செவ்வாய், 10 அக்டோபர், 2017

கீழடி யை விஞ்சும் அழகன்குளம் அகழ்வாராய்ச்சி முடிந்தது நாகரீகம்

(28/09/2017)
கீழடியை விஞ்சும் அழகன்குளம் அகழாய்வுப் பணி நிறைவடைந்தது!
0 0 0
SHARES
கீழடியை மிஞ்சும் வகையில் அழகன்குளத்தில் அரசு தொல்லியல்துறையின்
சார்பில் கடந்த 140 நாள்களாக நடந்து வந்த அகழாய்வுப் பணி இன்று
நிறைவுபெற்றது. இங்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்ககாலப்
பொருள்கள் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில்
அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில்
அறிவித்திருந்தார். அதனடிப்படையில் அழகன்குளம் கிராமத்தில் கடந்த மே
மாதம் 9-ம் தேதி அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. இயற்கை இடர்பாடுகளால்
ஏற்பட்ட தாமதத்தைத் தவிர்த்து மற்ற நாள்களில் தொடர்ச்சியாக இந்த
அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக தொல்லியல் துறையின் சார்பில்
மேற்கொள்ளப்பட்ட இந்த அகழாய்வுப் பணியின்போது சிவகங்கை மாவட்டம்,
கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப்பணியில் கிடைத்ததைவிட 10 மடங்கு அதிகமான
பல்வேறு வகையான சங்ககாலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது.
Advertisement
கீழடியில் 1300 வகையான பழைமையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த
நிலையில், அழகன்குளம் அகழாய்வுப் பணியில் சுமார் 13 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட சங்ககாலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அழகன்குளம்
அகழாய்வுப்பணிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, தொடர்ந்து 140 நாள்களாக தினசரி 100-க்கும் மேற்பட்டோர்
அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அழகன்குளத்தில் நடந்துவந்த இந்த
அகழாய்வு இன்று நிறைவடைந்தது.
அழகன்குளம் அகழாய்வுப்பணியின் இயக்குநர் ஜெ.பாஸ்கரன் இந்த ஆய்வுப்பணி
குறித்து கூறுகையில், ''அழகன்குளம் அகழாய்வுப் பணியில் 50-க்கும்
மேற்பட்ட பழங்காலக் காசுகள், மிகவும் பழைமையான வெள்ளி முத்திரை
நாணயங்கள், 6-க்கும் மேற்பட்ட செம்பு நாணயங்கள், சங்கு ஆபரணங்கள், சங்கு
மணிகள், பச்சை, பவளம் மற்றும் பளிங்கு ஆகியனவற்றால் ஆன விலை உயர்ந்த
பொருள்கள், கற்களால் ஆன 500-க்கும் மேற்பட்ட மணிகள் ஆகியன என சுமார் 13
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்ககாலப் பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சிலுவை உருவம் பொறித்த முத்திரை ஒன்றும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.
இதுபோல முத்திரை கிடைத்திருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
Advertisement
பாண்டியர்கள், ரோமானியர்கள் ஆகியோரோடு சங்ககால மக்கள் பயன்படுத்திய
நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் வணிகத்தொடர்புகள் இருந்து
வந்திருப்பது உறுதியாகிறது. ரௌலட்டர், அரிட்டைன், ஆம்போரா போன்ற விலை
உயர்ந்த மதுக்குடுவைகள் அழகன்குளத்தில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன.
ரோமானியர்கள் அதிகம் பயன்படுத்திய மண் குடுவைகள், மட்பாண்ட ஓடுகள்
மற்றும் சீன மண்பாண்ட ஓடுகள் ஆகியனவும் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.
சங்கு ஆபரணங்கள், வளையல்கள் செய்யும் கூடமும் இருந்ததற்கான தடயங்களும்
உள்ளன. கி.மு.500 முதல் கி.பி.12-ம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான
அடையாளங்கள் அழகன்குளம் அகழாய்வுப் பணிகள் மூலம் தெளிவாகத் தெரிய
வருகிறது. அழகன்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும்
விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக