செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கடனாநதி வாலீஸ்வரன் கோயில் சோழர் படைத்தளம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே கடனா நதியின்
தென்கரையில் அமைந்திருக்கும் திருவாலீஸ்வரத்தில் உள்ள பழமையான கோயில்
திருவாலீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில்
அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கருங்கல்லினால் எழுப்பப்பட்ட விமானத்தில்
சோழர் கால செழுமையான சிற்பக் கலையை பறைசாற்றும் அற்புத சிற்பங்கள் பல
உண்டு.
இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள்
நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுக்கள் ராஜராஜன் காலத்து
அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து அந்நாளைய நீர்மேலாண்மை, நில
மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல்
பெட்டகமாக அமைந்திருக்கின்றன.
கி.பி 980 முதல் 1150 வரை கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட
இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்களின் ஆட்சியே நிலவியது எனலாம்.
இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி நதிவரை பரவியிருந்தது.
இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும்
கடாரம் தாண்டியும் பரந்து விரிந்தது. கடல் கடந்த நாடுகளையும்
கைப்பற்றியவர்கள் சோழர்கள்.
எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை,
குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும்
தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை
கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள்
என்போரும் இருந்தனர்.
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் 'மூன்றுகை
மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு
வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. இந்த மூன்றுகை மகாசேனையின் ஒருபிரிவின்
தளமாக இருந்த இடம் திருவாலீஸ்வரம் ஆகும். இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலே
அந்தப் படைத்தளமாக விளங்கியது. இன்று நாம் பார்த்தாலும் அந்தக் கோயில்
ஒரு கோட்டை கொத்தள சாயலுடன் இருப்பதை நாம் உணர முடியும்.
இந்தக் கோயிலில் இருந்து செயல்பட்டு வந்த மூன்றுகை மகாசேனை கிழக்கே
காடாரம் வரையிலும் தன் கண்காணிப்பில் வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.
அது போல் மேற்கே ஆரியங்கா கணவாய் வழியே கொல்லம் திருவனந்தபுரம் வரையிலும்
கூட இந்த கண்காணிப்பு நீடித்ததாம். முதலாம் ராஜேந்திரன் காலத்தில்
இவ்வளவு முக்கியத்துவமான இந்த திருவாலீஸ்வரம் இன்று ஆரவாரமின்றி
கடனாநதிக்கரை ஓரமாக அமைதியாக இருந்து கொண்டிருக்கிறது.
.
.
திருவாலீஸ்வரம் கோயில் விமான சிற்பங்கள்ளை விளக்கும் ஓவிய ஆசான் சந்ரு
அவர்கள்.....உடன் நான்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக