செவ்வாய், 10 அக்டோபர், 2017

இடிந்தகரை பற்றி இந்து கிறித்துவம் மதமாற்றம் அரசியல் கூடங்குளம்

அமல் அரசு.மை
இடிந்தகரை மறைக்கப்பட்ட வரலாறு!?
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் அமையப் பெற்ற அழகிய
கடற்கரை கிராமம் இடிந்தகரை.
13000க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெரிய நெய்தல் நில கிராமம். சுமார்
600 வருடப் பாரம்பரியம்மிக்க ஊர்.இது விடிந்தகரை என்றும்
அழைக்கப்படுகிறது.
16ம்நூற்றாண்டு இயேசு சபை துறவிகளின் கடிதங்களில் இடிந்த கல்லு என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1715 ல் மலபார் மறைமாவட்டக் குறிப்புகளில்
இந்த கிராமத்தின் பெயர் இரிஞ்ச கரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
16ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த நெய்தல் திணையின் தலை மக்களான
இந்து பரதவர்கள் தங்களை முஸ்லிம் மூர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள
கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மதம் மாறினர்.
ஊரின் வடக்கு எல்லையாக அருவியாறு ஓடையும், மேற்கு எல்லையாக செங்கழனி
ஓடையும், கிழக்கு எல்லையாக நச்சி ஓடையும், தெற்கு எல்லையாக மன்னர்
வளைகுடாவும் உள்ளன.
ஊரின் கிழக்கே அருவியாறு பாய்கிறது. இவ்வாறும் கடலும் சேரும் இடம்
அருவிக்கரை எனப்படுகிறது.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதி புன்னை, தில்லை, தாழை
மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இதை அடுத்த கடற்பகுதி தீர்த்தக்கரை
எனப்படுகிறது.
ஊரின் கிழக்குக்கரைப்பகுதி சரளைப்பாறைகள் நிறைந்த மேட்டுப்பகுதி.அலைகளின்
மோதலுக்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் இவை அடிக்கடி கடற்கரையில் இடிந்து
விழுந்து "இடிந்தகரை" என்று பெயர் பெற்றது.
முருகப்பெருமான்குமரியிலிருந்து
வள்ளியம்மையை தூக்கிக்கொண்டு செந்தூர் செல்லும் வழியில் இப்பகுதியில்
வந்த பொழுது விடிந்தால் "விடிந்தகரை" என்றும் பெயர்பெற்றது.
ஊரின் பெரும்பான்மை மக்கள் மற்ற நெய்தல் கிராமங்களான வேம்பாறு, வைப்பாறு,
மணப்பாடு, பெரியதாழை, கூடுதாழை, உவரி, கூத்தங்குளி, விசயதாழை, பஞ்சல்,
பெருமணல், கூட்டப்புளி மற்றும் கோவளம் ஆகிய ஊர்களில் இருந்தும் நெய்தல்
அல்லாத கிராமங்களான பேய்க்குளம், கும்பிகுளம், எந்த ஊர் என்று
கண்டுபிடிக்க இயலாத வடக்கில் உள்ள ஊர் மற்றும் கொசக்குடி ஆகிய
ஊர்களிலிருந்தும் புலம் பெயர்ந்ததாக கருதப்படுகிறது.
இவர்களின் குடும்பப்பெயர்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. புலம் பெயரைக்
காரணம் இப்பகுதியின் மீன்வளம் மற்றும் பாதுகாப்பான ஊர் அமைப்பு.இடிந்தகரை
இதுவரை புயலினால் கடுமையாக தாக்கப் பட்டதில்லை.
அருவிக்கரைப் பகுதி முன்னர் ஆமைகளின் இனப்பெருக்க புகலிடம். ஊரின்
கிழக்கே உள்ள கொடுவாய் முனை பகுதி சிறுமீன்களின் புகலிடம். ஊரின் மேற்கே
யானைக்கல் பகுதி பவளப்பாறைகள் மற்றும் கல் இறால் மீன்களின் புகலிடம்.
உவரிக்கு அடுத்தபடியாக இறால் மீன்கள் கடலில் வாழ ஏற்ற சிறப்பான சகதி
பகுதியான மடைஅமைந்துள்ள ஊர். வருடம் முழுக்க மீன்கள் இவ்வூரில்
பிடிக்கபடுகின்றன. கடலுக்கு செல்லாத சமயங்களில் மீனவர்கள் கரைகளில்
குத்துவலை, கரைமடி, மற்றும் தூண்டில் மூலம் மீன்பிடிக்கின்றனர்.
அருவி ஆறு தற்போது ஒரு குட்டையாக மாறிவிட்டதால், தண்ணீர் உப்பாகி போனது.
இங்கும் மக்கள் சென்று ஆற்று மீன்களை பிடிக்கின்றனர்.
மக்கள் கடின உழைப்பாளிகள். கல்வி அறிவு பெருகியதாலும், மீன் வளம் கடலில்
குன்றியதாலும் மீன் பிடி படகுகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
2004 சுனாமி தாக்குதலால் இவ்வூர் கடற்கரையின் எழில் தோற்றம் மறைந்து
மாறுதலாகி காட்சி அளிக்கிறது. ஊரின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு
பகுதிக்கு கடற்கரை வழியாக சுனாமிக்கு முன்பு எளிதாக வந்துவிடலாம்.
தற்போது அது முடியாத காரியம்.பிடிக்கப்படும் மீன்கள் ஊரின் மேற்கு
பகுதியில் உள்ள மீன்வாடியில் விற்கப்படுகின்றன. இம்மீன்கள் தமிழ்நாட்டின்
பிறபகுதிகளுக்கும் , கேரளாவுக்கும் செல்கின்றன. இவ்வூர் மக்கள் பேசும்
தமிழில் மலையாளம், சிங்களம் மற்றும் போர்ச்சுகீசிய வார்த்தைகள்
கலந்துள்ளன. இவர்கள் பேசும் தமிழ் மற்ற சமூகத்தினர் பேசும் தமிழில்
இருந்து கொஞ்சம் வேறுபட்டது. அரிசி மற்றும் மீன் பிரதான உணவு. சமையலில்
தேங்காய் முக்கிய இடம் பிடித்துள்ளது.அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி
மற்றும் கை பேசி வசதி உள்ளது. வசதிகள் பெருகியதால், நல்ல உணவு, உடையோடு
ஓரளவு தரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஓலை குடிசைகள் மிகவும் குறைந்து
விட்டன. ஆண்களை விடபெண்கள் எண்ணிக்கை அதிகம். பெண்கள் அதிகமாக கல்வி
கற்கிறார்கள்.
தங்களுக்குள்ளே திருமணம் செய்வதோடு கூட்டப்புளி, உவரி மற்றும்
கூத்தங்குளி ஊர்களோடு அதிக திருமண உறவு கொள்கிறார்கள்.
முற்காலத்தில் இம்மக்கள் வருணனையும், குமரி,மீனாக்ஷி அம்மை போன்ற பெண்
தெய்வங்களையும் வணங்கினர்.
தற்போது ஊரின் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
இந்துக்களும்,பிரிவினை சபை கிறிஸ்தவர்களும்சிறுபான்மையினர்.
"முத்துக்குளித்துறையில் இருந்து அத்தனை போர்ச்சுகீசியத்துறவிகளும்
சென்றுவிட்டாலும் ஒரு பரதவன் கூட தான் கொண்ட விசுவாசத்திலிருந்து மாற
மாட்டான்" என்று 16ம் நூற்றாண்டுஇயேசு சபை துறவி ஹென்றி ஹென்றிக்கஸ்
அடிகளார் கூறியதை 20ம் நூற்றாண்டில்இவ்வூர் மக்கள் பொய்த்துப்
போகச்செய்தனர்.
1960-68 காலகட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் கடற்கரைச் சட்டங்களான
அஞ்சுமீன் குத்தகை (விற்கும் மீன் விலையில் ஐந்தில் ஒருபகுதி
திருச்சபைக்கு),துவி மற்றும் பள்ளை (சுறா,உழுவை போன்ற பெரிய மீன்களில்
இருந்து பெறப்படும் விலை அதிகமான பகுதிகள்) கோவிலுக்கு சொந்தம் மற்றும்
செவ்வாய் கிழமை தெறிப்பு என பல்வேறு வரிகளை செலுத்தி வந்தனர். இவற்றில்
செவ்வாய் கிழமை தெறிப்பு என்பது, செவ்வாய் கிழமை வருவாயில் பாதியை
தேவாலயத்திற்கு கொடுத்தல். இத்தகைய கோவில் வரிகளால் துன்புற்ற ஏழை
மீனவர்கள் திருச்சபைக்கு எதிராக கலகத்தில் இறங்கினர்.1966 செப்டம்பர்
25ல், மீன் ஏலத்தை நிறுத்தக்கோரி போராடினர்.
இறுதியாக மீனவர்கள் துவி குத்தகை முறையில் மீன்களை விற்க மறுத்தனர்.
இடிந்தகரை ஊர் மடிக்காரர், மெனக் கெடர்கள் (மீன்பிடிக்க செல்லாமல் பிற
தொழில்கள் செய்த மீனவர்கள், வசதியானவர்கள்.ஆனால் மிகக் குறைவான வரியையே
கோவிலுக்கு செலுத்தினர்) என இரண்டாகப் பிரிந்தது.திருச்சபை மெனக்
கெடர்களை ஆதரித்தது.
ஞாயிறு திருப்பலிக்கு வந்த மடிக்காரமீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
திருச்சபை காவல்துறை துணையோடு மீனவர்களை அடக்க முற்சித்தது.
மடிக்கார மீனவர்கள் ஊரை விட்டு வெளியேறினர்.
மீதமிருந்த குடும்பப் பெண்கள் தாக்கப்பட்டனர்.
இதனால் துயருற்ற மீனவர்கள் RSSஅமைப்பின் உதவியை நாடினர். இவ்வமைப்பு
வழக்குகளில் இருந்து விடுதலை பெற உதவியது.
இந்த உறவின் காரணமாக பெரும்பாலான இடிந்தகரை மீனவர்கள்1967 அக்டோபர் 27
அன்று இந்து மதத்தை தழுவி, கத்தோலிக்க திருச்சபைக்கு அதிர்ச்சி வைத்தியம்
அளித்தனர்.
ஆத்திரம் குறையாத இடிந்தகரை மக்கள் தேவாலயத்திற்கு நேர் எதிர் பிள்ளையார்
கோவில் ஒன்றை அமைத்தனர்.
இதில் பங்கு பெற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், கோல்வால்க்கர்,
வாஜ்பேயி,அத்வானி, குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார்,
கே.பி.சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், உமாபாரதி போன்றோர்
இடிந்தகரை வந்தனர்.அதிர்ந்துபோனது கத்தோலிக்க திருச்சபை!!
1968 ல் அனைத்து சுரண்டல் சட்டங்களையும் திரும்ப பெறவே , எல்லா நெய்தல்
கிராமங்களுக்கும் விடிவை உண்டாக்கிஇடிந்தகரை , விடிவை உண்டாக்கிய
கரையானது.
1960ல் தொடங்கிய இந்த போராட்டத்தின் வெற்றியை 8 ஆண்டுகளுக்கு பின் 1968ல்
சுவைத்தனர்.
காலப்போக்கில் இந்துக்கள் பல்வேறு புறக்காரணங்களால் (கல்வி மற்றும்
திருமணம் போன்றவைபுறக்கணி
க்கப்பட்டதால் ) மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினா்.
இன்றும் ஊரின் கிழக்கு பகுதியில் இந்து மதம் உயிர்ப்புடன் உள்ளது.
இவ்வாறான மத மாற்றங்களால்,ஒரே வீட்டில் இரு மதங்களும் உள்ளன. இந்த
கட்டுரையை எழுதும் நான் என் கல்விச் சான்றிதழ் படி கத்தோலிக்க
கிறிஸ்தவன். ஆனால் என் பக்கத்து வீட்டுக்காரர் (உறவினர்) ஒரு இந்து. என்ன
ஒரு வேடிக்கை பாருங்கள்.
இம்மத மாற்றத்தை அடிப்படையாக கொண்டு திருமதி.இராஜம்
கிருஷ்ணன்,’அலைவாய்க்கரையில்’ என்ற புதினத்தை எழுதி உள்ளார். இந்து சமயம்
தன்னோடு ஒரு பீடி தொழிற்சாலையையும் கொண்டு வந்தது. இது ஏராளமான
பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
சிலர் கருவாடு வியாபாரம் செய்கிறார்கள். தலைசுமடாக மீன் விற்ற பெண்கள்
எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.ஊரில் தற்போது 1 பெரிய தேவாலயமும், 5
சிறு தேவாலயங்களும், 2 இந்து கோவில்களும், ஏராளமான குருசடிகளும் உள்ளன.
எல்லா கிறித்தவ, இந்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அடிப்படை வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்று உள்ளது. 1 மேல்நிலைப்
பள்ளியும் , 2 தொடக்க பள்ளிகளும் உள்ளன. இவற்றில் சிறுமியர்க்கான
தொடக்கபள்ளியே, இடிந்தகரையின் முதல் தேவாலயம். கடல் ஆலய பரப்பை
நெருங்கியதால், தற்போதுள்ள இடத்தில் பெரிய தேவாலயம்கட்டப்பட்டு நூறு
ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மிக அழகிய ஆலயமும்,அதன் தேரும் நெய்தல் நில
மக்களிடையே மிகப்புகழ் பெற்றவை. இத்தனை ஆண்டுகளும் மக்கள்
மகிழ்ச்சியாக,நிம்மதியாக இடிந்தகரையில் வாழ்ந்து வந்தனர், கூடங்குளம்
அணுமின்நிலையம், இடிந்தகரையின் மேற்கு பகுதியில் அமைகிறது என்ற செய்தி
அவர்கள் காதில் பேரிடியாய் விழும் வரை. நன்றி : தாமஸ் பரதவர் பாண்டியர்
பதிவிலிருந்து

1 கருத்து: