செவ்வாய், 10 அக்டோபர், 2017

சங்கராச்சார்ய வித்யார்த்தா எனும் பள்ளியை திறந்துவைத்த ஈவேரா சங்கராச்சாரியார் பெயரில் ஜி.டி.நாயுடு

‘சங்கராச்சாரி’யார்’ பள்ளியைத் திறந்து வைத்த பெரியார்
‘சங்கராச்சாரி’யார்’ பள்ளியைத் திறந்து வைத்த பெரியார்
3.10.1965ஆம் ஆண்டில் கோவையில் ‘அறிவியல் மேதை’ ஜி.டி.நாயுடு அவர்கள்
கர்நாடகம் சிருங்கேரி சங்கராச்சாரி நிதி உதவியோடு இரண்டு தொழிற்நுட்ப
பயிற்சி பள்ளிகளைத் திறந்தார். ஒரு பள்ளிக்கு சங்கராச்சாரி பெயரையும்,
மற்றொரு பள்ளிக்கு பெரியார் பெயரையும் சூட்டினார். பெரியார் பள்ளியை
சங்கராச்சாரியும், சங்கராச்சாரி பள்ளியை பெரியாரும் திறந்து வைப்பதாக
ஏற்பாடு செய்யப்பட்டது. பெரியார் பள்ளியை திறக்க சங்கராச்சாரியார்
மறுத்து விட்டார். பெரியாரோ சங்கராச்சாரி பள்ளியை திறக்க ஒப்புக்
கொண்டார். அதன்படி, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய வித்யார்த்தா
சுவாமிகள் பயிற்சிப் பள்ளியை திறந்து வைத்துப் பின்வருமாறு பேசினார்:
“நான் என் Policy யை மாற்றுவதுண்டு. ஆனால் என் Principle என்றும் மாறாது.
எனது தொண்டினால் சங்கராச்சாரிகள் மனம் மாற்றம் குறித்து நான்
பெருமைப்படுகிறேன். அவரது உதவி, தொழில் கூடத்திற்குக் கிடைத்தது பற்றி
மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாரு
பாராட்டுக்குரியவர். டிராம் ஷெட் இடத்தை வாங்கித் தந்தவரே அவர் தான்.”
அன்றைக்கு ஜி.டி.நாயுடுவோடு சேர்ந்து சிருங்கேரி சங்கராச்சாரி கல்வி
நிலையம் திறப்பதன் மூலம் தனது பிராமணீயக் கொள்கையை கைவிட்டதாக மனம் மாறி
அறிவிப்பு எதுவும் செய்ய வில்லை. கல்வி நிலையம் மூலம் பிராமணீயத்தை மூடி
மறைக்கவே சிருங்கேரி சங்கராச்சாரி திட்டமிட்டார். அவரை
அம்பலப்படுத்தியும், ஜி.டி.நாயுடுவை கண்டித்தும் அறிக்கை விட வேண்டிய
பெரியார் கொள்கை வேறு, குறிக்கோள் வேறு, என்று பேசி தனது தவறான செயலுக்கு
நியாயம் கற்பிப்பதை எப்படி ஏற்க முடியும்!
எப்போதும் கொள்கை என்பது குறிக்கோளுக்கு துணை சேர்க்க வேண்டுமே தவிர, ஒரு
போதும் அதற்கு எதிராக அமையக்கூடாது.
இதனை பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற குத்தூசி குருசாமி அவர்கள் தனது
பாணியில் மிக அழகாக விளக்கியுள்ளார்.
இராசாசியோடு கூட்டு சேர்ந்த அண்ணாதுரை மதத்திற்கு ஆதரவாகப் பேசியதையும்,
சங்கராச்சாரியார் பெயரிலான பள்ளியை பெரியார் திறந்து வைத்து பாராட்டிப்
பேசியதையும் இணைத்து ஒரு கட்டுரை வெளியிட்டார். இது பின்வருமாறு:
“இனி, திராவிடர் தந்தை பெரியார் அவர்களின் சங்கராச்சாரியார் பாராட்டு
பற்றிக் கவனிப்போம். நல்லவர்களை அவர்கள் செய்யும் நற்செயல்களுக்காகப்
பாராட்டுவதுதான் மனிதத் தன்மை. அதில் ஒன்றும் தவறில்லை.
சங்கராச்சாரியார் தம் சொந்த நிதியிலிருந்தே தொழில் நுணுக்கப் பள்ளி
துவங்கியதாகவே இருக்கட்டும்! இதில் பாராட்டக் கூடியது என்ன இருக்கிறது?
இக்காலத்தில் பள்ளிகள் கட்டாத பணக்காரர் ஒருவர் கூட இல்லையே! அதன்
காரணமாக, பல பள்ளிகளை நடத்தி வருகின்ற பெரியார் அவர்கட்கே தெரியும்.
பெருஞ் செல்வர்களின் கணக்கில் காட்ட முடியாத கள்ளப்பணத்தின் சிறு
பகுதியாவது வெளியே வரட்டும் என்பதற்காகவே கல்விக்கூடங்களைக்
கட்டுபவர்களுக்கு அரசாங்கம் சில வரிச்சலுகைகள் தந்திருக்கிறது. ஆதலால்
தான் மடத்தலைவர்கள், மதத் தலைவர்கள், தொழில் தலைவர்கள், வாணிபத்
தலைவர்கள், அரசியல் தலைவர்கள்- ஆகியோர் திடீர்த் திடீரென்று கல்விக்
காதலர்களாக அவதாரமெடுத்துக் கொண்டே யிருக்கின்றனர்!
சங்கராச்சாரியார் தொழில் நுணுக்கப் பள்ளி துவங்கியதனாலேயே அவரது ஆரிய,
மத- இன உணர்ச்சியை விட்டு விட்டவராவாரா? அவரது இந்துமதப்
பிரசாரப்பணியும், சாதி உயர்வு (பூணூல் அணிவிப்பு) பிரசாரப்பணியும்
அமோகமாக வளர்ச்சி அடைந்து கொண்டுதானிருக்கிறது. “இங்கு நாத்திகப்
பிரசாரமெல்லாம் ஒழிந்து போய் 15- 20 ஆண்டுகளாகி விட்டன” என்று ருஷ்யப்
பத்திரிகாசிரியர் ஒருவரிடம் மூன்று மாதங்கட்கு முன்பு கூறிய இதே
சங்கராச்சாரியார். கோவையில் நடந்த நிகழ்ச்சி பற்றித் தமக்குள் என்ன
நினைத்திருப்பார்? “அரசியல் ஆச்சாரியார் உமது சீடனைத் தண்ணீர் பாம்பு
ஆக்கிவிட்டார்; நானோ உமது பழைய பிராமணத்துவேஷப் பிரச்சாரத்தை யெல்லாம்
மடிய வைத்து உம்மை செத்த பாம்பாக்கி விட்டேன்” என்று தானே
எண்ணியிருப்பார்.
சங்கராச்சாரியார் “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே
கண்ணாயிருக்கிறார்.” நமது இன உணர்வை நிலை நாட்டுவதற்காக ஆண்டுதோறும்
ஆயிரக்கணக்கான ‘பொடியன்’களுக்கு இலவசப் பூணூல் அணிவிப்பு விழா நடத்தி
வருகிறார். ஆனால் பெரியார் அவர்களோ, ஒரே ஒரு பூணூல் நீக்கு விழாக் கூட
நடத்த முடியாத ‘ரிட்டயர்டு’ நிலையை இருபதாண்டுகட்கு முன்பே எய்து
விட்டார்.
இன்று சங்கராச்சாரியாரும் அவரைப் பின்பற்றுகிற புராண -இதிகாசப்
பிரசங்கிகளும் புளுகுவதைக் கேட்பதற்கு ஊர்தோறும் லட்சக்கணக்கில்
கூடுகின்றனர். ஆனால், “அரசியலே பேசாமல் இனி சுத்த சுயமரியாதை இயக்கப்
பிரச்சாரம் தான் செய்யப் போகிறேன்” என்று பெரியாரோ, அவரது மேற்படி சீடரோ
புறப்பட்டால் இருநூறு பேர் கூடக் கூட மாட்டார்கள்.
பெரியார் பள்ளியை சங்கராச்சாரியார் திறக்க மாட்டார்; ஆனால்
சங்கராச்சாரியார் பள்ளியைப் பெரியார் திறப்பார்! ஏனெனில்
சங்கராச்சாரியார் கைதான் இன்று ஓங்கி நிற்கிறது.
இப்போது இந்து மதத்துக்கு அமோகமான வளர்ச்சிக் காலம்! ஆயுத பூசை நடக்காத
அரசாங்கப் பணிமனையே கிடையாது. இது சங்கராச்சாரியாருக்கும் தியாகராயநகர்
ஆச்சாரியாருக்கும் முழு வெற்றி! பெரியாருக்கும் அண்ணா துரைக்கும்
படுதோல்வி!…
இனி மிச்சமென்ன இருக்கிறது? இரு திராவிடக் கட்சித் தோழர்களும்,
சங்கராச்சாரியாரின் பல்லக்குத் தூக்க வேண்டியதுதான் பாக்கி!
அந்தோ தமிழகமே’ உன் நிலை இப்படியா ஆக வேண்டும்?”
(‘அறிவுப்பாதை’ 8.10.1965 இதழில் இக்கட்டுரை குத்தூசி குருசாமி மரணம்
அடைவதற்கு மூன்று நாள்கள் முந்திய நாளில் எழுதப்பட்டது. இதுவே அவரின்
இறுதிச் சிந்தனையாகும்.)
மேலும், தாழ்த்தப்பட்டவன் எவ்வளவு விலை உயர்ந்த சோப்பை போட்டு
குளித்தாலும் தீட்டு போகாது என்று சொன்னவர் சிருங்கேரி மடாதிபதி
ஸ்ரீஅபிநயா வித்யா தீர்த்தர். இவர் 1954 முதல் 1989 வரை மடத்தலைவராக
இருந்தவர். (படத்தில் உள்ளவர்) இவரை கல்வித் தந்தையாக கருதி பெரியார்
பாராட்டிப் பேசியதை சுயமரியாதையுள்ள எந்தத் தமிழனும் நியாயப்படுத்த
மாட்டான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக