வெள்ளி, 6 அக்டோபர், 2017

தனிக்கொடி திமுக முன்னோடி அல்ல கர்நாடகா திராவிடம் ஒப்பீடு கொடி மாநிலம் மாநிலஉரிமை தமிழ்நாடு

கதிர் நிலவன் .
மாநிலத்திற்கென தனிக்கொடி:
இதிலும் தமிழகம் முன்னோடி!
கே.எஸ்.இராதா கிருஷ்ணன் கூறுவது உண்மையா?
கே.எஸ். இராதா கிருஷ்ணன் இன்றைய "தி இந்து" தமிழ் நாளேட்டில் (7.8.2017)
பின் வருமாறு எழுதியுள்ளார்:
"திராவிட நாடு கேட்டுப் போராடிய திமுக, பிற்காலத்தில் மாநில சுயாட்சியை
வலியுறுத்தியது. அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி
பி.வி.இராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, சென்னைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர்
இடம்பெற்றிருந்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற
நிலையில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக் கொடி வேண்டும் என்று வலியுறுத்தினார்
கருணாநிதி., ...
1970 ஆகஸ்ட் 27-ல் டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், தமிழக
அரசின் கொடி எப்படி இருக்கும் என்று, தான் வடிவமைத்த படத்தைக் கருணாநிதி
வெளியிட்டார். அந்தப் படத்தில், மேல் பக்கம் தேசியக் கொடியும், கீழ்ப்
பகுதியின் வலது பக்கத்தில், தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும்
இடம்பெற்றிருந்தன. இப்பிரச்சினையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில்,
சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அந்தந்த மாநில
முதல்வர்களுக்கு வழங்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார். இந்தக்
கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்.
இப்படி கருணாநிதி-தமிழகம் வழியாக முதலவர்கள் பெற்றதே தேசியக்கொடியேற்றும்
உரிமை. கர்நாடகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது. அது
ஏற்கப்பட்டு மாநிலங்களுக்கு தனிக்கொடி கிடைத்தால், அந்த வரலாற்றிலும்
தமிழகமே முன்னோடியாக இருக்கும்."
நமது கேள்விகள்:
1. அன்றைய சென்னை மாகாணத்தில் உள்ள ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகள்
தங்களை மொழிவழி அடிப்படையில் அடையாளப்படுத்தி தனிமாகாணம் கேட்டுப்
போராடிய போது தமிழ்ப்பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கிளைகள் இல்லாத தி.
மு.க. "திராவிடநாடு" கேட்டுப் போராடியது தவறுதானே!
இதில் தமிழகம் பின்னோடியா? முன்னோடியா?
2. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. மாநில சுயாட்சியை
வலியுறுத்தியது என்கிறீர்களே! (அந்த கோரிக்கை ம.பொ.சி.யிடமிருந்து பெற்ற
இரவல் கோரிக்கை தானே? ) காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு
கோரிக்கைகள் வலு பெற்று வரும் நிலையில் மாநில சுயாட்சிக்காக ஒரு குழு
அமைத்ததையே சாதனையாகப் பேசுவது அவமானம் இல்லையா? இதில் தமிழகம்
முன்னோடியா? பின்னோடியா?
3. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து நாடுகளில் இருப்பதைப் போல
மாநிலங்களுக்கும் தனிக்கொடி கேட்டவர் கருணாநிதி என்கிறீர்களே! 1968இல்
'கர்நாடகா சம்யுக்த ரங்கா' அமைப்பை உருவாக்கிய இராமூர்த்தி என்பவர்
உங்கள் தலைவரைப் போல், உலக நாடுகளைக் காட்டி வாய்ச்சவடால் அடிக்காமல்
மஞ்சள், சிவப்பு நிறத்தில் தனிக்கொடி உருவாக்கி கர்நாடகம் முழுவதும்
பறக்கச் செய்து கன்னட மக்களின் மனதில் குடி கொள்ளச் செய்தாரே, இதில்
கர்நாடகம் தானே முதலில் பேசியது, சாதித்தது. இதில் தமிழகம் முன்னோடியா?
பின்னோடியா?
4. கருணாநிதி வெளியிட்ட தனிக் கொடியில் தேசியக் கொடியும், தமிழகக் கோபுர
முத்திரையும் இடம் பெற்றதாக கூறுகிறீர்களே? கருணாநிதி தமிழக
மூவேந்தர்களைப் பற்றி பெருமை பேசுவார், ஆனால் மூவேந்தர்களின் கயல், புலி,
வில் சின்னங்களை கொடியில் பொறிக்க இடம் தர மாட்டார். இது திராவிடப்
பற்றின் காரணமாக கருணாநிதி செய்த தகிடுதத்த வேலையில்லையா? தேசியக்
கொடியோடு சேர்த்து கோபுரத்தை வெளியிட்டதன் நோக்கம், "தான் என்றும் இந்திய
தேசியத்திற்கு எதிரியில்லை" என்பதைக் காட்டுவதற்குத்தானே?
இந்தியத் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வாங்கித்
தந்ததாக பீற்றுவதில் கூட என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது? இந்திய
ஒடுக்குமுறைக்கு உள்ளான காசுமீரிகளோ, இந்திய தேசியக் கொடியை எரித்து
இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள். இதில் தமிழகம் முன்னோடியா?
பின்னோடியா?
5. நவம்பர் 1ஆம் நாளன்று கர்நாடகம் மொழிவழி மாநிலமாகப் பிரிந்ததை "கன்னட
ராஜ்யோத்சவா" என்று கன்னடர்கள் கொண்டாடுகிறார்களே, அது போல் கருணாநிதி
ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் என்றாவது கொண்டாடியதுண்டா? இதில்
தமிழகம் முன்னோடியா? பின்னோடியா?
6. உண்மையிலேயே கர்நாடகம் தனிக்கொடி உரிமையை போராடிப் பெறுமானால் அது
கர்நாடக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.!
அதன் வழியிலேயே நாமும் அந்த உரிமையை வெல்லலாம் என்றும் கூறலாம்!..
அதை விடுத்து தமிழக உரிமைகளை காவு கொடுத்த கருணாநிதியை உயர்த்தும்
நோக்கில், "தமிழகம் முன்னோடி" என்று கே.எஸ்.இராதா கிருஷ்ணன் வாதாடுவது
தவறானது!
(குறிப்பு: கே.எஸ்.இராதா கிருஷ்ணன் கூறியதன் அடிப்படையில் கற்பனையில்
உருவாக்கிய தமிழ்நாடு கொடி இது.)
5 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக