புதன், 19 ஜூலை, 2017

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர் புலிகள் ஆரம்ப நாட்கள் பிரபாகரன் 4


இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்

மத்தியகுழு உறுப்பினர்கள் நால்வரும் இப்போது இலங்கையில் தான் இருக்கிறோம். கோண்டாவிலில் பிரபாகரன் என்னைச் சந்தித்த மறுநாளே நாம் நால்வரும் இன்னும் சிலருடன் மாங்குளம் முகாமிற்குச் செல்கிறோம். பிரபாகரன் இப்போது என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நாங்கள் பல தடவை மத்தியகுழு ஒன்று கூடல்களை நடத்துகிறோம்.
இது வரையில் மத்திய குழுக் கூட்டங்கள் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே நடத்தப்படும். முதல் தடவையாக நமது வழிமுறை தவறானது என்று கருத்துக் குறித்து விவாதிப்பதற்காக ஒரு இறுக்கமான சூழலில் ஒன்றுகூடல் நடை பெறுகிறது. யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற சோகமான உரையாடல்கள் இடம்பெற்றன.
ஒவ்வொரு தடவையும் நான் முன்வைத்த முன் மொழிவுகள் குறித்தே பேசுகிறோம். குறிப்பாக மத்திய குழு கலைக்கப்ப்பட்டு செயற்குழு ஒன்றிடம் இயக்கத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வாதட வேண்டிய தேவை எழுகிறது. பின்னர் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், தேடப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சியக் கல்வி கற்றுக்கொள்வதற்காக தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதையும், அரசியல் பத்திரிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்பதையும் மத்திய குழுவில், நீண்ட விவாதங்களின் பின்னர் பிரபாகரனின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கிறோம்.
பிரபாகரன் முழுமனதுடனும் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. ஆரம்பத்திலிருந்து பிரபாகரனோடு முழுமையாக ஒத்துழைத்த என்மீது பிரபாகரன் வெறுப்படைந்திருந்தது போலத் தென்பட்டது. எனக்குப் பின்பு எம்மோடு மத்திய குழுவிலிருந்த நாகராஜாவும் எனது கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கிறார். இவையெல்லாம் பிரபாகரனை மேலும் அதிர்ப்த்திக்கு உள்ளாக்குகின்றது
இவ்வாறான வெறுப்புணர்வுடனும் வெறுமையுடனும் தான் செயற்குழு நியமனக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
பதினேழு வயதில் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளில் வெற்றிபெற்றிருந்த பிரபாகரன் தூய இராணுவ நடவடிக்கைகள் மட்டும் தான் வெற்றிக்கான ஒரே வழி என்பதை உறுதியாக நம்பியிருந்தார்.அதனை விமர்சிக்கின்ற யாரும் போராட்டத்தைக் சிதைவடையச் செய்வதாக எண்ணினார். நீண்ட விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் ஊடாக தவிர்க்கவியாமல் எமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறார்.
செயற்குழுவை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டோம். அதுவும் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து செயற்குழு ஒன்றை ஒரு மனதான நியமன அடிப்படையில் உருவாக்குவது என்று முடிவு செய்கிறோம். யாழ்ப்பாண மாவட்டமே சந்திப்பிற்கு வசதியானதாக அமையும் என்ற அடிப்படையில் அங்கு எமது செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வதாக முடிவெடுக்கிறோம்.
நீர்வேலியில் வாய்காற்தரவை என்ற இடத்தில் எமது ஆதரவாளர்கள் புதிய உறுப்பினர்கள் போன்றோர், அங்குள்ள ஒரு மைதானத்தில் கிரிககட் விளையாடுவதாகவும் அதே வேளை அதற்கு அருகில் நாங்கள் செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கிறோம்.
எமக்கு ஆதரவு வழங்கியவர்கள், தொடர்பாளர்கள், புதிய உறுப்பினர்கள் போன்றோர் அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.உளவாளிகளும் காவல் துறையினரும் சுதந்திரமாக நடமாடிய அந்தக் காலத்தில் யாரும் சந்தேகப் படாமல் இருப்பதற்காகவே துடுப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். மறுபுறத்தில் அதே மைதானத்தின் பின் பகுதியில் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய செயற் குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.
வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஈழத் தமிழ்ப்பேசும் மக்களின் நாளாந்த வாழ்வில் முக்கிய பங்காகிவிடப் போகின்ற விடுதலை இயக்கம் ஒன்றின் வரலாற்றில் திரும்பல் புள்ளியாய் வாய்க்கால் தரவை மாறிவிடப் போகின்றது என்பதை அறியாமல் சில வயோதிபர்கள் துடுப்பாட்டத்தை இரசித்தபடி நடந்து சென்றார்கள். அவசர அவசரமாக சைக்கிளில் சென்ற மனிதர்களுக்குக் கூட நாம் ஒன்று கூடியிருப்பது அவர்களின் எதிர்காலத்தைக் குறித்துப் பேசுவதற்காகத் தான் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.
மத்திய குழு உறுப்பினர்களான எம்மோடு,சாந்தன், சுந்தரம், மனோ, மாத்தையா, குமரப்பா, நந்தன், குமணன் மாதி,ராகவன் போன்ற உள்ளிட்ட அனைவரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.
பண்ணைகள், முகாம்கள், குறிப்பிடத் தக்களவு பணம், கணிசமான தொடர்புகள், உறுப்பினர்கள் என்று அவ்வேளையில் கோடுட்டுக் காட்டத்தக்க இராணுவ அணியாக வளர்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் மாற்றம் ஒன்றிற்கு உள்ளாவதைப் சில உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவதானித்தனர். சிலருக்கு அனாவசியமான குறுக்கீடாகத் தெரிந்திருக்கும். எது எவ்வாறாயினும் நூறு கருத்துக்கள் மோதின.
வாக்கு அடிப்படையில் அன்றி ஒரு மனதான நியமன அடிப்படையிலேயே செயற்குழுவைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. நபர்கள் குறித்து நீண்ட விவாதங்கள் ஏற்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வெகுஜன வேலைகளை முன்னெடுகும் திறமை வாய்ந்தவர்களாக அமைய வேண்டும் என்பதை நாம் முன்னமே தீர்மானித்திருந்தோம். சட்டத்தின் வரம்புகளுக்குள் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள், தேடப்படாதவர்கள் போன்றோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்காகப் பிரேரிக்கிறோம். பலரின் பெயர்கள் முன் மொழியபடுகின்றன. பிரதேசங்களுக்கும் பிரதிநிதிகள் போன்ற அமைப்புக்கள் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. செயற்குழு பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கம் அனைவருக்கும் இருந்தது. மட்டக்கள்ப்பைச் சேர்ந்த டானியல் மட்டக்களப்பிற்கு ஒரு பிரதிநிதிதுவம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்.
அதே போல் திருகோணம்லைப் பிரதிநிதிதுவத்திற்காக ஆசீர் நியமிக்கப்படுகிறார். இவர்கள் தவிர, சாந்தன், அன்டன் சிவகுமாரன், குமணன் ஆகியோர் செயற்குழுவிற்குத் தெரிவாகினர்.
செயற்குழுவிற்குத் தெரிவான சிலர் இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்வதால் இவர்கள் குறித்த வேறு விபரங்களை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதவில்லை.
பிரபாகரன் இல்லாத தலைமை ஒன்று முதல் தடவையாக விடுதலைப் புலிகளை வழி நடத்தும் நிலை உருவாகிறது. அனைவரும் புதிய நம்பிகையுடனேயே இந்தத் தெரிவினை மேற்கொண்டோம். மிக நீண்ட நேரத்தை செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலேயே செலவழித்து முடித்திருந்தோம். துடுப்பாட்டம் பாதி நேரத்தைக் கடந்து உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. சூரியன் கூட உச்சியைக் கடந்து சற்றுக் கீழே இறங்கியிருந்தது நிழலுக்கான நம்பிக்கையை தந்தது.
செயற்குழு உருவாகிவிட்டது. இனி நாம் எம்மை மக்களுக்கு அறிமுகப்படுதும் நுளை வாயிலாக சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். நான் முன்வைத்த முன்மொழிவுகளிலும் சஞ்சிகை அல்லது பத்திரிகை குறித்துக் குறிப்பிடப்படிருந்தது. செயற்குழு உருவாக்கத்தின் பின்னர் பத்திரிகை வெளியிடுவது குறித்து அனைவரும் புதிய உற்சாகத்துடன் பேசிக்கொள்கிறோம். பத்திரிகையின் பெயர் “உணர்வு” என்று ஏறத்தாள ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது.
அதே வேளை தேடப்படுகிறவர்கள் அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சியக் கல்வியையும் பயிற்சியையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
மத்திய குழுவிலிருந்த நாகராஜா, நான், பிரபாகரன்,மற்றும் ராகவன், செல்லக்கிளி ஆகிய அனைவருமே அரசியற் கல்விக்காக தமிழ் நாடு செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டம் முடிவடைந்து அனைவரும் பண்ணைகளுக்கும் இருப்பிடங்களுக்கும் செல்கின்றனர். செயற்குழு தெரிவாகிய இரண்டாவது நாள் நான் எனது சகோதரி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு இந்தியாவிற்குச் செல்வது குறித்தும் தகவல் தெரிவித்துவிட்டு வரலாம் என எண்ணினேன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கு சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு மறுபடி வரும் போது நிலைமை தலை கீழாக மாறியிருந்தது.
செயற்குழு தெரிவான பின்னர் கலாபதி மனோ மாஸ்டருடனும் பிரபாகனுடம் பேசியிருக்கிறார்.
மனோமாஸ்டரிடம் பேசிய கலாபதி இது வெறுமனே பிரபாகரனிற்கு எதிரான காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்வதற்கான செயற்பாடே தவிர, மக்கள் அமைப்புகளை உருவாக்கி புதிய திசைவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்குழு அல்ல என்று கூறிருக்கிறார். பிரபாகரனிடம் பேசிய கலாபதி இந்தச் செயற்குழு எல்லாம் பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சதிட்டம் என்றும் இதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இதே வேளை நந்தனுக்கும் மனோ மாஸ்டருக்கும் இடையேயான விவாதம் மறுபடி எழுந்த வேளையில் நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் இப்போது பிரபாகரன் வெளீயேறப்ப‌ட்டுவிட்டார் என மனோ மாஸ்டரிடம் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பாக, மத்திய குழுவில் நாங்கள் விவாதம் நடத்த நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களைச் சுந்தரம் போன்றோர் பண்ணைகளில் இருந்த ஏனைய உறுப்பினர்களுடன் மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.
இவை அனைத்தும் ஒருங்கு சேர, செயற்குழு என்பதே பிரபாகரனை அன்னியப்படுத்துவதற்கான சதித்திட்டம் என்ற ஒரு சிலரின் கருத்துக்கள் உள்ளரங்கிற்கு வருகிறது.
இவ்வாறு செயற்குழுவிற்கு எதிரான அபிப்பிராயம் குறித்த சில உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுந்தரம் தலைமையில் ஒரு குழுவும் பிரபாகரனுக்கு ஆதரவாக ஒரு குழுவும் உருவாகிறது. நான் எனது சகோதரி வீட்டிலிருந்து திரும்பி வந்த வேளையில் சுந்தரம் குழுவும் பிரபாகரன் குழுவும் தமக்குத் தெரிந்த ஆயுதங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியினர் மறப்பகுதியினரைச் சந்தித்தால் கொலை செய்துவிடுகின்ற கோரம் இரண்டு பகுதியினரிடமும் காணப்பட்டது.
பிரபாகரன் குழுவினர் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த ஆயுதங்களையும் சுந்தரம் குழுவினர் முத்தையன்கட்டுப் பகுதியிலிருந்த ஆயுதங்களையு கையகப்படுத்தியிருந்தனர். பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார். இதையறிந்த செல்லக்கிளி சுந்தரத்திடம் பிரபாகரன் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிடுவதாக நடந்தவற்றை மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார். இதன் விளைவாக சுந்தரம் குழுவினர் முத்தயன்கட்டுப் பகுதியில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கு பிரபாகரன் குழுவினர் வந்தால் திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிபுடன் இருந்தனர். அனைவரையும் விரக்தியும் வெறுப்பும் வெறுமையும் ஆட்கொண்டிருந்தது.
முன்னர் பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மட்டுமன்றி ஒரு மக்கள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்துதை ஆதரித்தவரும் ஏற்கனவே இடது அரசியலில் குறித்தளவு ஆற்றல் பெற்றவருமான மனோ மாஸ்டர் பிரபாகரன் சார்பு நிலை எடுத்திருந்தது பலரை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. அவர் தான் எமக்கு எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். இவரின் இந்தத் திடீர் முடிபு இன்றைக்கு வரைக்கும் என்னால் மட்டுமல்ல பலராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.
மனோவின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நந்தனுக்கும் மனோவிற்கும் தொடர்ச்சியாக நிலவிவந்த முரண்பாடா, சுந்தரம் அரசியலை அன்றிப் பிரபாகரனை முதன்மைப்படுத்தி முன்னெடுத்த தனிநபர் தாக்குதல்களா என்று பல வினாக்கள் எனது வாழ்நாள் முழுவதும் விடையின்றியே தொக்குநிற்கின்றது.
மனோ மாஸ்டரைத் தொடர்ந்தே மாத்தையாவும் பிரபாகரனின் பக்கத்தை நியாயப்படுத்த ஆரம்பித்தனர்.
நான் முதலில் முத்தையன்கட்டுப் பண்ணையை நோக்கிச் செல்கிறேன். மக்கள் அமைப்புகளூடாக ஆயுதப் போராட்டத்தை உருவாகுகின்ற அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்று கூறுகின்ற சுந்தரம் குழுவினரிடமும் கூட ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்கின்ற குழுவாதப் போக்கைக் காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் சார்ந்த அரசியல் வழிமுறை என்பது மிகக் கடினமான ஆனால் ஒரே சாத்தியமான வழிமுறை என்பதை உலகத்தில் வெற்றிபெற்ற போராட்டங்கள் எல்லாம் ஒரு முறை இருமுறை அல்ல ஒவ்வொரு தடவையும் தீர்க்கமான அனுபவங்களை எம்முன்னால் விட்டுச் சென்றிருக்கின்றன. பல ஆயிரம் வருடங்கள் சமூகத்தின் அழுக்குப் படர்ந்த சிந்தனை முறை எம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்வது உண்மைதான். ஆனால் அவை முன்னிலைப்படுத்தப்படும் போது தான் அழிவுகள் நிறைந்த முடிபுகளை நோக்கி வழிநடத்தப்படுகிறோம்.
சுந்தரம் குழுவினரிடம் ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்வது தவறு என விவாதிக்கிறேன். பலர் உடன்படுகிறார்கள்.சுந்தரம் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற தனது நியாயத்தைச் சொல்கிறார்.நாகராஜா,சாந்தன்,குமணன்,நந்தன் போன்றோரும் ஆயுதங்கள் உடனடி அவசியமில்லை நமது உடனடி வேலை மக்கள் அமைப்பை உருவாக்குவதே என்று என்னுடன் சேர்ந்து உறுதியாக வாதிடுகின்றனர்.
முதலில் சுந்தரம் இதற்கு உடன்படவில்லை. ஒரு வகையில் தவிர்கவியலாத நிலையிலும், பல உறுப்பினர்களின் உந்துதலுக்கு உள்ளான நிலையிலும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு சுந்தரத்துடனிருந்த அனைத்து உறுப்பினர்களும் உடன்படுகிறோம்.
இப்போது பிரபாகரன் குழுவைச் சார்ந்த எம்மை முழுமையான எதிரியாகக் கணக்கிடாத ஒருவரைத் தெரிவு செய்து ஆயுதங்களை ஒப்படைப்பதாகத் தீர்மானிக்கிறோம்.
பிளவு ஏற்பட்ட வேளையில் பிரபாகரன் குழுவோடு இணைந்து கொண்டவர்களில் ராகவனும் ஒருவர். ராகவனுடன் பகைமுரண்பாடற்று உரையாடக் கூடிய சூழல் ஒன்று இருந்தது.
ஆக, நான் ராகவனை அழைத்து அவரூடாக ஆயுதங்கள், ஏனைய உரித்துக்கள், எஞ்சியிருந்த பணம் போன்ற அனைத்தையுமே பிரபாகரன் சார்ந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றேன். சுந்தரத்தின் சலிப்பான பதிலுக்கு மத்தியில் எல்லோரும் ஒரே முடிவாக இதனை ஏற்றுக்கொள்கிறோம்.
இன்னும் வரும்..
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி இனியொருவிலும் சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.


புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்


ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பிரபாகரன் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு மக்களை அணிதிரட்டும் வேலைகளில் நாங்கள் ஈடுபட வேண்டும் என்பதில் நாகராஜா, சாந்தன், குமணன், நந்தன் போன்றோர் மிகவும் உறுதியாகக் குரல் கொடுத்தனர். சுந்தரம், கண்ணன் போன்றவர்கள் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்பதில் விட்டுக்கொடுப்பின்றிப் போராடினார்கள். இவர்கள் இருவருமே பின்நாளில் புளொட் அமைப்பில் முக்கிய போராளிகளாகப் பங்காறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவாறாக ராகவனூடாக அனைத்து உடமைகளும் பிரபாகரன் குழுவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரபாகரன் சாராத அனைவரும் குழுவாக இயங்குவதாகத் தீர்மானிக்கிறோம். முன்னமே முன்வைத்த முன்மொழிவுகளின் அடிப்படையில் ஒரு குழுவை உருவாக்கிக் கொள்கிறோம். மக்களை அணிதிரட்டும் வேலைகளை முன்னெடுப்பது என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தோம். அதற்காக எம்மை முழுமையாக அர்ப்பணிப்பதாகத் தீர்மானித்துக்கொண்டோம்.
எது எவ்வாறாயினும் சில குறிப்பனவர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களிடமும் விரக்தி மனப்பான்மை மேலோங்கியிருந்தது. யாரும் இவ்வாறான பிரிவை எதிர்பார்க்கவில்லை. செயற்குழுவை அமைப்பதற்குப் பிரபாகரன் சம்மதம் தெரிவித்த போது அனைத்து இயக்கத் தோழர்களும் அளவற்ற மகிழ்ச்சியடைந்திருந்தனர். செயற்குழு உருவாக்கப்பட்டு மக்கள் வேலை என்ற அரசியலை முன்வைத்த வேளையில் எமக்கெல்லாம் விடுதலையே கிடைத்தது போலிருந்தது.
மக்களைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் குறித்தோ, பாராளுமன்ற அரசியலுக்கு அப்பாலான அரசியல் குறித்தோ கிஞ்சித்தும் சிந்தித்திராத காலகட்டமது.
அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு மேலோங்கியிருந்தது. வடபகுதியை இராணுவ மயப்படுத்தும் திட்டத்தை ஜெயவர்தன அரசு ஆரம்பித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் பிரிகேடியர் வீரதுங்க என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் மக்கள் மீதான அடக்குமுறை சிவில் நிர்வாக வரைமுறைகளுக்கும் அப்பால் சென்று இராணுவ வழிமுறையாக மாற்றமடைய ஆரம்பித்திருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் காரணமின்றிக் கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கிழக்கு மாகாணமெங்கும் இராணுவ பொலீஸ் கூட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்தன.
தெற்கில் ஜயவர்தன அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை எதிர்க்கட்சிகளை அடக்க ஆரம்பித்திருந்தது. பல தடவைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையும், புலிகளையும் காரணம் காட்டியே தென்னிலங்கையில் அரச பாசிசம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
அரச சார்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வாதிகளும் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக அபிவிருத்தியை முன்வைத்தனர். வடக்கில் துரையப்பா முன்வைத்த அபிவிருத்தித் திட்டங்கள் போலவே கிழக்கில் பேரினவாத அரசுடன் இணைந்திருந்த தேவநாயகம் தனது திட்டங்களை முன்வைத்தார். இவரெல்லாம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டால் பயங்கரவாதம் ஒழிக்கப்படுகிறது என்றார்.
இவை அனைத்துக்கும் மத்தியில் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றத்தினதும், புதிய மத்தியதர வர்க்கத்தினதும் எழுச்சி அதன் எச்ச சொச்சங்களைக் கொண்டிருந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்த தாராளவாத மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்த தெற்காசிய நாடுகளில் இலங்கையும் பிரதானமானதாக அமைந்திருந்தது. பொப்பிசையும், துள்ளிசையும், பெண்களின் மினி ஆடைகளும் தமிழ்ப் பழமைவாதக் கலாச்சார வரம்புகளை உடைத்துப் பீறிட்டு எழுந்திருந்தது.
இளைஞர்களைப் பொறுத்தவரை அதன் தாக்கதிலிருந்து விடுவித்துக்கொண்டு போராட்டத்தைக் குறித்துச் சிந்திப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகவே அமைந்திருந்தது.
சுகபோகங்களை அனுபவிப்பதற்கோ அல்லது கல்வியை மூலதனமாக்கி அதற்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதே பெரும்பாலானவர்களின் இறுதி நோக்கமாக இருந்தது.
உலகளாவியரீதியில் எழுபதுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மனிதனைச் சுயநலம் மிக்க விலங்காக மாற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உலக மாற்றத்தின் போதும் இவ்வாறுதான் மனிதர்கள் மாற்றமடைவார்களோ மறுபடி நிகழும் இன்றைய மாற்றங்கள் சிந்திகத் தூண்டுகின்றன.
இவற்றின் தாக்கத்திற்கு அப்பால் முழு நேரமாகத் தான் சார்ந்த சமூகத்திற்காகப் போராட முன்வந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர் குழாமைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாகப் பிளவுற்றமையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதுவும் பகை முரண்பாடாக மாற்றமடையுமோ என அச்சம் கொள்கின்ற அளவிற்கு இந்தப் பிரிவினை உருவாகும் என செயற்குழு உருவாக வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்த நான் உட்பட எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆயுதங்களை ராகவனிடம் ஒப்படைத்த போது அவரின் முகத்திலும் இனம்புரியாத சோகம் இழையோடியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இப்போது ஆயுதங்களோ பணமோ எதுவுமின்றிய வெறும் உணர்வுமிக்க சில முழு நேர உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக நாம் எமது வேலைகளை ஆரம்பிக்கிறோம்.
அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்பது எமக்கு நாளாந்தப் பிரச்சனையாகியிருந்த துயர் படிந்த காலகட்டமது. பல நாட்களை பங்கிட்டுக்கொள்ள உணவின்றி பசித்த வயிற்றோடு நகர்த்தியிருக்கிறோம். அனைவரும் நாள் கூலிக்குச் வேலை செய்வோம். அமைப்பிற்கான செலவு, உறுப்பினர்களின் உடை, உணவு, பிரயாணச் செலவு என்று எல்லாமே எமது நாள் கூலியிலிருந்தே திரட்டிக்கொண்டோம். கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என மிக உறுதியாக இருந்தோம்.
நாகராஜா, குமணன், நிர்மலன், சாந்தன், சுந்தரம், மாதி, கண்ணன், நந்தன், சிவம் அழகன், நெபோலியன் போன்ற தோழர்கள் எம்மோடு இருந்தனர். அதேவேளை மறுபக்கத்தில் பிரபாகரன், ராகவன், பண்டிதர், மனோமாஸ்டர், மாத்தையா, அன்ரன், தனி, ஆசிர், கலாபதி, சங்கர் போன்றோர் தனியாக இயங்க ஆரம்பித்தனர்.
தவிர, இன்னொரு குறித்த பகுதியினர் இரு பகுதியிடமுமிருந்து ஒதுங்கித் தமது சொந்த வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். செல்லக்கிளி, சித்தப்பா, ஜோன், குமரப்பா, காத்தான் போன்றோர் ஒதுங்கிச் செல்கின்றனர். இங்கு பிரபாகரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடியவர்கள் சிலர் பிரபாகரனோடு இணைந்து கொண்டமை விரக்கிதியையும் வெறுப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது ஏதோ உண்மை தான்.
பல காத தூரங்களை நடந்தே கடந்து சென்று இயக்க வேலைகளில் ஈடுபடும் வேளைகளில் எல்லாம் வெளி உலகிற்குத் தெரியாமல் எமக்குள்ளே நடந்த அணிசேர்க்கை மறுபடி மறுபடி நினைவுகளிற்கு வந்துசெல்லும்.
நாம் தனிக் குழுவாகச் செயற்பட ஆரம்பித்த பின்னர் அதன் முதலாவது நடவடிக்கையாக ‘புதிய பாதை’ என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பிக்கிறோம். குமணன் நாகராஜா, நந்தன், சாந்தன் போன்றோர் இந்தப் பத்திரிகையில் எமது நோக்கங்களை எழுத ஆரம்பித்தனர். சுந்தரம் துடிப்பான இயங்கு சக்தியாகத் தொழிற்பட்டார். அழகன், நந்தன், நெப்போலியன் போன்ற அனைத்து உறுப்பினர்களும் எதிர்காலம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும் கருத்துப்பரிமாறல்களையும் நடத்துவோம்.
அதே வேளை பிரபாகரனோடு இணைந்தவர்கள் ‘உணர்வு’ என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பிக்கின்றனர்.
இரண்டு குழுவிற்குமிடையே பெரியளவிலான தொடர்புகள் இருந்திருக்கவில்லை. ஆனால் ஆதரவாளர்கள் பலர் சமரச முயற்சிக்கு முனைகின்றனர்.
ஆதரவாளர்களுக்கும் உறுப்பினர்களுக்குமாக ரோனியோ செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று பிரபாகரன் குழுவினரால் வினியோகிக்கப்படுகிறது. இந்தப் பிரசுரத்தை வெளியிடுவதில் வெகுஜன வேலைகள் குறித்துப் பேசியவர்களும்இ இடதுசாரியம் குறித்துப் பேசியவர்களும் பங்களித்திருந்தமை வேதனையளிப்பதாக அமைந்திருந்தது.
அப்பிரசுரம் வருமாறு:
“எமது இயக்கத்தில் ஒரு சதிச் செயல் நடைபெற்று முறியடிக்கப்பட்டாலும் ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டே விட்டது. இதை நீக்கும் முகமாக எம்மியக்கத் தோழர்கள் அயராதுழைக்கின்றார்கள்.
பதவி ஆசை, தெளிவற்ற அரசியல் ஞானம், கட்டுப்பாட்டுக்கு அமையாத தன்மை, முதுகில் குத்தும் முயற்சிகள்இ இயக்கத் தோழர்களை குழப்பல், தனிமனிதனைச் சர்வாதிகாரியாகக் காட்டல், இயக்க நடவடிக்கைகளைப் பழித்தல், பயங்கரவாதிகள் என வர்ணித்தல் என்பன சதிச் செயல்களில் அமைந்திருந்தன.
தொடர்ந்தும் பழிவாங்கக் காத்திருக்கும்தன்மை சந்தேகங்கள் நம்பிக்கையின்மை தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட பிழையான நடவடிக்கைகள் பிழையான விளக்கங்களால் ஏற்ப்பட்ட கொந்தளிப்புக்கள் சதிச் செயலின் உச்சக்கட்டமாக அமைந்தது. அமைப்பு மாற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சில கலைப்புவாதிகள் இயக்கத்தை அடக்கும் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டனர். அதாவது வெகுசன அமைப்புடன் கூடிய இராணுவத்தை கட்டியெழுப்புவதைஇ புதிய அமைப்பாவதை இந்தியாவில் நின்ற கரிகாலனும் சதிகாரர்களால் வர்ணிக்கப்பட்ட கரிகாலனின் விசுவாசிகளும் தடைசெய்வார்கள் என்ற பிரச்சாரம்: இயக்க ஆரம்ப காலங்களில் இயக்கத்தில் நடைபெற்ற களையெடுப்புக்களுக்கு கரிகாலனே காரணம் என்ற பிரச்சாரமும்இ இயக்கத் தோழர்கள் மத்தியில் விசமத்தனமாக பரப்பப்பட்டது.
இலங்கைத்தீவிலே எமது பண்ணைகளுக்கும் புதிய அங்கத்தவர்களுக்கும் பொறுப்பாக இருந்த ஐயா, குமணன் போன்ற பொறுப்பான உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் தனிநபர் தாக்குதலை (கரிகாலன்) தொடுத்தும்இ இயக்கத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் வளர்த்தும் வந்தனர். இவர்கள் கரிகாலன் போன்றோர் இந்தியாவிலிருந்து வரமுன்னர் ஓர் சதிக்குழுவைக் கூட்டி புலி அமைப்பை சேர்த்து அழித்துவிட்டுஇ மக்கள் இயக்கம் என்று கூறி இலங்கைத் தீவில் பெரும்பாலும் இடதுசாரிகளின் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டனர்.
எமது கடந்தகால இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது, பயனற்றது, இதனால் மக்களுக்கு தீமையே விளைந்தது வேறு பயனில்லை என்றனர். கடந்தகால நிகழ்வுகள் பச்சையான பயங்கரவாதம் என்று வர்ணித்தனர். எமது குழு மார்வியா கும்பல், கார்லோஸ் கோஷ்டி எனக் கூறப்பட்டது.
ஆனால் இப்படி விமர்சித்தவர்களுக்கு மார்வியா, கார்லோஸ் போன்றவர்களைப்பற்றி தெரியாது. புலியமைப்பு தேவையில்லை எனவும் நாங்கள் மக்கள் அமைப்பாக மாறி புலி அமைப்பை இல்லமல் செய்து விட வேண்டுமென்றும் துப்பாக்கிகள் ஏன்? வெறும் மக்கள் இயக்கமாக மாறினால் மக்களே சமாளித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறினர்.
கரிகாலனின் விசுவாசிகள் என அவர்களால் கூறப்பட்டவர்கள் மீது தனிநபர் விமர்சனம் காரசாரமாக நடந்தது. அத்தனையும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் நிகழ்ந்தது. இயக்கத்தின் சில சம்பவங்களை ஆங்காங்கே பொறுக்கியெடுத்து இச்சம்பவங்களின் வரலாற்றுப் பின்னணியையும் சூழ்நிலைகளையும் ஆராயவோ, முன்னெடுத்து வைக்கவோ செய்யாது அச்சம்பவங்கள் இயக்கத் தோழர்கள் மத்தியில் வெறுமனே தூக்கிப் போடப்பட்டது. இதே அங்கத்தவர்களைக் குழப்பி அவர்களிடையே சந்தேகத்தை வளர்க்கத் தொடங்கியது. இச் செயலின் ஊடே வல்வெட்டித்துறை வாதம் முன்வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை மக்களையே இழிந்துரைக்கும் அளவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கரிகாலனும் அவர்போன்றோரும் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்வதை அனுமதிக்க மாட்டார்கள்எனவும் ; வெறும் இராணுவ வெறிபிடித்த பயங்கரவாதக் குழுவாகவே இருக்க விரும்புவார்கள் எனவும் அடித்துக் கூறப்பட்டது.
இயக்கத்தின் போக்கை விமாசித்தவர்கள்இ இயக்கத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தார்கள். இவர்கள் மத்திய குழுவின் மீது குற்றம் சுமத்தாமல் கரிகாலனே முழுப்பொறுப்புக்கு உரியவர் என்று எடுத்துக் கூறினர்.
இதுவரை காலமும் எம் இயக்கம் மத்திய குழுவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. தனிமனிதனின் ஆளுமைக்குட்பட்டு அல்ல.
ஆனால் கரிகாலன் அங்கத்தவர் மத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார் என்பது உண்மை. ஆனால் தனி மனித வழிபாடு செய்யப்படவில்லை. இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் என்பதாலும் இயக்க செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டதாலும் இயக்கத்தின் சகல அம்சங்களிலும் தலையைக் கொடுத்து வேலை செய்ததாலும் அயராத உழைப்பாலும் இயக்கத் தோழர்கள் மத்தியில் தனிச் செல்வாக்குப் பெற்றது இயல்பானதே.
சம உரிமை கொண்ட மத்தியகுழு அங்கத்தினர்கள் பலர் செயலாற்றல் அற்றவர்களாகவும் இக்கட்டான நிலையில் பிரச்சனை தோன்றினால் அதைச் சமாளிக்கும் ஆற்றலோ உடனடித் தீர்வைக் கொடுக்கும் தன்மையோ இல்லாதிருந்தனர். இதனால் எதற்கெடுத்தாலும் கரிகாலனையே அணுகினர்.
இயக்க ஆரம்ப வளர்ச்சி இத்தன்மையுடன் கூடியதால் ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் இந்நிலையைத் தொடர வழிவிட்டதால் கரிகாலனின் அனேக முடிவுகள் இயக்கமுடிவுகளாயிற்று. இந்நிலைக்கு இயக்க மத்திய குழுவின் செயலற்ற தன்மைகளே காரணம். இயக்கச் சுற்றாடலில் அமைப்புக்களின் தன்மையே கரிகாலனின் தீர்மானங்களை இயக்கத் தீர்மானங்கள் ஆக்கியதை மறந்து அவர்கள் கரிகாலனை அருவருக்கத்தக்க சர்வாதிகாரியாக இயக்கத் தோழர்களிடம் படம்பிடித்துக் காட்டினர். இவர்களை நம்பிய புதிய அங்கத்தவர்களிடமும் இயக்கத்தில் உள்ள விசுவாசமான அங்கத்தவர்களிடமும் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
சுய விமர்சனம் என்பது கடந்தகால வரலாற்றை ஆராயக் கூடிய முறையில் ஆராய்ந்து அதன் மூலம் இயக்கத்தை மேலும் உறுதியாக வளர்த்தெடுக்கும் இலட்சியத்தைப் பெற்றிடும் வழிமுறைகளைக் கூர்மைப்படுத்தவுமே உதவ வேண்டுமே ஒழிய இயக்கத்தில் குழப்பங்களையோ, அழிவுகளையோ ஏற்படுத்துவதற்காக அல்ல.
அத்துடன் சுயவிமர்சனம் என்ற போர்வையில் வழமையான கட்டுப்பாடுகளை மீறி எல்லோரும் கன்னா பின்னா என்று கதைக்கவும் அனுமதித்தார்கள். அவ்வாறு கதைக்க அங்கத்தவர்களுக்கு பொறுப்பில் இருந்த ஐயாஇ குமணன் போன்றோர் விளக்கம் அளிக்க முடியாமல் அவர்களின் கதைகளை மேலும் சிக்கலாக்கி குழப்ப நிலைமையை மோசமாக்கி விட்டார்கள். இக்குழப்ப நிலையின் உச்சக் கட்டத்தில் நாம் ஒன்று கூடுதல் தவிர்க்க முடியாததாயிற்று. இதனால் பொதுச்சபை கூட்டப்பட்டது.
சதிக்குழுவினர் தமது வெறுமையான மக்கள் அமைப்புத்திட்டத்திற்கு முரண்படக் கூடியவர்களை ஒதுக்கித்தள்ள திட்டமிட்டார்கள். கூடப் போகும் பொதுச்சபையில் தம் கருத்துடன் இணையக் கூடியவர்களையும் ஆதரவாளர்களையும் அமர்த்த இருந்தனர்.
மத்திய குழுவைக் கலைப்பதன் மூலம் அதிலுள்ளவர்களை அதிகாரமற்றவர்கள் ஆக்கி அதற்குள்ளே ஐயா, சிவனடியார் இருந்தாலும் கரிகாலன் போன்றோரையே ஒதுக்கக் குறி பார்க்கப்பட்டது.
அதன்படி ஐயா, சிவனடியார் அதிகாரம் பின்னணியில் இருக்கத் தக்க வகையில் புதிய குழு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி யாவரும் இலங்கைத்தீவு வந்தடைந்ததும் மத்திய குழு கூடி சில போலியான சுயவிமர்சனம் செய்து தன்னைத் தானே கலைத்துக் கொண்டது.
பொதுக்குழு கூடி ஐயா போன்றோரின் சிபார்சில் புதிய தற்காலிக செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. இதைக் கரிகாலனோ உண்மையான இயக்கப் பற்றுடைய தோழர்களோ எவ்வித சந்தேகக் கண் கொண்டும் நோக்காது அவர்களின் உள்நோக்கங்களை அறியாது சம்மதித்தனர்.
இதன்பின் இவர்களுடைய துர்ப்பிரசார விடயங்களும் இயக்கத்தைப் பற்றிய துரோகத்தனமான விமர்சனங்களும் உண்மையான இயக்கத் தோழர்களுக்கு எட்டியது. சதிகளில் பங்குபற்றிய புதிய அங்கத்தினர்கள் கரிகாலனைப் பற்றிக் கூறப்பட்ட வாதங்கள் பிழையானதெனக் கரிகாலனின் சொல்லிலும் செயலிலும் கண்டு கொண்டனர்.
இயக்கத்தை பிழையான வழியிலிருந்து உண்மையான பாதையில் இட்டுச் செல்லப்படுவதாக கருதிய புதிய அங்கத்தினர் நாளடைவில் தாம் தவறு செய்து விட்டதை உணர்ந்தனர். சதிகாரரின் ஒரு பக்க நியாயங்களை கேட்டு ஏமாந்ததை உணர்ந்தனர். இந்நிலையில் நிலைமை வேறுவிதமாக கொந்தளிக்க தொடங்கியது.
புதிய அமைப்பினர் ஆயுதங்களை நிராகரித்து இராணுவ முழுமையாக சிதைக்க ஆரம்பித்ததைக் கண்டு கொண்டனர். அவர்கள் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி பிறகு அதன் மூலம் ஒரு இராணுவ அமைப்பை உருவாக்கப் போவதாகவும் இப்போதுள்ள அமைப்பை முற்றாக கலைக்கப் போவதாகவும் கூறத் தலைப்பட்டனர்.
இது அங்கத்தினர்களிடையே சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் புதிய அமைப்பின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் சதிகாரர்காளால் கூறப்பட்ட பொய்யான விமர்சனங்களை அம்பலப்படுத்த நேருக்கு நேர் எல்லா அங்கத்தினர்களும் தெரிந்து கொள்ள மீண்டும் பொதுச்சபை கூட்டுமாறும் வலியுறுத்தினர்.
கரிகாலனும் தன்னைப்பற்றிய பிழையான குற்றச்சாட்டுகளுக்கும் புதிய அமைப்பின் தற்காலிக செயற்குழுவிடம் நீதி கேட்டார். குற்றவாளியெனில் தண்டிக்கும் படியும் இல்லையெனில் இதற்கு பொறுப்பானவர்களை அத்தவறான பிரச்சாரங்களை அங்கத்தினர் மத்தியில் இருந்து நீக்கும் படியும் கோரினார். ஆனால் சதிகாரர் பொதுச்சபையில் சந்திக்க மறுத்து விட்டனர்.
தலைக்கு மேலே வெள்ளம் ஏறிய நிலையைக் கண்ட சதிகாரர் இயக்க இரகசிய இடங்களில் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்ற முனைந்தனர். அவ்வாறு சில இடங்களில் இருந்து தம் புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அப்பாவி அங்கத்தினரை ஏமாற்றி ஆயுதங்களை கைப்பற்றினர். இக்குட்டு அம்பலமாகவே எல்லோர் மத்தியிலும் குற்றவாளிகளாயினர்.
இதனால் இயக்கத்திலிருந்து வெளியேறி தப்புவது ஒரே வழியெனக் கண்டனர். கைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கும் புலி அமைப்பை அழிக்கவிருந்த அவர்கள் இயக்க உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கும் ஆளாகினர்.
இந்நிலையில் தான் தாம் கைப்பற்றிய உடைமைகளை இயக்கத்திடம் தாராள நோக்குடனும் பெருந்தன்மையுடனும் விட்டுச் செல்வதாக சொல்லிக் கொண்டனர். எமது வெளி அமைப்பின் ஆரம்ப வேலைத்திட்டங்களைக் கைப்பற்ற முனைந்து தோல்வியடைந்தனர். கடந்த எட்டு மாத காலமாக இயக்கத்துக்குள் இருந்து கொண்டு பல நாசவேலைகளை செய்து வெளியேறி விட்ட பதின் மூவரில் எழுவர் புதியவர்களாகும்.
இப்புதியவர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஐயா, குமணன் போன்றோரிடமே தொடர்பு கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் மூளை சதிகாரரினால் நன்கு கழுவப்பட்டு பொய்கள் திணிக்கப்பட்டள்ளது. அப்புதிய விலகிச் சென்ற அங்கத்தினர்கள் தம் நிலையை உணரும் காலம் அதிக தூரத்தில் இல்லை.
விலகிச் சென்றவர்களின் விலகலை நாம் அங்கீகரிக்கவில்லை. அவர்களில்லாமலே அவர்களைப்பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குற்றவாளிகள் தவிர்ந்த பிழையான வழியில் இட்டுச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் வந்து இயக்க நிபந்தனையுடன் அனுமதிப்போம். மேலும் இச்சிக்கல்களால் சிலர் மிகவும் மனமுடைந்தார்கள். அவர்களை மாற்றி உற்சாகத்துடன் வேலைசெய்யும் பொறுப்பு எம்மிடம் உண்டு.
மேலும் பொறுப்பு வாய்ந்த இயக்கத் தோழர்கள் விலகிச் சென்றவர்களை திரும்பவும் இணைக்க முயற்சி செய்தார்கள். இதற்கு நாம் ஆதரவு அளித்ததோடு சமாதானக்காரரிடமும் பொதுக்குழு கூட்டப்பட வேண்டிய அவசியத்தையும் அதை விட வேறு நிபந்தனைகள் இடப்போவதில்லை யென்றும் கூறினோம். மத்திய குழுவை கலைத்து பொதுக்குழுவை கூட்ட மறுத்து முதற்கூடிய பொதுக்குழுவின் படி தெரிவு செய்யப்பட்ட தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து தொடர்ந்து செயலாற்ற உடன்பட்டால் இணைவதாக கூறினர் சதிகாரர்.
நாம் அத்தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து பொதுக்குழு கூடவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினோம். சில விடயங்களில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடந்தும் கூட ஒற்றுமை ஏற்பட முடியாமல் போய் விட்டது.
இவ்வளவு குழப்பம் ஏற்றட்ட பிறகும் பொதுக்குழு சரியான விளக்கம் அளிக்காது இயங்க முடியாதென்பதே எமது வாதம். இதனால் இணைப்பை ஏற்படத்த முன் நின்ற இயக்க அங்கத்தினர் கலைப்பு வாதிகளின் சதிச் செயல்களையும் குதர்க்க வாதங்களையும் உள் நோக்கங்களையும் கண்டு கொண்டனர். இதனால் அவர்கள் ஒற்றுமை முயற்சியைக் கைவிட்டனர். எரிமலை வெடித்தது. வழிந்து ஓய்ந்து உள்ளது.
எரிமலை வெடிப்பின் காரணங்களை அறிந்து ஆராய்ந்து தோன்றியதற்கான நிலைமைகளை தெரிந்து கொள்ள முயல்கிறோம். இம் முயற்சி இயக்கத்தை உறுதியாக வளர்த்தெடுக்கவும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாது தவிர்க்கவும் வாய்ப்பாக இருக்கும். மொத்தத்தில் எமது தோழர்களின் அரசியல் சித்தாந்த வறுமையே எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. இதனால் அரசியல் தெளிவுடன் அனைவரும் செயல்பட்டு இராணுவ அமைப்புடன் இணைந்து கொள்வார்கள் எனின் உண்மையான விடுதலை வீரர்களாக மாறுவார்கள். இத்தயாரிப்புக்களில் ஈடுபடவும்; செயற்படவும், சீரமைக்கவும் , மத்திய குழுவிற்காக தற்காலிக செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெகுவிரைவில் மத்தியகுழு செயற்படத் தொடங்கும்.
தற்காலிக செயற்குழு
(செயற்குழு சார்பில்)”
இங்கு ஐயா என்பது என்னையும், கரிகாலன் என்பது பிரபாகரனையும், சிவனடியார் என்பது நாகராஜாவையும் குறிப்பிடுவதாகும்.
இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு 13 வருடங்களின் பின்னர் 90 களில் கனடாவிலிருந்து வெளியாகும் தாயகம் இதழில் பிரசுரமாகியிருந்தது.
மக்கள் அமைப்புக்களை உருவாக்குவது குறித்த மார்க்சிய வழிமுறை தொடர்பாகப் பேசிய எம்மையே இடதுசாரிகள் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கும் முயற்சி என்று குறிப்பிடுகின்றனர். தவிர, ஆரம்ப காலத்தில் குமணனும் பின்னதாக சுந்தரமும் மாபியாக் கும்பல், கர்லோஸ் கும்பல் என்று பிரபாகரன் சார்ந்தவர்களைக் குறிப்பிடனர் என்பது துரதிர்ஸ்டவசமானது. முதலில் சமூக வரம்புகளை எல்லாம் மீறி மக்களின் வாழ்வலங்களைக் கண்டு கோபம்கொண்டு இணைந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரின் வழிமுறை தவறானது என விமர்சிபதை அவர்கள் மீதான தனிமனித தாக்குதல்களிலிருந்து ஆரம்பிக்க முடியாது.
இதன் இன்னொரு புறத்தில் வல்வெட்டித்துறை ஆதிக்கம் குறித்த கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. மத்திய குழுவில் நானும், சிவனடியார் எனக் குறிக்கப்படும் நாகராஜாவும், பிரபாகரன் மீதான விமர்சனத்தை முன்வைக்க அதனை ஆழப்படுத்திய சுந்தரம் போன்றோர் அவரின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக முன்னெடுத்தனர். மத்திய குழுவிற்கு ஆரம்பகாலக் ‘களையெடுப்பு’ களிற்கு மௌனமாக இருந்த பொறுபை நாங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளவில்லை என்பது கூட மறுபக்கத் தவறு.
அப்போது சுந்தரம் புதிய உறுப்பினர் என்பதால் பிரபாகரன் சார்ந்த குழுவினரின் முழுமையான கோபம் என்பது என்மீதும், நாகராஜா மற்றும் குமணன் மீதும் தான் அதிகமாக ஒருமைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் வெளிப்பாட்டைத் துண்டுப்பிரசுரத்திலும் காணலாம்.
பிரசுரத்தில் கூறப்பட்டிருப்பது போல இனிவரும் சில மாதங்கள் எமக்கிடையேயான சமரச முயற்சிகளின் காலமாகக் கடந்துபோனது. பல தடவை இணைவுகளும் பிரிவுகளும் வந்து போயின.சமரச முயற்சிகளின் போது நடந்த சம்பவங்கள் இன்றைய வரலாற்று மீட்சியோடும் ஒப்பு நோக்கத் தக்கவை.
பலர் எம்மிடையேயான சமரச் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுள் இப்போது புளட் இயக்கதின் தலைவராக இருக்கும் சித்தார்தனும் ஒருவர்.
(இன்னும்வரும்..)
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.


தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)


இன்று புளட் அமைப்பின் தலைவராகவிருக்கும் சித்தார்தன் இரு குழுக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளிலும் சமரச முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார். பிரபாகரன் குழுவோடு பேசிவிட்டு எம்மைத் தேடிவந்த சித்தார்தன் நாம் ஏன் பிரபாகரன் குழுவோடு இணைந்து செயற்படக் கூடாது என கேள்வியெழுப்புகிறார். நாம் எமது கோரிக்கைகள் குறித்துக் கூறுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வழி தவறானது என்றும் அது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை தெளிவுபடுத்த முனைகிறோம். அவர் அதனைப் புரிந்து கொண்டதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. அவர் கூறியதெல்லாம் இரண்டு குழுக்களுமே தமிழ் ஈழத்தை நோக்கியே போராடுகிறீர்கள் பின்னர் ஏன் இணைந்து செயற்படக் கூடாது என்பதே.
சித்தார்த்தன் மட்டுமல்ல எம்மோடு இணைவு குறித்தும் இணக்கப்பட்டு குறித்தும் பேசியவதற்கு முன்வந்த அனைத்துத் தரப்பினரும் இதே வகையான சிந்தனைப் போக்கினைத் தான் கொண்டிருந்தனர்.
இதே வேளையில் குலம் சிறையிலிருந்து விடுதலையாகிறார். விடுதலையான மறுதினமே அவர் எம்மைத் தேடிவருகிறார். எமது பிரிவை அறிந்து விரக்தியடைந்த அவர் எமது இரு பகுதியினருடனும் பல தடவைகள் பேச்சுக்களில் ஈடுபடுகிறார். இதன் பின்னதாக லண்டலிருந்து ராஜா என்பவரும் எம்மிடம் வருகிறார். புலிகளோடு முன்னமே தொடர்பிலிருந்த அவர் எமது இணைவிற்காக தொடர்ந்து உழைக்கிறார். பல தடவைகள் பிரபாகரன் குழுவைச் சார்ந்தோரையும் எம்மையும் மாறி மாறிச் சந்திக்கிறார். இவரின் முயற்சியின் பலனாக பழைய மத்திய குழுவை மறுபடி ஒன்று கூடி பிரிவிற்கான காரணத்தை விவாதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
பிரிவிற்கு முன்னதாக மத்திய குழுவில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே அங்கம் வகிக்கிறோம். நான், நாகராஜா, பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்ற நால்வரில் நாகராஜாவும் நானும் புதியபாதைக் குழுவில் செயற்பட்டுகொண்டிருக்க பேபி சுப்பிரமணியம் பிரபாகரன் சார்ந்த குழுவோடு இணைந்திருந்தார்.
இந்த சந்திப்புக் குறித்து சுந்தரம், கண்ணன், நாகராஜா, குமணன் உட்பட எமது குழுவிலிருந்த அத்தனை உறுப்பினர்களோடும் விவாதிக்கிறோம். சுந்தரம்இ கண்ணன் போன்றோரிற்கு ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறுவது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் இறுதியில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகிறார்கள்.
இறுதியாகச் சந்திப்பு நிகழும் நாள் தீர்மானிக்கப்படுகிறது. ராஜாவின் ஏற்பாட்டின்படி நானும் நாகராஜாவும் இருக்கும் இடத்தை நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் வருகின்றனர். யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த தொலைக் கிராமம் ஒன்றில் சந்திப்பு நிகழ்கிறது. பிரபாகரன் என்னோடு அதிகமாகப் பேசவில்லை. சில நிமிடங்கள் எங்கிருது ஆரம்பிப்பது என்ற சிந்தனையோடத்திற்கு நடுவே பேச ஆரம்பிக்கிறோம். நடந்து முடிந்த இதயம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்தே பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம்.
இன்னும் பசுமை கொழிக்கும் நினைவுகளாக நிறைந்திருக்கும் ஒவ்வொரு போராளிகளும், நடந்தே கடந்த காடுகளும் மலைகளும் அப்போதும் எனது நினைவுகளில் மறுபடி மறுபடி வந்துபோயின. எனக்கு நேரெதிரில் பிரபாகரன் பேபியுடன் தயாராக இருந்தார்.
எம்மில் யாருக்குமே பிரிந்து செல்வது என்பதும் தனியான குழுக்களாகச் செயற்பட வேண்டும் என்பதும் அடிப்படை நோக்கமாக இருந்ததில்லை. நாம் இணைந்து செயற்பட வேண்டும் ஆனால் நமது திசைவழி தவறானது என்பதையே நானும் நாகராஜாவும் மறுபடி மறுபடி கோடிட்டுக் காட்டிக்கொண்டிருந்தோம்.
பேபி எப்போதும் போல மௌனமாகத்தான் இருந்தார். பிரபாகரன் இடைக்கிடை குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவிக்கிறார். விவாதங்கள் சில நிமிடங்கள் நீடிக்க, கோரிக்கைகள் குறுக்கப்பட்டுகொண்டே வருகிறது.
செயற்குழு, மக்களமைப்பு, மக்கள் போராட்டம் என்பவற்றிலிருந்து இணைவை ஏற்படுத்தும் நோக்கில் கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே வருகிறோம். எதிலும் இணக்கம் ஏற்பட்டாகவில்லை. இறுதியில் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கொலைகளுக்கான சுயவிமர்சனம் செய்துகொள்வோம் என்கிறேன்.
இந்த வேளையில் தான் முதல் தடவையாகப் பிரபாகரனிடம் மைக்கல் பற்குணம் கொலைகள் குறித்த எனது விமர்சனத்தை முன்வைக்கிறேன். இதுவரையில் சுந்தரம், குமணன் போன்றோர் கொலை குறித்துப் பேசும் போதெல்லாம் செயற்குழு தெரிவுசெய்யப்பட்டு மக்கள் வேலைகள் முன்னெடுக்கப்படுதலே இப்போதைக்கு பிரதானமானது என்று கூறி அவர்களைத் தடுத்திருந்தேன். இப்போது நான் பிரபாகரனை நோக்கி நேரடியாக அதே கேள்வியை முன்வைக்கிறேன்.
மைக்கலையும் பற்குணத்தையும் வெறும் பயத்தினதும் சந்தேகத்தினதும் அடிப்படையில் கொலைசெய்ததை சுயவிமர்சன அடிப்படையில் தவறு என்று ஏற்றுக்கொண்டு இயக்கவேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று கோருகிறேன்.
நாம் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறோம் அவற்றைத் தவறுகள் என்று ஏற்றுக்கொண்டு என்று ஏற்றுக்கொண்டு அமைப்பு வேலைகளில் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டும் தான் எனது குறைந்தபட்சக் கோரிக்கையாக அமைந்தது.
தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உள்ளக ஜனநாயகமும் விவாதத்திற்கான வெளியும் உருவாகும் என நானும் நாகராஜாவும் நம்பியிருந்தோம். இவ்வாறான பன்முகத்தன்மையின் அவசியத்தை, விவாதங்களூடாக முடிவுகளை நோக்கி நகரும் தேவையை அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
நான் கூறிய அனைத்தையும் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன், எனது கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறார். பேபி சுப்பிரமணியமும் அதனை ஆமோதிக்கிறார். தான் பற்குணம் மைக்கல் ஆகியோரைக் கொலைசெய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கொலைகளை அன்றும் இன்றும் சரியான செயற்பாடாகவே கருத்துவதாகப் பிரபாகரன் வாதிடுகிறார். அதற்கு மேலேயும் சென்று கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலைசெய்துகொள்வேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்.
மைக்கல் வெளியேறி பாதுகாப்புப் படைகளிடம் சிக்கிக் கொண்டால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியிருந்தோம். பற்குணம் தனியாகச் சென்று செயற்பட விரும்பிய போதும் இவ்வாறான மனோநிலையிலேயே இருந்திருக்கிறோம். அவர்கள் அரசின் உளவாளிகளாகவோ, ஆதரவாளர்களகவோ, இன்னும் காட்டிக்கொடுப்பாளர்களாகவோ இருந்ததில்லை.
எது எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைப் பாதுகாக்க இந்தக் கொலைகள் அவசியமானது தான் எனப் பிரபாகரன் கூறுகிறார்.
பிரபாகரனின் இந்தக் கூற்றானது எமக்கு பேசுவதற்காக இருந்த அனைத்து வழிகளையும் மூடிவிடுகிறது. தனிமனிதப் படுகொலைகளைத தவறு என்று தெரிந்த பின்னரும் நியாயப்படுத்துகின்ற போக்கானது, இணக்கப்பாட்டை நோக்கி நகரமுடியாத இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
பேசுவார்த்தை எந்த முடிவையும் எட்டவில்லை. பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.
குறைந்தபட்ச இணக்கத்திற்குக் கூட முன்வர மறுத்த பிரபாகரன் குறித்து எமக்கு மிகுந்த விரக்தியும் வெறுப்பும் தான் எஞ்சுகிறது.
எமது அமைப்பின் வருவாய்க்காக நாட்கூலியையும் தோட்டவேலைகளையுமே நம்பியிருந்த துன்பகரமான சூழலில் பிரபாகரன் குழுவை எதிர்த்துக்கொண்டு எம்மோடிருந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். பத்திரிகை ஊடாக மக்கள் மத்தியில் போராட்டத்தை நோக்கிய சிந்னையை விதைக்க வேண்டும் என்றும் மக்களமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் நாம் மிக உறுதியான கொள்கைப்பிடிப்போடிருந்தோம்.
எது எவ்வாறாயினும் நாம் எமது வேலைகளில் எந்தப்பின்னடைவையும் கொண்டிருக்கவில்லை. புதிய பாதை சஞ்சிகைக்கான வேலைகளை தொடர்கிறோம். தவிர, சண்முகதாசனின் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முக்கிய இளம் உறுப்பினர் ஒருவரை அணுகி அவரூடாக அரசியல் வகுப்புக்களையும் ஒழுங்கு படுத்துகிறோம்.
தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலையை நோக்கி அனைத்தையும் துறந்து முழு நேர உறுப்பினர்களாக இணைந்திருந்த பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளையும் ஏதாவது ஒரு குறைந்தபட்ச அடிப்படையிலாவது ஒருங்கமைக்க வேண்டும் என்ற உணர்வில் தான் நாம் பேச்சுக்களுக்குச் சம்மத்தம் தெரிவித்திருந்தோம்.
பேச்சுக்களின் தோல்வி எமக்கு மட்டுமல்ல, இணக்கப்பட்டை ஏற்பட முனைந்த ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.
(இன்னும்வரும்..)
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்


மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)


ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.
ராஜாவின் வீடு ஊர்காவற்துறையை அண்மித்த பகுதியில் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்ததால் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைப்பதற்குப் பொருத்தமான இடமாகத் தெரிவுசெய்து கொள்கின்றனர். தீவுப்பகுதியான ஊர்காவற் துறையில் அப்போதெல்லாம் பொலீஸ் இராணுவக் கெடுபிடிகள் பெரிதாக இருந்ததில்லை. ஒன்றுகூடலுக்கான பாதுகாப்பான பிரதேசமாக அமைந்திருந்தது. அன்று அதிகாலையே அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு ஊர்காவற்துறையை நோக்கிப் பயணிக்கிறோம். வழி நெடுகிலும் எம்மைப் போன்ற இளைஞர்களைச் சந்திக்கிறோம். எந்தத் துரயமும் இன்றி நண்பர்களோடு உல்லாசமாய் தெருக்களில் கூடித்திரிந்த இளைஞர்களைக் கடந்து செல்கிறோம்.
பிரபாகரன் குழுவில் இருந்தவர்கள் கூட எங்கோ தொலைவில் தெரிந்த நம்பிக்கையோடே அங்கு வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த அனைவரும் எதோ நோக்கத்திற்காகக் கூடியிருந்த இளைஞர்கள். எங்காவது ஒரு புள்ளியில் மரணித்துக் கூடப் போய்விடலாம் என்று தெரிந்திருந்தும் தாம் சார்ந்த மக்கள் கூட்டத்திற்காகப் போர்குரல் கொடுக்க வந்திருந்தவர்கள்.
நிண்ட நேர விவதங்களைக் கடந்து செல்கிறோம். நமது தேசத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. போராடவென்று முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட நமது முன்னோக்கிய அசைவியக்கம் குறித்த அக்கறை அனைவரிடமும் காணப்பட்டது.
ஒரு சிலரைத் தவிர யாருக்கும் பிரிந்து சென்று தனித்தனிக் குழுவாக இயங்குவதில் விருப்பு இருக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அந்த விவாதங்களில் நடுவே பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் வந்து செல்கின்றன. ஆக, பன்முகத் தன்மை கொண்ட, ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் ஏற்றுக்கொள்கின்ற மத்திய குழு அமையுமானால், நிலவும் பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரலாம் என்ற கருத்து பெரும்பான்மையாகிறது.
அப்போதுதான் ஒரு மத்திய குழுவை வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. வாக்கிடுப்பின் பின்னர் உருவாகும் மத்திய குழு பத்திரிகை வெளியிடுவது குறித்தும் தீர்மானிக்கும் என்ற கருத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்து மதியத்திற்குச் சற்றுப் பின்னதாக வாக்கெடுப்பு ஒன்று உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்படுகிறது. பிரபாகரன் எம்மோடு அங்கு விவாதத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அவர் தவிர நந்தனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இவர்கள் இருவருமே அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. பலரின் வேண்டுகோளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவரும் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தாம் விரும்பியவர்களது பெயர்களை சிறிய காகிதத்தில் எழுதி வாக்களிப்பதாகத் தீர்மானிக்கப்படுகிறது. பத்து வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றவர்களை விடுத்து ஏனையோரில் விருப்புக்கொண்ட ஆறு பேரைக் கொண்ட மத்திய குழு ஒன்று உருவாக்குவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
தம்பி ,ராகவன்,பண்டிதர்,மனோ,மாத்தையா,அன்ரன்,தனி,ஆசீர், கலாபதி,சங்கர் ,குமரப்பா,காந்தன்,பீரீஸ்,நாகராஜா,குமணன்,சாந்தன், மாதி,நிர்மலன்,சுந்தரம்,நந்தன்,அழகன், நெப்போலியன்,சிவம் ஆகியோரோடு இன்னும் சில தோழர்களும் என்னோடு கலந்துகொண்டிருந்தனர்.
அந்த வாக்கெடுப்பின் போது, சாந்தன் 27 வாக்குகளை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து பெற்று அனைவரினதும் அபிமானம் பெற்ற போராளியாகிறார்.
சாந்தனுக்கு அடுத்ததாக எனக்கும் அன்டனுக்கும் 26 வாக்குகள் கிடைக்கின்றன. பிரபாகரன் 25 வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். தனி 21 வாக்குகளையும், மனோமாஸ்டர் 19 வாக்குகளையும், ராகவன் 16 வாக்குகளையும் பெற்றுக்கொள்கின்றனர் நாகராஜா, பேபி, குமணன் போன்ற கோடிட்டுக் காட்டக் கூடிய பலர் பத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டனர்.
மனோமாஸ்டர் மத்திய குழுவில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அவருக்கு அடுத்ததாக வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்ட ராகவனை மத்திய குழுவில் இணைத்துக் கொள்கிறோம். ஆக, இப்போது பிரபாகரன்,நான், சாந்தன்,அன்டன்,தனி,ராகவன் என்ற ஆறுபேர் கொண்ட மத்திய குழு உருவாகிறது.
இவ்வாறு மத்திய குழு ஒன்று தெரிவு செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், பத்திரிகை வெளியிடுவதற்கான முடிவுககளை மேற்கொள்கிறோம்.
பத்திரிகையின் பெயர் தொடர்பான விவாதங்கள் எழுகின்றன. உணர்வு என்பது பிரபாகரன் குழுவினரின் சஞ்சிகையின் பெயராகவும், புதிய பாதை எமதாகவும் இருந்தது. வந்திருந்தவர்களின் எண்ணைக்கையில் இருபகுதியினருமே அரைவாசி அளவில் இருந்ததால், ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அவ்வேளையில் அங்கிருந்த குமரப்பா புதிய பாதை என்ற பெயரையே விரும்புவதாகத் தெரிவித்ததால், அப் பெயரையே இறுதியில் சஞ்சிகையின் பெயராக ஏற்றுக்கொள்கிறோம்.
தமிழீழ விடுதலை புலிகள் பிளவடைந்த வேளையில் விரக்தியுற்ற நிலையில் அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகத் தீர்மானித்த குமரப்பா, நாம் மீண்டும் இணைவதை அறிந்துகொண்டதும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இவரைத் தவிர செல்லக்கிளி போன்ற சில போராளிகள் எந்தத் தொடர்புமின்றி ஒதுங்கியிருந்தனர்.
மத்திய குழு தெரிவாகிவிட்டது. பத்திரிகைக்கான பெயரும் உருவாக்கப்பட்டுவிட்டது. மீண்டும் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம். இணைவை ஏற்படுத்திய ராஜாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாளாகவும் அது அமைந்திருந்தது. அனைவருடனும் தனித்தனியாகப் பேசுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் தான் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரிந்து செல்லப்போவதாகவும் கூறுகிறார். அதற்கான காரணங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை எனினும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார். இப்போது அவர் பிரிந்து செல்வதாகக் கூறியதும் யாரும் தடுக்கவில்லை. பேபி சுப்பிரமணியமும் பிரபாகரனுடன் தானும் செல்வதாக எழுந்து செல்கிறார்.
இவ்வேளையில் சுந்தரம் பிரபாகரனை நோக்கி, கைத் துப்பாகியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு கோருகிறார். அதற்குப் பிரபாகரன் பதிலளிக்க முன்பதாகவே ஏனைய அனைவரும் துப்பாக்கியை அவர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கட்டும் என ஒரு மனதாகக் கூறுகின்றனர்.
இணைவு முயற்சியை ஏற்பாடுசெய்த ராஜா கூட பிரபாகரனுட நீண்ட நேரம் உரையாடுகிறார். இணைந்து செயற்படும்படி கூறுகிறார். பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் ஆகிய இருவர் மட்டுமே பிரிந்து சென்று எதையும் சாதித்துவிட முடியாது என்றும் ஒற்றுமையாகச் செயற்படும்படியும் வலியுறுத்துகிறார். பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேபி சுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் என்ன முடிவெடுக்கிறாரோ அது தான் அவரது முடிவும். நாங்கள் இணைந்திருந்த காலம் வரை பிரபாகரனுக்கு எதிராக அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொண்டதில்லை.
புதிதாக உருவான மத்திய குழுவில் பிரபாகரன் சார்ந்த நான்கு பேரும் எமது குழுவைச் சார்ந்த இரண்டு பேரும் உறுப்பினர்களாக தெரிவாகின்றனர். பிரபாகரன் பிரிந்து செல்வதாகக் கூறியதும் இந்தக் குழு ஐந்து பேராகச் சுருங்கிவிடுகிறது.
எது எவ்வாறாயினும் இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. எம்மைப் பொறுத்தவரை மக்கள் வேலைகளூடன தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்குவதாகவும், தம்பியுடன் சார்ந்தோரைப் பொறுத்தவரை இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் காணப்பட்டது. எமது கருத்துக்களுக்கு உட்பட்டவர்களின் விட்டுக்கொடுப்பும், எதிர்க்கருத்துடையவர்களின் நெகிழ்ச்சியும் இணைவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை மட்டுமே தளமாகக் கொண்டிருந்தது. பொதுவான அரசியல் தளம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அதற்கான முதிர்ச்சியும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.
இரு புறத்திலுமே இவ்வகையான முரண்பாடுகளை வெறுமனே தனி நபர் முரண்பாடுகளாக மாற்ற முற்பட்டவர்களும் தனி நபர் முரண்பாடாகக் கருதியவர்களும் உண்டு. சுந்தரம். கலாபதி, நந்தன், மனோ போன்றோரின் தனிநபர் சிக்கல்கள் ஆளுமை செலுத்துவனவாகவும் அமைந்திருந்தன என்பதையும் மறுக்க முடியாது.
இச்சம்பவம் நடந்து சில நாட்களில் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் கூட்டத்திற்கு பிரிந்து செல்வதாகச் சென்ற பிரபாகரன் மறுபடி சமூகம் தருகிறார். பிரபாகரன் வெளியேறுவதாகக் கூறுவிட்டுச் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் மத்திய குழுவிற்கு வந்ததும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.
அவர் வந்ததுமே மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. மக்கள் வேலை பயனற்றது என்றும் இராணுவ நடவடிக்கைகளே அவசியமானது என்றும் உடனடியாக நாம் இராணுவம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்றும் பிரபாகரன் வாதம் புரிய ஆரம்பிக்கிறார்.
சாந்தனும் நானும் கடந்த காலத்தின் அந்த வழிமுறை தவறானது என்பதை திரும்பத் திரும்ப அரசியல் காரணங்களோடு முன்வைக்கிறோம். பிரபாகரன் அந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. ஒரு பலமான இராணுவமும் அதற்குரிய தலைமையும் மட்டும்தான் அவசியம் என்று வாதிடுகிறார். இராணுவத் தலைமை குறித்த விவாதங்களுக்கு அப்பால் மேலதிகமாக அவர் எங்கும் செல்லவில்லை. எம்மால் அப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பிரபாகரனுக்கும் எமக்கும் இடையிலான முரண்பாடென்பது தெளிவான அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. ராகவன் இரண்டு பகுதியினருக்கும் இடையில் சமரசத்திற்கு முயற்சிக்கிறார். இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய பாதையின் ஒரு பிரசுரமும் வெளியிடப்படுகிறது.
(இன்னும்வரும்..)

புளொட்(PLOTE) இயக்கத்தின் உருவாக்கம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 23)


மத்திய குழுக் கூட்டங்கள் இரண்டு மூன்று தடவை நடைபெறுகிறது. ஒவ்வொரு தடவையும் பிரபாகரன் தனது அதிர்ப்தியைத் தெருவித்துக்கொள்கிறார். புதியபாதையின் ஒரு இதழ் மட்டுமே வெளிவருகிறது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்த அந்த வெளியீட்டின் பின்னர் அது நிறுத்தப்பட்டு விடுகிறது. அப்போது நடைபெற்ற மூன்று மத்திய குழு ஒன்று கூடல்களுக்கும் பிரபாகரன் தவறாமல் வருகிறார்.
இராணுவ வழிமுறை தான் சரியானது என மீண்டும் மீண்டும் வாதிக்கிறார். இலங்கை அரசின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான எமது நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவில் பேசப்படுவதைவிட எமது உள்முரண்பாடுகள், இயக்கத்தின் திசைவழி ஆகியவற்றைச் சுற்றியே விவாதங்கள் தொடர்கின்றன. வெகுஜன அமைப்புக்களை உருவாக்குவது என்பது பிரபாகரனிற்குத் தேவைவற்ற ஒன்றாகவே தென்படுகிறது. புதிய தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டும்; ஆயுதங்களையும் அவற்றைக் கையாளத் தெரிந்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கமாக இருந்தது.
ஒரு வகையில் இன்றைய புறநிலைகளிலிருந்து சிந்திக்கும் போது இந்த விவாதங்கள் என்பன ஒரு அரசியல் இயக்கத்தின் செல் திசை நோக்கிய ஆரம்ப விவாதங்களாகவே அமைந்திருக்கலாம் என்று கருதுவதுண்டு. இரண்டு முரண்பட்ட பக்கங்களிலும் அனுபவமின்மை அரசியல் வளர்ச்சியின்மை போன்றன விவாதங்கள் தனிநபர் பிரச்சனைகளாக மாறியதுண்டு. தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி தமது உணர்ச்சி அரசியலூடாக ஏற்படுத்தியிருந்த தேசிய அலையின் சூழ்நிலைக் கைதிகளாக பலர் மாற்றமடைந்திருந்தனர்.
இன்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலைசெய்யும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கும் இலங்கை நவ பாசிசப் பேரினவாதம் அன்று தனது வேர்களை தமிழ் மக்கள் மீது ஆழப்படரவிட்டுக்கொண்டிருந்தது. 79ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கை அரசால் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.

பிரபாகரன் சார்ந்தவர்கள் எமக்கு எதிரான பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்கின்றனர். மறுபுறத்தில் சுந்தரம் போன்றோரும் தமது பிரச்சாரங்களை பிரபாகன் மீதும் அவர் சார்ந்த குழுவினரின் மீதும் விமர்சனங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர். பிரபாகரனிற்கோ சுந்தரம் போன்றோருக்கோ இவ்விணைவிலும் மத்திய குழுவின் இருப்பிலும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. அவர்கள் இணைவை விரும்பவும் இல்லை.
பல சந்தர்ப்பங்களில் சுந்தரத்தினதும் பிரபாகரன் குழுவினரதும் விமர்சனங்கள் தனிமனித வசைபாடல்களாகவும் காணப்பட்டன.
சுந்தரம் சார்ந்தோர் தவறுகள் அனைத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் என்ற வகையில் அவரின் இயல்புகள், நடைமுறைகள் குறித்த வசைபாடல்களையும், மறு புறத்தில் பிரபாகரன் சார்ந்தோர் நான் உட்பட சுந்தரம் போன்றோருக்கு எதிரன பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மேற்கொண்டனர்.
பிரபாகரன், ராகவன், தனி, அன்டன், போன்றோர் முன்பிருந்தவாறே பிரிந்து செல்கின்றனர். நானும் சார்ந்தனும் எமது குழுவோடு இணைந்து கொள்கிறோம். பிரிவு நிரந்தரமாக, தனித்தனியாகச் செயற்பட ஆரம்பிக்கிறோம்.
இப்போதும் நாம் பிரிந்து செல்லும் வேளையில் குமரப்பா, மாத்தையா போன்றோர் மிகவும் மன வேதனையடைகின்றனர். மாத்தையா என்னிடம் மறுபடி வந்து நானும் பிரபாகரனும் தனது இரு கண்கள் போல தான் எங்கு செல்வது என்ற மனக் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார். குமரப்பா அரசியலிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்.
நாம் தனியாகச் செயற்பட ஆரம்பித்ததுமே புதியபாதை இதழின் வெளியீட்டுக்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டோம். சுந்தரம் மிகத் தீவிரமாகச் செயற்பட ஆரம்பிக்கிறார்.
இதே வேளை மாத்தையா, மனோமாஸ்டர், அன்டன், தனி, ராகவன்,ஆசீர்,பண்டிதர், சங்கர் , புலேந்திரன் போன்றோர் இணைந்த பிரபாகரன் சார்ந்த குழுவும் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த ஆரம்பிக்கிறது. பிரபாகரன் குழுவிலிருந்த பெரும்பாலானோர் இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள். எது எவ்வாறாயினும், மத்திய குழுவற்ற கூட்டு முடிவுகளற்ற நடைமுறைகளின் எதிர் விளைவுகளை அவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் மத்திய குழு ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றனர். இந்தக் கோரிக்கையுடன் பிரபாகரன் முரண்பட ஆரம்பிக்கிறார்.
ஒரு இராணுவக் குழுவிற்கு அதிகாரி போன்ற தனித் தலைமை ஒன்றே அவசியமானது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
பிளவு ஏற்படுவதற்கு முன்பதாக இருந்த மத்திய குழுவில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் கூட குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட ஏற்றுகொள்ள முடியாத நிலைக்கு வருகிறார். உமாமகேஸ்வரன் இயக்கத்திலிருந்து விலகிச்சென்றதும் பிரபாகரன் ஏற்கனவே முற்றாக இந்த முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்றே நம்புகின்றேன். இந்தியாவில் அவரோடு தங்கியிருந்த ஏனையோருக்கு குறிப்பாக ரவி போன்றோருக்கு தலைமைக்கு எதிராகப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன்.
இதே வேளை சுந்தரம் கண்ணன் போன்ற எமது குழுவிலிருந்தவர்களுக்கு உமாமகேஸ்வரனுடன் தொடர்புகள் ஏற்படுகின்றது. அவ்வேளையில் இந்தியாவிலிருந்த உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வருகிறார். எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு காலிறுதிப் பகுதியில் கண்ணன், சுந்தரம் போன்றோர் தாம் உமாமகேஸ்வரனைச் சந்தித்ததுப் பேசியதாக எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்காக அனுப்பிவைக்க்பபட்டவர்களில் சுந்தரமும் ஒருவர். அவ்வேளையிலிருந்தே உமாமகேஸ்வரனுடன் சுந்தரத்திற்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எம்மில் பலருக்கிருந்த சந்தேகம் இப்போது உறுதியானது போலிருந்தது.
சுந்தரத்தின் அனுசரணையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமாமகேஸ்வரன் தங்கியிருந்தாகவும் அவர்கள் எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உமாமகேஸ்வரனுக்கும் எமது கருத்தோடு உடன்பாடு இருப்பதாகவும் அவர் எம்மோடு இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தாகவும் சுந்தரம் சில நாட்களில் எங்களுக்குத் தெரிவிக்கிறார். எம்மில் பலர் சுந்தரத்தின் இந்தச் செயற்பாடு குறித்து ஆச்சரியமடைகிறோம். உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர். இதனால் எமக்குள் எதிர்ப்புக் குரல்கள் மேலெழுகின்றன. அழகன், நந்தன், நாகராஜா, நெப்போலியன் போன்றோருடன் நான் உட்பட பலர் உமாமகேஸ்வரன் உள்வாங்கப்படுவதை விரும்பவில்லை.
பல இழப்புகள் தியாகங்களுக்கு மத்தியில் உருவான எமது உறுப்பினர்களின் ஒன்றிணைவைப் பாதுகாக்கும் நோக்கோடு உமாமகேஸ்வரனின் வருகையை அதிகமாக விரும்பாத நான் உட்பட நம்மில் பலர் இறுதியில் அவரை ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளை இதனை முற்றாக எதிர்த்த நந்தன் சிவம் போன்றோர் விலகிச் சென்றுவிடுகின்றனர்.
குமணன் போன்ற பலர் மிகுந்த அதிர்ப்தியுடனேயே செயற்படுகின்றனர். உமாமகேஸ்வரனும் மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதும் நான் அவரது இணைவை ஏனையோர் போல எதிர்க்கவில்லை. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் எமது குழுவிற்கு ஒரு பெயர் ஒன்றைத் தெரிவி செய்யவேண்டும் என்ற கருத்துப் பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சுந்தரம் முன்மொழிந்த பெயர் பின்னதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்ப்படுகிறது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)) என்ற பெயர் அப்போது தான் உருவாகிறது.
இதே காலப்பகுதியில் உமாமகேஸ்வரனின் இணைவைத் தொடர்ந்து சந்ததியாரும் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். உமாமகேஸ்வரனுடனூடான தொடர்பின் வழியாக எம்மோடு இணைவதற்கு முன்வருகிறார். இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
இப்போது புளட் அமைப்பிற்கு மத்திய குழு ஒன்றைத் தெரிவுசெய்து எமது செயற்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவிற்கு சாந்தன், உமாமகேஸ்வரன், சுந்தரம், நான், சந்ததியார் ஆகியோர் தெரிவுசெய்யப்படுகிறோம்.
மத்திய குழு தெரிவான பின்னர் நடைபெற்ற விவாதங்களில் இராணுவத் தாக்குதல்களைத் நிகழ்த்த வேண்டும் என்ற கருத்தை உமாமகேஸ்வரன், சுந்தரம், சந்ததியார் ஆகியோர் முன்வைக்கின்றனர். நானும் சாந்தனும் முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவோம் என்ற கருத்தை முன்வைக்கிறோம். பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து மேலோங்கிறது.
மறுபடி சிறிய அளவில் எம்மத்தியில் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. பல உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியும் வெறுப்பும் குடிகொள்கிறது. சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றோர் எமது குழுவின் மீது அதித செல்வாக்குச் செலுத்துவதாகவும் தவறான வழியில் மறுபடி செல்வதாகவும் பலரால் உணரப்படுகின்றது.
இதன் மறுபக்கத்தில் எமக்கிருந்த பண நெருக்கடியும் ஒரு காரணமாக சுந்தரம், உமாமகேஸ்வர போன்றோரால் முன்வைக்கப்படுகிறது. எமது அன்றாட வாழ்விற்கான பணத்தைத் திரட்டிக்கொள்வதில் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் உமாமகேஸ்வரன் சுந்தரம் போன்றோர் இதனை எதிர்கொள்வதற்காக கொள்ளை முயற்சி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
மக்களிடம் சென்று அவர்கள் அவர்களில் தங்கியிருத்தல் என்ற நிலை நிராகரிக்கப்பட்டு மக்களிலிருந்து அன்னியப்படும் செயற்பாடுகள் ஆரம்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை இறுதியில் நாங்களும் நிராகரிக்கவில்லை. இதே வேளை பிரபாகரனுக்கும் அவர் சார்ந்த குழுவினருக்கும் இடையேயான முரண்பாடு உச்ச நிலையை அடைகிறது. பிரபாகரன் மத்திய குழு அமைப்பதற்கும் கூட்டு முடிவிற்கான தளத்தை ஏற்றுக்கொள்வதிலும் முழுமையான நிராகரிப்பைத் தெரிவிக்கிறார். அவர்களின் உறுப்பினர்களிடையேயான அதிர்ப்தி காரணமாக செயற்பாடுகள் எதுவுமின்றி நாட்களை நகர்த்துகின்றனர்.


ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்


prapakaranபிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.
இந்தப் பெயரை எப்போது உத்தியோக பூர்வமாக அறிவித்தனர் என்றோ அவர்களின் நடவடிக்கை குறித்த விபரங்களையோ நான் அறிந்திருக்கவில்லை.
பிரபாகரனின் இராணுவ வலிமை குறித்து தங்கத்துரைக்கு நேர்மறையான கருத்துக்களே இருந்தது. அவர் பிரபாகரன் உறுதியான போராளி என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
புதிய புலிகளாக நாம் செயற்பட்ட காலப்பகுதியிலும் அதன் பின்னர்ரும் பல தடவைகள் தங்கத்துரை குட்டிமணி போன்றோர் எம்மிடம் பயிற்சி பெற்றிருக்கின்றனர். தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல் முதலாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கூட தங்கத்துரை குட்டிமணி போன்றோரின் இராணுவ நடவடிக்கைகள் சில எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகவே உரிமை கோருமாறு அவர்கள் அனுமதித்திருந்தனர். தங்கத்துரை குட்டிமணி போன்றோர் தனியான குழுவாகச் செயற்பட்டாலும் எம்மத்தியில் பகை முரண்பாடு நிலவியதில்லை.
இவ்வேளையில் தங்கத்துரையும் பிரபாகரனும் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்வாறு சந்தித்த வேளையில் பிரபாகரனிடம் தங்கத்துரை அனுதாபம் காட்டியிருக்கிறார். புலிகள் இயக்கம் பிரபாகரனது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பதென்பதையும் அவர் தான் முதலில் தமிழீழத்திற்கான புலிகள் இயக்கத்தை பலம்மிக்கதாக உருவாக்கியவர் என்பதையும் தங்கத்துரை பிரபாகரனிடம் கூறியது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்குத் தான் அதிக உரிமை உண்டு என்பதையும் கூறியிருக்கிறார்.
மேலும் பிரபாகரனுக்கு ஏனைய எல்லோருடனும் அதிர்ப்தி இருந்தால் தம்மோடு இணைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதன் பின்பதாக சில நாட்கள் பிரபாகரன் சார்ந்த குழுவிலிருந்தவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய குழு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறை இவர்களை ஓரணியில் இணைத்திருந்தாலும், ஏனைய எல்லா உறுப்பினர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததால் பிரபாகரனால் அவர்களுடன் நீடிக்க முடியவில்லை.
இறுதியில் பிரபாகரன் புலிகள் இயகத்திலிருந்த ஏனையோரிடம் எஞ்சியிருந்த பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் கூட, அந்தப் பெயரை அவர் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிய வழங்கி விட்டுச்செல்கிறார்.
இவ்வாறு பிரபாகரன் விலகிச்சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆளுமை செலுத்துபவர்களாக அன்டன், மனோ மாஸ்ரர், தனி, ராகவன் போன்றோர் திகழ்ந்தனர். மனோ மாஸ்டர் போன்றோர் பின்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்க்கு தாமே உரிமையுடைவர்கள் என்று குறிப்பிட்டதை அறிந்திருக்கிறேன்.
புலிகளிலிருந்து தனியாக விலகிச்சென்ற பிரபாகரன், தங்கத்துரை வழி நடத்திய ரெலோ என்ற அமைப்பில் இணைந்து கொள்கிறார்.
துரையப்பா கொலை நடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் இலங்கை அரச படைகளால் பிரபாகரனோடு இணைந்திருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவ்வேளையில் பிரபாகரன் தனிமைப்பட்டிருந்தார். எமது உதவியை நாடி எமது ஊரை நோக்கி அப்போது அவர் வந்த வேளையில் உண்பதற்கு மூன்றுவேளை உணவோ, தங்குவதற்கு நிரந்தர இடமோ இருந்ததில்லை. பதினேழு வயது பிரபாகரனின் தனியனாக நின்றிருந்தார்.
யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது. அதே போன்று தான் சார்ந்த இயக்கத்திடமிருந்து அனைவராலும் நிராகரிக்கப்பட்டு தனிமையடைந்த இரண்டாவது நிகழ்வு இவ்வேளையில் நடைபெறுகிறது.
இனிமேல் தனது வாழ் நாள் போராட்டம் என்று வரித்துக்கொண்ட பிரபாகரன் போராடுவதற்காகவே தங்கத்துரை குட்டிமணி சார்ந்த அமைப்பில் இணைந்து கொள்கிறார்.
பிரபாகரன் எந்த நடவடிக்கைக்கும் மறுவார்த்தையின்றி ஒத்துழைக்கும் போக்கைக் கொண்டிருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவரும் பிரபாகரனோடு சென்று தங்கத்துரை – குட்டிமணி குழுவில் இணைந்து கொள்கிறார்.
1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்.
1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா அச்சகத்தில் சுந்தரம் கொலைசெய்யப்பட்ட நடவடிக்கையானது பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ரெலோ இயக்கத்தில் அவர் உறுப்பினராக இருந்த வேளையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
மனோ, அன்டன், தனி,ராகவன்,சசி,பண்டிதர்,சங்கர்,ஆசீர், போன்ற- பேபி சுப்பிரமணியம் தவிர்ந்த – அனைவரும் பிரபாகரனோடு ரெலோ இயக்கத்திற்குச் செல்லாமல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயற்பட ஆரம்பிக்கின்றனர்.
தங்கத்துரை குழுவோடு இணைந்த பிரபாகரன் சில நாட்களிலேயே பண்டிதர், சங்கர், போன்றோருடன் தனித்தனியாகப் சந்திக்கிறார். அவர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ரெலோவில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு கோருகிறார். உடனடியான இராணுவச் செயற்பாடுகளற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் விரக்தியுற்ற இளைஞர்களான பண்டிதர், சங்கர், ஆசீர், புலேந்திரன் போன்றோர் பின்னதாக ரெலோ அமைப்பில் இணைந்து கொள்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொருவராக இணைந்து கொண்டதும் மறுபுறத்தில் மனோ மாஸ்டர், ராகவன், தனி, அன்டன் போன்றோர் தனிமைப்பட்டுப் போகின்றனர்.
அன்டன் ராகவன் போன்றோர் சில காலங்களின் பின்னர் இணைந்து கொள்ள மனோ மாஸ்டர், தனி ஆகியோர் தொடர்புகளற்று செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன். பின்னதாக 1984 காலப்பகுதியில் வல்வெட்டியில் புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டார்.
*1980 ஆம் ஆண்டின் காலிறுதிப் பகுதியில் நடைபெறும் உடைவுகளும், இணைவுகளும் நிறைந்த இந்தச் சம்பவங்கள், பலர் மத்தியில் வெறுப்பையும் விரக்த்தியையும் உருவாக்குகின்றன. பல போராளிகள் போதைக்கு அடிமையாகின்றனர்.
இச் சம்பவங்கள் நடைபெற்ற அதே வேளையில் புளொட் இயக்கமாகப் பெயர் சூட்டப்பட்ட எமது குழுவில் பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. சந்ததியார் முழு நேரமாக எம்மோடு செயற்பட ஆரம்பிக்கிறார். சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. இராணுவத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்கதை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.
நாம்  எவற்றிற்கு எதிராகப் போராடினோமோ அவை அனைத்தும் மறுபடி உருவாக்கப்படுவதாக பலர் விரக்க்திக்கு உள்ளக்கப்படுகின்றனர். சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது. நாம் மக்கள் போராட்டம் என்ற அடிப்படையை முன்வைத்து உருவாக்கிய புதிய பாதை உமா மகேஸ்வரனின் வருகையோரு வேறு திசையில் பயணிப்பதாக உணர்கிறோம்.

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) என்ற நான் சார்ந்த அமைப்பு பெயர் சூட்டப்பட்ட பின்னர், எம்மத்தியில் பல முரண்பாடுகள் உருவாகின்றன. சுந்தரம், உமா மகேஸ்வரன், கண்ணன், சந்ததியார் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. அவர்களின் தன்னிச்சையான போக்குகள் பல உறுப்பினர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது. அழகன், நெப்போலியன் போன்றோர் ஏற்கனவே விலகியிருந்தனர்.
சாந்தன், நான், நாகராஜா, ரவி, குமணன் ஆகியோர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை முன்வைக்கும் நிலையில் காணப்பட்டோம்.
அச்சு ஊடகம் ஊடான கொள்கைப் பிரச்சாரமாகப் பத்திரிகை வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் பொதுவான முடிவுகளாக இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதே வேளை இராணுவத் தாக்குதல்களையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் யாராலும் நிராகரிக்கப்படவில்லை.
பின்னதாக உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன் ஆகியோர் இராணுவத் தாக்குதல்கள் மத்திய குழுவின் முடிவின்றியும் மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்தையும் முன் வைக்க இது எமக்கு மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எண்பதுகளில் களில் ஏற்பட்ட பிழவுகள் முரண்பாடுகள் என்பன அனைத்துப் போராளிகள் மத்தியிலும் வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் ஒரு உடனடியான எதிர்ப்பை யாரும் தெரிவிக்கவில்லை.
மக்கள் அமைப்புக்களை உருவாக்க எண்ணிய எமது நோக்கங்கள் திசை மாறுகின்றன. முதலாளித்துவ நிறுவன வடிவிலான அமைப்பை நோக்கிச் செல்லும் நிலையைப் பலரும் அவதானித்தோம். மக்களில் தங்கியிராத எமக்கு மத்தியில், உறுப்பினர்களைப் பராமரிக்கவும், இயக்கத்தை விரிவுபடுத்தவும் பணத்திற்கான தேவை அதிகரிக்கிறது. அவ்வேளையில் சுந்தரம் ஊடாக வட்டுக்கோட்டைத் தபால் நிலையத்தின் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான தகவல்கள் கிடைக்கின்றன.
வட்டுக்கோட்டை தபால் நிலையத்தைக் கொள்ளையிட உமாமகேஸ்வரன், சுந்தரம், ரவி ஆகியோர் செல்கின்றனர்.
புளட் இயக்கம் நிகழ்த்திய முதலாவது இராணுவ நடவடிக்கையாக அதனைக் கருதலாம்.
ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரையில் கொள்ளையிடப்படுகிறது. இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே மத்திய குழுவிற்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னதாக சுந்தரமும் உமா மகேஸ்வரனும் வவுனியா சென்ற வேளையில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரைக் கொலைசெய்து அவரது துப்பாக்கியைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் மத்திய குழுவிற்குத் தெரிவிக்கப்படவில்லை. சில காலங்களின் பின்னரே இது குறித்து நாம் அறிந்து கொண்டோம்.
சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரன் தலைமை வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் தவறான வழியில் மக்கள் தொடர்பற்ற அவர்களிலிருந்து அன்னியப்பட்ட ஆயுதப் போராட்டத்தையே முன்னெடுப்பதான தோற்றம் ஒன்று உருவாகிறது. நாம் எதற்காக பிரபாகரன் குழுவோடு முரண்பட்டோமோ அதே திசையில் நாமும் பயணிப்பதாக உணர்கிறோம்.
பொது வாக்கெடுப்புக்கள் நடந்த வேளைகளிலெல்லாம் அனைவரிலும் அதிகமாக வாக்குகளைப் பெற்றவரும் அனைவரது அபிமானத்தைப் பெற்றிருந்தவருமான சாந்தன் இயக்க வேலைகளிலிருந்து விலகிச்சென்றுவிடுகிறார். அவரைத் தொடர்ந்து குமணனும் ஒதுங்கிக்கொள்கிறார்.
சாந்தன் கொழும்பிற்குச் சென்று சொந்த வாழ்க்கையில் ஈடுபட, குமணன் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்.
இவர்கள் சென்றபின்னர், உமா மகேஸ்வரன், கண்ணன், சுந்தரம், சந்ததியார் போன்றோரிடம் தவறுகள் குறித்து நாகராஜா, ரவி, நான் ஆகியோர் விவாதிக்கிறோம்.
உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஒய்வுகிடைக்கும் நேரங்களில், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைப் படிக்கும் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறைத் தொடர்ச்சியாகவே காணப்பட்டார். சுந்தரத்திற்கு ஆரம்ப காலங்களில் சில இடதுசாரிகளின் தொடர்புகளூடாக சில விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அதற்கு மேல் முற்போக்கு அரசியலை நோக்கிய எந்த நகர்வையும் அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தூய இராணுவ வழிமுறையை உமாமகேஸ்வரன் கண்ணன் ஆகியோரோடு இணைந்து முன்னிலைப்படுத்தினார்.
கண்ணன் மற்றும் சந்ததியார் போன்றோர் கூட மக்களமைப்புக்கள் குறித்தோ அவற்றின் முக்கியத்துவம் குறித்தோ எந்த பிரக்ஞையும் அற்றவர்களாகவே காணப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளோடு நீண்ட விவாதங்கள் போராட்டங்களூடாக நாம் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமாமகேஸ்வரன், சுந்தரம் குழுவினர் அதற்கான எந்த அடிப்படை நகர்வுகளையும் ஊக்குவிக்கவில்லை.
ஆக, நான், நாகராஜா, ரவி ஆகியோர் எமது செயற்பாடுகளைக் கைவிடுவதாகத் தீர்மானிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். நாம் புளட் அமைப்புடன் செயற்பாடுகளை இடைநிறுத்துவதை உமா மகேஸ்வரன் குழுவினரும் மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்த்திருந்தனர்.
இப்போது ஒரு புறத்தில் பிரபாகரன் சார்ந்த குழுவினரும் மறுபுறத்தில் சுந்தரம், உமாமகேஸ்வரன் சார்ந்த குழுவினரும் இடையில் நாமும் என்று நிலை உருவாகிவிட்டது. இதையெல்லாம் தவிர நாங்கள் தேடப்படுகின்ற போராளிகள்.
நானும் நாகராஜாவும் சிறுப்பிட்டிப் பகுதியில் தலைமறைவாக வாழ்கிறோம். அங்கிருந்து எதாவது என்றாவது ஒரு நாள் மாற்றங்களோடு எம்மையும் இணைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம். உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன், சந்ததியார் போன்ற அனைவரோடும் எமக்கு முற்றாகவே தொடர்புகள் அற்றுப் போயிருந்தன.
இதேவேளை பிரபாகரனோடு அவரது முன்னைய குழுவில் செயற்பாடற்றிருந்த பலரும் இணைந்து கொள்கின்றனர்.
மனோ 83 களின் ஆரம்பத்தில் ரெலோ அமைப்புடன் இணைந்து கொண்டதாக அறிந்திருந்தேன்.
7ம் திகதி ஜனவரி மாதம் 1981 ஆம் ஆண்டு குரும்பசிட்டி என்ற புறநகர்ப் பகுதியில் நகை அடகுபிடிக்கும் கடையொன்ற இயக்கத் தேவைகளுக்காக பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் கொள்ளயிடுகின்றனர்.
நீர்வேலி வங்கியில் பெருந்தொகையான பணத்தைக் கொள்ளையிடுவதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபடுவதற்காகவே இந்தக் கொள்ளை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய பொதுமக்களில் இருவரான ஐயாத்துரை குலேந்திரன் என்போர் ஆயுதம்தரித்த போராளிகளால் கொலைசெய்யப்பட்டனர். தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தக் கொலைகளை மேற்கொண்டதாகக் பின்னதாக அவர்கள் கூறினர்.
“தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக” என்ற தலையங்கத்தில் மக்களைக் கொன்று போட்ட முதலாவது வெளிப்படையான தாக்குதல் இது தான். இந்தத் தாக்குதலின் பின்னணியிலிருந்த அரசியல் முள்ளிவாய்க்கால் வரை மக்களை அழைத்து வந்திருக்கிறது.
அங்கும் போராளிகளைக் காப்பாற்றுவதற்காக மக்கள் பலியெடுக்கப்படிருக்கிறார்கள்.
இதே காலப்பகுதியில் செயல் வீரனாகத் தன்னை ஆட்கொண்டதாகப் பிரபாகரன் கூறிக்கொள்ளும் செட்டியைப் பிரபாகரனும், குட்டிமணியும் இணைந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்.
குரும்பசிட்டி கொள்ளை நிகழ்ந்து மூன்று மாதங்களில் 25.03.1981 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளை திட்டமிட்டு நடத்தப்படுகிறது. குட்டிமணி தலைமைதாங்கிய இந்தத் தாக்குதலில் பிரபாகரனும் பங்கெடுத்திருந்தார். 7.9 மில்லியன் ரூபாய். பணத்தை அவர்கள் கொள்ளையிட்ட போது முழு இலங்கையுமே ஒருகணம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பலர் “பெடியள்” வென்றதாகப் பேசிக்கொண்டார்கள்.
thangathuraiநீர்வேலி வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாம் தலைமறைவாக வாழ்ந்த இடத்திற்கு மிக அருகாமையிலேயே கைவிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் பாதுகாப்புப் படைகளின் தேடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவை அனைத்தும் எம்மீதான எதிர்ப்புணர்வில் திடமிட்டு மேற்கொள்ளப்பட்டதா, இல்லை தற்செயல் நிகழ்வுகளா என்பது குறித்து தெளிவற்றிருந்தாலும், இலங்கையில் இனிமேல் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற வேண்டிய நிலைலிருந்தோம்.
மக்கள் திரளமைப்புக்களிலிருந்து ஆயுதப்போராட்டத்தைக் கட்டமைக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த ஒரே காரணத்திற்காக நாம் அனுபவித்த துயரங்கள் பல. இவை அனைத்தும் தமிழினத்தின் சாபக்கேடோ என துயரில் துவண்டதுண்டு.
நாம் இலங்கையிலிருந்து தலைமறைவாக எங்காவது செல்ல வேண்டுமானால் தமிழ் நாடு ஒரு இலகுவான வழி மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. நாம் இந்தியா செல்வதென முடிவெடுத்த பின்னர் அழகனைத் தொடர்புகொள்கிறோம். சண்டிலிப்பாய் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்த ரவியையும் தொடர்புகொள்கிறோம். அவரும் எம்மோடு இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததும், நாம் தமிழ் நாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்.
அழகன் ஊடாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பணத்திலிருந்து தலைமறைவாகவே மூவரும் மன்னார் செல்கிறோம்.
மன்னாரிலிருந்து அழகன் ஒழுங்கு செய்த விசைப்படகில் ராமேஸ்வரம் செல்கிறோம்.
முன்னைய காலங்களில் பல தடவைகள் தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறேன். இந்தத் தடவை எதையோ இழந்தது போன்று உணர்கிறேன். நம்பிக்கையோடு படகில் ஏறிய நாட்கள் போன்று இருந்ததில்லை. எனது தோழர்கள், இலங்கை அரசின் அடக்குமுறை,நான் நேசித்த மக்கள், நான் தேர்ந்தெடுத்த போராட்ட வழிமுறை, நானும் இணைந்து வளர்த்தெடுத்த போராட்டம் அனைத்தையுமே மன்னார் கரையோரத்தில் விட்டுச் செல்வதான உணர்வு ஏற்படுகிறது.
என்னோடிணைந்த தோழர்கள் மட்டுமல்ல இன்னும் சமூகத்தின் சிந்தனை முறையோடு போராடித் துவண்டுபோகும் ஆயிரமாயிரம் தோழர்கள் மண்ணோடு மண்ணாக மரணித்துப் போயிருக்கிறார்கள். ஆயினும் நான் சார்ந்த காலகட்டம் போராட்டத்தின் திசை வழியும் அணி சேர்க்கையும் தெளிவாகத் தெரிந்த வரலாற்றுப் பகுதி. இனியொருவில் வெளியான எனது தொடரின் ஊடாக அக்காலகட்டத்தின் போராட்ட அரசியல் அசைவியக்கத்தை வெளிக்கொண்டுவர முயற்சித்துள்ளேன். நூலுருவில் வெளியாகும் போது அதனை மேலும் செழுமைப்படுத்த முயற்சிக்கிறேன்.
முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் என்னோடிணைந்த பகுதிகள் இத்தோடு நிறைவடைவகிறது.
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.
(முற்றும்)
*சம்பவங்களை நினைவிலிருந்தே எழுதுவதால் இனியொரு வாசகர்களின் பின்னூட்டங்களிலிருந்தும், என்னோடு முன்பிருந்தவர்களுடனான உரையாடலின் மூலமும் செழுமைப்படுத்திக் கொள்கிறேன். முன்னைய பதிவில் 1980 பின்பகுதி என்பது 1979 பின்பகுதி எனத் தவறாகப் பதியப்பட்டதற்கு வருந்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக