செவ்வாய், 26 செப்டம்பர், 2017

2300 ஆண்டுகள் பழமை அமண்ணன் சமணர் என திரிப்பு

ஈராயிரத்து மூன்னூறு ஆண்டுகள் பழமையான சேயோன் குன்று
JUL 15, 2017 / சேமால்
/ குமுகம்
/ குன்று, கொற்றன், சமணர்,
செங்காயபன், சேயோன், பிட்டன்
செங்காயபன் குன்று
கரூரின் (கருவூர்) வடமேற்கில் 15 கல் தொலைவில் காவிரியாற்றின் தென்
கரையில் அமைந்துள்ளது புகழூர் என்ற ஊர். இவ்வூருக்கு அருகில்
வேலாயுதம்பாளையம் எனும் ஊரில் “ஆறுநாட்டான் மலை” என்ற குன்றில்
ஈராயிரத்து மூன்னூறு ஆண்டுகள் பழமையான சேயோன் கோயில் உள்ளது.
பழந்தமிழ் வேந்தர்களில் ஒருவரான சேரர்களின் தலைநகரில் ஒன்றான கரூவூரில்
கோட்டை அமைந்திருந்த இடத்திலிருந்து வடக்கில் உள்ள காவிரியை நோக்கி
நடந்து சென்றால் சற்றேரக்குறைய 5 மணிநேரத்தில் அடையக்கூடிய “ஆறுநாட்டான்
மலை” என்ற குன்றில், மூன்று தலைமுறை சேர மன்னர்களையும் அப்பகுதியை
சேர்ந்த சிற்றரசர்கள் மற்றும் வேறு சிலரையும் குறிப்பிட்டுள்ள சிறப்பான
தமிழி எழுத்து கல்வெட்டும் சேயோன் கோயிலும் இங்குள்ளது.

இக்கல்வெட்டு கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என்று
கல்வெட்டில் உள்ள தமிழி எழுத்துகளையும், கல் வெட்டில் குறித்துள்ள
வேந்தர்களையும் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டை கண்டுபிடித்தது முதல் இந்நாள் வரையிலும் அனைத்து தரப்பு
ஆய்வாளர்களும் இதை சமணத்துறவிகளின் வாழ்விடம் என்றும் கல்வெட்டுச்செய்தி
சமணர்களுக்கானது என்றும் பதிவு செய்துள்ளனர். கல்வெட்டில் என்ன உள்ளது
என்றும் ஆய்வாளர்களின் கருத்துகளையும் காண்போம்.

“மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்”

இங்குள்ள கல்வெட்டுகளில் முதன்மையானதும், சமணர்களுக்கு கொடுக்கப்பட்ட
குகை என்பதற்கு ஆதாரமாகவும் காட்டப்படும் இந்த கல்வெட்டில்,
என்று உள்ளதாக படிக்கப்பட்டுள்ளது!
இதற்கு வரலாற்றுத்துறை பேராசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும்
கொடுக்கும் விளக்கம் என்னவெனில்,
“யாற்றுரைச் சார்ந்த செங்காயபன் என்ற சமணத் துறவிக்கு சேர மன்னர்
செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை
முன்னிட்டு அறுத்த கல் (கொடுத்த இடம்)” என்பதே!
கல்வெட்டில் சொல்லப்பட்ட “செங்காயபன்” சமணர் தான் என்பற்குச் சான்றாக
அமண்ணன் எனும் சொல்லை அமணன் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
மேலும் செங்காயம் என்றால் ஆடையணியாது அம்மணமாக உள்ளவர்கள் என்றும் பொருள்
சொல்லியுள்ளனர்.
இதை படித்த எனக்கு புரிந்ததை கீழே எழுதியுள்ளேன்,
“மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்”
மூத்த அமண்ணுக்குரியவன் யாற்றூர் செங்காயபன் உறைய் சேரன் செல்லிரும்பொறை
மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ இளவரசன் ஆவதை முன்னிட்டு அறுத்த கல்.
காவிரியாற்றங்கரையில் உள்ளதால் அந்த ஊருக்கு இன்று வழக்கில் உள்ள பெயர்
ஆறுநாட்டன் மலை என்று முன்பே கண்டோம். கல்வெட்டில் உள்ள யாற்றூர் என்பது
தான் இன்று ஆறு நாட்டான் மலை எனவுள்ளது. ஆற்றூர் நாட்டில் வாழ்ந்த
மூத்தவன், மண்ணுக்குரியவன் என்பதே இக்கல்வெட்டின் முதல் இரு சொற்கள்
சுட்டுவது.
செங்காயபன் பற்றி காண்போம்;
1. செங்கோடன் மற்றும் செங்காளியப்பன் என்ற பெயர்கள் கரூரை சுற்றிலும்
அதிகமாக வைக்கப்படும் ஒரு பெயர். செங்காயபன் என்பதும் இவ்வாறு ஒரு
தனிமனிதனுக்கு வைக்கப்பட்ட பெயர் என கருதலாம். அல்லது,
2. செங்+காயபன் (சிவந்த உடலோன்) என்று பிரித்தால்,
உடலில் காயம் பட்டு உடல் சிவந்து இறந்த ஆற்றூரைச் சேர்ந்த வீரன் அல்லது
செங்+காயபன் தன் உடலை (காயம் = உடல்) தானே அரத்தத்தால் நனைத்தவன்
(தலைப்பலி கொடுத்தவன்) என்பதும் பொருத்தமாக உள்ளது.
3. மிகவும் முக்கியமானது; பழந்தமிழ் இலக்கியத்தில் சுட்டப்படும் “சேயோன்”
(சிவப்பன்) என்பதன் மாற்று சொல்லே செங்காயபன் என்பதாகும். மேலும் இந்த
குன்று அமைந்துள்ள வேலாயுதம்பாளையத்தை சுற்றியுள்ள ஊர்களான பரமத்தி
வேலூர், கபிலர் மலை, கந்தம்பாளையம், நல்லூர் மற்றும் கடம்பன் குறிச்சி
போன்ற ஊர்ப்பெயர்களை வைத்து பார்க்கும் போது செங்காயபன் என்பது சேயோன் என
கருத்து வலிமை பெறுகிறது.
உறய் என்பது உறைய (தங்க) பொருள் படும் சொல்.
பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள மூத்தோர் வழிபாடும் நடுகல் வழிபாடும்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு சான்றினை
மறைக்கவே இதை சமணக் கல்வெட்டு என்று சொல்லியிருப்பார்களோ, என எண்ணம்
எழுவது இயற்கை தானே?
குறிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று தற்போது அங்கே இருக்கும் கோயிலும்
சிலையும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. நாயக்கர்கள் கோயிலை திரித்து
நடுகல்லை அகற்றி சிலையை வைத்திருப்பார்கள் என நான் சொல்லித்தான் அனைவரும்
புரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.
அடுத்து இரண்டாவது கல்வெட்டு செய்தியை காண்போம்.

“யாற்றூர் செங்காயபன் (தா)வன் பின்னன் கொற்றன் அறுப்பித்த அதிட்டானம்”

இக்கல்வெட்டு நாம் முன்னர் கண்ட செங்காயபனைச் சுட்டுவதோடல்லாமல்
செங்காயபன் தாவனான சேரர் படைத்தளபதி மற்றும் குதிரை மலையின் தலைவன் என
புறநானூற்றில் பாடப்பட்டுள்ள கொற்றன் அறுப்பித்த நிலைக்கலம் என்று
கூறுகிறது.
ஆற்றூர் நாட்டு மூத்தவர் செங்காயபன் என்பவருக்கு சேர இளவரசன் கல் அறுக்க,
சேரனின் படைத்தளபதியும் குதிரை மலை தலைவனுமான கொற்றன் நிலைத்தளம்
அமைத்துக் கொடுத்திருக்கிறான் என்பது தெளிவு!
மேற்கூறியவற்றில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவெனில் தமிழரின்
மூத்தோர் வழிபாடு மற்றும் நடுகள் வழிபாடு போன்றவற்றின் பழங்கால சான்றான
புகழூர் கல்வெட்டும் அதையொட்டி வழிபாட்டுத் தளமும் சமணர்களுடையது எவ்வித
ஆதாரமும் இல்லாமல் திட்டமிட்டு திரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக குன்றின் மேலுள்ள கோயில்கள் முருகன் கோயில்களாக பிற்காலத்தில்
மாறியுள்ளது எதனால் என்பது ஆய்விற்குரியது. அதேபோல் சேயோன் யார் என்ற
தேடலிற்கு அடித்தளமாகவும் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.
மற்றுமொரு கவனிக்க வேண்டிய தகவல்,
இங்குள்ள கற்படுக்கையில் கொற்றன் மட்டும் பிட்டன் என்ற பெயர்கள் உள்ளது!
புறநானூற்றில் 168 ஆம் பாடல் முதல் 172 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்களிலும்
அகம் 143-ஆம் பாடலிலும் பிட்டன் கொற்றனை பற்றிய குறிப்புகள் உள்ளது. இந்த
பாடல்களில் இவர்கள இறைச்சி உண்டு விரும்பி கொலைத்தொழிலை (போர்)
செய்பவர்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது! இந்த பிட்டனுங்கொற்றனும்
கூர்வேல் (“வேல்”) வீரர்கள் என்பதை மிகத்தெளிவாக இப்பாடல்களில்
குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கல்வெட்டு காலத்தில் கொற்றன் சேரர் படைத்தளபதி ஆக இருந்துள்ளான்.
கொலைத்தொழில் புரியும் போர் படையின் தளபதியை சமணத் துறவி என்று சொல்வது
ஏற்புடையதல்ல. கொல்லாமை மற்றும் ஊண் உண்ணுதலை எதிர்த்து உருவான மதமே
சமணம் என்று யாவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் பிற்காலத்தில் சமணத்தை
தழுவியதால் படுக்கை அமைக்கப்பட்டது என்ற கருத்துக்கும் எந்த ஆதாரமும்
இல்லை.
இக்குன்றின் அமைவிடத்தை வைத்து ஆய்வு செய்தோமானால் இது சேரர்களின் வடக்கு
எல்லை என்பதை தெளிவாக அறியலாம். சேரரின் முக்கிய படைத்தளபதிகளான
பிட்டனும் கொற்றனும் கண்கானிப்பு கோபுரமாக பயன்படுத்திய குன்றை சமண
முனிவர்கள் தங்கிய இடம் என்றும், ஆற்றூர் மண்ணுக்குரிய மூத்தவன்
செங்காயபனை சமணத் துறவி எனவும், அவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் அமைவிடத்தை
சமணக் கோயில் எனவும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எடுத்துரைத்த
ஆய்வாளர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வோர் கடந்து செல்லவும்.
தமிழரின் நடுகல் / மூத்தோர் வழிப்பாட்டிமே இது என ஏற்றக்கொள்வோர்
இச்செங்காயபனை மனதிலிருத்தி செயலாற்றுங்கள்.
நன்றி
சேமால்.
– பட உதவி: குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக