|
25/3/14
| |||
|
in அ.தி.மு.க, இராணுவம், ஈழம், காங்கிரஸ், தி.மு.க, நாடுகள், பா.ஜ.க, புதிய ஜனநாயகம், போராட்டங்கள், போலீசு, மாணவர் - இளைஞர் by வினவு, May 16, 2013
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
முள்ளிவாய்க்காலுடன் “அமைதி நிலை” திரும்பிவிட்டது என்பது இராஜபக்சே அரசின் கூற்று மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் நிலையும் அதுதான். தமக்கெதிரான இனப்படுகொலைக் குற்றங்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் நீதி பெறவில்லை; தமிழர் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் திணிக்கப்படுகின்றன, தாக்குதல்களும் ஆட்கடத்தல்களும் தொடர்கின்றன என்பன போன்ற உண்மைகளை மறுக்கவியலாத போதிலும், “போர் முடிந்து அமைதி திரும்பி விட்டது” என்பதே ஐ.நா. வின் நிலை. வக்கிரமான இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் அகதிகளாக தஞ்சம் கோரிச் செல்லும் ஈழத்தமிழ் மக்களை கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் திருப்பி அனுப்புகின்றன.
முள்ளிவாய்க்காலுடன் ஈழத்தமிழ் அகதிகள் கொண்டிருந்த நம்பிக்கையும் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம். போர் முடிந்து விட்டதென்று ராஜபக்சே சொல்வது இருக்கட்டும், “அதான் எல்லாம் முடிந்து விட்டதே, எப்போது கிளம்புகிறீர்கள்?” என்று தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அதிகாரிகளே கேட்பதாகச் சொல்கிறார்கள் தமிழகத்தின் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள். எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் குடிகொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தாய்நாட்டிற்குத் திரும்பத்தான் விருப்பம். ஆனால், வீடு இருக்கிறதா, காணி இருக்கிறதா, வாழ முடியுமா என்று நேரில் சென்று பார்த்து விட்டுப் பிறகு முடிவு செயலாம் என்பதைக்கூட அரசு அனுமதிப்பதில்லை. போனால் போனதுதான். அங்கே வாழமுடியாது என்று முடிவு செய்து திரும்பி வந்தால், இங்கே அகதி முகாமிற்குள் மறுபடியும் நுழைய முடியாது. புதிதாக பதிவு செய்து கொள்ளவும் முடியாது. ஏனென்றால், இலங்கையில் “அமைதி” திரும்பி விட்டது!
இந்தச் சூழ்நிலை தமது எதிர்காலம் குறித்து உடனே முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உருவாக்கியிருக்கிறது. இதனால்தான் தமிழகத்தின் அகதி முகாம்களிலிருந்து பலர் ஆஸ்திரேலியாவுக்குப் படகுகளில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500- க்கும் மேற்பட்டவர்கள் இப்படி நடுக்கடலில் தத்தளித்து இறந்திருக்கின்றனர். பல இலட்சம் பணத்தைக் கடத்தல்காரர்களுக்குக் கொடுத்து, சுமார் 6,000 கி.மீ. தூரத்தைச் சின்னஞ்சிறு படகில் கடப்பது என்று முடிவு செய்து பெண்கள் கைக்குழந்தைகளுடன் புறப்படுவதென்பது, யாரும் சாதாரணமான சூழலில் எடுக்கக்கூடிய முடிவல்ல. மரணத்தைத் துச்சமாகக் கருதி எடுக்கப்படும் இந்த முடிவை நோக்கி அம்மக்களைத் தள்ளிய வாழ்க்கை எத்தனை கொடியதாக இருக்க வேண்டும்?
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சசிகரன் என்பவர், கியூ பிரிவு போலீசின் துன்புறுத்தல் தாங்காமல், ஏப்ரல் 28 அன்று நஞ்சருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சந்திரகுமார் என்ற தனது கணவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று, இரண்டு குழந்தைகளுடன் முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயநந்தினி என்ற ஈழ அகதிப் பெண். அதன் பிறகும் பார்க்க அனுமதிக்காதது மட்டுமின்றி, தற்கொலை முயற்சி வழக்கில் குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு மனம் நொந்த சந்திரகுமார் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 40 ஈழத்தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சென்ற ஆண்டு செந்தூரன் என்ற ஈழ அகதி 27 நாட்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இவையெல்லாம் இனப்படுகொலையிலிருந்து தப்புவதற்காகத் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் அகதிகளின் துயரக் குரல்கள். இலங்கையின் முள்வேலி முகாம்களாவது உலகத்துக்கு அம்பலமாகியிருக்கின்றன. தமிழகத்தின் அகதி முகாம்களின் ஈழத் தமிழ் மக்கள் படும் துயரம் யாருக்கும் தெரிவதில்லை.
தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சிறப்பு முகாம் அகதிகளை, ஒரு அரசாணை மூலம் ஜெயலலிதாவே விடுவித்துவிட முடியும். ஆனால் போர்க்குற்ற விசாரணை, பொருளாதாரத் தடை, பொதுவாக்கெடுப்பு என்று சவடால் தீர்மானங்கள் கொண்டு வரும் ஜெயலலிதா, அதை ஏன் செய்ய மறுக்கிறார்? அவருடைய துதிபாடிகளான தா.பா., வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ஏன் இதைக் கேட்க மறுக்கிறார்கள்?
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் சுமார் 70,000 ஈழ அகதிகள் கைதிகளைப் போலக் கண்காணிக்கப்படுவது ஏன்? சாவுக்குப் போவதற்கு கூட ஆர்.டி.ஓ. அனுமதி பெற வேண்டும் என்கிற அளவுக்குக் கைதிகளாக நடத்தப்படுவது ஏன்? இன்று ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த விவரங்களே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி வீட்டுப் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை. இவை போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் வழமையான அத்துமீறல் காரணமாக நடைபெறும் அநீதிகளல்ல.
இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் மேற்கொண்டு வரும் சதித்தனமான கொள்கையின் ஒரு அங்கம்தான், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் துன்பம். இலங்கையின் முள்ளிவாய்க்காலும் முள்வேலி முகாம்களும் மட்டுமல்ல; இங்குள்ள அகதி முகாம்களும், சிறப்பு முகாம்களும் கூட இதற்கான சான்றுகளே.
1983 ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைதான் பெருந்திரளான ஈழத்தமிழ் மக்களை அகதிகளாக தமிழகம் நோக்கித் தள்ளியது. அன்று டில்லியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி, ஜெயவர்த்தனே அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டார். அரசுக் கணக்கின் படியே அன்று தமிழகத்தினுள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 1.35 இலட்சம்.
ஜூலை 1987 – இல் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அகதிகள் பலர் நம்பிக்கையுடன் இலங்கை திரும்பினர். ஆனால், அமைதிப்படை என்று பெயர் சூட்டிக் கொண்ட இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் புலிகளுக்கு எதிராகத் தொடுத்த போரை ஒட்டி, தமிழகத்தில் இருந்த ஈழ அகதிகள் மீதான இந்திய அரசின் அணுகுமுறை கடுமையாகத் தொடங்கியது.
பிறகு 1989-இல் இந்திய “அமைதிப்படை” இலங்கையிலிருந்து வெளியேறியது. ஜூன் 1990 – இலேயே இரண்டாவது ஈழப்போர் தொடங்கி விட்டது. வடக்குப் பகுதிக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதுடன், வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. ஆறே மாதங்களில் 1.5 இலட்சம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் அனைத்தையும் இழந்த ஏதிலிகள். இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.
மே 1991 – இல் ராஜீவ் கொலை செய்யப்பட்டார். கொலைப் பழியை தி.மு.க. வின் மீது போட்டு, ஜெ-காங் கூட்டணி செய்த பொப்பிரச்சாரத்தின் விளைவாக தி.மு.க. தோற்கடிக்கப்பட்டது மட்டுமின்றி, புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் எதிரான பொதுக்கருத்து மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்த நாட்களில் ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் தாக்குதலும் விமானக் குண்டு வீச்சும் மிகவும் கடுமையாக இருந்த சூழலிலும், தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் அனைவரையும் உடனே வெளியேற்ற வேண்டுமென்று ஜெயலலிதா, காங்கிரசு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் வெறித்தனமான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.
ஜெ. ஆட்சிக்கு வந்தவுடன், செப்டம்பர் 91-இல் “ஆபரேசன் ஃபிளமிங்கோ” என்ற நடவடிக்கை மூலம், நாகை முதல் குமரி வரை 300 கி.மீ கடற்கரையோரம் முழுவதும் போலீசு சோதனை – கைதுகள் நடந்தன. புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடற்கரையோரம் இருந்த அகதி முகாம்கள் தமிழகத்தின் உட்பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.
குறிப்பான எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல், புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத்தமிழர்கள் யாரை வேண்டுமானாலும் கைதிகளாக அடைத்து வைப்பதற்கு ஏற்ப சிறப்பு முகாம்கள் எனப்படும் அறிவிக்கப்படாத சிறைகள் ஜெ. அரசால் உருவாக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2,060 ஈழத்தமிழர்கள் இந்தச் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகாமை போலீசு நிலையத்தில் ஆஜராகி, தமது முகவரியைப் பதிய வேண்டும் என்றும், இவ்வாறு செய்யத் தவறுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் 25.9.92 அன்று ஜெ. அரசு உத்தரவிட்டது. இவ்வாறு போலீசு நிலையத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறாதவர்கள் யாரும், வேறு நாடுகளுக்கு செல்லவும் இயலாது என்றும் இந்த உத்தரவு கூறியது.
மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளுக்கு ஈழத்தமிழ் அகதிகளுக்கு முந்தைய தி.மு.க. அரசு அளித்திருந்த இட ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஈழ அகதிகளின் பிள்ளைகள் 12-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று ஜெ. அரசு ஆணை (3.9.91) பிறப்பித்தது. அகதி முகாம்களுக்கான உதவிகள் நிறுத்தப்பட்டன. அவை பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்டன.
அகதி முகாமில் உள்ள குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துணவு வழங்கி வந்த தன்னார்வ நிறுவனங்களும், இலவச மருத்துவ சேவை, இலவச பாடப் புத்தகங்கள், கல்விப் பயிற்சி, சுயதொழில்களில் பயிற்றுவித்தல் போன்றவற்றை செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அகதி முகாம்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை 2.5.93 அன்று ஜெ. அரசு பிறப்பித்தது. “இவையெல்லாம் அகதிகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் நோக்கத்திலான நடவடிக்கைகள்” என்று மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன.
முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. முகாம்களில் உள்ளவர்களை வேறு முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க வேண்டுமென்றால், தாசில்தார் மற்றும் கியூ பிரிவு போலீசின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐ.நா. அகதிகள் கமிசனின் மதிப்பீட்டின்படி ஜனவரி 1992-க்கும் மார்ச் 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெயா அரசு 54,188 அகதிகளைத் தனிக் கப்பல்களிலும் விமானங்களிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியது. அகதிகளைத் திருப்பி அனுப்பும் இந்த நடவடிக்கைக்கு உதவுமாறு ஐ.நா. வை இந்திய அரசு கோரியபோது, தீவிரமாகப் போர் நடக்கும் சூழலில் அகதிகளை வெளியேற்றும் இந்த முறைகேடான நடவடிக்கையில் பங்குபெற ஐ.நா. அகதிகள் கமிசன் மறுத்து விட்டது. இப்படி தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அகதிகள் யாரும் வீடு திரும்பவில்லை. அவர்கள் மன்னார், வவுனியா, திரிகோணமலை போன்ற இடங்களில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அன்று பொருளாதாரத் தடையால் தவித்துக்கொண்டிருந்த ஈழத்துக்கு உணவு, எரிபொருள் ஆகியவை செல்லவிடாமல் ஜெயா அரசு போலீசையும் கடலோரக் காவல் படையையும் முடுக்கி விட்டது. ஈழப் போராட்ட ஆதரவு, ஈழ அகதிகள் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ம.க.இ.க. உள்ளிட்ட பல அமைப்புகள் மீது தேசத்துரோகம், தடா, தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்குகள் பாய்ந்தன. தீவிர புலி ஆதரவாளர்களான தி.க., நெடுமாறன் மற்றும் பிற குழுக்கள் அன்று ஜெயலலிதாவை எதிர்க்கத் துப்பில்லாமல் பம்மினர் அல்லது சந்தர்ப்பவாதமாக மவுனம் சாதித்தனர். ராஜீவ் கொலைப்பழி சுமத்தப்பட்ட தி.மு.க.வோ அச்சத்தில் உறைந்திருந்தது.
1991-96 காலத்திலான பாசிச ஜெயாவின் ஆட்சிதான் இந்தக் கணம் வரை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், உரிமை பறிப்புகள் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதுதான் ஈழ அகதிகள் அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகவே மாற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது.
1996 – இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஈழ அகதிகளுக்கு மறுக்கப்பட்ட சில சலுகைகளை வழங்கிய போதிலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட போலீசு அடக்குமுறைகள், கண்காணிப்புகள் எதையும் அகற்றவில்லை. குறைக்கவுமில்லை. பார்ப்பன பாசிச அரசியலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன கருணாநிதி, “தான் ஈழ ஆதரவாளர் அல்ல” என்று நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரிகா தொடங்கிய மூன்றாவது ஈழப்போரின் போது, கடற்கரையோரம் மிதவைச் சோதனைச் சாவடிகள் அமைத்து அகதிகள் தடுக்கப்பட்டனர். அகதிகளின் மீது அனுதாபம் கொண்டு அவர்களை அழைத்து வரும் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் இதையெல்லாம் தாண்டி 1995-2002 காலத்தில் சுமார் 25,000 அகதிகள் தமிழகம் வந்தனர்.
2002 – இல் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், ஓரளவு அகதிகள் திரும்பிச் சென்றனர். ஆனால் 2006 நான்காவது போரின் போது மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதும், அகதிகள் வெளியேற்றத்தை இலங்கை இராணுவமே தடுத்தது. புலிகளுக்கான கடல்வழி ஆயுத வரத்தை தடுக்கத் துணை நின்ற இந்திய கடற்படையும் அகதிகளை இரக்கமேயில்லாமல் தடுத்தது.
1983 – இல் தொடங்கி இன்று வரை ஈழப் பிரச்சினையைத் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு ஏற்பத்தான் இந்திய அரசு பயன்படுத்தி வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்றும் கூறலாம்.
இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழகத்திலுள்ள ஈழ அகதி முகாம்கள் மீதான போலீசு கண்காணிப்பு நீங்கவில்லை. புலிகள் மீதான தடையை தொடர்வதற்காகவே சிறப்பு அகதி முகாம்கள் பராமரிக்கப்படுகின்றன. ஈழம் தொடர்பான போராட்டத்தைத் தடுப்பது மட்டுமின்றி, தேவைப்பட்டால் மீண்டும் எழுப்புவதாக இருந்தாலும், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு கவனமாக உள்ளது. இதற்காகவே மத்திய, மாநில உளவுத்துறைகள் தொடர்ந்து வேலை செய்கின்றன.
தாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே முயன்று கொண்டிருப்பதாக இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் தொடர்ந்து கூறுவது ஒரு பம்மாத்து. இலங்கையின் மீதான தனது மேலாதிக்கத்தைப் பேணுவதற்குத் தோதான, தன் கைக்கு அடங்கிய கருவியாக ஈழத்தமிழர் பிரச்சினையைப் பராமரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கம். அகதிகளின் பிரச்சினை தீர்க்கப்படாமல் பராமரிக்கப்படுவதற்கான காரணமும் இதுதான்.
அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பது, விரும்பியபடியெல்லாம் அகதிகள் மீது அடக்குமுறை செலுத்துவதற்கான வாய்ப்பை இந்திய அரசுக்கு வழங்கி இருக்கிறது. ஈழ அகதிகள் தமது உரிமைகள் என்று எதையும் சட்டபூர்வமாக கோர இயலாது என்பது மட்டுமல்ல, இந்தியாவில் அகதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக ஐ.நா.வும் தலையிட இயலாது.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு, அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட இருந்த ஈழ அகதிகள், பிரிட்டிஷ் அரசின் உத்தரவுக்கு அந்நாட்டின் நீதிமன்றத்திலேயே தடை பெற்றனர். இப்படி ஒரு உரிமை இந்தியாவில் அகதிகளுக்கு கிடையாது. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி ஈழத்தமிழ் அகதிகள் பெற்றிருக்கும் எந்த ஜனநாயக உரிமையும் இங்குள்ள அகதிகளுக்கு கிடையாது.
அகதி என்பதை ஒரு வழக்குச் சொல்லாக நாம் பயன்படுத்திய போதிலும், சட்டப்படி இங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்லர். அவர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவின் உள்ளே நுழைந்திருக்கும் “சட்டவிரோத குடியேறிகள்” என்பதுதான் இந்திய அரசு அவர்களுக்கு வழங்கியிருக்கும் தகுதி. அகதி முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு மானிய விலையில் சில சலுகைகள் அரசால் அளிக்கப்பட்டாலும் சட்டப்படி அவர்களது நிலையென்னவோ இதுதான்.
தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் இங்கிருக்கும் இலங்கை துணைத் தூதரகத்துக்கு சென்று தமது பிள்ளைக்கு இலங்கை குடியுரிமை வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்திய அதிகாரிகள் வழங்கும் திருமணச்சான்றை பெற்றுத் தரவேண்டும். இதற்கெல்லாம் நடையாக நடக்க முடியாமல், பலர் தம் பிள்ளைகளுக்கு இலங்கைக் குடியுரிமை சான்றிதழ் பெறுவதில்லை.
ஒருவேளை கணவன், மனைவி – இருவரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராக இருந்தாலும், இத்தம்பதிகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு இங்கே குடியுரிமை பெற இயலாது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் “சட்டவிரோதக் குடியேறி”யாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைக்குக் குடியுரிமை கிடையாது என்று, 2003 – இல் வாஜ்பாயி அரசு (தி.மு.க., ம.தி.மு.க., நெடுமாறன் உள்ளிட்டோரின் ஆதரவு பெற்ற அதே வாஜ்பாயி அரசுதான்) சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இப்படிப் பிறந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற இயலாமல், நாடற்றவர்கள் என்ற நிலையில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஈழ அகதிகளின் பிள்ளைகள் எத்தனை உயர் படிப்பு படித்திருந்தாலும், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்பதால், அவர்கள் யாரும் அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார் துறையிலும் வேலைக்கு சேர முடியாது. அவ்வாறு சேர்ந்து விட்டால் கியூ பிரிவு போலீசு அதனைக் கண்டு பிடித்து அவர்களை வேலையிலிருந்து அகற்ற ஏற்பாடு செய்து விடும். இந்தச் சூழ்நிலை காரணமாக, முதுகலைப் பட்டம் வாங்கியவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் கட்டுமானப் பணிகள், பெயின்டிங் முதலான தினக்கூலிப் பணிகளுக்கு மட்டுமே செல்ல முடிகிறது.
2009 முள்ளிவாய்க்கால் முடிவு ஏற்படும் வரை, மீண்டும் தாய்நாடு சென்று வாழ்க்கையை மீளமைத்துக் கொள்வோம் என்ற ஒரு நம்பிக்கை ஈழ அகதிகள் பலருக்கு இருந்தது. இன்று அது இல்லை. இலங்கைக்கும் போக முடியாது, இந்தியாவிலும் குடியுரிமை கிடைக்காது என்ற சூழ்நிலையில்தான் பல அகதிகள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு உயிரைப் பணயம் வைத்துப் புறப்படுகிறார்கள். இவர்களை மடக்கிப் பிடித்து இலங்கைக்கோ, சிறைக்கோ, சிறப்பு முகாமுக்கோ அனுப்புகிறது தமிழகத்தின் கியூ பிரிவு உளவுத்துறை போலீசு.
இந்த 30 ஆண்டுக் காலத்தில் பிரிட்டன், கனடா, பிரான்சு போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களும் அவர்களது வாரிசுகளும் குறிப்பிட்ட காலத்துக்கான அகதி வாழ்க்கைக்குப் பின்னர், அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ற அங்கீகாரத்தை அங்கே பெற்றிருக்கிறார்கள்.
இங்கேயும் ஈழத்தமிழ் அகதிகளுடன் அவர்களது பிள்ளைகளான ஒரு இளம் தலைமுறை இந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இவர்கள் இலங்கை மண்ணைக் கூட மிதித்ததில்லை. ஆனால் தொப்பூள் கொடி உறவு கொண்டாடும் தமிழகத்தில் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இங்கேயே வாழ்வதா, இலங்கை செல்வதா என்பது அவர்களது தெரிவு. ஆனால், ஈழத்திலிருந்து வந்த அகதிகள் மற்றும் அவர்கள் வாரிசுகள் அனைவருக்கும் இந்திய அரசு குடியுரிமை தரவேண்டும் என்பது மட்டுமல்ல, குடியுரிமை வழங்குமாறு இலங்கையையும் இந்திய அரசு நிர்ப்பந்திக்கச் செய்யவேண்டும்.
சர்வதேச விதிகள் மற்றும் நியதிகளின்படி, இவ்வாறு குடியுரிமை தரப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தை தனது உளவுத்துறைகள் மூலம் சீர்குலைத்தது, அமைதிப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்க்குற்றம் நிகழ்த்தியது, இன அழிப்புப் போரில் சிங்கள அரசுக்குத் துணை நின்று வழிகாட்டியது – போன்ற குற்றங்களை இந்திய அரசு செய்திருக்கிறது. இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, தன்னால் அழிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கு இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இனக்கொலைக் குற்றத்தில் கூட்டாளியாக இருந்த குற்றத்தை மறைப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும்தான் ஈழத்தில் வீடு கட்டித் தருகிறோம்,சாலை போட்டுத் தருகிறோம் என்று இந்திய அரசு ஏமாற்றி வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமையை மறுத்து வருகிறது.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கக் கூடாது என்பதுதான் ஜெயலலிதா அறிவித்திருக்கும் நிலைப்பாடு. இந்திய அரசின் நிலைப்பாடும் இதுதான். யார் இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்களோ அவர்கள் மட்டுமே, “சிறப்பு முகாம்களைக் கலை! அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பை நீக்கு! ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கு!” என்ற கோரிக்கைகளில் உறுதியாக நின்று போராட இயலும். அல்லது அவ்வாறு உறுதியாக நின்று போராடுபவர்கள், ஈழத்தாயின் உண்மை முகத்தை மட்டுமின்றி, அவருடைய ஐந்தாம்படைத் தலைவர்களின் உண்மை முகத்தையும் அடையாளம் காண முடியும்.
– சூரியன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக