Tuesday, October 25, 2016
பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 சாதித்தது என்ன?
கடந்த அக்தோபர் 20 – 23 வரையில் கெடாவிலுள்ள எயிம்சு பல்கலைகழகத்தில் ‘பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016’ நடந்து முடிந்தது. மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ பா.கமலநாதன் அவர்கள் முன்னின்று நடத்திய இந்த மாநாடு தொடர்பான சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு:-
- மலேசியத் தமிழாசிரியர்கள் 200 பேர் பேராளர்களாகக் கலந்துகொண்டனர்.
- வெளிநாட்டுப் பேராளர்கள் 50 பேர் கலந்துகொண்டனர்.
- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், மொரிசியசு, பிரெஞ்சு, அசுத்திரேலியா,அமெரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
- மொத்தம் 24 தமிழாசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் படைத்தனர்.
- பொது அமர்வில் உள்நாட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த 16 பேர் கட்டுரைகள் படைத்தனர்.
- கல்வி அமைச்சின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ்க்கல்வி அதிகாரிகள் 50 பேர் மாநாட்டில் பங்கேற்றனர்.
- எயிம்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்களும் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆசிரியர்களும் தன்னார்வலர்களாக வந்திருந்து மாநாட்டுப் பணிகளுக்கு உதவினர்.
இந்தப் பன்னாட்டு மாநாடு சில வகையில் முத்திரைப் பதித்து சிறப்பான ஒரு மாநாடாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட்டது. அதற்கான கரணியங்களைப் பார்ப்போம்.
1.மலேசிய வரலாற்றிலேயே மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவோடும் நிதி உதவியோடும் முதன்முறையாகத் தமிழ்க்கல்வியை முன்படுத்தி தமிழாசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாநாடு இது.
2.ஆசிரியர்கள் மட்டுமே கூடிக் களைந்துவிட்டுப் போகாமல் உலக நாடுகளில் தமிழ்க்கல்வி எவ்வாறு இருக்கின்றது; எப்படி கற்பிக்கப்படுகிறது என்றெல்லாம் மலேசியத் தமிழாசிரியர்கள் அறியவேண்டும் என்பதற்காகப் பன்னாடுகளைச் சேர்ந்த தமிழ்க் கல்வியாளர்களையும், முனைவர்கள், பேராசிரியர்கள்,அறிஞர்களை அழைத்து அறிவார்ந்த பகிர்வுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த மாநாடு இது.
3.தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தேசியப்பள்ளி தமிழாசிரியர்கள், இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரைஞர்கள் எனத் தமிழைக் கற்பிக்கும் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்து ஒரே குடையின் கீழ் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் பற்றி விவாதித்த மாநாடு இது.
4.உலக வெல்விளிகளுக்கு (சவால்) இடையில் 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வியை வளர்த்தெடுக்கும் வழிமுறைகளையும், கற்றல் கற்பித்தல் அணுகு முறைகளையும் ஆராய்து தெளிவு பெறுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு இது.
5.மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் முதன் முறையாகக் கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரு செயற்குழுவாக இணைந்து சரியாகத் திட்டமிட்டு நேர்த்தியான முறையில் கல்விசார் நெறிமுறைகளோடு நடத்திய மாநாடு இது.
தொடர்ந்து இந்த மாநாட்டின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்பான சில இடங்களைப் பார்ப்போம்:-
1 இந்த மாநாட்டுக்குரிய இடமாக எயிம்சு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டது சாலப் பொருத்தமானது. ஏனெனில், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் சொந்தமாகப் பல்கலைக்கழகம் கட்டியுள்ள ஒரே நாடு மலேசியா தான். அந்தச் சிறப்பினை ம.இ.கா கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளாகமும் மாநாட்டிற்குப் புதுமையான பொழிவைக் கொடுத்தது. மேலும், கெடா என்னும் கடாரம் தமிழ் மன்னனாகிய இராசேந்திர சோழன் தடம் பதித்து ஆட்சி நடத்தி தமிழரின் பெருமையைப் பறைசாற்றிய பூமி; 11ஆம் நூற்றாண்டின் தமிழன் ஆண்ட வரலாற்று மண். அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்ணில் இந்த 200 ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்த வேண்டும் என்பது நமது துணைக் கல்வியமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்களின் ஆவலும் இதற்கு மற்றொரு கரணியம். மாநாட்டின் இறுதி நாளன்று வெளிநாட்டுப் பேராளர்கள் அனைவரும் அங்குள்ள பூசாங்கு பள்ளத்தாக்கு வரலாற்றுத் தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
2. மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 70% ஆசிரியர்கள் 25 - 40 வயதுக்கு உட்பட்ட இளம் ஆசிரியர்கள். கட்டுரைப் படைப்பாளர்களில் 60% இளம் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி எனும் மாநாட்டின் கருப்பொருளுக்கு ஏற்ற வகையில் இந்த மாநாட்டில் இளம் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது பாராட்டுக்குரிய ஒன்று,
3. அதே போல் மாநாட்டு ஆய்வடங்கலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டின் கருப்பொருளுக்கு ஒட்டியதாகவே இருக்கின்றன. படைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் ஆய்வடங்களில் வன்படியாக (Hardcopy) வழங்கப்பட்ட வேளையில் 21ஆம் நூற்றாண்டுத் தரத்திற்கு மென்படியாகத் (Softcopy) ‘தமிழ்க்கல்வி.மலேசியா’(tamilkalvi.my) இணையத் தளத்திலும் வழங்கப்பட்டிருப்பது மிகச் சிறந்த பணி.
4. மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு அறிஞர்கள் அவர்களுடைய நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகச் சிறந்து இருப்பதாகப் புகழாரம் சூட்டினர். குறிப்பாக, மலேசியாவில் பயன்படுத்தப்படும் கலைத்திட்டம்,பாடநூல்கள், மதிப்பீட்டு முறைகள், மெய்நிகர் கற்றல் முதலானவை அவர்களைப் பெரிதும் ஈர்த்தன.
5. மலேசியாவில் சுலுத்தான் இதிரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) தமிழ் இலக்கியக் கலைத்திட்டம் செருமானிய நாட்டின் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறது. இதன்வழி, மலேசியத் தமிழ்க்கல்வி உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலைக்கு நாம் முன்னேறி இருக்கிறோம் என்று துணைக் கல்வியமைச்சர் தமதுரையில் குறிப்பிட்டபோது கல்வி அமைச்சர் உள்பட மாநாட்டு அரங்கமே கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
6. மாநாட்டின் அமர்வுகள் அனைத்தும் திட்டமிட்டது போல மிக மிக நேர்த்தியாக நடைபெற்றது அனைவரையும் மகிழச் செய்தது. மாநாட்டு நிரலிகையில் உள்ளபடி குறித்த நேரத்தில் ஒவ்வொரு அமர்வும் சரியாக நடைபெற்றது. அமர்வுகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட நேரத்தில் துல்லியமாக முடிக்கப்பட்டன. அமர்வின் நெறியாளர்கள் கட்டுரை படைக்கும் நேரத்தை மிகவும் கட்டுப்பாடாக மேலாண்மை செய்தனர்.
7. தமிழர்களின் உயர்ந்த பண்பாடு விருந்தினரை அன்போடு ஓம்புதல் ஆகும். இந்தப் பண்பாட்டை ஏற்பாட்டுக் குழுவினர் மிக மிகச் சிறப்பாகவே பின்பற்றினார்கள். நல்ல தரமான உணவு வகைகள் அருமையான சூழலில் அன்பாகப் பரிமாறப்பட்டன.
8. மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்ச்சி மிகவும் கட்டுக்கோப்பாகவும் மிக மிக நேர்த்தியாகவும் நடந்தது இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பு எனலாம். தொடக்க விழா அங்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மிக அழகாக நிகழ்ந்தன. இப்படி நேர்த்தியாக நமது நிகழ்ச்சிகள் நடப்பது மிக அரிதுதான். ஆனால், ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நீடித்த தொடக்க விழா எவ்வளவு சிறப்பாகவும் பெருமாண்டமாகவும் இருந்தது என்பதை நேரில் கண்டவர்கள் அறிவார்கள்.
9. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டு தொடக்கவிழா மேடையில் பணத்தொகை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்க்கல்வியைக் கருவாக்கி உருவாக்கப்பட்ட காணொலிகள் ஒலிபரப்பப்பட்ட பொழுது நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளைக் காண முடிந்தது.
10. தமிழ்க்கல்வி.மலேசியா (tamilkalvi.my) இணையத்தளம் இந்த மாநாட்டில் அறிமுகமானது தமிழசிரியர்களுக்கு ஒரு வரமே எனலாம். தமிழ் ஆசிரியர்களிடையே அறிவார்ந்த கருத்தாடல்களுக்கும் பகிர்வுகளுக்கும் இத்தளம் பயன்படும். ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளர்த்தெடுக்கும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்வழி தமிழ்க்கல்வித் துறையில் மெய்நிகர் கற்றல் சூழல் உருவாகலாம்; இதனால் தமிழ்க்கல்வியில் மேம்பாடுகள் நடக்கலாம்.
11. இந்த மாநாட்டின் இறுதியில் முத்தான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை பத்தும் நடைமுறைக்கு ஏற்ற தீர்மானங்களாகவும் தமிழ்க்கல்விக்குச் சில அடிப்படையான வளர்ச்சிகளை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்தன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அமுல்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக