செவ்வாய், 10 அக்டோபர், 2017

பேச்சிப்பாறை அணை கட்டிய வெள்ளையர் குலதெய்வம் ஆனார்

# குமரியின்_பென்னிகுயிக்_நெல்லைய
ில்_வழிபாட்டுத்_தெய்வமாக_ :
_____________________________________________
_____________
வெள்ளக்கார துரைசாமி அம்மச்சிக்கோயிலில் "மூக்கன் துரை சாமியாக''
_____________________________________________
_____________
எடுடா அந்த வல்லயக் கம்பு ...
கொண்டாடா காளப் பந்தம் ...
மாட்டுடா அரக்கச்ச ... தொப்பிய ...
ம்ம்ம் ...
ஸ்டார்ட் மியூசிக் ...
இல்ல ... இல்ல ...
அடிடா உறுமி ...
தப்புக்காரன் எங்க ...
என்று வீராப்புடன் குதித்து ஆடும் சொள்ளமுத்துசாமி ...
அதுதான் வருஷத்தில் ஒருநாள் தரிசனம் தரும்.
நம்ம ''சுடலை மாடசாமி''யும் பார்த்திருக்கிறோம்.
டாய் ...
கோட்டு சூட்டு மாட்டு டா !
தொப்பி வைடா !!
கால்ல ஷூ போடுடா !!!
எங்கடா எனக்கு சிகரெட்டு ?
பத்த வை !
சாராயப் பாட்டில் லெப்ட் ல !!
எஸ் ... !!!
எஸ் ... !!!
போடுங்கடா என்று ஆரம்பித்து ...,
ப்ள டி பூல் ...
ஏ பீ சீ டி எங்கப்பன் தாடி ...
ஓ பீ சீ டீ உங்கப்பன் தாடி ...
என்று தமிலிங்கீசில் பொளந்து கட்டி குறி சொல்லி ''இந்த வருஷம் உன்
பயிர்களை நான் கப்பாத்துவேண்டா ... அடுத்த வருஷம் அஞ்சி பாட்டில்
பிராந்தி தரணும் ... என்று கண்டிசனோடு, பேச்சிப்பாறைக்க
ு மலையேறி போகும் சாமியை அறிந்ததுண்டா ???
வாருங்கள் !
அடைக்கலம் அம்மாள் காவல் காக்கும் அம்மச்சிக் கோவில்போவோம்.
கலந்தபனையில் இருந்து கிழக்கே போனால் குறுக்கே போகும் ரயில் பாதையை
தாண்டினால் ரோட்டின் வலதுபுறம் இருக்கும் குடியிருப்பு தான் தெற்கு
வள்ளியுரின் ஒரு பாகமான ''அம்மச்சிக் கோயில்''. நேரே நடந்து ஊரின் கீழ
கோடிக்கு வந்தால் கலைந்துபோன செங்கல் சூளை ஓன்று இருக்கும். உற்றுப்
பார்த்தால் உடைந்துபோன தெய்வத்தின் பீடங்கள் சில தெரியும். நாம் தேடும்
இடம் இதுதான் ! மூக்கன் துரை சாமிக் கோயில் !! வெள்ளக் காரனுக்கு
விவசாயிகள் அமைத்த திறந்தவெளிக் கோயில் !!!
யார் இந்த துரை ? இங்கே எதுக்கு கோயில் ??
ஹம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் , 1895 இல் மதுரை நகரில் சுகாதாரப்
பொறியாளராய் வேலை செய்த திறமையான இளம் வெள்ளைக் காரார். திருவிதாங்கூர்
மகாராஜா மூலம் திருநாள் கேரளாவை ஆண்டபோது அப்போது அவர்வசம் இருந்த
நாஞ்சில் நாட்டுக்கு குடிக்கவும் பயிரிடவும் தண்ணீர் போதததால், மேற்கு
தொடர்ச்சி மலையின் கோதைஆறு, கல்லாறு சித்தார் மற்றும் குட்டி ஆறுகளின்
நீரை அணைகட்டி உபயோகம் செய்ய முடிவெடுத்தார். ஆங்கிலயரிடம் உதவி
கேட்டபோது மின்சின் துரையின் வசம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அணைகட்ட
தேர்ந்தெடுத்த இடம் பேச்சிப் பாறை. அடர்ந்த காட்டுப் பகுதி. காணிகள்
எனும் காட்டு வாசிகள் வாழ்ந்த இடம் .அவர்கள் தெய்வம் பேச்சி அம்மனுக்கு
கோயில் அமைத்து குடியிருந்த மலை தான் பேச்சிப் பாறை.
கொடுக்க மறுத்தார்கள் காணிகள் ... மலையாள மகாராஜாவின் நெருக்குதல்,
ஆங்கில சிப்பாய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அவர்களின் எதிர்ப்பு
அடக்கப் பட்டது. மின்சின் துரை மலைமக்களிடம் பரிவுகாட்டி, பால் பொடி,
ரொட்டி, கோதுமை மற்றும் மருந்துகள் உடைகள் கொடுத்து, அவர்களின் ஆதரவைப்
பெற்றார். அது அவருக்கு வேண்டியதாய் இருந்தது. அணைகட்ட வேலை ஆட்கள், அணை
கட்டும் இடத்தில் குடியிருப்புகள் அமைத்து அதில் புலம் பெயர்ந்தோரை
அமர்த்தி, தானும் அங்கே கேம்ப் அடித்து 1897 இல் வேலையை தொடங்கினார்.
கடினமான உழைப்பும், கொசுக்கடியால் வந்த நோய்களும் வேலைசெய்வோரை
பாதித்தது. ஆட்கள் குறைந்தனர். மலை வாழ் மக்கள் போதவில்லை. பக்கத்தில்
ஆட்கள் நிறைந்த பகுதி பணகுடி. ஆனால் அது சென்னை மாகாணத்துக்குட்ப்பட்ட
நெல்லை கலெக்டர் வசம் உள்ள பண்டிநாடு. பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்
பட்டது; தாமாக உடன்படும் பணடிக்காரர்களை அழைத்து செல்லலாம்; எல்லா
வசதிகளும் மூலம் திருநாள் செய்து தரவேண்டும். வறுமையில் இருந்த
வள்ளியூர்காரர்களும், கடுக்கரை மலை தாண்டிப்போய் வேலையில் சேர்ந்தார்கள்.
கடுமையான சூழ்நிலையிலும் மின்சின் துரையின் அன்பும் ஆதரவும் அவர்களை
கட்டிப் போட்டது. அணையும் 1906 இல் கட்டி முடிக்கப் பட்டது.
கைமாறாக அணைக்கட்டின் ஒரு பகுதியில் பேச்சி அம்மன் கோயில் கட்ட உதவினார்
துரை. மின்சின் என்பதை இவர்கள் இதமாக ''மூக்கன் துரை'' என்று அழைத்து
வந்தனர். தான் கட்டிய அணையை பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டார்
மூக்கன் துரை.
வேலைக்குப் போன மக்களும் கூட ...
1913 இல் மலேரியா நோயினால் மாண்டு போனார் துரைசாமி ''ஹம்பிரி
அலெக்ஸாண்டர் மின்சின்'' என்கிற மூக்கன் துரை.
அவருடன் கூடி குடியிருந்த பழங்குடியினர் அவருக்கு அங்கு அணைக்கட்டு
பக்கத்திலேயே பேச்சி அம்மன் கோயில் அருகில் அவரின் பூத உடலை புதைத்து
சமாதியும் கட்டினார்கள்.
அன்றில் இருந்து சாமியானார் ''மூக்கன் துரை''. அணை கட்ட போன என் அம்மச்சி
கோயில் பெரியப்பா சின்ன பெருமாளும் மற்றும் உறவினர்களும் கடுக்கரை தொண்டு
தாண்டி திரும்பி வந்தனர் ஊருக்கு. ஏற்கனவே தாங்கள் வணங்கி வந்த
பேச்சியம்மன் உடனுறை சுடலை மாடசாமி கோவிலில் கூடுதல் பீடம் ஓன்று போட்டு
கொடை கொடுத்தார்கள். அடைக்கல அக்காவின் அப்பா என்பெரியப்பா போட்ட
ஆட்டத்தை என் பத்து வயசில் பார்த்தேன். முல்லைப் பெரியார் கட்டிய பென்னி
குக், மதுரையின் எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் படமாக சிரிக்கிறார்.
பேச்சி ஆற்றின் தண்ணீர் நம் ஊர் பக்கம் வரேவே இல்லை. தோண்டிய சின்ன
ராதாபுரம் கால்வாயும் வருஷம் முழுவதும் காற்று வீசுகிறது. மழை தண்ணீர்
இல்லை என்று பொறுமிக் கொண்டு இருக்கும் ஊர் மக்கள் இந்த துரை சாமிக்கு
கொஞ்சம் தாராளம் டாஸ்மாக் தண்ணீ ஊட்டி கொடை கொடுங்களேன். பெரியப்பா
வழியில் சாமி ஆட என் அண்ணன் வழி ஆண்கள் இல்லை .
உறுமி மேளம் போட்டால் தம்பி முருகன் மந்திரம் மேல் மூக்கன் துரை வந்தாலும் வரலாம்.
ஸ்டார்ட் மியூசிக் ...
Manickavasakam Muthuswamy அவர்களின் பதிவு இது.
# மீள்
பேச்சிப்பாறை அணை 1897-1906 :
உலகளாவிய அளவில் பல்லுரின பெருக்கத்திற்கு உகந்த மிக முக்கியமான 15
இடங்களில் ஒன்று குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை முதல் பாபநாசம்
வரையிலான மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைவால் பகுதி. இந்தக்கடைநிலை
நிலப்பகுதியில் கோதையாறும் சில ஆறுகளும் உருவாகி பேச்சிப்பாறை வழியாக
பாய்ந்து செல்கின்றது.
செழிப்பான குமரி மண்ணில் சில இடங்கள் சிறிது நீர்வசதி குறைந்த பகுதியாக
இருக்கும். இதனை சீர்செய்து நீரைப் பரவலாக்கவும், உபரிநீர் கடலில்
விரையமாவதைத் தடுத்திடவும், மாவட்டத்தின் குடிநீர் தேவையினை
சரிப்படுத்தவும், நாஞ்சில் நாட்டு பாசனவசதிக்காகவும் கோதையாற்று
நீரையும், சிற்றாறு மற்றும் கல்லாற்று நீர்கள் உட்பட்ட அனைத்து சிற்றோடை
நீர்களையும் தடுத்து குமரியின் எல்லாப்பகுதிகளுக்கும் பரவலாக்கிட
கட்டப்பட்டதுதான் இவ்வணை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான 1897-1906
காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு. மிஞ்சின் அவர்களால் அப்போதைய
திருவிதாங்கூர் மன்னரான மூலம் திருநாளின் ஆணையின்படியாக திருவிதாங்கூர்
அரசால் 26.1 லட்ச ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டது. இவ்வணையின் மூலம்
கன்னியாக்குமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவை மட்டுமின்றி
இப்போதைய நெல்லைமாவட்டத்தின் சிறு பகுதியின் நீர் தேவையும்
பூர்த்தியாகின்றது.
அணையினைக் கட்டிய பொறியாளர் ஆங்கிலேயரான திரு. அலெக்சாண்டர் மின்சின்
ஆவார். அணையினை கட்டிய அவரை "மூக்கன்துரை" என்று வட்டார மக்கள்
பாசத்துடன் அழைத்துள்ளனர். அணைப்பணி முடிந்து சில ஆண்டுகள் மட்டுமே
வாழ்ந்த அவர் 1913 - ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்துவிடுகிறா
ர். அன்னாரது கல்லறை அணைக்கு உட்பகுதியிலேயே அமைந்துள்ளது.
இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு
மேலும் 6 அடிகள் அதிகப்படுத்திட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின்
உயரம் 48 அடியாக உயர்த்தப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை
மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50
ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு
பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி).
அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக