திங்கள், 28 செப்டம்பர், 2020

மீனாட்சியம்மன் ஆலயநுழைவு ஆதரவு பார்ப்பனர் சாந்து பட்டர் புகைப்படம்

aathi1956 இணைப்புகள் திங்., 3 டிச., 2018, முற்பகல் 10:22 பெறுநர்: எனக்கு தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள கீழப் பட்டமார் தெருவில் ஒரு பழைய வீட்டின் முதல் தளம். இரு முதியவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஒரு பக்கச் சுவரில் அமைந்திருக்கும் புத்தக அலமாரியில் ஏதோ ஒரு பழைய புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்றாலும், பார்த்தவுடன் முகம் மலர்ந்து அமரச் சொல்கிறார். 92 வயதாகும் அந்த முதியவரின் பெயர் சுப்பிரமணியன். மதுரைக் கோவில் நுழைவு நிகழ்வின்போது கோவிலின் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்த சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டரின் மூன்றாவது மகன். யார் அந்த சாந்து பட்டர்? தமிழகக் கோவில்களில் உள்ளே சென்று வழிபட அனைத்து ஜாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே இருந்துவந்தன. 1874, 1897 ஆகிய ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோவிலிலும் கமுதியில் உள்ள ஒரு கோவிலிலும் சில கோவில் நுழைவு முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியிலும் வழக்குகளிலும் முடிந்தன. இந்த நிலையில், 1930களின் பிற்பகுதியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ். நாயுடு என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்குப் பின்பு நடந்த சம்பவங்களை லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக சொல்கிறார்: 1939ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதியன்று காலை ஐந்து தாழ்த்தப்பட்டவர்களையும் நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இருவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றனர். ஆர்.எஸ். நாயுடு, இவர்களை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு அழைத்துச் சென்று வழிபாடுசெய்ய வைத்தார். இந்த நிகழ்வுகள் அரைமணி நேரத்தில் நடந்து முடிந்தன. ஆனால், இந்த சம்பவத்திற்கு கோவிலின் பூசகர்களிடையேயும் மதுரையில் வசித்த குறிப்பிட்ட வகுப்பினரிடையேயும் கடுமையான எதிர்வினைகள் இருந்தன. ஆலயப் பிரவேசம் நடந்ததற்கு அடுத்த நாள், ஜூலை 9ஆம் தேதியன்று முத்து சுப்பர் பட்டர் என்ற பூசகர், காலை வழிபாட்டை முடித்துவிட்டு, கோவிலின் கதவுகளை மூடிவிட்டு மாலையில் திறக்க மறுத்துவிட்டார். கோவிலைச் சுத்தப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகே கோவிலைத் திறக்க முடியும் என்று சொல்லிவிட்டார். நிர்வாக அதிகாரியால் அவரிடமிருந்து சாவிகளைக் கைப்பற்ற முடியவில்லை. அதே நாளில் கோவிலின் சாவியை வைத்திருந்த மற்றொரு பட்டரான சாமிநாதபட்டர் வெளியூருக்குச் சென்றிருந்தார். பிராமணர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும், சூழ்ச்சியும் வெளிப்படுகிறதா? திருப்பூர்: 'பள்ளியில் தலித் பெண் சமைப்பதை எதிர்த்த சாதி இந்துக்கள் தலைமறைவு' "இன்னும் எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும்?" – இயக்குநர் பா. ரஞ்சித் அவர் ஊர் திரும்பியதும் ஜூலை பத்தாம் தேதி கோவில் பூட்டுகளை உடைத்து கதவுகளைத் திறந்தார் ஆர்.எஸ். நாயுடு. சாந்து பட்டர் தெய்வங்களுக்கான வழிபாடுகளைச் செய்தார். சாவியைத் தர மறுத்த முத்து சுப்ப பட்டர் உள்ளிட்ட மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரத்தில் நிர்வாகத்திற்கு எதிராக நின்ற அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சாந்து பட்டர் மட்டுமே பணியில் நீடித்தார். விரைவிலேயே திருநெல்வேலியிலிருந்து பன்னிரண்டு பூசகர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற ஆரம்பித்தன. விரைவிலேயே கோவில் நுழைவுக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றப்பட்டன. இடைநீக்கம் செய்யப்பட்ட பட்டர்கள் 1945ஆம் ஆண்டுவாக்கில்தான் மீண்டும் கோவிலுக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் சாந்து பட்டர் குடும்பத்தினருடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டனர். அவரது குடும்பத்தில் நிகழ்ந்த பிறப்பு - இறப்புகள் புறக்கணிக்கப்பட்டன. குடும்ப விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை. சாந்துவின் வீட்டிற்குச் சென்று பூஜைகளில் பங்கேற்க மறுத்தனர். சாந்துவும் திருநெல்வேலியில் இருந்தும் வந்த பூசகர்களும் தாக்கப்பட்டனர். #தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? சாதி மோதலால் அகதிகளான 24 தலித் குடும்பங்கள் சாந்து பட்டர் உயிரோடு இருந்த காலம்வரை இந்த புறக்கணிப்பும் ஜாதிப்பிரஷ்டமும் தொடர்ந்தது என்கிறார் ஃபுல்லர். இந்த சாந்து பட்டரின் மனைவியின் பெயர் விஜயலட்சுமி. பிச்சை பட்டர், கல்யாண சுந்தரம், சுப்பிரமணியம், சதாசிவம் என இந்தத் தம்பதிக்கு நான்கு மகன்கள். "அந்தக் காலத்திலேயே எங்கப்பா நன்றாகப் படித்தவர். பத்தாம் வகுப்புக்கு இணையாகப் படித்திருந்தார். அதனால் அவருக்கு இயல்பாகவே முற்போக்கு சிந்தனை இருந்தது" என தன் தந்தையை நினைவுகூர்கிறார் சுப்பிரமணியன். "கோவில் நுழைவுக்குப் பிறகு எங்கள் சமூகத்திடமிருந்தே பல கொடுமைகளை அனுபவித்தோம். என் அப்பா கோவிலிலிருந்து வீடு திரும்பும்போது அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள். திடீரென ஆட்கள் அடிப்பார்கள். சுந்தரமும் (தற்போது மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர்) ஆறுமுகமும் (அன்சாரி வாசக சாலையை நடத்தியவர்) அப்போது என் தந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். எனக்கு சின்ன வயதில் விஷேச வீட்டு சாப்பாடு என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால், சிறுவயதில் எந்த விஷேச வீட்டிற்கும் எங்களைக் கூப்பிட மாட்டார்கள். ரொம்ப ஏக்கமாக இருக்கும்" என்று சொல்லும்போதே சுப்பிரமணியத்தின் கண்களில் கண்ணீர் கசிகிறது. கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி மதுரைக்கு வந்தபோது கோவில் நுழைவுப் போராட்டத்தின்போது உறுதுணையாக இருந்தார் என்பதை அறிந்து, சாந்து பட்டரை சந்திக்க விரும்பியிருக்கிறார். அவரை அழைத்துச் சென்ற வைத்தியநாதய்யர், சாந்து பட்டரிடம், "ராஜாஜியைப் பார்க்கும்போது உன் மகன்களுக்கு வேலை ஏதாவது கேள்" என்று சொன்னதாகவும் ஆனால், அதற்கு சாந்துபட்டர் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார் சுப்பிரமணியன். "என் மகன்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சொல்லிவிட்டார் என் அப்பா" சாந்து பட்டரின் முதலாவது மகன் திருப்பரங்குன்றத்திற்கு சுவீகாரமாக சென்றுவிட, இரண்டாவது மகன் கல்யாண சுந்தரம் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். தமிழரசுக் கழகத்திலும் ஈடுபாட்டோடு இருந்தார். மூன்றாவது மகனான சுப்பிரமணியம், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் பணியில் சேர்ந்தார். "மதுரைக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு 1954ல் திருமருகலில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலில் செயல் அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். கடைசிவரை கோவில் வேலையில்தான் இருந்தேன்" என்கிறார் சுப்பிரமணியன். இவருடைய இருமகன்களில் ஒருவர் லண்டனில் ஒரு கோவிலிலும் மற்றொருவர் மீனாட்சி அம்மன் கோவிலிலும் பணியில் இருக்கின்றனர். "ஒரு நாள் கஷ்டம் தாங்க முடியாம எங்கப்பாகிட்ட ஏம்பா, மத்தவங்க மாதிரி நீயும் இருந்திருக்கலாமேன்னு கேட்டேன். அதுக்கு அவர், ஹரிஜனும் பக்தன்தானே. அவர்கள் உள்ளே வந்து வழிபடுவது எனக்குத் தப்பாத் தெரியலைன்னு சொன்னார்" என்கிறார் சுப்பிரமணியன். என்னதான் காந்தி மீது ஈர்ப்பிருந்தால்கூட, சாந்து பட்டர் காங்கிரஸ் கட்சியில் எல்லாம் ஈடுபட்டவர் இல்லை என்கிறார் சுப்பிரமணியன். கோவில் நுழைவுப் போராட்டத்தின்போது மீனாட்சியம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடு மிகச் சிறந்த நிர்வாகி என்கிறார் சுப்பிரமணியன். "பார் அட் லா படித்தவர். எங்க அப்பாவைவிட உயரமானவர். மிகக் கடுமையான அதிகாரி. கோவிலில் வேலை பார்ப்பவர்களுக்கு பிரியம் இருக்காது; ஆனால், பயம் இருக்கும்" என்கிறார் சுப்பிரமணியன். சாந்து பட்டர் குடும்பத்தினரின் மீது காட்டப்பட்ட ஜாதிப் பிரஷ்டம் எப்போது நீங்கியது? "இப்பவும் இருக்கு. பெரிசா எங்களை எங்கேயும் கூப்பிடுறது இல்ல" என்கிறார் சுப்பிரமணியன். ஆனால், இவருடைய சகோதரர் கல்யாண சுந்தரத்தின் மனைவி அவ்வாறு கூறவில்லை. "என் மாமனார் இருந்தவரை அம்மாதிரி இருந்தது. அவர் இறந்த பிறகு அதெல்லாம் மாறிவிட்டது" என்கிறார் கல்யாணசுந்தரத்தின் மனைவி காந்திமதி அம்மாள். "இப்போ எல்லாம் ஒன்னாத்தான் பழகுறாங்க. ஆனா என் மாமனார் இருக்கும்போது யாரும் வரமாட்டாங்க" என்கிறார் காந்திமதி. இவர் தற்போது வசிக்கும் வடக்காவணி மூலவீதி இல்லத்தில்தான் சாந்து பட்டர் வசித்தார். எப்படி இருப்பார் சாந்து பட்டர்? சி.ஜே. ஃபுல்லரின் புத்தகத்தில் சாந்து பட்டரின் படம் கிடையாது. உங்கள் வீட்டில் சாந்து பட்டரின் படம் இருக்கிறதா என்று கேட்டால், சற்று தயங்குகிறார் காந்திமதி. பிறகு, தன் மாமனாரும் மாமியாரும் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார். ஆலயப் பிரவேசம் தொடர்பான ஒரு கல்வெட்டும் சாந்து பட்டரின் வீட்டில் இருக்கிறது. சிறு வயதில் உடற்பயிற்சி செய்வதில் பெரும் ஆர்வம்காட்டிய சுப்பிரமணியன், 'சிக்ஸ் பேக்' வைத்திருந்ததாகச் சொல்கிறார். ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர், இப்போதும் அவ்வப்போது ஓவியங்களைத் தீட்டுகிறார். புறப்படும்போது, "என்னைப் பெருமைப்படுத்துறதுபோல ஏதும் எழுதிறாதீங்க" என்கிறார் சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக