திங்கள், 28 செப்டம்பர், 2020

முதல் மாவீரர் மரணம் மதுரை யில் பிரபாகரன் மடி எரியூட்டப்பட்ட சுடுகாடு

aathi1956 திங்., 26 நவ., 2018, பிற்பகல் 9:13 பெறுநர்: எனக்கு கலைச்செல்வம் சண்முகம் Krishna Muthukumarappan மற்றும் Ambalarajan Nalladurai உடன் உள்ளார். புலிகளின் மாவீரர் நாளும் மதுரை கீரைத்துறை மயானமும்... இலங்கையை ஆண்ட சிங்களப் பேரினவாத அரசுகளால் தமிழர்கள் மிகக் கடுமையான தாக்குதலுக்கும் படுகொலைக்கும் ஆளான 1983 ஜூலைக் கலவரத்தை ஈழத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது... அதே நேரம்தான் உலகத் தமிழர்களின் மகத்தான ஆவணப் பெட்டகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண நூலகம் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது... அச்சமயம் மேதகு பிரபாகரன் அழைப்பிற்கிணங்க தமிழீழத்தில் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நிகழ்ந்த இனப்படுகொலைச் சம்பவத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அப்போது நான் பள்ளிச் சிறுவன்... இனப்படுகொலை மற்றும் சிங்களத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போர்கள், தமிழர்களின் தாங்கொணாக் கொடுமைகளை ஒளிப்பேழையாக்கி, மதுரை மாநகர் முழுவதும் தெருவுக்குத் தெரு தொலைக்காட்சிப் பெட்டியோடு கொண்டு சென்று ஒளிபரப்பப்பட்டன. ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த ஐயா ஆதிமூலம் மதிச்சியம் பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்தார். இன்றைக்கு நியூ ராஜேஸ்வரி ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு நேர் எதிரே கல்யாணி என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றிருந்தது. அதன் வாசலில் திரு.ஆதிமூலம் தேநீர் கடை நடத்திக் கொண்டிருந்தார். அவரது கடையின் முன்புறமிருந்து தான் நானும் அவரது மகள் திருமிகு இந்திரா அவர்களும் பள்ளிப் பேருந்திற்காகக் காத்திருந்து பள்ளிக்குச் செல்வோம் (மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி). என்னை திருமிகு இந்திராதான் கைப்பிடித்து அழைத்துச் செல்வார். அப்போது அவரது கடையில் இருந்த மேதகு பிரபாகரன் அவர்களின் படமும், தமிழீழக் கொடிகளும் என்னை பெருமளவு அதன்பால் ஈர்த்தன. சிறுபையனாக இருந்த நானும் திரு.ஆதிமூலம் மற்றும் அவரது புதல்வர் திரு.ராஜா, திரு.கண்ணன் ஆகியோரோடு இணைந்து தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மதிச்சியம், ஆழ்வார்புரம், செனாய்நகர், ராமராயர் மண்டபப் பகுதிகளில் தெருத்தெருவாகக் கொண்டு சென்று இலங்கை அரசின் இனப்படுகொலையை மக்களுக்கு அறியத் தந்தோம். அச்சமயம் இந்தியப் பிரதமராக இருந்த திருமிகு இந்திராகாந்தியும், தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தங்களது முழு ஆதரவை வழங்கியிருந்தனர். இதனால் புலிகள் தங்குதடையின்றி தமிழகத்திற்குள் வந்து சென்றனர். அப்படியொரு நாள்தான் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் செனாய்நகர் இல்லத்திற்கு மேதகு வே.பிரபாகரன், குட்டிமணி உள்ளிட்ட சில தளபதிகள் வந்திருந்தனர். பள்ளிச் சிறுவனாய் இருந்த காலத்தில் நானும் சென்று வீட்டிற்கு வெளியே... காம்பவுண்டு சுவரை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த புலிப் போராளிகளை கண்கொண்டு பார்த்து மகிழ்ந்தேன். சிறுவர்களெல்லாம் தங்களைப் பார்க்க வருகிறார்கள் என மேதகு பிரபாகரன் உட்பட புலித் தளபதிகள் வெளியில் வந்து அவர்களை ஆரத்தழுவிய காட்சி இன்னும் எனது கண் முன்னே நீந்திக் கொண்டிக்கிறது. அப்போது கழுதைக் காலர் வைத்த சட்டையும், பெல்பாட்டம் கொண்ட பேண்ட்டும்தான் பேஷன்... அந்த உடையோடுதான் புலித் தளபதிகள் இருந்தார்கள்... நிற்க... அச்சமயம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில், தற்போது இருசக்கர வாகனம் நிறுத்துகின்ற இடத்தில் இலங்கை இனக் கலவரம் குறித்த சிறப்புக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த படங்களெல்லாம் நாகரிக சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா என்கின்ற அளவிற்கு சிங்களத்தின் இனவெறிக் கூத்து ஊழித் தாண்டவமாடிய காட்சிகள்... அவை அனைத்தும் எனக்குள் தற்போது வரை ஆழப்பதிந்துள்ளன. தமிழீழத்திற்கு ஆதரவான பெருமளவிலான போராட்டங்கள் நடைபெற்றபோது பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அதில் நானும் மிகத் தீவிரமாக பங்கேற்று முழக்கமெழுப்பிச் சென்றேன். 'எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்', 'கத்தரிக்கா பச்சடி... ஜெயவர்த்தனா பொச்சடி...' என்பது போன்ற முழக்கங்களெல்லாம் எழுப்பி மதுரையின் தெருக்கள் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஒட்டு மொத்த தமிழகமே உணர்ச்சிப் பிழம்பாய் தகித்த நாட்கள் அவை.... அந்த உணர்வெழுச்சியின் தொடர்ச்சியாய் மதுரைக்கும் புலிகளுக்குமான நெருங்கிய தொடர்பை எப்படியேனும் பதிவு செய்திட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் வேட்கை... அதற்காக எனது ஊடக மூத்த ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, கடந்த ஒரு வாரமாகவே இதற்காகக் கடுமையாக அலைந்து திரிந்தேன். 1980 களுக்குப் பிறகு மதுரை தெற்குவாசல் பகுதி மாமன்ற உறுப்பினராக இயங்கிய ஐயா எம்.ஆர்.மாணிக்கம் அவர்களைத் தொடர்பு கொள்ள மூத்த பத்திரிகையாளர் அண்ணன் திரு.அருணாசுந்தரராசன் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அவரோடு உரையாடியபோதுதான் அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் மதுரையோடும் புலிகளோடும் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்துள்ளன என்பதை உணர முடிந்தது. புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற தகவல் அனைத்தும் எனக்கு முன்பே தெரியும் என்றாலும், சிகிச்சையளித்த மருத்துவமனை, மருத்துவர்கள், உடனிருந்தோர் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற முடியவில்லை. தளபதி சங்கர் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், அவரது கடைசி வாய்ப்பான அவரது தலைவர் பிரபாகரன் மடியில் உயிர் துறப்பது என்ற ஆசையை நிறைவேற்ற ஐயா பழ.நெடுமாறன், திரு எம்.ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவாளர்கள் பெரும் முயற்சியெடுத்து அதனை நிறைவேற்றினர். கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை தளபதி சங்கர் மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார் என்பதும் அன்று மாலையே இலங்கையிலுள்ள பிற புலிப் போராளிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் அனைவரும் மதுரை வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டபடியால், தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட கீரைத்துறை மயானத்தில் திரு.சங்கரின் பூத உடலை எரியூட்டுவதற்கான முயற்சி திரு.எம்.ஆர்.மாணிக்கம் அவர்கள் மேற்கொண்டார். எரியூட்டப்படுவதற்கு முன்பாக தளபதிகள் உட்பட புலிப்படை வீரர்கள் அனைவரும் ராணுவ மரியாதையோடு திரு.சங்கரின் உடலை தகனம் செய்ததை எம்.ஆர்.மாணிக்கம் அவர்கள் விவரித்தபோது, கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது என்பதுதான் உண்மை. அந்த மயானத்தைப் பார்வையிட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலின்பால் நேற்றைய தினம் அண்ணன் திரு.அருணாசுந்தரராசன் அவர்களை மானாமதுரையிலிருந்து வரச்சொல்லி, அவரும் நானும் மேதகு பிரபாகரன் மற்றும் தளபதிகள் கலந்துரையாடிய இடங்கள், தங்கிய அறைகள் அனைத்தையும் பார்வையிட்டு பதிவு செய்தேன். அக்காலகட்டத்தில் புலிகளோடு பத்திரிகையாளர் அருணாசுந்தரராசன் அவர்களும் உடனிருந்தவர் ஆகையால், அவரோடு பயணம் மேற்கொண்டு பதிவு செய்வது எனக்கு எளிதாக இருந்தது. கீரைத்துறை சுடுகாட்டைக் கண்டறிவதற்காக தற்போதைய மின் மயானத்தின் உள்ளே சென்று, பல்வேறு பகுதிகளையும் அணு அணுவாக ஆய்வு செய்தோம். அப்போது மின்மயானத்தின் பின்புறம் மிகப் பெரிய அளவில் சிதிலமடைந்த நிலையில் தகரக் கொட்டகை ஒன்று தென்பட்டது. மின் மயானத்திற்குள் இருந்தவாறே அதனைப் பதிவு செய்துவிட்டு, வெளியே வந்தபோது, பழைய மயானத்தில் பணி செய்யும் பெண்ணும், அவரது உறவினரும் இருந்தனர். அவர்களிடம் அங்கு செல்லும் பாதை குறித்துக் கேட்டோம். அவர்களே எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றனர். கரடுமுரடாகக் கிடந்த அந்தப் பாதைக்குள் எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்கள், மலங்கள் நிறைந்த அசுத்தக்காடாய்க் காட்சியளித்தன. ஒருவாறாக உள்ளே சென்றோம் முதலாவதாக இருந்த மயானக் கொட்டகை முற்றிலுமாக அழிந்து, வெறும் தூண்கள் மட்டும் நிற்க, அதற்கு அடுத்தாற்போல் இருந்த தகரக் கொட்டகையும் எப்போது சரிந்து விழும் என்பதைப் போன்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு மேதகு பிரபாகரன் அவர்களின் பள்ளித் தோழர் ஒருவர் தற்போது சென்னையில் இருக்கிறார். சங்கரின் உடல் எரியூட்டப்படும்போது அவரும் அங்கு உடனிருந்தவர். அவரைத் தொடர்பு கொண்டு அந்த இடம் குறித்து உறுதி செய்து கொண்டோம். அந்த இடத்தில்தான் புலிகளின் ராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் எரியூட்டப்பட்டது என்பதை அறிந்து ஒருகணம் அதிர்ந்துபோனோம். இருவருக்குமே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடத் தொடங்கியது. மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் என்பதும் உணர்ச்சி ததும்பும் வரலாற்றுப் பக்கங்கள்... மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களன் சிதைக்கின்றான் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் நாம்தான், அந்த மாவீரர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த மாவீரன் சங்கரின் பூத உடல் எரிந்த மயானத்தை 'பீ'க்காடாக மாற்றி வைத்திருக்கிறோம் என்பதையும் வெட்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. RSivakumar Journalist 5 நிமிடங்கள் · பொது பங்கு ஒற்றுமை புலிகள் சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக