செவ்வாய், 10 அக்டோபர், 2017

பழந்தமிழர் விளையாட்டு இலக்கியம் 1

பழந்தமிழர் விளையாட்டுகள்.
இயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது.
அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show) நடைபெறுவதற்கான எல்லா
ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவையோர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஒப்பனைகளால் தம்மை பேரழகாக்கியபடி அழைப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர் உலா
மகளிர்.
அழகறிந்து அளவுணர்ந்து மதிப்பிட மங்கையரை மட்டுமே கொண்ட நடுவர் குழு
காத்திருக்கின்றது.
இதோ உலா ஆரம்பமாகி விட்டது.
ஒரு பெண் ஒயிலாக நடந்து வருகின்றாள். அவள் சூடியிருக்கும் பூக்களும்
ஆடையழகும் அவையோரை ஈர்த்திழுக்கின்றன.
ஒளி வீசும் தன்மை கொண்டதாக வண்ண வண்ணப் பூக்கள் ஐவகை அழகு நிறைந்த அவள்
கூந்தலில் செருகப்பட்டிருக்கின்றன.
இரு கைகளிலும் நிறைந்த வளையல்கள். அழகு வழிய, எழிலாகக் கைகளை வீசி
நடக்கின்றாள். ஒழுங்குபடுத்தப்பட்ட இனிய ஓசைகளை வளையல்கள் எழுப்பின. அவள்
வீசி நடந்தது வெறுங்கையல்ல. தேன் சிந்தும் பேழகுப் பூக்களைக் கொண்ட
பூங்கொத்தினை ஏந்திய கை.
நிலம் நோகா மெல்லிய நடைதான் நடந்தாள். ஆயினும் காற் சலங்கைகளின் எழிலோசை
உயிர்வரை சென்று உரசியது.
பிசகாத கால இடைவெளியில் கை வீசியும் கால் நடந்தும் இன்னிசை சிந்தி அவள்
காட்டிய பேரழகு அங்கிருந்தோர் அனைவரையும் கட்டிப் போட்டது.
உலா மகளிரின் அழகை மதிப்பிட்டு, அவர்களது எழிலைப் பேணியவர்களான நடுவர்,
உலா வந்தவளுக்குப் புள்ளியிட்டு அடுத்தவருக்காகக் காத்திருக்கின்றனர்.
இது அண்மையில் நடைபெற்ற எழில் உலாக் காட்சி அல்ல. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி. இது இக்காலத்தில்
புகழ் பெற்றுத் திகழ்கின்ற Fashion Show என்பதை ஒத்த விளையாட்டாகும்.
சங்ககாலத்தில் மகளிரின் அழகை மகளிரே ஆராய்ந்து மதிப்பிட்டனர் எனக்
குறுந்தொகை கூறுகின்றது.
“கடலங் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்;து” – குறுந்தொகை 245
இப்படி ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக மகளிர் தம்மை ஒப்பனை
செய்துகொண்டு ஒய்யாரமாக நடந்து காட்டியிருக்கின்றனர். இச் செய்தியை
அகநானூறு வெளிப்படுத்துகின்றது.
“கானப் பாதிரி கருந் தகட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில் ஐங் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இயங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி” – அகம் 261
விளையாட்டு - சொல்லும் பொருளும்
விளையாட்டுகள் வேட்டைச் சமூக வாழ்தளங்களிலேயே தோற்றம் கொண்டிருக்க
வாய்ப்புகள் உள்ளன. விலங்குகளை வேட்டையாடுதலும், ஆயுதங்களைக்
கையாளுதலும், உடல் வலிமையைப் பேணுதலும் விளையாட்டுகளுக்கு
வழிவகுத்திருக்கக் கூடும். எனினும் மனித குலம் பண்பாட்டுப் படிகளில் ஏறத்
தொடங்கிய காலத்திலேயே விளையாட்டுகளும் முதன்மை பெற்றன எனலாம்.
ஓரினமானது மரபுத் தொடர்ச்சியின் வழியாகப் பின்பற்றிவரும் விளையாட்டுகள்,
அவ்வினத்தின் பண்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் அக்காலச் சமூகக்
கொள்கைகளை வரையறுக்கவும் வல்ல இனம்சார் அடையாளங்களாகவே திகழ்கின்றன.
விளையாட்டு என்பதற்கான விளக்கத்தைச் சங்கப்புலவோர் வரையறுத்துக்
கூறவில்லை. உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக்
களங்களைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதில் ஒன்று விளையாட்டு.
இதிலிருந்து மன மகிழ்ச்சியை விளைவிக்கும் ஒரு செயலே விளையாட்டு எனக்
கருதலாம்.
மொழிப்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் விளை என்றால் விருப்பம் எனப் பொருள்
கொண்டு விரும்பியாடும் விளையாட்டு என்று விளக்குகிறார்.
தொல்காப்பியம் உரியியல் (தொல் 319) என்ற பகுதியில் கெடவரல், பண்ணை எனும்
இரு சொற்களால் விளையாட்டைக் குறிக்கின்றது. இத்தொல்காப்பியக் குறிப்பு
அக்காலத்தே விளையாட்டுகள் மக்களிடத்தே செல்வாக்குப் பெற்றிருந்தமையை
உணர்த்துகின்றது. கெடவரல் என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டையும்
பண்ணை என்பது நீரில் விளையாடப்படும் விளையாட்டையும் குறிக்கும் என்பர்.
சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்பது பெரும்பாலும் நிலத்தில்
ஆடப்படுகின்ற விளையாட்டுகளைக் குறித்தது. ஆடுதல் என்ற சொல் நீரோடு இணைந்த
விளையாட்டுகளையே பெரிதும் குறித்தது.
சங்கத் தமிழரின் விளையாட்டுக் கொள்கைகள்.
சங்கத் தமிழர் பெரிதும் சமூகம் சார்ந்த செயற்பாடாகவே விளையாட்டைக்
கருதினர். குழுநிலை விளையாட்டுகளும், மைதானங்களின் நடுவே இடம்பெற்ற வீர
விளையாட்டுகளும் சமூகச் செயற்பாடுகளாகவே திகழ்ந்தன. அரசுகள், ஊர்
மன்றங்கள், பெரு விளையாட்டுகளை நடத்தி வென்றோருக்கு மதிப்பளித்தன.
சமூக அங்கத்தவர் எல்லோரும் தத்தம் வயது, பால் என்பவற்றிற்கேற்பப் பல்வேறு
விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பெண்களை ‘வீட்டுக்குள் வளர்த்தல்’
(இச்செறித்தல்) என்னும் நிலை அக்காலத்தில் காணப்பட்டாலும் சிறுமியர்,
இளம் மகளிர் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆண்களைப்
போலவே பெண்களும் பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.
‘சிறுமியர் வெளியிற் சென்று தம் தோழியரோடு விளையாடுவதே அறம். அவ்வாறு
விளையாடுவதால் உடலும் உள்ளமும் ஆக்கம் பெறும். மாறாக வீட்டுக்குள்
இருந்தால் அது அறமும் இல்லை, ஆக்கமும் தேய்ந்து விடும்’ என்ற செய்தி
நற்றிணை என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
“விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்.....” (நற்றிணை 68)
வெற்றியையும் தோல்வியையும் ஒத்த உணர்வோடு நோக்கும் பாங்கு சங்க
இலக்கியங்களில் உணரப்பபடுகின்றது.
உயிருக்குப் பேரிடர் ஏற்படுத்தும் விளையாட்டுகள் அக்காலத்தே
இருந்திருக்கின்றன. எனினும் மனித உயிரை இலக்கு வைத்து விளையாட்டுகள்
நிகழ்த்தப்பட்டதாகச் சான்றுகள் இல்லை.
‘உவகை ஊட்டுதல்’ என்னும் நிலையில் இருந்து பொருளியற் சார்புநிலைக்குச்
சில விளையாட்டுக் கூறுகள் சங்ககாலத்திலேயே மாற்றங் கண்டன. வேளாண் சமூக
அமைப்பினூடாகத் தனியுடமை உணர்வு அரும்பத் தொடங்கிய பின் சில
விளையாட்டுகளின் வாயிலாக பொருள் இழப்பதுவும் பெறுவதும் இயல்பாயிற்று.
காய்களை இழந்து பெறுகின்ற பல்லாங்குழி இத்தகைய ஒரு விளையாட்டே என்கிறார்
தொ. பரமசிவன்.
அக்கால அரசுகளால் ஆதரிக்கப்பட்ட சதுரங்கமே பின்னாளில் சூதாட்டமாயிற்று என்பர்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் காணப்பட்ட
வளர்ச்சியடைந்த சமூகங்கள் பலவகையான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன.
அவர்களைப் போலவே தமிழரும் பல்வகை விளையாட்டுகளை உருவாக்கி விளையாடிய
செய்திகளை சங்க இலக்கியங்கள் தருகின்றன. விளையாட்டுகள் பற்றிய
விபரங்களைப் பெற்றுக்கொள்ள சங்க இலக்கியங்களைத் தவிர பிற சான்றுகள்
பெரிதும் கிடைக்கவில்லை. சங்கச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே இக்
கட்டுரை எழுதப்படுகின்றது. பெரும்பாலான விளையாட்டுகள் பற்றிய
குறி;ப்புகள் இவ்விலக்கியங்கள் வாயிலாகக் கிடைத்துள்ளன. ஆயினும்
கட்டுரைச் சுருக்கம் கருதிச் சிலவே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு வகைகள்:
சங்க இலக்கியங்கள் பல வகையான விளையாட்டுகளைக் குறிப்பிடுகின்றன. சங்கால
விளையாட்டுகள் நில விளையாட்டு, நீர் விளையாட்டு என இருவகையாகக்
கருதப்பட்டன.
நில விளையாட்டுகளை,
சிறுவர் விளையாட்டு
சிறுமியர் விளையாட்டு
மகளிர் விளையாட்டு
காளையர் விளையாட்டு
முதியோர் விளையாட்டு
காதலர் விளையாட்டு
மொழி விளையாட்டு
திளைப்பு விளையாட்டு
காட்சி விளையாட்டு
என வகைப்படுத்தியுள்ளனர். இப் பகுப்புகளுக்குள் பல்வகை விளையாட்டுகள் அடங்கும்.
அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆட்டல், உலாவல், ஊசல், எண்ணி
விளையாடல், எதிரொலி கேட்டல், ஏறுகோள், கண் புதைத்து விளையாடல், கவண்,
கழங்கு, குதிரையேற்றமும், யானையேற்றமும், குரவை, சாம விளையாட்டுகள்,
குறும்பு விளையாட்டுகள், சிறுசோறு, சிறுதேர், சிறுபறை, சிற்றில்
சிதைத்தல், சுண்ண விளையாட்டு, சூது, செடி கொடி வளர்ப்பு, பந்து
விளையாட்டு, பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும், பறவை
வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும், பாவை விளையாட்டு, பிசி நொடி விளையாட்டு,
மணற்குவியலில் மறைந்து விளையாடல், மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும், மல்,
வட்டு, வள்ளை, வில், வேட்டை என்பன அக்காலத்தே விளையாடப்பட்ட
விளையாட்டுகள் சிலவாகும்.
நீர் விளையாட்டுகளாவன, தைநீராடல், நீச்சல் நடனம், நீச்சல், பந்து,
பின்படகு, முன்படகு, வளிப்படகு பண்ணை, பாய்ச்சல், புனலாடல், மிதவை,
மூழ்கல் போன்றவை ஆகும்.
இவற்றில் சில விளையாட்டுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
 உடல் வித்தை விளையாட்டு:
இந்த விளையாட்டு இப்போது Gymnastic என உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
ஒரு மயில் மாம்பழத்தை உண்டுகொண்டிருக்கையில்  அது தவறி ஒரு சிறு சுனையில்
வீழ்ந்துவிடுகின்றது. அதை எடுப்பதற்காகச் சுனையில் இறங்கும் மயில்
அச்சுனைநீரைப் பருகுகின்றது. அந்தச் சுனையில் பழுத்த மிளகும், பலாவும்
விழுந்து ஊறிவிட்டிருக்கின்றது. அதனால் அச்சுனை நீரோ போதையூட்டும்
கள்ளாகிவிட்டது. அச்சுனை நீரை அருந்திய மயில், வியலூர் என்னும் ஊரில்
இன்னிசை முழக்கத்தோடு ஆடுமகள் ஒருத்தி கயிற்றில் ஏறி ஆடுவது போல்
இருந்தது என்கிறது குறிஞ்சிப்பாட்டு (191-194);.
வைகை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக்கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவர்
நின்று உடல் வளைத்து வித்தை காட்டியிருக்கின்றனர். இதைச் ‘சென்னியர்’
ஆடல் என்கிறது பரிபாடல் (77-80)
ஊன்றித் தாண்டல் (pole vault)
இது இக்கால உலக விளையாட்டுகளில் சிறந்துவிளங்கும் விளையாட்டு.
சங்ககாலத்தில் குன்றக் குறவர்களின் சிறுவர்கள் இந்த விளையாட்டை
விளையாடியிருக்கின்றார்கள்.
மந்தி தன் வயிற்றில் குட்டியைப் பற்றிக்கொண்டு, மூங்கில் நுனியைப் பற்றி
வளைந்தாடித் தவ்வுவது கண்ட குன்றத்துக் குறவரின் புதல்வர் தாமும்
மூங்கில் கொம்பைப் பற்றி வளைந்து ஆடி, வெற்றி கண்டு, அந்த வெற்றியை
வெளிப்படுத்தக் கைகொட்டி மகிழ்ந்தனர் என நற்றிணை (95) கூறுகின்றது.
செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க்க்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும் குன்றகம் – நற்றிணை 95
வல்லாட்டம்:
வல்லாட்டம் ஒரு முதியோர் விளையாட்டாகும். ஊர்ப் பொதுமன்றத்தில் இதற்கான
வல்லப் பலகை இருந்திருக்கின்றது. முதியோர் மிகுந்த கவனத்தோடு
ஆடியிருக்கின்றனர். இவ்வல்லாட்டம் போட்டி விளையாட்டாகவும்
ஆடப்பட்டிருக்கின்றது.
“கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின்,” (அகநானூறு 377);.
வட்டு விளையாட்டுகள்:
வட்டு என்பது ஒருவகைப் பந்தை ஒத்த பொருளாகும். பல வகையான வட்டு
விளையாட்டுகள் சங்ககாலத்திலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும்
வட்டு விளையாட்டுகளை ஆண்களே விளையாடினர்.
 - குணில் வட்டு Hockey) :
குணி;ல் என்பது நுனியில் வளைந்த தடியாகும். உருளும் மணிவட்டைத் குணில்
கொண்டு அடித்தனர். அது மேலும் வேகம் கொண்டு ஓடியது. இந்த விளையாட்டு
இக்காலத்தில் விளையாடப்படும் கொக்கி விளையாட்டுக்கு ஒப்பானது. இச்
செய்தியை,
“உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்” என்ற வரியால் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.
 - வட்டுநா விளையாட்டு (Golf):
வட்டை நாக்குப் போன்ற தடியால் அடிக்கும் விளையாட்டு ‘வட்டுநா விளையாட்டு’
எனப்பட்டது. அரக்கினால் சிவப்பு புள்ளிகள் இடப்பட்ட வட்டினை நாக்குப்
போல் வளைந்த நுனி கொண்ட கோலால் அடித்தனர். உலகப் புகழ் பெற்ற விளையாட்டான
கோல்ப் (Golf ) விளையாட்டில் பயன்படுத்தப்படும் கோலும் நாக்குப் போன்றே
வளைந்துள்ளது. நற்றிணை இவ்விளையாட்டு பற்றிய குறிப்பைத் தருகின்றது.
“வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை” (நற்றிணை 341)
பந்தாட்டம்:
சங்ககாலத்தில் பெரிதும் விரும்பி விளையாடப்பட்ட விளையாட்டு பந்தாட்டம்
ஆகும். பெரும்பாலும் பெண்களே இவ்விளையாட்டை விளையாடினர். இவ்விளையாட்டு
வீட்டு முற்றத்திலும், மாடங்களிலும், மணல் மேடுகளிலும் ஆடப்பட்டது.
நூலினால் செய்யப்பபட்;ட இந்தப் பந்தில் பல வேலைப்பாடுகள் இருந்தன. வானைத்
தொடுமளவுக்கு பந்தை எறிந்தனர் என்ற செய்தியை குறிஞ்சிக் கலி (4:22-23,
21ஃ6-7) குறிப்பிடுகிறது. காலால் பந்தை உதைத்து விளையாடினர் என்பதை
நற்றினை (324:7-9) சொல்கிறது.
“தந்தை இடனுடை வரைப்பின்
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி” - நற்றிணை 324-7
நீரில் விளையாடப்பட்ட பந்தாட்டத்தை நீர்ப்பந்தாட்டம் என அழைத்திருக்கின்றனர்.
மொழி விளையாட்டு:
பல்வகை மொழி விளையாட்டுகள் அக்காலத்தில் விளையாடப்பட்டிருக்கின்றன. நன்கு
வளர்ச்சியடைந்த மொழிகளிடையேதான் மொழி விளையாட்டுகள் காணப்படும்.
பொதுமக்கள் பேசும் மொழி பொதுமொழி எனப்பட்டது. புலவர்கள் மதிநலத்தால்
பேசும் மொழி மதிமொழி எனப்பட்டது. மதிமொழியில் செதுமொழி, முதுமொழி,
புதுமொழி என்னும் வகைகள் உண்டு.
புலவோர் செந்தமிழில் எழுதிய பாடல்கள் செதுமொழி எனப்பட்டன. பழங்காலப்
புலவோர் மூதறிவால் எழுதிவைத்த பாடல்கள் முதுமொழி ஆயின. பின்னாளில்
தோன்றிய புலவோர் திரிசொல்லும் கலந்து எழுதிய பாடல்கள் புதுமொழி
எனப்பட்டன.
“பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! (கலித்தொகை 68)
மொழிக்கு விழாக் கொண்டாடிய முன்னோர் மொழி வழி விளையாட்டுகளையும்
உருவாக்கினர். சிறியோரும் பெரியோரும் இவ்விளையாட்டுகளால் மகிழ்ந்தனர்.
அதன்வழி மொழியை வளர்த்தனர்.
- பிசிமொழி விளையாட்டு:
பிசி என்பது விடுகதை. தொல்காப்பியம் இதனை இரு வகையாகக் கூறகின்றது.
“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிரு
வகைத்தே பிசிநிலை வகையே” - தொல்காப்பியம் 3-478

http://paniveli.blogspot.in/2015/12/blog-post_12.html?m=1

1 கருத்து: