திங்கள், 23 ஜூலை, 2018

ONGC சட்டவிரோதமாக 500 எண்ணெய் கிணறு

aathi1956 aathi1956@gmail.com

மார். 10
பெறுநர்: எனக்கு
ONGC – தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (பகுதி 1)

கடந்த மார்ச் 2ந்தேதி காவேரி டெல்டா வாட்ச் என்ற அமைப்பினரின் ஆய்வு அறிக்கை ஒன்றை சென்னையில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வெளியிட்டார். அவ்வறிக்கையில் தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஓஎன்ஜிசி கிணறுகள் எவற்றுக்குமே உரிமம் கிடையாது என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியானது. ஓர் அரசு பொதுத்துறை நிறுவனமே உரிமம் இல்லாமல் இயங்க முடியுமா போன்ற கேள்விக்குள் நுழைவதற்கு முன்னர் இந்த உரிமம் குறித்த சில அடிப்படைச் செய்திகளைப் புரிந்து கொள்வது நலமாக இருக்கும்.

எண்ணெய்க்கிணறு தோண்டும் பணியை இரு பிரிவாகப் பிரிப்பர். ஒன்று ஆய்வுக்காகத் துளையிடுதல் (Exploratory drilling), மற்றொன்று மேம்பாட்டுக்காகத் துளையிடுதல் (Development drilling). எண்ணெய் மற்றும் எரிவளி பிரித்தெடுக்கும் பணி, நடுவண் சுற்றுச்சூழல், காடு, மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் (MoEF&CC) கடும் மாசு ஏற்படுத்தும் தொழிலாக அடையாளம் காணப்பட்டுப் பிரிவு ‘ஏ’ சிவப்பு (A category Red) கீழ் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான சுற்றுச்சூழல் விதிகள் குறைந்தது ஏட்டளவில் சற்று இறுக்கமாகவே இருக்கின்றன.

ஓரிடத்தில் எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு ஹைட்ரோகார்பன் பொது இயக்குநரகம் ஒப்புதல் வழங்கிய பின்னர்த் தொடர்புடைய நிறுவனம் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் EC எனும் தடையில்லாச் சான்று (EC - Environmental Clearance) பெறவேண்டும் என்பது விதி. இதைப் பெறுவதற்கு முன்பாக மூன்று கட்டாயக் கடமைகளை அது நிறைவேற்ற வேண்டும். அவையாவன:

1) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA – Environmetal Impacr Assesement)
2) சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் (Environmental Management plan)
3) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் (Public Hearing)

EIA என்பதை இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் மதிப்பீடு என்பதாகவும், EMP என்பதை அப்பாதிப்புகளைப் போக்க மேற்கொள்ளப்படும் மேலாண்மை திட்டம் என்பதாகவும் நாம் புரிந்துக் கொள்ளலாம். இந்த அறிக்கைகள் பொது மக்கள் பார்வைக்கு அளிக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகும். ஆங்கிலத்தில் இருக்கும் இந்த ஆவணத்தை ஆங்கிலம் அறியாத பொதுமக்களுள் ஒருவர் கேட்பின் அதைச் சுருக்கமாகத் தமிழிலும் அளிக்கப்பட வேண்டும்.

இதையடுத்து கருத்துக்கேட்பு கூட்டம். இதற்கான அறிவிப்பை அது நடத்தப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர்த் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் உள்ளூர் பதிப்பில் அறிவிப்பாக வெளியிட வேண்டும். மேலும் தொடர்புடைய இடத்தின் மாவட்ட ஆட்சியகம் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் அறிவிக்கை பலகையில் ஒட்டப்பட வேண்டும். இதன் பிறகு பொதுமக்கள் கலந்து கொள்ளும் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களின் கருத்துக்கள் அனைத்தும் குறிப்புகள் எடுக்கப்பட்டு அது மாவட்ட ஆட்சியர் கருத்துடன் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு எண்ணெய்க்கிணறு அமைப்பதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா அல்லது எதிர்ப்பு இருக்கிறதா என்பது பரிசீலிக்கப்பட்டுத் திட்டத்துக்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இந்த அனுமதிதான் EC ஆகும்.

பிறகு இந்த EC பெற்றவுடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி எண்ணெய்க் கிணறு தோண்டும் இடத்தில் கட்டுமானங்களை நிறுவுவதற்கான அனுமதியான CTE (Consent To Establish) பெறவேண்டும். இது காற்று மாசுப்பாடு சட்டம், நீர் மாசுப்பாடு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் துளையிடும் பணியைத் தொடங்குவதற்கான அனுமதியான CTOவை (Consent To Operate) இதே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து இதே காற்று, நீர் மாசுபாடு சட்டங்களின் கீழ் பெறவேண்டும்.

நினைவிருக்கட்டும், இவை அனைத்தும் Exploratory drilling எனும் தொடக்கப் பணிக்கு மட்டும்தான். எண்ணெய் கிடைப்பது உறுதியாகி விட்டால் அடுத்து அதை எடுப்பதற்கான Development drilling தொடங்கும். இதற்கும் முன்பு செய்தது போல் மீண்டுமொரு முறை EC, அந்த EC பெறுவதற்குத் தேவையான EIA, EMP தயாரிக்கப்பட வேண்டும். பிறகு கிணறுகள் தோண்டப்படும் எல்லா ஊர்களுக்கும் அருகிலும் PH என்ற கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் முடிந்தவுடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் மீண்டும் ஒரு CTO பெற வேண்டும். கிணறு இயங்கும் காலம் முழுவதும் இந்த இயங்குவதற்கான அனுமதி (CTO) உயிருடன் இருக்க வேண்டும். ஏனெனில் இது குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டுமே வழங்கப்படும். தேவைப்படும் போது மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும்.

கிணறு இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்புடைய எண்ணெய் நிறுவனம் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அளிக்கப்பட்டிருக்கும் ECயின் நிபந்தனைபடி ஆறு மாதத்துக்கொரு முறை நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்துக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்துக்கும் Report of Compliance என்கிற அறிக்கையை அளிக்க வேண்டும். இந்த அறிக்கை பொது மக்கள் பார்வைக்காக இணையத்தளத்தில் வெளியிடப்பட வேண்டும். இத்தனை விதிகளையும் பின்பற்றிதான் ஓர் எண்ணெய் நிறுவனம் செயல்பட வேண்டும்.

ஆனால் நடைமுறை உண்மை என்ன? காவேரி டெல்டா வாட்ச் ஆய்வறிக்கையின்படி ஓஎன்ஜிசி தனது 700 கிணறுகளில் 183 கிணறுகள் இயக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆவணங்களின்படி (இன்னும் முழுமை பெறாதது) 219 கிணறுகளின் தகவல்கள் மட்டுமே உள்ளது. இதிலும் செயல்படும் கிணறுகளாக அடையாளம் காணப்படுவது 71 கிணறுகள் மட்டுமே. ஓஎன்ஜிசியோ இயக்கத்தில் இருப்பது 183 கிணறுகள் என்கிறது. அதில் 71ஐ கழித்தால் மீதியுள்ள 112 கிணறுகள் குறித்த தகவல்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இல்லை என்றாகிறது.

இந்த 71 கிணறுகளிலும் வெறும் 8 கிணறுகளுக்கு மட்டுமே முன்பு இயங்குவதற்கான அனுமதி (CTO) வழங்கப்பட்டிருந்தது. அதுவும் தற்போது காலவதியாகி விட்டது. ஆக இன்றைய தேதியில் கணக்கில் இருக்கும் இந்த 71 கிணறுகளில் ஒன்றுக்கு கூட இயங்குவதற்கான உரிமம் இல்லை. இதுதான் ஓஎன்ஜிசி எனும் அரசு பொதுத்துறை நிறுவனத்தின் நேர்மை.

நாம் ஒரு மோட்டார் வண்டி வாங்கினால் கூடவே ஆர்.சி புத்தகம் வேண்டும். சாலை வரி கட்ட வேண்டும். ஆயுள் காப்பீடு கட்ட வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும். இன்று தலைக்கவசமும் அணிய வேண்டும். இவை அனைத்தும் இன்றி நான் வண்டி வைத்திருக்கிறேன் என்று நாம் சாலையில் ஓட்டிச் சென்றால் அதைச் சட்டம் அனுமதிக்குமா? ஆனால் இங்கு அனுமதிக்கிறது. அதுமட்டுமன்றி அந்தத் தவறை சுட்டிக் காட்டுபவர்களைத்தான் சட்டம் கைது செய்கிறது என்பதுதான் வேதனை.

ONGC – தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (பகுதி 2)

நன்னிலம் கிணற்றை முன்வைத்து ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் எப்படியிருந்தது என்று பார்ப்போம். இதற்கு நேரடி சாட்சியாக இங்கு வாழ்வதால் இதை அறிய முடிகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்றுதான் நன்னிலம் போராட்டம் தொடங்கியது. பொதுமக்கள் எண்ணெய் கிணறு அமையவிருக்கும் இடத்துக்குப் போகாமல் மாப்பிள்ளைக்குப்பம் சாலையிலேயே அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் ஓஎன்ஜிசி தரப்புக்கும் பொதுமக்களுக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது மக்கள் பத்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை தருமாறு ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் கேட்டனர். அந்த 10 கேள்விகளுள் EIA, PH, EC, CTE, CTO போன்றவை பற்றிய கேள்விகளும் இருந்தன.

இங்குக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவெனில் இங்குள்ள மக்கள் நன்னிலம் கிணறான #ABAA சட்டபடி இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய விரும்பினர் என்பதுதான். ஆனால் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டபோது அந்நிறுவன அதிகாரிகள் பதட்டமானார்கள். மூன்றாம் கேள்விக்குப் பிறகு மொத்த கேள்விக்கும் மூன்று நாட்களில் சட்டபடியான ஆவணங்களைத் தருவதாகக் கூறி பத்துக் கேள்விகள் அடங்கிய பதிலை வாங்கிச் சென்றனர். அவ்வாறு வாங்கிச் சென்ற ஓஎன்ஜிசி அதிகாரிகள் சொன்ன தேதியிலோ, ஏன் இன்று வரையிலுமோ கூட அந்த ஆவணங்களைத் தரவில்லை. மாறாக நவம்பர் 8 அன்று ஓஎன்ஜிசியின் துணை பொதுமேலாளர் ஜோதிஸ் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். அதன் பேரில் பத்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அக்.31 போராட்டத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத பேராசிரியர். ஜெயராமன் பெயரும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது.

இதையடுத்துத் தோழர்கள் அன்புச்செல்வன், ரவி, திலக், ஜானகிராமன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உரிமம் இருக்கிறதா என்று நியாயமாக எழுப்பட்ட கேள்விக்கு இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி பற்றி உண்மைக்குப் புறம்பான அவதூறு செய்திகளைப் பொதுமக்களிடம் பரப்பியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குச் சில நாட்கள் பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர்கள் சண்முகம், முரளி இருவரையும் இதே புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட வந்த பேராசிரியர் ஜெயராமன் ஒருமுறையும், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு முறையும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட பதினோரு பேர் ஒருமுறையும், மீண்டும் அன்புசெல்வன், திலக், உத்தமன் ஆகியோர் ஒருமுறையும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆண் ஏன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருமுறையும், மீண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மூவர் மீது வழக்கு பதிவும் அதிலொருவர் கைதும் எனப் பலமுறை கைதுப் படலங்கள் நடந்தன. இதற்கிடையே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டங்கள் இருமுறையும், எட்டு ஊர்கள் இணைந்த கடையடைப்பு மற்றும் ஆட்டோ, வாடகை ஊர்திகள் ஓடாத போராட்டமும், கல்லூரி மாணவர்கள் போராட்டமும் நடத்தப்பட்டன.

உண்மையில் சட்டவிரோதமான பணியை எதிர்த்தே இப்போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. அரசு இயந்திரம் எழுப்ப வேண்டிய கேள்வியைதான் பொதுமக்கள் எழுப்பியிருக்கின்றனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பெறவேண்டிய முறையான உரிமங்கள் எதையும் நன்னிலம் ஓஎன்ஜிசி கிணறு பெறவில்லை என்பது காவேரி டெல்டா வாட்ச் ஆய்வறிக்கை வழி இப்போது உறுதியாகிவிட்டது. குறிப்பாகக் கிணறுகளை இயக்குவதற்கான CTO உரிமம் நன்னிலம் கிணற்றுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிலுள்ள எந்தக் கிணற்றுக்குமே பெறப்படவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த இயக்குவதற்கான CTO உரிமம் குறித்து நன்னிலத்தில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு ஓஎன்ஜிசி அதிகாரிகள் CTO உரிமம் கேட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது என்றும், அவர்கள் குறித்த காலத்துக்குள் உரிமம் தராவிட்டால் அதை ‘Deemed Consent’ எனக் கருதி பணியைத் தொடரலாம் என்ற விதி உள்ளதால் அவ்வாறு பணியைத் தொடர்கிறோம் என்று பதில் அளித்தனர். ஆனால் உண்மையில் அப்படி எந்தச் சட்டரீதியான விலக்கும் கிடையாது; குறிப்பாகக் காற்று சட்டத்தின் கீழ் இதற்கு இடமே கிடையாது.

ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் என்ன சொல்கிறது எனில் காற்றுச் சட்டம் பிரிவு 21இன் கீழும், நீர் சட்டம் பிரிவு 25இன் கீழும், அபாயகரமான கழிவுகள் (மேலாண்மை & கையாளுதல்) விதிமுறைகள் 2016ன் 3(C) & 5(5) பிரிவின் கீழ் பெற வேண்டிய அனைத்து சட்ட அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கிறது. இது உண்மைக்கு மாறான தகவல் என்பதற்குக் கதிராமங்கலமே எடுத்துக்காட்டு.

அங்குள்ள #KADK இலக்கமுள்ள கிணற்றில் கடந்த 2017 ஜூன் 30இல் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுப் போராட்டம் நடைப்பெற்றது. இதனால் 2017 ஜூலை 21 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இயக்குவதற்கான CTO உரிமம் இல்லாமல் ஓஎன்ஜிசி இயங்கியதால் அதன் செயற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதன்வழி ஓஎன்ஜிசி நிறுவன மெத்தப் படித்த அதிகாரிகளின் பொய் அம்பலத்துக்கு வந்தது.

நவம்பர் 23 அன்று நன்னிலம் கிணற்றின் சட்டபூர்வமான செயல்பாடு குறித்தும் சட்டவிரோதமாக இயங்கும் நிறுவனமான ஓஎன்ஜிசியின் உரிமம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்காக நன்னிலத்தில் கைதான மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேனாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், மேனாள் மகளிர் ஆணையத் தலைவி வே. வசந்திதேவி, வழக்கறிஞர்கள் கீதா இராமசேசன், வைகை, பத்திரிக்கையாளர்கள் சசிகுமார், கவிதா முரளிதரன், நித்யானந்த் ஜெயராமன் ஆகிய எழுவர் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதற்கு ஓஎன்ஜிசி ஊடகங்களின் வழி அளித்திருந்த பதில் இதுதான்.

‘ஓஎன்ஜிசி ஆய்வு பணிகளைத் தடுப்பதோ, எதிர்ப்பதோ சட்டப்படி குற்றம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிப்பு என்று கருதினால் பொது மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்’.

ஒளிப்படம் – நன்னிலத்தில் விளைநிலத்தின் நடுவே அமைந்துள்ள ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய்க் கிணறு

நன்றி நக்கீரன் நக்கீரன்

கார்ப்பரேட் மீத்தேன் ஹைட்ரோகார்பன் ஓ.என்.ஜி.சி வளங்கள் சுரண்டல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக