செவ்வாய், 10 அக்டோபர், 2017

குயிலி விரிவான பதிவு விகடன் வேலுநாச்சியார் பறையர்

வேலு நாச்சியாரின் ஒற்றர்... வீர மங்கை குயிலி..! நினைவு நாள் சிறப்புப் பகிர்வு!
0 0 0
SHARES
ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும்
முக்கியமானவர்கள். அவர்களின் போர் தந்திரம், வீரம், விவேகம், சமூகநீதி,
தாய்நாட்டுப்பற்று ஆகியவை நம் கண்முன் தோன்றி நிற்கின்றன. நவராத்திரி
விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்றுதான், சிவகங்கை
அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள்
குயிலி தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார்.
இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது.
குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த தினம் செப்டம்பர் 30.
குயிலி வரலாறு:
Advertisement
பெரியமுத்தன் - ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தார் குயிலி. தயார்
ராக்கு விவசாயத் தொழிலில் மட்டுமல்ல; வீரத்திலும் கெட்டிக்காரர்.
யாராலும் அடக்கமுடியாத காளை ஒன்று, அந்தக்காலத்தில் விவசாயத்தை
அழித்துக்கொண்டிருந்தது. அந்தக் காளையை அடக்கப்போய் அதன் கொம்பு
முட்டியதில் உயிரிழந்தார். நீண்டநாள்கள் குழந்தையில்லாமல், குயிலியைப்
பெற்றதால் குயிலி மீது தந்தை முத்தன், அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.
மனைவி ராக்கு இறந்த துக்கம் தாங்காமல் குயிலியை அழைத்துக்கொண்டு சிவகங்கை
அருகேயுள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்துக்கு முத்தன் சென்றுவிடுகிறார்.
அங்கிருந்த பட்டியல் இன மக்களோடு சேர்ந்து அரண்மனைக்கு தோல்தைக்கும்
வேலைக்குச் செல்கிறார்.
வேலுநாச்சியாரின் வீரம் பற்றி குயிலியின் இளம் வயதிலேயே எடுத்துக்கூறி
வளர்த்தார் முத்தன். வேலுநாச்சியாரின் வீரமும், விவேகமும் இளம்
ரத்தத்திலேயே பாய்ச்சப்பட்டதால் குயிலியும் வீரபெண்மணியாக உருவெடுத்தார்.
ஒரு கட்டத்தில் குயிலி, வேலுநாச்சியாரைப் பார்க்கவேண்டும் என்று
எண்ணும்போது, பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். பாதுகாவலர்களிடம்
முத்தனும் கேட்டுப்பார்த்து முடியாமல் போய்விடுகிறது. இந்தத் தகவல்
வேலுநாச்சியாருக்குப் போனதும் முத்தனையும், குயிலியையும் அழைத்து,
"நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அளவுக்கு
சுதந்திரம் உண்டு" என உத்தரவிடுகிறார். காலப்போக்கில் வேலுநாச்சியாரின்
அன்பிற்குரியவராக அவரின் மனதில் இடம்பிடித்தார் குயிலி.
வேலுநாச்சியாருக்கு சிறந்த ஒற்றனாகச் செயல்பட்டார் குயிலியின் தந்தை
முத்தன்.
வேலுநாச்சியார், குயிலியை தன்னுடன் வைத்திருக்கிறார். தன் தந்தையைப்
போலவே அவ்வப்போது சிவகங்கைப் பகுதிக்குள் என்ன நடக்கிறது என்கிற
தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் குயிலி. இதனால் பெரும்
நம்பிக்கைக்குரிய உளவாளி என பெயர்பெற்றார். இந்தச் செய்தி
ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்ததும், 'யார் அந்த குயிலி?' என விசாரிக்கத்
தொடங்கினர். குயிலி பற்றியும், சிவகங்கையைச் சுற்றியுள்ள மக்கள் யாரும்
வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதும்
ஆங்கிலேயர்களுக்குத் தெரியவருகிறது. பின்னர் குயிலியைக் கொலைசெய்ய
ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர்.
Advertisement
ஒருநாள் இரவு வேலுநாச்சியாரின் சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் ஓர்
ஓலையும், பையுமாக வந்து, "இந்த ஓலையை சிவகங்கை அருகேயுள்ள ஓர் இடத்தைச்
சொல்லி அங்கே ஒப்படைத்துவிடு. அதற்குக் கூலியாக இந்தப் பையை
வைத்துக்கொள்" என்று சொல்லியபோது மறுக்கமுடியாமல் குயிலி அந்த ஓலையை
வாங்கிக்கொண்டார். அந்த ஓலையைப் பிரித்துப் படித்தபோதுதான், நாச்சியாரின்
போர் தந்திரங்களும், நுட்பங்களும் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு
அதிர்ச்சியடைந்தார்.
அடுத்த கணமே வெற்றிவேல் அறைக்குப் போனாள் குயிலி. இனியும் தாமதித்தால்
நாச்சியாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய குயிலி, உடனே
வெற்றிவேலின் உயிரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவைத்தாள். நாச்சியார்
ஓடிவந்து பார்க்கிறாள் குயிலியின் கையில் ஓலை; மறுகையில் கொடுவாள்
இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேலுநாச்சியார், குயிலியின் கையில்
இருந்த ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்துப் போய்
நின்றார். அந்த நிமிடமே வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக
நியமிக்கப்பட்டார் குயிலி. அதன் பிறகு மெய்க்காப்பாளரை ஏமாற்றி
வேலுநாச்சியாரை கொலைசெய்ய ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.
வேலுநாச்சியார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு கறுப்பு உருவம்
ஊடுருவியது. அந்த உருவம் வேலுநாச்சியார் மீது கத்தியை வீசியதும் மறுகணமே
குயிலி, தன் கையால் தடுத்ததும் கத்தி கீழே விழுந்துவிட்டது. அந்தச்
சத்தம் கேட்டு வேலுநாச்சியார் எழுந்து பார்க்கிறார் குயிலியின் கையில்
ரத்தம். குயிலி துடிதுடித்துக்கொண்டிருந்தாள். உடனே தன்னுடைய சேலையால்
ரத்தத்தை துடைத்து மருந்துபோட்டு குயிலியைக் காப்பாற்றினார் நாச்சியார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த குயிலிக்குத் தாயாக இருந்து பாதுகாத்து வந்தவர்
வேலுநாச்சியார். இந்தச் செய்தியெல்லாம் ஆங்கிலேயர்களுக்குச் செல்கிறது.
குயிலிக்கும், வேலுநாச்சியாருக்கும் எதிராக மக்களைத் திரட்ட திட்டம்
தீட்டுகிறார்கள். அப்போது, மக்களிடம் சாதிப் பாகுபாட்டை ஆயுதமாக
ஆங்கிலேயர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலேயர்கள் தலித் மக்களின்
விவசாய நிலங்களையும் ஆடு, மாடுகளையும் அபகரித்து
கொடுமைப்படுத்துகிறார்கள்.
“எந்தநேரத்திலும் குயிலியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று கருதிய
வேலுநாச்சியார், பெண்கள் படைக்குத் தளபதியாக அவரை நியமித்தார்.
வேலுநாச்சியாருக்கு குயிலியும், குயிலிக்கு வேலுநாச்சியாரும் பாதுகாப்பு
அரணாக ஒருவருக்கொருவர் இருந்தார்கள்.
பிரான்மலையில் இருந்து வெள்ளச்சி நாச்சியாரை, ஆங்கிலேயர்கள்
சிறைப்பிடித்து வேலுநாச்சியாரை வீழ்த்துவது என்பது ஆங்கிலேயர்களின்
திட்டம். அதன்படி வெள்ளச்சி நாச்சியாரை சிறைப்பிடித்துக்கொண்டு,
காட்டுவழியாக ஆங்கிலேயர்கள் வரும் செய்தி குயிலிக்கும், நாச்சியாருக்கும்
கிடைத்தது. உடனே இருவரும் காட்டுக்குள் விரைந்தார்கள். நடுக்காட்டில்
நுழைந்ததும் ஆங்கிலேய சிப்பாய் வேலுநாச்சியாரை நோக்கி துப்பாக்கியை
நீட்ட, உடனே குயிலி கொடுவாளைக்கொண்டு அவன் கையை வெட்டினாள். அடுத்த கணமே
வேலுநாச்சியாரின் வாள், அந்த சிப்பாய் தலையைச் சீவியது. நாச்சியாரை
பாதுகாப்பாக மீட்டு, விருப்பாச்சி அரண்மனைக்குக் கொண்டு வந்தனர்.
வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமை மக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு
விடுத்தார். மக்கள் படை, திப்பு சுல்தான் படை, கோபால் நாயக்கர் படை,
மருது சகோதர்கள் படை, குயிலி தலைமையில் வாள்படை வளரி படை, கவன்கற்படை,
வெட்டரிவாள் படை, வீச்சரிவாள்படை, சக்கந்தி வைரவன்படை, பெரியஉடையத்தேவர்
படை என அலைகடலென விருப்பாச்சிக்கு விரைந்தனர். உடல்நலம் குன்றியிருந்த
முத்தன், தனியாக ஒரு படையைத் திரட்டி, அந்தப் படைகளோடு
இணைத்துக்கொண்டார்.
குயிலிக்கு எந்தநேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், யாரையும்
நம்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதும், தானே ஒற்றனாக களமிறங்கினார் குயிலி.
சிவகங்கை அரண்மனையில் நவீன ஆயுதங்களும் கருமருந்து பொட்டலங்களும்
வெடிப்பொருள் மூட்டைகளும் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தகவல்
குயிலிக்கு கிடைத்தது. அந்தத் தகவலை தன் தந்தை முத்தனிடம் கேட்டு
உறுதிசெய்து கொண்டார். உடனே ஆயதக்கிடங்கில், தான் தீ வைத்துவிட்டு
வருவதாகச் சொன்னதற்கு முத்தன் அனுமதி மறுத்துவிட்டார். இவரைப்போன்றெ
வேலுநாச்சியாரும் "நீ சிறுவயதுப் பெண்; அப்படியெல்லாம் செய்ய வேண்டாம்"
என்று அனுமதி மறுத்தார். ஆனால், குயிலியோ முடிவு செய்துவிட்டாள்.
எப்படியாவது ஆயுதக்கிடங்கை அழித்துவிடவேண்டும் என்று.
விஜயதசமி நாளன்று அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விழாக்கோலம்
பூண்டிருந்தது. பெண்கள்படையினர் பழக்கூடைகள் மற்றும் பெரியமாலைகளுக்குள்
சூரிக்கத்தி, கட்டாரி போன்ற ஆயதங்களை மறைத்துக்கொண்டு சென்றார்கள்.
அரண்மனைக்குள் ஆங்கிலேயப் படைகளுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும்
உள்ளுர் ஆங்கிலப் படையினரும் இருந்தார்கள். அந்தப் படையில் தமிழர்கள்தான்
அதிகம் என்பதால் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து சாமி கும்பிடுவது மரபு.
அந்த சமயம் பார்த்து ஆயுதக்கிடங்கில் விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை உடல்
முழுவதும் ஊற்றிக்கொண்டு 'வீரவேல் வெற்றிவேல்' என்று உரத்த குரலில்
குயிலி முழக்கமிட்டதும் ஆங்கிலேயர்கள் நிலைகுலைந்து போனார்கள். அப்போது
தன் உடலில் தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்குக்குள் குதித்தார் குயிலி.
ஆயுதங்கள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தற்கொலைப்படை போராளியாக மாறினார்
அவர். குயிலியின் தியாகத்தால் சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களிடம் இருந்து
மீட்கப்பட்டது. இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்கு தெரியவந்ததும் கதறி
அழுதார். குயிலியின் இழப்பை வேலுநாச்சியாரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்பது மறுக்கமுடியாத உண்மை.
‘சிவகங்கையில் குயிலிக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்' என கடந்த ஆண்டு
தமிழக சட்டசபைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார் மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அவர் அளித்த வாக்குறுதியை தற்போதைய அரசு
கண்டுகொள்ளாமல் காற்றில் பறக்கவிட்டுள்ளது. விரைவில் குயிலிக்கு மணி
மண்டபம் அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு
செவிசாய்க்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக