தொடந்து நடைபெற்று
வந்திருக்கிறது. உதாரணமாக ரொமிலா தபார் வீர சைவர்கள் சமணர்களின் தலைகளை
வெட்டுவதில் பெருமிதம் கொள்கிறார்கள். என்று பதினாறாம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஸ்ரீசைலம் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். இதே
போன்று ஒரிஸாவைச் சேர்ந்த கரவேலா அரசர் ஜைன மதத்தைச் சார்ந்தவர். அவர்
தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தவர். அவர் எதிரி நாடுகளில் எவ்வாறு
பயத்தை விதைத்தார் என்பதை ஹாதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.
நான் கூறுவதெல்லாம் சமணர்கள் தமிழகத்தில் கழுவேற்றப்பட்டார்கள் என்பதை
நிறுவுவதற்கு இதுவரை போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்பதுதான். கிடைத்தால்
என்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டேன்.
திரு அருணன் மார்க்சீயவாதி என்று அறிகிறேன். பாவம் மார்க்ஸ்.
பி ஏ கிருஷ்ணன்.
—————————————–
க்ருஷ்ணகுமார் on June 5, 2014 at 2:16 pm
ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்த க்ருஷ்ணன் அவர்கள் தனது #3 பதிலில்
பல்லவ, பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த
ஆதாரமும் இல்லை.
என்று சொல்லியிருக்கிறார்.
#5 பதிலில்
சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் சமணக் கல்வெட்டுகள்
இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த
நூற்றாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன.
என்றும் சொல்லியிருக்கிறார்.
புனைவு சோழ காலத்தியது. ஆனால், இந்த வ்யாசத்தில் பகிரப்பட்ட கல்வெட்டு
எந்தக்காலத்தியது எந்த சாம்ராஜ்யத்தைச் சார்ந்தது என்பதனை வாதம் #5 படி
ஆராய வேண்டும்.
க்ருஷ்ணகுமார் on June 5, 2014 at 2:20 pm
ஸ்ரீமான் PAK அவர்கள் குறிப்பிடும் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?”
என்ற வ்யாசத்திற்கும் தோழர் அருணன் அவர்கள் எழுதிய மறுப்பிற்கும் URLகள்
இருக்குமானால் வாசகர் யாரும் அறிந்தால் பகிரவும்.
sasindhar on June 5, 2014 at 3:47 pm
சமணர்கள் பூனூல் அணிவார்களா?கழுவிலுள்ள ரிஷிகள் பூனூல் அணிந்து
இருக்கிறார்களே ?தயவுசெய்து விளக்குக
PRABHU on June 5, 2014 at 5:15 pm
THANK YOU. FOR THE NEAT WRITTING I HAVE DOUBT IF SAIVAM TELLING THAT
“SIVAME AMMBU” THEN HOW COME THESE KIND OF INCIDENCE TAKEN PLACE NEAT
I CLEARED. THANK FOR TAMILHINDU PUBLISH THIS ARTICLE .
PRABHU on June 5, 2014 at 5:21 pm
another doubt morethan 4000 samar were taken the oath if we defeat
“THIRUGNANASAMBANDAR” I in DARKA SASTHRAM, sambandhar great god how he
allowed “kaluku yettram” its somany years doubt .thank you . only 400
persons were died on these incidence remaining people they went and
settled in Srilanka, they made the wrong concept of the singala people
Tamil people were bad and they keep on telling the lies so that now
SRILANKAN issue these things are also one of strong reason for getting
dispute with Lanka. please explain the truth.
சக்திவேல் on June 5, 2014 at 5:46 pm
ஒரு சிறுகதை என்ற அளவில், கதாசிரியர் தனது கற்பனையை எழுதியிருக்கிறார்.
அந்த அளவில் சரி. ஆனால், வரலாற்று ரீதியாக, எண்ணாயிரம் சமணர்கள்
கழுவேறியதற்கான எந்த சான்றுகளும் கிடையாது. சைவர்கள் தங்களது வெற்றியைப்
பறைசாற்ற உருவாக்கிக் கொண்ட ஒரு ஐதிகம் இது என்ற அளவிலேயே இதனைக் கருத
வேண்டும். திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சுட்டியுள்ள பி.ஏ.கிருஷ்ணனின்
கட்டுரை முக்கியமான ஒன்று. திரு ஜடாயு இது குறித்து முன்பு ஒரு விரிவான
கட்டுரை எழுதியிருந்தார். பல விஷயங்களை அக்கட்டுரை தெளிவாக்குகிறது.
சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்
பகுதி 1 – http://jataayu.blogspot.in/2009/04/1.html
பகுதி 2 – http://jataayu.blogspot.in/2009/04/2.html
எனவே, “சைவத்துக்கு வந்த இடர் எவ்வாறு நீக்கப்பட்டது என்ற வரலாற்றைத்தான்
இச் சிற்பம் காட்டா நிற்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன், தான்
சென்ற வழி தவறு என்று உணர்ந்து, நன்னெறிக்குத் திரும்பி வந்து, புறச்
சமயத்தார் தாமே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றினான் என்றுதான்
உலகுக்குக் காட்டுகிறது” போன்ற கருத்தாக்கங்கள் சைவ சமய பிரசாகரர்கள்
மேடைகளில் பேசுவதற்கு உதவலாம்.. ஆனால் இன்டர்நெட் யுகத்தில்,
வரலாற்றையும் பண்பாட்டையும் பல்வேறு கோணங்களில் தீவிரமாக வாசித்து
ஆராய்ச்சி செய்யும் வாசகர்கள் இருக்கும் சூழலில், இத்தகைய சமநிலை அற்ற
கருத்துக்கள் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.
சக்திவேல் on June 5, 2014 at 5:49 pm
திரு. கிருஷ்ணகுமார் குறிப்பிடும் திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின்
“சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் வந்தது

http://www.kalachuvadu.com/issue-167/page09.asp
C.N.Muthukumaraswamy on June 5, 2014 at 8:23 pm
திருஅரிசோனன் அவர்கள் சிதம்பரத்தில் உள்ள சிற்பத்தை மையமாக வைத்து
நல்ல்தொரு கற்பனையைச் செய்துள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது
செய்து கழுவேறியவர்கள் திகம்பர சமணர்கல். அவர்கள் பூணூல் என்ன நூலான
ஆடையும் அணியாதவர்கள். ஸ்வேதாம்பர சமணர்கள் பூணூல் அணிவார்கள் என
நினைக்கின்றேன். அர்சோனனின் எழுத்துக்களைப் படித்து மகிழ்பவர்களில்
நானும் ஒருவன்.
ஒரு அரிசோனன் on June 6, 2014 at 5:12 am
பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
உயர்திருவாளர்கள் ஜானவி புத்திரன், ஸ்ரீதர் அவர்களே,
நான் டைப் செய்ததில் ‘அலகில் சோதியன்’ என்பதற்குப் பதிலாக ‘அழகில்
சோதியன்’ என்ற தவறு நேர்ந்து விட்டது. சுட்டிக் காட்டியதற்கு மிக்க
நன்றி. அதிலும் தாங்கள் சீர் பிரித்து எழுதியதற்கு எனது பாராட்டுக்கள்.
அனைவருக்கும் புரிய வேண்டும் என்றுதான் தான் பதம் பிரித்து எழுதினேன்.
தமிழ் ஹிந்துவுக்கு unicode பாண்ட்டில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
அப்பொழுதுதான் பிரசுரிக்க வசதியாக இருக்கும். நான் மைக்ரோசாப்ட் வோர்டில்
எழுத ‘தமிழ் சான்செரிப்’ என்ற பான்ட்டை வடிவமைத்துள்ளேன். அதை இறக்கி,
control panel மூலம் கணினியில் ஏற்றிக்கொண்டால் WYSIWYG முறையில் டைப்
அடிக்கலாம். ஆயினும், தற்பொழுது அனைவரும் ஆங்கில phonetics முறையில்தான்
unicode பாண்ட்டில் டைப் செய்ய விரும்புகிறார்கள்.
மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார், சக்திவேல், பிறப்பு, சசிந்தர் அவர்களே,
நான் எழுதி இருப்பது கற்பனையில் உதித்த கதைதான். வரலாற்றுக் கட்டுரை
அல்ல. இது நான் எழுதிய, விரைவில் பதிப்பிக்கப்படப் போகும், “தமிழ் இனி
மெல்ல..” என்ற வரலாற்றுப் புதினத்தில் ஒரு அத்தியாயத்தில் வரும் நிகழ்வே
ஆகும். நான் எழுதியதை வரலாறு என்று யாரும் எண்ணவேண்டாம் என்று
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சேக்கிழார் பெருமான் எழுதிய ‘திருத் தொண்டர் புராணத்து’ச் செய்யுள்களும்,
தில்லை நடராஜர் கோவில் பொன்னம்பலத்து புடைப்புச் சிற்பமுமே என்
புனைவுக்கு ஆதாரமாக அமைகின்றன. எச் சமயத்தினர் மனதையும் புண்படுத்துவது
இப்புனைவின் நோக்கம் அல்ல
உயர்திரு சசிந்தர் அவர்களே,
பழங்காலத்தில் மேலாடையைக்கூட பூநூலாக வடிவமைப்பது சிற்ப சாஸ்திரத்தில்
உண்டு என எனக்குத் தெரிந்த கோவில் சிற்பி ஒருவர் விளக்கி இருக்கிறார்.
நீங்கள் பெண்களின் பதுமைகளைக் கவனித்துப் பாருங்கள். முப்புரி நூல்
(பூணூல்) செதுக்கப்பட்டு இருக்கும்.
சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா என்று எழுதிய அன்பர்களே,
நான் கொடுத்திருக்கும் கழுவேற்றப் புகைப்படம் தில்லை நடராஜர் கோவிலில்
பொன்னம்பலப் பிரகாரத்தில் உள்ளது. பொன்னம்பலம் இரண்டாம் குலோத்துங்கனான
அநபாயச் சோழன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டபோது, இந்தச் சிற்பம்
செதுக்கப் பட்டு இருக்கக் கூடும். ஆய்வாளர்கள்தான் கார்பன் dating மூலம்
சரியான காலத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
திருஞானசம்பந்தர் அவர் பாடிய எல்லாத் தேவாரத் திருப்பதிகங்களில், எட்டாம்
செய்யுளில் இராவணனைப் பற்றியும், ஒன்பதாம் செய்யுளில் திருமால்,
பிரம்மாவைப் பற்றியும், இன்னொரு செய்யுளில் புத்தர், சமணர் பற்றியும்
குறிப்பிடுகிறார்.
தில்லைக் கோவில் மணியோசையின் அதிர்வில் நான் கேட்ட ஒலிகளே என்னை இச்
சம்பவத்தைக் கதையாகப் புனைய வைத்தன. ‘ஓம், கெம், லம்,’ போன்ற ஒலிகளை விதை
எழுத்துக்கள் [பீஜாக்ஷரங்கள்] என்று பகர்வது ஆன்றோர் வழக்கம். இறைவன்
இப்படியும் சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கலாம்
என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு எழுந்தது.
Respected Prabhu,
There is nothing wrong is saying “Anbe Sivam”. In a spiritual plane,
it is very apt, and we need to strive to live as per that saying.
Since Sivam in all of us, we are supposed to love the Sivam in every
one of us fellow beings. It is the reason we eat ‘saivite food’, which
is misnamed as ‘vegetarian food’. For food, saivites are not supposed
to kill any animals. Milk is obtained without killing the cow. Hence
it is acceptable as saivite food.
A king/queen is supposed to maintain peace in his kingdom. Hence
he/she is supposed to kill distruptors of peace for the sake of many.
I am sure that you know the difference between ‘murder’ and
‘vanquishing’. Though murder is abhored in saivite religion,
vanquishing the enemies and bad people is allowed/tolerated.
All the Hindu gods and goddesses have weapons, denoting that Hindu
religion, though it advises ‘tolerance’, one has to protect
himself/herself if attacked.
மதிப்பிற்குரிய சக்திவேல் அவர்களே,
தாங்கள் கொடுத்த லின்க்கைப் படித்தேன்.
// http://www.kalachuvadu.com/issue-167/page09.asp //
//கர்னல்மெக்கென்ஸி ஆவணங்களைச் சேகரிக்கும்போது சமணர்களைப் பற்றிய
வாய்மொழிக் கதைகளையும் சேகரித்திருக்கிறார். அவருக்குத் துணை
செய்தவர்களில் ஒருவர் ஜைனர் என்று தெரியவருகிறது. லெஸ்லி ஓர் தனது
கட்டுரையில் மெக்கென்ஸி ஆவணங்களில் இருக்கும் நான்கு முக்கியமான கதைகளைக்
குறிப்பிடுகிறார்:
3. திருநறுங்கொண்டைக் கோயிலைப் பற்றிய கதை ஒன்று, அப்பர் கடைசிக்
காலத்தில் சைவத்திலிருந்து மறுபடியும் சமணமதத்திற்கு மாறிவிட்டார்
என்கிறது. காரணம் அவர் கண்பார்வை இழந்து சமணர்களால் மறுபார்வை பெற்றது.
இதனால் கோபமுற்ற சம்பந்தரும் சுந்தரரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து
அப்பரைச் சுண்ணாம்பு காளவாயில் தள்ளிக் கொன்றுவிட்டனர்.//
இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. திருஞானசம்பந்தரும், சுந்தரரும்
சூழ்ச்சி செய்து அப்பரைக் கொன்றார்களா! இப்படி சொல்லும் கர்னல்
மாக்கேன்சி போன்றவர்களின் மேற்கோள்களை எடுத்துக் காட்டினால் அக்கட்டுரை
நடுநிலைமையுடன், உண்மைக் கருத்துக்களை முன்வைத்து இருக்கும் என்று எப்படி
நம்புவது?
இதில் திருவள்ளுவரை சமணர் என்றும், கிறித்தவர் என்றும் கூறுவோரும் உளர்.
அதைப் படித்துவிட்டு ஆடும் இந்துக்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இறுதியாக, சமயப் பூசல் முற்றி, சில சமயம் விரும்பத்தகாத செயல்கள் நடப்பது
வரலாறுதான். விருப்பு வெறுப்பின்றி ஆராய்ச்சி செய்தால்தான் உண்மை
புலப்படும்.
இக்கதையின் உட்கருத்து ‘சேக்கிழாருக்கு இறைவன் அடியெடுத்துக்
கொடுத்தது’தான். அது எப்படி நடந்திருக்கக்கூடும் என்பதைத்தான் நண்பர்கள்
அனைவர்கள் முன்பும் தாழ்மையுடன் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
வணக்கம்.
ஒரு அரிசோனன் on June 6, 2014 at 5:17 am
மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,
தங்களின் பொருட்செறிந்த விளக்கத்தைப் படித்து மகிழ்ந்தேன். மிகவும்
சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதி உள்ளீர்கள். நிறையத் தெரிந்துகொண்டேன்.
வணக்கம்.
சுபா on June 6, 2014 at 6:58 am
அருமை அருமை
தஞ்சாவூரான் on June 6, 2014 at 10:16 am
பாண்டியனின் வெற்பு நோயைத் தீர்க்க மங்கையர்க்கரசி அழ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக