மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015
17-ஆம் பதிவு
11.12.2015
இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்க எனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி.......
(சிலம்பு-காடுகாண் காதை 27-30)
இந்த நாளில், இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்ய வேண்டும் என ஆணையிடும் அமைப்பாகப் பழந்தமிழ்ப் பேரரசு இருந்தது என்ற இலக்கிய வியப்பைப் புறந்தள்ளி விட முடியாது.
அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான் பகை ...... (சிலம்பு-காடுகாண் காதை-15-22)
(காண்க மாநாகன் இனமணி-25)
நிழலின் அளவு இற்றுப் போகும் இறுதி அளவைக் கணித்து அறிந்து, பிற அரசர்களுக்கு எடுத்துச் சொல்லி உயிர்களை இடப்பெயர்வு செய்து கதிரவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து வான்பகை முடித்தனர் பாண்டிய மரபினர் என்ற பார்வையைப் புறக்கணிக்க இயலாது. அன்று முடியாட்சி. தமிழர்கள் பேரரசர்கள். இன்று தமிழர்கள் நாடற்றவர்கள். ஆயினும் அதே மதிநுட்பம் இனக்கட்டும் மொழி நுட்பமும் மரபறிவும் மூதாதையர் வழிச் சொத்து. அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதலில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கிறது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015.
1. 24.12.2014 முதல் 14.12.2015 வரையில் ஆன 356 நாட்களில் இந்த ஆண்டு சுருண்டு விட்டது. ஓராண்டின் 12 முழுநிலவுகளும் 12 மறைநிலவுகளும் தென் செலவின் திருப்பத்தை உறுதி செய்யும் பிறைநாள் மூன்றும் உள்ளடக்கமாக அமைகிறது.
2. ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான இந்தத் தமிழ் ஆண்டில் மொத்தம் 4 நாட்கள் குறைவுற்று ஆண்டுச் சரிவை உறுதி செய்திருக்கிறது.
3. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு 353-நாட்களில் சுருண்டது. கடந்த ஆண்டை விடவும் 3 நாட்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
4. எவ்வகையிலோ இயற்கை தன்னைத் தகவமைத்துக் கொண்டு 360 நாட்களில் ஆண்டுக் கட்டு அமையுமானால் அது ஒட்டு மொத்த உலகத்தார்க்கும் உவப்பானது.
5. தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான ஐயங்களைத் தீர்த்து வைத்துப் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வியப்பான, மலைப்பான செய்திகளைப் பழந்தமிழ் தந்திருக்கிறது.
6. இனி வரும் காலங்களில் தமிழில் உயராய்வு என்பது தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலின் ஊடாகவே அமையும் என்பது தவிர்க்க இயலாதது.
7. தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடினால் அதனை விளையாட்டு என்று புறந்தள்ளும் இந்த உலகம், தமிழர்கள் தம் மயிரைக் கூட இழக்காமல் முன்னெடுக்கும் ஒரு விளையாடைக் கண்டு நடுக்கம் கொள்ளும் என்றால் அந்த விளையாட்டு தமிழ்ப்புத்தாண்டு பற்றியதே என்பதனை உண்மைத் தமிழர்கள் நன்கு உணர வேண்டும்.
8. இந்த உலகில் தமிழர்கள் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அடிமை நிலையில் இல்லை. ஆனால் தன் இனத்தைத் தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.
9. ஆண்டுச் சரிவு நாட்களில் தமிழர்கள் யாரும் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை. ஆனால் பிழையறிவிப்புச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதைத்தான் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் செய்து கொண்டிருக்கிறது.
10. தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்ற மரபு வழி நம்பிக்கையை உறுதி செய்தும் தமிழ் அறிஞர்களின் கருது கோளை உறுதி செய்தும், அந்த நாளை வானவியல் அடிப்படையில் செதுக்கி எடுக்கும் முயற்சியில் ஒரு நாளை அடையாளம் கண்டு அறிவித்து வருகிறது தக்கார் அவையம்.
11. சமண, பவுத்த, ஆரிய வைதிக நம்பிக்கைகளை மறுதலித்தும், ஆங்கில ஆண்டு, இசுலாமிய ஆண்டு போன்றவற்றைத் தள்ளி வைத்தும் தமிழர்களுக்கே உரிய புத்தாண்டு நாளை இன வரைவின் அடிப்படையிலும், தமிழ்த் தேசியக் கருத்தியலின் அடிப்படையிலும் செதுக்கி எடுக்கும் முயற்சியில் முன்னேறிவருகிறது பணியா மரபு.
12. அடுத்து வரும் 2016-ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய உண்மைகளை உடைத்துப் பேசும் ஆற்றலைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
13. 15.12.2015-ல் தொடங்க விருக்கும் அடுத்த தமிழ்ப்புத்தாண்டு பற்றிய ஒரு மாற்றுப் பார்வையில் பழந்தமிழர் அறிவை மீட்கும் முயற்சி என்ற புரிதலில் தமிழர்கள் உரிய பங்களிப்புச் செய்திட வேண்டும்.
14. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கலிடுவது, மனையுறை அணங்கைப் பரவும் நிகழ்வாகவும், எதிர்காலத்தில் திருமகளை வரவேற்கும் நிகழ்வுக்கு ஒத்திகையாகவும் அமைந்திடத் தக்கார் அவையம் வாழ்த்துகிறது.
15. இனிய தமிழ்ப்புத்தாண்டு! பொங்கல் திருநாள்! தென்செலவின் திருப்பம்! தைத் திருநாள் அனைத்தும் தமிழ்த் தேசிய அரசில் தைத்து நிமிர்ந்திடத் தவம் இயற்றவேண்டிய காலவேளை இதுவே.
....---000OOO000---...
இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015: இன் வெளியீடு
நம் முன்னோர்கள் அதாவது தமிழ் மரபு வழியிலான புத்தாண்டு இன்று பிறந்து விட்டது. அதாவது 15.12.2015.
அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்து.
இது ஒரு இயற்கை புத்தாண்டு. அதாவது இன்று சூரியன் தன் தென்செல்வை முடித்து, தெற்கே தைக்கப்பட்டு தன் வடசெலவை ஆரம்பிக்கிறது. சூரியன் தெற்கே தைக்கப்படுவதனால்தான் அது 'தை' எனப் பெயர் பெற்றது. தமிழர்கள் தை புத்தாண்டை கொண்டாடலாம். இது பஞ்சாங்கம் சொல்லும் தை அல்ல. இயற்கை நமக்கு உணர்த்தும் தை.
அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்து மறுபடியும்.
https://www.yarl.com/forum3/topic/167038-17-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/#comment-1151642
18 வடசெலவு (உத்தராயணம்) திருப்பமும் தைப்புத்தாண்டும்
Started by jdlivi, December 23, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக