செவ்வாய், 3 ஜூலை, 2018

பள்ளர் பள்ளி உழவர் குடி கிளை வேர்ச்சொல் சாதி வன்னியர் பட்டம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு


ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
நெல்லைச்செல்வன் ச மற்றும் 46 பேருடன் இருக்கிறார்.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம், மணிவிழா மலர், 1958
@# ஐயன்_பாவாணர் ...
# பள்ளி .. (முழு விளக்கம்)
++++++
சொற்பொருள் வரிசை..
சொற்கள், பொருட்டொகை பற்றி
1. ஒருபொருட் சொல் 2. பல பொருட் சொல் என இரு வகைப்படும். ஆயினும், ஒரு சொல்லின் முதற் பொருள் வழியாகப் பல்வேறு பொருள்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றுதற்கிடமிர
ுத்தலால், ஒரு காலத்து ஒருபொருட் சொல்லாயிருந்தனவும், பிற்காலத்துப் பல பொருட் சொற்களாகிவிடுகின்றன.
ஒரு காலத்து ஒரு சொற்கு ஒரு பொருளே தோன்றுவது இயல்பாதலால், பலபொருட் சொற்களெல்லாம் முதற்கண் ஒரு பொருட் சொற்களாய் இருந்தனவே.
சொற்களின் பொருள்வரிசை, அதாவது பொருள்கள் முன்னும் பின்னும் தோன்றிய முறை 1. வரலாற்று முறை (Historical Sequence) , 2. ஏரண முறை (Logical Sequence) என இருவகைப்படும்.
ஒரு சொல்லின் பொருள்களை, முதல் வழி சார்பு நூல்களில் அல்லது முன்னிடை பின்னூல்களில் அவை ஆளப்பட்டு வந்த வரன்முறைப்படியே ஒழுங்குபடுத்துவது வரலாற்று முறையாம்; அஃதன்றி உத்திக்குப் பொருத்தமாக அவற்றை ஒழுங்குபடுத்துவது ஏரணமுறையாம். இந்தி போன்ற புதுமொழிகளிலும் ஆரியம் போன்ற முதுமொழிகளிலும் முன்னை அல்லது பண்டை இலக்கியம் அழியாதிருத்தலால் அதன் வாயிலாகச் சொற்பொருள்களின் வரலாற்று முறையை அறிதல் கூடும்.
ஆயின் பண்டையிலக்கியம் முற்றும் இறந்துபட்ட தமிழ்போலுந் தொன்முதுமொழியில் அதனை அறியுமாறில்லை. ஆதலால், அத்தகைய மொழிச் சொற்பொருள்கட்கு ஏரண முறைதான் இயலும். ஒரு மொழியின் வளர்ச்சிக் காலத்துச் சொற்கட்கு ஒவ்வொன்றாய்த் தோன்றிய பொருள்கள், அவை தோன்றிய முறையே பிற்காலத்து உணர்த்தப்பெறா: அவ்வவ் இடத்திற்கேற்பவே உணர்த்தப்பெறும். ஒரு வழங்குமொழி என்றும் வளர்ந்து கொண்டேயிருப்பினும், அதன் பெருவாரிச் சொற்கள் ஒரு குறித்த காலத்திற்குள் அமைந்துவிடுகின்
றன.
அதன்பின், தோன்றும் சொற்களும் பெரும்பாலும் புதுச்சொற்களா யிராமல் பழஞ்சொற்களினின்று அமையும் திரிசொற்களும் கூட்டுச் சொற்களுமாகவேயிருக்கின்றன, ஆதலால், முது பண்டையிலக்கியம் முற்றும் இறந்துபட்டதும். கருத்திற்கு மெட்டாக் காலந்தொட்டு வழங்கி வருவதுமான தமிழில், சொற்பொருள் வரிசை ஏரண முறைப்படிதான் அமைதல் இயலும்.
வரலாற்று முறை இயற்கையாகவும் ஏரண முறை செயற்கையாகவும் தோன்றினும் முன்னது உளநூன் முறைப்படி நிகழ்தலின் அவ் உளநூலைத் தழுவிய ஏரண முறையும் பெரும்பாலும் இயற்கை யொட்டியே இருக்குமென அறிக. இவ்வுண்மைகளை அறியாதார் தமிழிலும் சொற்பொருள் வரிசையை ஆங்கிலத்திற்போல் வரலாற்று முறையில் அமைக்க முயல்வர் . இதன் புரைமையை ஓர் எடுத்துக்காட்டாற் காட்டுதும் . ''பள்ளி'' என்னும் சொற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள பொருள்வரிசை வருமாறு:
1. இடம்
2.சிற்றூர்
3. இடைச்சேரி
4. நகரம்
5. முனிவ ராச்சிரமம்
6. சைன பௌத்தக் கோயில்
7. அரண்மனை
8. (தச்சன்) வேலைக்களம்
9. மக்கட் படுக்கை
10. தூக்கம்
11. விலங்கு துயிலிடம்
12. பள்ளிக்கூடம்
13. அறை
14. அறச்சாலை
15. சாலை
16. வன்னியன்
17. பள்ளத்தி
18.குறும்பர் (சிற்றரசர் )
பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) குறிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள் (19) ''கிறித்தவக் கோயில்'' என்பது, இவற்றுள் முதலும் இறுதியும் (1, 19) வரலாற்று முறை தழுவியவை; ஏனைய ஒருமுறையுந் தழுவியவல்ல. இம்முறைகேடு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் சிறப்பியல்பாகும். இதுபோலுள்ள தமிழ்நூல்களுள் பழைமையான தொல்காப்பியத்தில், பள்ளி என்னும் சொல் இடம் என்னும் பொருளில் ஆளப்பட் டுள்ளது.
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
(தொல். எழுத்து. 100)
என்பது காண்க. இதனால், இடம் என்னும் பொருள் முதலிலும், கிறித்தவம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பெற்றபின் தோன்றிய கிறித்தவக் கோயில் என்னும் பொருள் இறுதியிலும், வைக்கப்பட்டன.
மேற்குறிக்கப்பட்ட பத்தொன்பான் பொருள்களொடு, பள்ளம், வீடு, கோயில், கல்லறை (சமாதி) என்பவற்றையுஞ் சேர்க்கலாம். கோயில் என்றது ஈண்டு எல்லா மதங்கட்கும் பொதுவான இறையகத்தை.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
(840)
என்னும் குறட்கு,
"சான்றோ ரவையின்கட் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும்", என உரைத்தார் பரிமேலழகர் .
"கழுவாக் காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ் வமளியும்" இழிக்கப்படுமாறுபோல இவனால் அவ் வவையும் இழிக்கப்படுமென்ப தாம்," என்பது அவர் சிறப்புக்குறிப்பு.
இவ் வுரையில் பள்ளியென்பது படுக்கை அல்லது படுக்கைக் கட்டில் என்று கொள்ளப்பட்டது. சான்றோரைத் தேவருக் கொப்பாகக் கூறுவது இலக்கிய மரபாதலால், இங்குப் பள்ளியென்பது தெய்வத் தன்மையுள்ள இடத்தைக் குறிப்பதென்று கொள்வதல்லது இன்பந்தரும் இடத்தைக் குறிப்பதென்று கொள்வது பொருந்தாது.
ஆகவே, பள்ளி என்பதற்குக் கோயில் என்பதே பொருளாம். சான்றோர் கூட்டத்துள் ஓர் அறிவிலி புகுதல், ஒருவன் கழுவாத காலொடு கோயிற்குள் புகுவதொக்கும் என்பதே வள்ளுவர் கருத்தாதல் வேண்டும். குளித்து விட்டு அல்லது கை கால் கழுவிவிட்டுக் கோயிற்குள் புகுதல், இன்றும் பல்வேறு மதத்தார்க்கும் வழக்கமாயிருத்தல் காண்க, தேவரைப் புலவரென்று திருவள்ளுவர் குறிப்பிடுவதையும்,
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்
(நாலடி. 151)
என்று நாலடியார் கூறுவதையும் நோக்குக.
ஆகவே, ஏற்கெனவே கோயிலைப் பொதுப்படக் குறித்த பள்ளியென்னும் பெயரே, பிற்காலத்துத் தமிழகத்துப் புதுவதாக ஏற்பட்ட சமண பவுத்த கிறித்தவ முகமதியக் கோயில்களையும் குறிக்க ஆளப் பட்டிருத்தல் வேண்டும். எதுபோலெனின், ஆரிய மறையையே முதன் முதற் குறித்த வேதம் என்னும் சொல், பிற்காலத்துக் கிறித்தவ மறையையே சிறப்பாகக் குறித்ததுபோலென்க.
வித்துகள் சேற்றிற் பதிந்து கிடத்தலைப் ''பள்ளிக்கிருத்தல்'' என்று நாஞ்சில் நாட்டார் சொல்வதால், பள்ளம் என்னும் பொருளும்; அரசியல் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறு கம்பு நட்டு அவன் அதைச் செலுத்தும்வரை மறியல் செய்தலைப் ''பள்ளிகம்பு வைத்தல்'' என அந் நாட்டாரே வழங்குவதால் ''வீடு என்னும் பொருளும்; இறந்த அரசன் உடலை எரித்த அல்லது புதைத்தவிடத்துக் கோயிற் கட்டுவதைப் பள்ளிப்படை என்று இலக்கியமுங் கல்வெட்டும் கூறுவதால், கல்லறை என்னும் பொருளும்;
பள்ளி என்னுஞ் சொற்குக் கொள்ளப்பெற்றன.
பள்ளி என்னும் சொல்லின் வேர் ''பள் என்பதும், வேர்ப்பொருள் ''பள்ளம்'' என்பதும் ஆகும். பள்ளம் அல்லது தாழ்வான இடம் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளமான இடத்தில் வேலை செய்யுங் குலத்தான், (கீழே) படுக்கை, (படுத்துத் தங்கும்) மனை, (தேவமனையாகிய) கோயில், (முதற்காலத்துக் கோவிலில் நடத்த பெற்ற கல்விச்சாலை, (பலமனைகள் சேர்ந்த) ஊர், (மனையும் ஊருமாகிய) இடம் என்னும் எழு பருப்பொருள்களும் இவற்றுட் பலவற்றை நிலைக்களமாகக் கொண்ட இருபத்திரு நுண்பொருள்களும், பள்ளி என்னுஞ் சொற்குத் தோன்றியுள்ளன. இந் நுண்பொருட் பாகுபாட்டுப் பட்டி வருமாறு:
1. பள்ளம் அல்லது தாழ்வு :
தாழ்வான வீடுகள் அமைந்த சிற்றூர் அல்லது முல்லை நிலத்தூர், முல்லை நிலத்தூர் போன்ற இடைச்சேரி, ஆழிடம்.
2. பள்ளமான வயலில் வேலை செய்யுங் குலத்தார் : பள்ளத்தி, வன்னியன், வன்னியகுலச் சிற்றரசரான குறும்பர்.
3. படுக்கை :
மக்கட் படுக்கை, விலங்கு துயிலிடம், தூக்கம்.
4. மனை (வீடு) :
வீடு, அறை, அரண்மனை, வேலைக்களம், அறச்சாலை, முனிவர் தவநிலையம், சாலை.
5. கோயில் :
கோயில் (பொது), சைன பவுத்தக் கோயில், கிறித்தவக் கோயில், முகமதியர் கோயில் (பள்ளிவாசல்), கல்லறை. கோயில் என்பது அரசன் மனை போன்ற தேவமனை என்றுமாம்.
6. கல்விச் சாலை
7. ஊர் :
நகரம். பள்ளி என்பது ஒரு கோயில் அல்லது அரண்மனையிருப்பத
ுபற்றியும் ஒரு நகரைக் குறிக்கும்.
8. இடம் :
இச்சொற்பொருள் வரிசை ஏரணமுறை தழுவியதாகும். இதில் இறுதியில் வந்துள்ளபொருள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் முதலிடம் பெற்றிருத்தல் காண்க, இங்ஙனம் தலை கீழாக மாறியது, மொழி வளர்ச்சிக் காலத்து இலக்கியம் முற்றும், மறைந்தபின் இடைக்காலத்து இலக்கியத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, வரலாற்றுமுறை தழுவமுயன்றதன் பயனே.
இனி, இப்பள்ளி யென்னுஞ் சொற்பொருள் வரிசையை வழுப்பட அமைத்ததோடமையாது, இச்சொல்லை வடசொல்லென்றுங் கூறத் துணிந்துளது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சியம். இச்சொல் தென்சொல் என்பதை, பள்ளம் அல்லது தாழ்வு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இதனொடு தொடர்புற்ற ஏனைச் சொற்களைக் கண்டு தெளிக. அவையாவன:
பள் - பள்ளம் - பள்ளன் = பள்ளமான வயலில் வேலை செய்பவன்.
பள் - பள்கு - பள்குதல் = பதுங்குதல், பள் - பள்ளை = குள்ளமான ஆட்டுவகை
பள்ளையன் = குள்ளன்.
பள்ளை - பள்ளையம் = உண்கலம்.
பள்ளையம் போடுதல் = தெய்வத்திற்குப் படைத்தல்.
பள்கு - பளகு = குற்றம் (தாழ்வு).
பள் - பண் = நீர்நிலை.
பண் - பண்ணை = குழி, நெற்குத்துமாறு நிலத்திற் பதித்த நடுப்பள்ளக் கல், நீர்நிலை, மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்தி, மரக்கலம், விலங்கு துயிலிடம்.
பண் - பணி, பணிதல் = கீழ்ப்படிதல், பணி = தொண்டு, வேலை, தொழில்.
பணி - பாணி, பாணித்தல் = காலந்தாழ்த்தல்.
பண் - படு = 1. (பெ.) குளம், மடு. 2. (பெ.எ.) இழிவான.
படு - படுகர் = பள்ளம், வயல், மருதநிலம், நீர்நிலை,
படு - பாடு - பாடி = தாழ்வான வீடுகள் சேர்ந்த முல்லை நிலத்தூர் அல்லது இடைச்சேரி.
பாடு - பாடை = கால்கழி கட்டில்.
படு - படை - படைத்தல் = உண்ணுமாறு கீழிடுதல்.
படுத்தல் = தாழக்கிடந்து தூங்குதல்,
படு - படை = படுக்கை, தூக்கம்.
படுதல் = விழுதல், சாதல். படுத்தல் = கொல்லுதல்.
படு - படை = கொல்லும் ஆயுதம் அல்லது சேனை.
படு - படி, படிதல் = அடியில் தங்குதல், தங்குதல், கீழ்ப்படிதல், விழுந்து வணங்குதல், அமுங்குதல், தணிதல், குளித்தல், தூங்குதல்.
இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் சொற்பொருள் வரிசை # ஏரண முறைப்படிதான் இயலும் என்பதையும், பள்ளி என்பது பள்ளம் அல்லது தாழ்வு என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தூய தென்சொல் என்பதையும், தெற்றெனத் தெரிந்து கொள்க.
வட மொழியில் (சமற்கிருதத்தில்), ளகர மின்மையால், பள்ளி என்னுஞ் சொல் பல்லி என்றும் பல்லீ என்றும் வழங்கும். இவற்றுள் முன்னதற்குச்
1.சிற்றூர்,
2.காடுவாழ் மரபினர் குடியிருப்பு,
3.குடிசை,
4.வீடு என்னும் பொருள்களும்;
பின்னதற்குச்
1.சிற்றூர்,
2.குடிசை,
3.வீடு,
4.நகரம்,
5.ஒரு கூல முகத்தலளவு,
6.சிறு வீட்டுப்பல்லி என்னும் பொருள்களும்; மானியர் உவில்லியம் சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில் தரப்பட்டுள்ளன.
இவ் இரு சொல் வடிவுகட்கும் வேராகக் காட்டப்பட்டுள்ள சொல் pall (பல்ல்) என்பது, இவ் வேர்ப்பொருளாகக் குறிக்கப்பட்டவை ''போதல்'' (to go) , ''இயங்குதல்'' (to move) என்பன. இவ்வேரைக் குறிக்குமிடத்து, "ஒருகால் பின்வரும் சொற்கட்கு மூலங்காட்டும் பொருட்டுப் ''பல்'' என்னும் வேரையொட்டிப் படைக்கப்பட்டது!" ("invented after ''pal'', prob. to explain the following words") என்று மானியர் உவில்லியம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது,
பின்வருஞ் சொற்கள் என்று குறிக்கப் பெற்றவை பல்ல, பல்லக்க, பல்லி, பல்லிக்கா, பல்லீ என்பன, பல் (pal) என்னும் வேர்க்குக் குறிக்கப்பட்ட பொருளும், போதல் (to go) என்பதே.
பல்ல = பெருங்களஞ்சியம், நெற்கூடு.
பல்லக்க = தக்காணத்தில் ஒரு மாவட்டப் பெயரின் பிற்பகுதி.
பல்லிக்கா = சிற்றூர், சிறு வீட்டுப்பல்லி.
பள்ளி என்னும் சொல், பள் என்னும் வேரினின்று திரிந்து பல பொருள்களைக் கொண்டிருப்பினும், சிறப்பாகப் படுக்கையை யுணர்த்து மென்பது, பள்ளிகொள்ளுதல், பள்ளிகொண்டான், பள்ளிகொண்ட பெருமாள், பள்ளியெழுச்சி, பள்ளிமாடம், பள்ளிமண்டபம், பள்ளியந்துலா, பள்ளியம் பலம் முதலிய சொற்களால் அறியப்படும்,
படுக்கை என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளி என்னுஞ் சொல் முறையே வீடு, கோயில், பள்ளிக்கூடம் முதலிய பொருள்களை உணர்த்தும். இங்ஙனமிருப்பவும், இச் சொல்லை வடமொழியில் அதன் எழுத்து முறைக் கேற்பப் பல்லி என்றும் பல்லீ என்றுத் திரித்துக்கொண்டு போதல் அல்லது இயங்குதல் என்னும் பொருந்தாப் பொருளை அதன் வேர்ப்பொருளாக பொருத்திக் காட்டுவது மட்டுமன்றி, பல்லி என்னும் ஊருயிரிப் பெயரையும் பள்ளி என்னுஞ் சொல்லொடு மயக்கி, அதனையும் வடசொல்லென ஏமாற்றுவது. அறிவாராய்ச்சி மிக்க இவ் இருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணையும் ஏற்குமோ? கண்டு தெளிக கடுகளவேனுங் கருத்துடையார்.
- திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம், மணிவிழா மலர், 1958
@#ஐயன்_பாவாணர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக