செவ்வாய், 10 அக்டோபர், 2017

புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பெருஞ்சித்திரனார்

புதிய தமிழ்த் தாய் வாழ்த்து ..வைரமுத்துவுக்கு ஒரு வேண்டுகோள்
Published:March 15 2009, 14:32 [IST]
- முனைவர் மு.இளங்கோவன்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழக
அரசு மேடைகளில் பாடுவதற்கு உரிய வகையில் அறிஞர்கள் குழு அமைத்து உரியவாறு
கருத்து கேட்டு அதன்படி பாட ஆணையிட்டுள்ளது.
அதில் இடம்பெறும் சில வரிகள் விடுபட்டும்,பாடல் ஒழுங்குக்கு,இசை
ஒழுங்குக்கு ஏற்ப வரிகள் சில முன் பின்னாக்கியும் சிறப்பாகப் படாப்பட்டு
வருகின்றது. இதை விடுத்துப் புலவர் பெருமக்கள் பலரும் தமிழ்த்தாய்
வாழ்த்து பாடியுள்ளனர். அவையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்,பாதுகாக்கும்
தரத்தின.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சரியில்லை எனப் பதிவர்கள்
சிலர் அண்மைக் காலமாகக் குறித்து வருகின்றமையைக் கண்ணுற்று வருகிறேன்.
இன்று மேடைகளில் பாடப்படாத சில வரிகளை வைத்துக்கொண்டு இவர்கள் நிழலை
அடித்து மகிழ்ச்சியடைவது கண்டு உள்ளுக்குள் சிரிக்கிறேன்.
மேலும் பாவரசு வைரமுத்து அவர்கள் மலேசிய மேடையொன்றில் புதிய தமிழ்த்தாய்
வாழ்த்து உலகு தழுவி இயற்ற உள்ளதாக எடுத்துரைக்கவும் மலேசிய மண்ணிலேயே
தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட யாருக்கும் உரிமையுண்டு. அவ்வகையில் நம்
பாப்பேரரசு அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் வரவேற்போம்.
ஆனால் நம் பாப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாட உள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடல் அவரின் திரைப்பட விளம்பரப் புகழாலும், அவரின் அரசியல்
நெருக்கத்தாலும் எங்கே மனோன்மணியம் சுந்தரனார் பாடலுக்கு வேட்டு வைத்து
விடுமோ என்ற கவலையில் இந்தப் பதிவை இடுகிறேன்.
வைரமுத்து அவர்களின் திரைப்பட வரிகளில் யான் பலநாள் கலந்து போனதும்
உண்டு. கரைந்து போனதும் உண்டு. பல்வேறு வகுப்பறைப் பொழிவுகளில் அவரின்
உவமைநலம் காட்டி மாணவர்களை இலக்கிய இன்பம் நுகரவைத்தது உண்டு. பல
இலக்கியக் கருத்தரங்குகளில் அவரின் பாடல் வரிகளைப் பாடிக் காட்டி
இலக்கியத்தரம் கண்டுகாட்டி அனைவரையும் இன்பக் கயிற்றால் கட்டிப்போட்டதும்
உண்டு.
"முத்து முத்து பெண்ணே
உந்தன் கண்ணைக் கண்டும்
முள்ளு தச்ச ஆடு போல
உள்ளம் நொண்டும்"(கடல் பூக்கள்)
இந்த வரிக்கு இணையான வரியை எழுத இனியொருமுறை வைரமுத்து பிறந்து வந்தாலும்
எழுத முடியாது என்று இந்த மண்ணின் பாவலரை மனதால் வாழ்த்தித் தலையில்
வைத்துக் கூத்தாடியதும் உண்டு. நாளையும் போற்றிப் பேசுவேன். இது நிற்க.
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம்
சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித்
தொடங்கவே பாடினார். அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு,
மொழிக்காழ்ப்பு உணர்வுகளை உள்வாங்கிப் பாடியுள்ளமையும்
போற்றத்தக்கனவே.அதில் இடம்பெறும் அணி அமைப்புகள், உட்பொருள்கள் எம்மை
வியப்படையச் செய்வதுண்டு.
முழுவதுமாக அந்தப் பாடலை உள்வாங்கிச் சுவைக்கத் தெரியாத சில அன்பர்கள்
கண் பற்றியும் காது பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார்
உணர்த்த விழைந்த செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகுமா?
விருந்துக்குச் சென்றவர்கள் முற்றாகச் சுவைத்து அல்லது குறை
சொல்வதற்காகவாவது முழுமையாக உண்டு விருந்தில் முழுமையாகப் பரிமாறப்பட்ட
அனைத்தையும் பேசுவது தானே முழுமையான திறனாய்வாக இருக்கும். அதை விடுத்து
பரிமாறப்பட்டதில் உங்களுக்குப் பிடிக்காதவற்றை எடுத்து வைத்துக்கொண்டு
ஒருவருக்கொருவர் குறைபட்டுக் கொண்டிருந்தால் அல்லது இலாவணி பாடினால்
விருந்தை முழுமையாக உண்ணாமல் அரைகுறையாக எழுந்து
வரவேண்டியிருக்கும்.அதுபோல் கருத்துரைப்பவர்களின் நிலையும் உள்ளது.
பெரியவாச்சான் பிள்ளை போலும் உரைவரையும் ஆற்றல் பெற்ற பலரும் சுந்தரம்
பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தைப் போற்றியே வந்துள்ளனர்.
நம் பாவரசர் வைரமுத்து அவர்கள் தமிழ்த்தாய்க்கு முன்பே சோறு போட்டவர்.
இப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக் கொடுத்து துணியில்லாமல் இருந்த
தமிழ்த்தாய்க்கு நான்தான் கண்டாங்கிச் சேலை கட்டிவிட்டேன் என்பார்.
வைரமுத்துவுக்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைத் தெரியும் என
நினைக்கிறேன். அவர் தம் படைப்புகளையும் படித்திருக்க வாய்ப்புண்டு. கலில்
சிப்ரான் பற்றி உள்ளம் குளிர்ந்து எழுதியவர் நம் பாவரசு. இவர் பற்றி
தம்நூல்களில் குறித்ததாகத் தெரியவில்லை.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய்
வாழ்த்தான(பள்ளிப்பறவைகள் நூலிலும்,கனிச்சாற்றிலும் உள்ளது)
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே
சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
என்ற பாடல் கிடைத்தால் படித்துப்பாருங்கள்.
அதை விட பொருத்தமான பாடலை உலகில் எவராலும் எழுதமுடியாது.
இதனைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முயற்சி செய்யுங்களேன்.
இரகுமான் அருகில் அமர்ந்து அவருக்கு இந்தப் பாடலின் பொருளை முழுமையாக
விளக்குங்களேன். அல்லது கலைஞருக்குதான் இந்தக் கருத்தை ஓதுங்களேன்.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது
சிறப்புதான். அது மனோன்மணியம் சுந்தரனார் பாடலை வலிந்து சென்று
ஒதுக்காமல் இருக்கட்டும்.
தட்ஸ்தமிழ் நன்றி - http://muelangovan.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக