புதன், 30 செப்டம்பர், 2020

செய்குதம்பி பாவலர் பற்றி

 


aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, பிற்பகல் 2:54
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - நினைவு நாள் இன்று (ஜூலை 31, 1874 - பெப்ரவரி 13, 1950)
தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள
்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தார்.
அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.
இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.
உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920 நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.
"1937ஆம் ஆண்டில் பாவலர் நாகர்கோவில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் மகாத்மா காந்தியின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர். வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர். நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்
டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின் காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.
1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அவரது இரங்கல் பாட்டு:
"ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி"
என்று வருந்திப் பாடினார்.
# எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர்
1 மணி நேரம் ·

‘மெய்ஞ்ஞான நாதா - மெய்ஞ்ஞான நா தா’
‘சதாவதானி’ செய்குத்தம்பி பாவலர் நினைவு நாள்

( நக்கீரன் )

1907, மார்ச் 10-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த அந்நாளைய சென்னையில் இருந்த விக்டோரியா பொது அரங்கத்தில் ஒரு பெருமகனார் கம்பீரமாக நிற்கிறார்; அவரின் இடையில் ஒரு வெள்ளாடை; அதுவும் முழங்கால் அளவேயுள்ள சிற்றாடை. இடைக்கு மேலே திறந்த மேனியுடன் அவர் மேடை ஏறியதுமே, அம்மனிதரின் திருவாய், ‘மெய்ஞ்ஞான நாதா!’ ‘மெய்ஞ்ஞான நா தா!’ என்று சிலேடைப் பொருள் கொண்ட ஒரு சொற்றொடரை உச்சரித்தது. ‘மெய்ஞ்ஞான நாதனாகிய இறைவனே, எனக்கு மெய்ஞ்ஞான நாவைத் தா’ என்பதுதான் அதன் பொருள்.’
இதை உணராத ஒருவர், மற்றவரைப் பார்த்து ‘கூறுவது கூறல் குற்றமல்லவா? என வினவ, அதை அவதானித்த மற்றொருவர், “கூறியது கூறல் குற்றம் இல்லை; அது வேறொரு பொருளை விளக்குமாயின்” என்று பதில் கூறினார்.
மேடையில் நடுவர்களாக, காஞ்சி மகா வித்துவான் இராமசாமி நாயுடு, திருவெட்டீஸ்வரன் பேட்டை வடிவேலு செட்டியார், அந்நாளில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த டி.கே. சிதம்பரநாத முதலியார், வித்துவான் வசிஷ்ட பாரதி, தஞ்சை மேதை சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திருவேங்கட சாமி நாயுடு, புலவர் கா. நமச்சிவாய முதலியார், ‘அட்டாவதானி’ பூவை கலியாண சுந்தர முதலியார், ஹிந்து-சுதேசமித்திரன் ஏடுகளின் ஆசிரியராகப் பணியாற்றிய ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகிய தமிழறிஞர்கள் வீற்றிருந்தனர். இப்படிப்பட்டவர்களுள், சென்னை உயர்நீதி மன்றத்தின் அந்நாளைய ஆங்கிலேய நீதிபதியும் ஒருவர். தமிழை அறியாதவர், அவர்.
மேடையில் எண்ணற்ற தமிழறிஞர்கள் குழுமி நின்று அப்பெருமகனாரை நோக்கி வினாக்கணைகளைத் தொடுக்கின்றனர். தம் அதிரடியான பதில்களால் அத்தனை வினாக்களையும் தடுத்து நிறுத்துகிறார் அந்தத் தமிழ் மேதை. அவர்தான் ஒரே நேரத்தில் 100 அலுவல்களை ஆற்றிய ‘சதாவதானி’ செய்குத்தம்பி பாவலர். அவரைச் சுற்றி நின்ற அறிஞர் கூட்டம் வியப்பில் திக்குமுக்காடி நின்றது.
மேடைதான் இப்படி யென்றால், அரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அலைமோதியது. பண்டிதப் பெருமக்கள், பாமரர்கள், கிரந்த மொழி வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியப் பெருந்தகையர், வணிகப் பெருமக்கள் என கணக்கிட முடியாத அளவிற்கு பொது மக்கள் திரண்டிருந்தனர். மேடையிலும் அரங்கத்திலும் குழுமியிருந்தோர் பலவாறாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் ஆர்வத்துடன் காத்திருக்க, திடீரென ஒர் நடுவர் எழுந்து, “கடவுள் வணக்கப் பாடலை சிலேடையாகப் பாடுவீராக?” என்று பாவலரைப் பார்த்து சொன்னதும், உடனே அந்த அபூர்வப் பாவலர்,
“சிரமாறுடையான் திருமாவடியைத்,
திரமாநினைவார் சிரமே பணிவார்,
பரமாதரவா பருகா ருருகார்,
வரமாதவமே மலிவார் பொலிவார்.” என்னும் பாடலைப்பாடினார்.
இந்தப்  பாடலில் வரும் ‘சிரமாறுடையான்’ என்ற சொற்றொடர் ஐவித கருத்துகளை தன்னகத்தே அடிக்கியுள்ளது. அதாவது,
சிரம் ஆறுடையான்-சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான்-இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான்-ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் ‘ஆறு’ உடையான்-திருவரங்கத்தில் தலைப்பாகத்தில் காவிரியாறு ஓட(பாம்பு படுக்கையில்) பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான்-தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் - என்பனவே அவை.
சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார்.  அந்த நாளுக்கு முற்பட்ட 1,000 ஆண்டுகளில் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாளைக் குறிப்பிட்டால், அடுத்த நொடியே கிழமையைச் சரியாகச் சொல்வார். அப்படிப்பட்ட செய்குத் தம்பிப் பாவலர், சாதனைத் தமிழர். அரும்பாவலர்; பெரும்புலவர்.
இப்படியாக 99 அவதானங்கள் முடிந்து நூறாவது அவதானத்தை எட்டாமலேயே அவரை மேடையை விட்டு இறங்கி புறப்படும்படி கேட்டுக் கொண்ட நீதிபதிகள், மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைமாட்டு வண்டியில் ஏறும்படி கேட்டுக் கொண்டனர்.
நூறாவது அவதானம் அதுவும் நாசிக்குரிய அவதானத்தை நடத்தாமலேயே புறப்படும்படி கேட்கின்றனரே, எங்கே இந்தப் பயணம்? எதற்காக இந்த ஏற்பாட்டு என்று எண்ணியவாறே மாட்டு வண்டியில் பரப்பப்பட்டிருந்த வைக்கோலில் அமர்ந்த மறுவினாடியே துள்ளி எழுந்த பாவலர், இதற்குள் ஒரு தண்ணீர்ப் பாம்பு இருக்கிறது என்று சொன்னதுதான் தாமதம். கூடியிருந்தோர் அனைவரும் சதாவதானி வாழ்க!  சதாவதானி வாழ்க!! என்று முழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாருக்குப் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் பாவலரின் சொந்த ஊர். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், பக்கீர் மீறான்-ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.
தமிழையும் இசுலாத்தையும் இரு விழியெனக் கருதி வாழ்ந்த இப்பெரும்பாவலர்-அறிஞர் பெருமகனார்-மேதையார் இம்மண்ணில் 74 ஆண்டுகள் உலாவந்து, 1950-ஆம் ஆண்டு இதே நாளில் மண்மாதா மடியில் தலை சாய்ந்தார்.


இசுலாமியர் தமிழ்மொழி தமிழ்த்தொண்டு தமிழறிஞர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக