செவ்வாய், 10 அக்டோபர், 2017

கோசர் தமிழகம் முழுவதும் வாழ்ந்தனர் 1

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பதிவு_1 >> # கோசர் யார்? பாவாணர் வழியில் பயனப்படுவோம் வாருங்கள்...
++++++++
கடைக்கழகக் காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க் கும்
படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும்
இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும் அறியக்கிடக்கின்றது.
இவ் வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் 'கோசர்' என்னும் ஆராய்ச்சிச்
சுவடியில், கோசராவார் காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம்
பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு போந்தவர்
என்றும்;
வத்தம் அல்லது வச்சம் (வத்ஸம்) என்னும் வடசொற்கு இளமைப் பொருளுண்மையாலும்
அவர் கோசம் என்னும் ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதினாலும், இளங்கோசர்
என்னப்பட் டிருக்கலா மென்றும்,
கோசர் என்னும் பெயருக்குக் கோசம் என்னும் சூள்முறையன்றி, கோசம்
(கோசாம்பி) என்னும் நகர்ப்பெயரும், குசர் என்னும் ஆட்டுப் பெயரும், கோசம்
(திரவியம்) என்னும் செல்வப்பெயரும், காரணமா யிருக்கலாமென்றும்,
கோசர் முதற்கண் கொங்கில் வதிந்து பின்பு குடகிற் குடியேறியவர் என்றும்;
அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநில மன்னர்
கோசர் என்றும்;
இது போதுள்ள கைக்கோளரும் செங்குந்தரும் கோசர் மரபினர் என்றும்; பிறவும்;
தம் ஆராய்ச்சி முடிபாகக் கூறியுள்ளார். இவற்றுள் ஒன்றிரண்டேயன்றி எல்லாம்
# உண்மையல்ல .
ஒருசார் அறிஞர், கோசரை வம்ப மோரியர் படைக்கு முன்னணியாக வந்த வடுகராகவுங்
கொள்வர். இதுவும் உண்மை அன்று.
கோசர் காசுமீரத்தினின்றோ வத்த நாட்டினின்றோ வந்தவர் என்பதற்கு ஒருவகை
வரலாற்றுச் சான்றுமில்லை.
அவர் தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டிற் பல்வேறிடங்களில் வாழ்ந்தவரென்பதே,
பண்டைத் தமிழ் இலக்கியத்தால் தெரியவருகின்றது.
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மாறானதொன்றும் அவரைப்பற்றிய
வண்ணனைகளிற் காணப்படவில்லை.`
"பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவனாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபில்நின் வாய்மொழி கேட்ப
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மகிழ்ந்தினி துறைமதி பெரும"
---(மதுரைக். 771-79)
என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாடப்படுவதால், பாண்டி நாட்டிலும்,
'... ... ... ... ... ... ... செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கட் கோசர் நியம மாயினும்"
---(அகம். 90)
என்பதால் சோழநாட்டிலும்,
"பல்லார்க்கும் ஈயும் பரிசிற் கொடைத்தடக்கை
மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன்-மல்லலந்தார்
செஞ்சொல் செருந்தைதன் தென்னுறந்தை யென்றாளும்
வஞ்சிக் கொடிமருங்குல் வந்து"
(யாப்பருங்கல விருத்தி. ஒழிபியல்)
என்னும் பழம் பாட்டால், உறையூரிலும்,
"கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து"
(சிலப். உரைபெறுகட்டுரை)
என்பதால், கொங்கு நாட்டிலும்,
"கோசர் துளுநாட்டன்ன"
---(அகம். 15)
என்பதால், துளுநாட்டிலும், கோசர் வதிந்திருந்தமை புலனாம்.
கொங்குநாடு பிற்காலத்தில் மூவேந்தரிடையும் பிற சிற்றரசரிடையும் அடிக்கடி
கைமாறி வந்திருப்பினும், முற்காலத்தில்
# சேரர்க்கே உரியதா யிருந்திருத்தல் வேண்டும் என்பது,
"சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்"
என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், தகடூராண்ட அதிகமான்குடி
வரலாற்றாலும், பிறவற்றாலும், அறியப்படும்.
(--------தொடரும்-----)
8 பகுதிகளாக பதிவாய் விரிவடையும் வரலாறு......
@ # தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக