திங்கள், 10 ஜூலை, 2017

பாரி பற்றிய விகடன் தொடர் ஏராளமான வரலாற்று தகவல்கள்

வீரயுக நாயகன் வேள்பாரி - 35

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
பாண்டரங்கத்தின் பணி முழுமையாக முடிந்தது. மேற்கூரையில் திசைவேழர் சொன்ன குறிப்பின் அடிப்படையிலான ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுவிட்டது. மரச்சாரங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டுப் பார்க்கும்போது முன்பைவிட மிகத் துல்லியமான அளவுகளில் விண்மீன் கூட்டங்கள் ஒளிவீசின. வெள்ளியின் இருப்பிடம் மட்டுமல்ல, வரையப்பட்ட வானத்தில் கோள்கள் அனைத்தின் இருப்பிடங்களும் பொருத்தமாக இருந்தன. அந்துவன், பாண்டரங்கத்தின் எல்லா திசைகளிலும் நின்று மேற்கூரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நாம் கவனமாக வேலைசெய்யும்போதுதான், வேலை சிறப்பாக அமையும். ஆனால், நம்மையும் மீறி அதி சிறந்த இடத்தை அடைவது எப்போதாவதுதான் நிகழும். அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது’.

மனமும் கண்களும் சலிப்படையும்வரை பார்த்தான். `பின் கழுத்துப் பிடித்துக்கொள்ளும்’ என மற்றவர்கள் கூறியபோதும், அவன் அண்ணாந்து பார்த்து மகிழ்வதை நிறுத்தவில்லை. ஊன்றுகோலைத் தூக்கி வீசி ஆசான் ஏற்படுத்திய அவமானத்தைத் துடைக்க மனம் மேலெழுந்து கொண்டிருந்தது.

“ஆசானை அழைத்து வாருங்கள்” என்றான்.
பணியாள்கள் விரைந்தனர். தான் செல்லாமல் பணியாள்களை அனுப்பியதிலிருந்தே ஒரு செய்தியை அவன் சொல்ல முயன்றான்.

அறிவுச்செருக்கின் செயல்பாடு இதுவென ஆசானுக்குத் தெரியும். மாணவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துவிட்டால், விளைவு அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதன் பிறகு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது மாறும். இதை மாணவர்கள் அறிவர். எனவே, அறிவுச்செருக்கை வெளிக்காட்டி அவரை மகிழ்விக்கும் ஆபத்தைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், அந்துவன் துணிந்தான். மேற்கூரையில் பரந்துவிரிந்து கிடந்த வான்வெளி, அவனை ‘துணிந்து நில்’ எனச் சொல்லியது. ‘காலம் கைகூடும் கனவு இது!’ என அவனது மனம் துணிந்தது.
இந்தக் காலம் முழுவதும் தன்னோடு இருந்த தேவாங்குகளுக்கு நன்றி சொல்லும்வகையில் அந்தக் கூண்டுக்கு அருகில் வந்து அவற்றுக்குப் பிடித்த பல்லி முட்டையை உள்ளே உருட்டினான். வழக்கம்போல் சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு இரண்டும் அந்த முட்டையை நோக்கி வந்தன. ஒன்று, அதை எடுத்துக்கொண்டு ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்தது. இன்னொன்று, அவனைப் பாவமாகப் பார்த்தது. அடுத்த முட்டையை உருட்டிவிட்டான். இன்னொன்று அதை எடுத்துச் சென்றது. அதன் மகிழ்ச்சியைக் கவனித்தான். சற்றே மாறுபட்ட ஒன்று, அவன் கண்களில்பட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த முட்டைகளை உருட்டிவிட்டான். அவை இரண்டும் எடுத்துத் தின்றன. முன்னர் அவன் கண்களில்பட்ட அதே செயல் மீண்டும் பட்டது. இது தற்செயலாக இருக்கும் என நினைத்தான். அடுத்தும் பல்லி முட்டைகளை உருட்டிவிட்டான். மீண்டும் அதுவே நடந்தது. அவன் சற்றே அதிர்ச்சியடைந்தான்.

`அப்படியிருக்காது’ என நினைத்தவன், பல்லி முட்டைகளை உருட்டுவதை நிறுத்திவிட்டு, சிறு கம்பு ஒன்றை எடுத்தான். அவ்வளவு நேரம் முட்டையைத் தின்ற அவற்றைக் குச்சிகொண்டு விரட்டினான். அவை  அஞ்சி உள்ளொடுங்கின. அப்போதும் அவற்றின் செயல் ஒன்றுபோலவே இருந்தது. மீண்டும் அவன் குச்சியை ஓங்கினான். உள்ளே போய் ஒண்டியவை, வேறு இடம் நகராமல் அங்கேயே பதுங்கின. அவன் குச்சியால் சற்றே அடித்து அவற்றைக் கலைத்தான். அவை கத்தியபடி அந்த இடம்விட்டு நகர்ந்து, கூண்டின் இன்னொரு பக்கம் வந்தன. அவன் கண்கள், நம்ப முடியாத ஒரு வியப்பைக் கண்டு கொண்டிருந்தன. ‘நான் காண்பது உண்மைதானா?’ என அவன் தன்னை மீண்டும் மீண்டும் கேட்டபடி அந்தச் சோதனையை நடத்திக்கொண்டே இருந்தான்.

பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்களுக்கு, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. `மகிழ்ச்சியாக இருந்த இவர், திடீரென அந்த விலங்கை ஏன் இந்தப் பாடுபடுத்துகிறார்?’ எனப் புரியாமல் திகைத்தனர்.
ஆசானை அழைக்கச் சென்ற பணியாளன், `மூன்று நாழிகைக்குப் பிறகு வருவார்’ என்ற செய்தியோடு திரும்பியிருந்தான்.
அந்துவனோ, தேவாங்கின் மீதான சோதனையைக் கைவிடுவதாக இல்லை. அடித்தும் அச்சமூட்டியும் அவற்றை ஓடவிட்டுக்கொண்டே இருந்தான்.  ஒருநிலையில் பாண்டரங்கத்தின் வெளிக் கதவையும் மேல்மாடக் கதவுகளையும் பூட்டச் சொல்லிவிட்டு, கூண்டைத் திறக்கச் சொன்னான். பணியாளர்கள், கூண்டைத் திறந்து அவற்றை வெளியே விட்டனர். ஓங்கிய அவனது கம்பைப் பார்த்து அஞ்சி, அவை அரங்கின் எல்லா திசைகளிலும் ஓடின. அவன் அவற்றை விரட்டியபடி இருந்தான். அவற்றின் செய்கை, அவன் எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவை கத்திக்கொண்டு தூண்களைப் பற்றி ஏற முயற்சித்தன. பிடி நழுவி விழுந்தன. சிறு சிற்பங்களின் மேல் ஏறி மறைய முயன்றன. அவன் விடுவதாக இல்லை. எல்லா திசைகளிலும் அவற்றை விரட்டினான். தன் கண் முன்னால் காண்பது உண்மை என்பதை அவன் முழுமையாக நம்பும்வரை, அவற்றை விரட்டிக் கொண்டே இருந்தான்.

பணியாளர்கள், என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைத்துப்போய் நின்றனர். அவை கத்துவதும், பாவமாகப் பார்த்து அலைக்கழிவதும் அவர்களது மனதை உருக்கின. அந்துவனின் மனமோ மகிழ்வில் திளைத்தது. அவற்றின் ஒவ்வொரு துள்ளலிலும் அவன் கண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

‘இத்தனை நாள் இதை எப்படி நான் கவனிக்காமல் இருந்தேன்?’ என்று புலம்பியவாறே “இதைப் பிடித்துக் கூண்டில் அடையுங்கள். நான் போய் ஆசானை உடனடியாக அழைத்துவருகிறேன்” என்று சொல்லி புறப்பட்டான்.

திசைவேழரின் தென்திசை மாளிகையின் முன் வந்து இறங்கினான் அந்துவன். வேலையாள்கள், அவன் குதிரையை வாங்கிக்கொண்டனர். உள்ளே நுழைந்தான். தொலைவிலேயே அவன் வருவதைப் பார்த்துவிட்டார் திசைவேழர். ‘அறிவுச்செருக்கு சரிந்துவிட்டது’ என அவரது மனம் சொன்னது. ‘இன்னொரு முறை பாண்டரங்கத்தில் பிழை நிகழ்த்தியிருக்கிறான். நான் சொல்லி அனுப்பிய நேரத்துக்குள் பதற்றமாகி அவனே வந்துள்ளதன் காரணம், வேறு என்னவாக இருக்க முடியும்?’ என்று எண்ணியபடியே அவனை உள்ளே அழைத்தார்.

“உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தான்.

அவர் எந்தவிதக் காரணமும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் புறப்பட்டார். அவர் காரணம் கேட்காதது குறித்து, அந்துவன் கவலைகொள்ளவில்லை. அவர் புறப்படும்வரை காத்திருந்து அவரை அழைத்துவந்தான்.
பாண்டரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தனர். வழக்கம்போல் அவர் மாளிகையின் நடுவில் நின்று, அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தார். அவர் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அது வரையப் பட்டிருந்தது. அந்துவனைப் பாராட்டலாம் என நினைத்துத் திரும்பியபோதுதான் கவனித்தார். அவன் அருகில் இல்லை. சற்று தொலைவில் தூண்களுக்குப் பக்கத்தில் இருந்த தேவாங்குகளின் கூண்டுக்கு அருகில் நின்றிருந்தான்.

“என்ன அங்கே நிற்கிறாய்?”

“நான் உங்களைக் காண வருமாறு அழைத்தது,  இந்த விலங்கைப் பார்க்கத்தான்.”

“என்ன இது?”

`இதன் பெயர் தேவாங்கு’ எனச் சொல்ல வாயெடுத்தவன், “இயற்கையின் அதிசயம்” என்றான்.

`என்ன சொல்கிறான் இவன்?’ என்று சிந்தித்தபடியே கூண்டருகில் வந்து, உற்றுப்பார்த்தார்.  அவை உள்ளொடுங்கி நின்றன.

“இது ஒரு வானியல் விலங்கு” என்று சொல்லியபடி, கையில் இருந்த குச்சியை அவரின் கையில் கொடுத்தான்.

அவர் அதைக்கொண்டு கூண்டுக்குள் இருந்தவற்றைச் சற்றே தொந்தரவு செய்தார். அவை இங்கும் அங்குமாக நடந்து அலைமோதின. அவற்றின் கண்கள், உடல்வாகு, காது விடைக்கும் தன்மை என எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தபடியே இருந்தார். அவருக்குப் புதிதாக எந்த ஒன்றும் தெரியவில்லை.

“என்ன புதிதாய்க் கண்டாய்?”

“உங்களின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லையா?”

அவன் கேட்பது திசைவேழருக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, மாணவர்களிடம் அவர் கைக்கொள்ளும் முறை இது. `என் சொற்கள், என்னிடமே திரும்ப வருகின்றன’ என்று சிந்தித்தபடியே அந்த விலங்கை உற்றுப்பார்த்தார். மாறுபாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. சற்றே திரும்பி அந்துவனைப் பார்த்தார்.

அந்துவன் சொன்னான், “அவை எந்தத் திசைநோக்கி உட்காருகின்றன பாருங்கள்.”

திசைவேழர் அவற்றைக் கூர்ந்து கவனித்தார். அவை வடக்கு திசை நோக்கி உட்கார்ந்திருந்தன. தன் கையில் இருந்த குச்சியால் அவற்றைச் சீண்டினார். அவை எழுந்து இன்னொரு பக்கம் சென்று வடக்கு திசை நோக்கி உட்கார்ந்தன. மீண்டும் விரட்டினார். மீண்டும் அவை அவ்வாறே உட்கார்ந்தன. கூண்டைத் திறக்கச் சொல்லி வெளியே விரட்டினார். பாண்டரங்கம் முழுவதும் அவை சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், எப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்தனவோ, அப்போ தெல்லாம் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன.

திசைவேழர் அதிர்ந்துபோனார். ``நான் காண்பது உண்மையா?” என்றார்.

``உண்மை ஆசானே! பலமுறை பரிசோதித்துவிட்டேன். இந்த விலங்கு இயற்கையின் அதிசய ஆற்றல் ஒன்றை தன்னகத்தே கொண்டுள்ளது” என்றான் அந்துவன்.

“என் கண்களை நம்ப முடியவில்லையே!’’ என்று கூறியபடி அவற்றின் பின்னால் ஓடினார். அவை இயல்பாக உட்காருவதைக் கவனித்தார். விரட்டினால் பதற்றமடைந்து உட்காருவதைக் கவனித்தார். எப்போது உட்கார்ந்தாலும் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன. அவை உட்காரும்போதெல்லாம் அவரது மனம் வியப்பிலும் மகிழ்விலும் துள்ளியது. “என் கண்கள் பொய்யேதும் சொல்லவில்லையே!” என்று அந்துவனைப் பார்த்துக் கேட்டார்.

அந்துவன் சிரித்தான்.

“நீ என் தலை மாணாக்கன் என்பதை மீண்டும் மெய்பித்துவிட்டாய்” என்று சொல்லியபடி வாரி அணைத்தார் அந்துவனை. அவரது சொல், வரையப்பட்ட வான் மண்டலம் முழுவதும் எதிரொலித்தது.
இளமருதனுக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ``ஆலோசனை மாடத்துக்கு என்னை அழைத்துச்சென்று தேவாங்கைப் பற்றி இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்க வேண்டும்? நான் செய்த பிழை என்ன? பாண்டரங்கத்திலிருந்து தேவாங்கின் கூண்டை நான் வெளியே எடுத்தபோது அந்துவன்தானே `உள்ளேயே இருக்கட்டும்’ எனச் சொன்னார். இப்போது அதில் என்ன பிரச்னை?” என்று மாடத்தின் வெளியே நின்று புலம்பினான். சற்று நேரம் கழித்துத்தான் செய்தி தெரிந்தது,  `வெங்கல்நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்க்கிழாரை அழைத்துவரச் சொல்லி அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பட்டுள்ளது’ என்று. இளமருதன் இன்னும் பதறிப்போனான். தன்னைப் பெரிய இடரில் யாரோ மாட்டிவிட்டுவிட்டார்கள் என அஞ்சினான். தேவாங்கின் முகம் நினைவுக்குவந்தது. அதனுடைய பயம் தன்னிடம் ஒட்டிக்கொண்டதோ எனத் தோன்றியது.
ஆலோசனைக் கூடத்துக்குள் பேரரசர், சூல்கடல் முதுவன், திசைவேழர், இளவரசர்,  தலைமை அமைச்சன் முசுகுந்தர், அந்துவன் ஆகியோர் இருந்தனர். மனம் நம்ப மறுக்கிற ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியும் கண்களால் பார்த்தும் நம்பத் துணிந்தனர்.

பொன்பூச்சுக்கொண்ட உள்ளரங்கில் பேரரசர் அமரும் இடம்தனில் மிதித்து, நின்று, உட்கார்ந்து கடந்தது தேவாங்கு. அதை ஓடவிட்டும் உட்காரவிட்டும் பார்த்துக்கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் முயன்றனர். அதைவிட்டு பார்வையை விலக்காமலேயே முசுகுந்தர் கேட்டார் “இந்த விலங்கு வேறு இடத்திலும் இருக்குமல்லவா?”

திசைவேழர் சொன்னார், “பொதியமலையில் உண்டு. நானே பார்த்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் தன்மை அதற்கு இல்லை.”
“இதற்கு மட்டும் இருப்பதற்குக் காரணம்?’’

“இது ஒரு மரத்து விலங்கு. குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே இந்த விலங்கு கூட்டமாகத் தங்கி உயிர்வாழும். பறம்புமலையில் இந்த விலங்கு இருந்த அந்த மரத்தின் அமைப்பு இந்தப் பழக்கம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பல நூறு தலைமுறைகளாக அந்த இடம் இருப்பதால், இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும்” திசைவேழரின் விவரிப்பு, மேலும் வியப்பைக் கூட்டியது.

“அந்த மரத்தில் எத்தனை தேவாங்குகள் இருக்கின்றன என்ற செய்தி ஏதேனும் உண்டா?”

“திருமணத்துக்கு வந்துள்ள பாணர்களிடம் விசாரித்ததில் பலநூறு தேவாங்குகள் அந்த மரத்தில் உண்டு” என்று அந்துவன் சொன்னான்.

தேவாங்கையும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய செய்தியையும் அறிந்ததிலிருந்து பொதியவெற்பனுக்கு மகிழ்வு தாங்க முடியாத அளவு இருந்தது. தன் திருமணத்தை முன்னிட்டு நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இப்படி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவன் மனம் கூத்தாடியது.

சூழ்கடல் முதுவனுக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் திக்குமுக்காடச் செய்தன. தான் காண்பது உண்மையா என்பதை நம்ப, அவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். திசைவேழர் போன்ற பெரும்வானியல் அறிஞன் சொல்லும்போது ஐயப்படுவது அழகன்று. ஆனாலும் இப்படியொரு செயலை மனம் எளிதில் நம்பிவிடுவதில்லை.

அதன் முழு நடவடிக்கையையும் பார்த்துவிட்டு, சூழ்கடல் முதுவன் ஒற்றைவரியில் சொன்னான், “இனி, கடல் வணிகத்தை நாம் ஆளலாம்.”

இந்தச் சொல்லைச் சொன்னதும், பேரரசர் அவரைக் கட்டி அணைத்தார்.  ``முன்னர் நடந்த கூட்டங்களில் கடல் கண்டு அஞ்சிவந்த தங்களின் சொற்கள், இப்போது முற்றிலும் மாறிவிட்டன. இந்தத் திருமணம் பல புதிய வாய்ப்புகளை நமக்கு உருவாக்கும் என நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இவ்வளவு சிறந்ததாக இருக்கப்போகிறது  என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் பேரரசர்.

சூழ்கடல் முதுவன் சொன்னான், “என் வாழ்வில் இன்று அடைந்துள்ள வியப்பும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வை இதுவரை அடைந்ததில்லை. திசை அறிய முடியாமல் எவ்வளவு இழப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். எத்தனை மனிதர்கள், கப்பல்கள், பொருள்களை எல்லாம் கடல் கொண்டுபோனது. திசையைத் தவறவிட்டதால்தான் என் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். கடல் பயணத்தில் திசையறிதல் என்பது, கடலை வெல்வதற்கு இணையானது. இது தேவாங்கன்று; உண்மையில் இதுதான் தேவவாக்கு விலங்கு” என்று சொல்லி, அதைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சினார்.

இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த இளமருதனுக்கு நேரம் ஆக ஆக பதற்றம் கூடிக்கொண்டேபோனது. சிறிது நேரத்தில் செவியன் அங்கு வந்து சேர்ந்தான். காலையில் திசைவேழர் இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, முதலில் பேரரசரிடம் சொல்லியுள்ளனர். பிறகு, இளவரசனையும் முசுகுந்தரையும் அழைத்துக் காண்பித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் சூழ்கடல் முதுவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இடைப் பட்ட நேரத்தில் இது தொடர்பானவர்களைத் தனித்தனியே அழைத்து விசாரித்துள்ளனர்.
செவியனும் விசாரிக்கப்பட்டான். இந்த விலங்கைப் பற்றி அவனுக்குத் தெரிந்ததை யெல்லாம் அவன் சொல்லியுள்ளான். அதன் பிறகுதான் மையூர்கிழாரை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன என்பது அவனுக்கு விளங்கவில்லை. `இளமருதனைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டுப் போகலாம்’ என்று வந்துள்ளான். இளமருதனோ பதற்றத்தில் நடுங்கிப் போயிருந்தான். “நான் அந்துவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதோடு சரி. அதற்குப் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை” என்றான்.

செவியனுக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது. “அரண்மனை நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்தானே நீங்கள். உங்களுக்கும் இதற்கான காரணம் புரியவில்லையா?” எனக் கேட்டான் இளமருதன்.
``என்னால் எதுவொன்றையும் தொடர்பு படுத்தவே முடியவில்லை. ஒரே ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கு இவ்வளவு நாள் கழித்து ஏன் விசாரிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றான்.

“என்ன செய்தி அது?”

``நாம் அன்று நள்ளிரவுக் கோட்டைக்குள் நுழைந்தோமல்லவா, அப்போது கதவைத் திறந்தவிட்ட யானை மதம்பிடித்து கோட்டைத் தளபதியைக் கொன்றுவிட்டது. இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரியாது. திருமணக் காலத்தில் தலைநகருக்குள் நிகழ்ந்த மரணம் என்பதால், வெளியே தெரியாமல் எல்லா வற்றையும் முடித்துவிட்டார்கள். அது தொடர்பாகக் கோட்டைவாசலில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது ஒருவன் மட்டும் சொல்லியிருக்கிறான், ‘பார்க்கவே அருவருப்பாக இருந்த ஒரு விலங்கை உள்ளே எடுத்துவந்தனர். அதைக் கண்ட பிறகுதான் அந்த யானை மிரட்சிக்குள்ளானது’ என்று.”

இளமருதன் நடுங்கிப்போனான்.

செவியன் சொன்னான், “அப்போது நடந்ததற்கு, இப்போது ஏன் விடாமல் விசாரிக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.”

இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து, சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் பொற்பல்லக்கு ஒன்றை, பணியாளர்கள் மாளிகைக்குள் தூக்கிச் சென்றனர். இதை ஏன் தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியாமல் விழித்த செவியன், தனக்கு நன்கு தெரிந்த அரண்மனைப் பணியாளனிடம் தனியே போய் விசாரித்தான். “ஏதோ புதிய விலங்கொன்று வந்திருக்கிறதாம். அதை வைக்க” என்றான் அவன்.

அதிர்ச்சியானார்கள் இரண்டு பேரும். ``அன்று சக்கரவாகப் பறவையின் கூண்டு வைக்கப்படும் மேடையின் மீது இதை வைத்ததற்குத்தான் அந்துவன் அவ்வளவு கோபப்பட்டான். `தூக்கி வீசிவிடுங்கள்’ என்றான். இன்றோ சக்கரவாகப் பறவை கொண்டுவரப்பட்டப் பொற்பல்லக்கை இதற்குக் கொண்டுபோகின்றனர். என்ன நடக்கிறது?”

செவியன் சொன்னான், “இளமருதா, இது நீ அச்சம்கொள்ளவேண்டிய  நிகழ்வன்று. வேறு ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு.”

அப்போதுதான் இளமருதனுக்குத் தோன்றியது, ‘பாரிக்கு தேவவாக்குச் சொல்லும் விலங்கு. இதன் சிறப்பைச் சொல்லி நாம் அல்லவா பேரரசரிடம் பாராட்டைப்பெற வேண்டும் என்று இருந்தோம். இப்போது யாரோ உள்ளே புகுந்து நாம் அடையவேண்டிய நற்பெயரை அவர்கள் அடையப்பார்க்கின்றனர். இதை விடக் கூடாது.அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்.’

“இந்தத் திருமணத்துக்கு எல்லோரும் வந்திருக்கின்றனர். சேரனுக்கும் சோழனுக்கும் செய்தி சொல்லும் எண்ணற்றோர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அதேபோல யவனர்களின் பெரும்தளபதிகள் இங்கு வந்துள்ளனர். எனவே, இதைப் பற்றிய செய்தி எதுவும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் முசுகுந்தர்.

“சரி, அந்த விலங்கை, பறம்பு மலையிலிருந்து கொண்டுவர வழி என்ன?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

இவ்வளவு நேரம் அளவற்ற மகிழ்சியில் நடந்துகொண்டிருந்த ஓர் உரையாடல் சற்றே இறுக்கமாக மாறத் தொடங்கியது.

``நாம் ஒரு குழுவை அனுப்பி பாரியிடம் பேசி, அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார் சூழ்கடல் முதுவன்.

“வணிகப் பேச்சுக்காகப் போன கோளூர் சாத்தனின் கதை, உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

“கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டல்லவா? இது மிகவும் வியத்தகுத்தன்மைகொண்ட விலங்கு. கடல் பயணத்தில் இது அபாரமான ஆற்றலைத் தரவல்லது. நமது வணிக வலிமையை இது பல மடங்கு உயர்த்தக்கூடியது. இதை எடுத்துச்சொல்லி, `இதற்கு ஈடாக நல்லதொரு பரிமாற்றத்துக்கு  பாண்டியநாடு தயாராக இருக்கிறது’ எனச் சொன்னால், பாரி ஏற்பான் என்றே நினைக்கிறேன்” என்றார் சூழ்கடல் முதுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக