திங்கள், 8 ஜனவரி, 2018

நாய் நடுகல் பல்லவர் நடுகல் கல்வெட்டு 3

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
நடுகற்கள், கல்வெட்டு காட்டும் வரலாறு பகுதி 3
நாய்க்கு நடுகல்
மக்கள் மனிதர் தம் சிறப்பு வினைக் கருதி அவர்தம் நினைவில் நடுகல்
நிறுத்தியது போலவே தாம் செல்லமாக வளர்த்த கிளி, கோழி, எருது, குதிரை ஆகிய
பறவைகள் விலக்குகள் முதலியனவற்றுக்கும் நடுகல் எழுப்பி உள்ளனர். அவ்வாறே
ஒரு ஆண்டை தான் செல்லமாக வளர்த்த தன் இரு நாய்களின் நினைவாக நினைவுக் கல்
நிறுவி உள்ளான்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல்
நாய்களுக்காக நடப்பட்டுள்ளது. இதன் காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. (ஆவ.
இதழ். 12, 2001 பக்.3)
ஸ்வஸ்தி ஸ்ரீ - - - -ந - - - அம்ம - - - / ற் கோவந் நாய் முழகனும்
வந்திக்கா / கத்தியும் சேரிடு - - - - த நிப் பன்றி / கொன்று செத் / தந
சேரிடு - பிணைந்து ( to tie or fasten together)
மன்னன் பெயரும் ஆட்சி ஆண்டும் சிதைந்து உள்ளன. அம்மலூர் என்று
வழங்கப்பட்ட இன்றைய அம்பலூரில் கோவன் என்பவன் இரு நாய்களை
வளர்த்திருந்தான். அவ்வூருள் புகுந்த காட்டுப் பன்றி ஒன்றுடன் அவனுடைய
நாய்களான முழகனும், வந்திக் காகத்தியும் பிணைந்து சண்டையிட்டுப் போராடிப்
பன்றியைக் கொன்றன தாமும் செத்தன எனக் கல்வெட்டு பொறித்த கோவன் குறித்து
உள்ளான். செல்ல விலங்குகளுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி மிக அரிதாகவே
தமிழகத்தில் பதிவாகி உள்ளது.தொல் காப்பியத்தில் கூறப்பட்டு உள்ளது போல
செல்ல விலங்குளுக்கு மனிதரைப் போல் இங்கு பெயர் இடப்பட்டு உள்ளது.
பல்லவர் ஆட்சி நடுகல்
பல்லவராட்சி தமிழகத்தில் விஷ்ணு வர்மன் (கி.பி. 477) காலம் முதல்
முழுமையாக நிலைகொண்ட செய்தி இருளப்பட்டியில் கிடைத்த அவனது நான்காம்
ஆட்சி ஆண்டு (கி.பி. 480) நடுகல் மூலம் நிறுவப்பட்டு உள்ளது. அவன் பின்னே
வந்த சிம்ம வர்மன், சிம்ம விஷணு ஆகியோர் கால நடுகற்களும் அறியப்பட்டு
உள்ளன. பல்லவ மன்னர் நேரடியாகப் போரில் ஈடுபட்டதோ அவர் நடுகல் ஆனதோ
குறித்து செய்தி கொண்ட நடுகல் எதுவும் இதுவரை கிட்ட வில்லை. அவருக்குக்
கீழ்ப்படிந்த பாணர்கள் போரில் ஈடுபட்டு அதில் இறந்த மறவர்களுக்கு
எழுப்பப்பட்ட நடுகற்களே பெருமளவில் கிட்டி உள்ளன. தமிழ்நாட்டில் கிட்டிய
பெரும்பால் நடுகற்கள் பல்லவர் காலத்தவை. இது சங்க கால நடுகல் மரபின்
இடையறாத் தொடர்ச்சியின் விளைவே எனலாம். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்
வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம்
நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட நடுகல் உள்ளது. (சி. வீரராகவன்
மங்கையர்க்கரசி - ஆவ. இதழ். 7,1996, பக். 26)
கோவிசய பருமற்கு இருபத்து நால்காவது / கீழ்க் கோவலூரு குன்றட்டரைசரு
மக்கள் சிங்க / மஞிச்சியாரோடு எறி / ந்த ஞான்று / நீலகண்ட / ரைசரு மக்க /
ள் பொன்னு / ழதனார் சேவகரு / கரியாரு மக்கள் / - - - நீலகண்ட / ரு பட்ட
கல்
மக்கள் - மகன் என குறிக்கப்படும் படைஅதிகாரி; எறிந்த - வென்ற; சேவகன் -
படை அதிகாரி; பட்ட - வீரசாவுற்ற; கல் - நடுகல்.
பல்லவன் சிம்ம வர்மனா, சிம்ம விஷ்ணுவா என்று குறிப்பிடாமல் கோவிசைய என்று
மட்டும் குறிப்பிட்டு ஆட்சி ஆண்டை இருபத்து நான்கு என்று
குறிப்பிடுகின்றது இக் கல்வெட்டு. அப்போது கிழக்கு கோவூரை ஆளும்
குன்றட்டு அரைசர்க்கு மகன் எனும் அதிகாரப் பொறுப்பு உள்ள சிங்க மஞ்ஞிச்சி
என்பவனை எதிர்த்துப் போரிட்டு வென்ற போது நீலகண்ட அரைசர்க்கு மகன் எனும்
பொறுப்பு அதிகாரியான வேள் பொன் உழத்தன் என்பவனுடைய படைஅதிகாரி கரியான்
என்பவனுடைய படைஆள் நீலகண்டன் வீரசாவு அடைந்ததன் நினைவில் நிறுத்தப்பட்ட
நடுகல். கோவலுர் இன்றைய திருக்கோவிலூர் ஆகலாம். ஒருவர் அரசர் நீலகண்டர்
மற்றொருவர் எளிய போர் வீரர். போரில் சிங்க மஞ்ஞிச்சி தோற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில்
உள்ள வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம் நூற்றாண்டு நடுகல் மேல் உள்ள
கல்வெட்டு மாந்தர்களுடன் தொடர்பு உடையது. (ஆவ. இதழ். 7, 1996)
கோவிசய பற்மற்கு இருபத்தொன்பதாவது நீலகண்டதிய / ரைசரு மக்கள் பொற்
சாத்தன்னாரு தண்சூர திரைச சம்பவி / னாரோடு எறிந்த ஞான்று பொன்னுழ(த்த) /
(னாரு) சேவகரு - - - ராண்ட சிற்றரை வீரத்தனாரு க - - - / எறிந்து ப /
ட்டான்.
அதிஅரைசர் - வேந்தனுக்கு படை உதவி நல்கும் அதிஅரசனாகவும் தன்னிலையில்
மாமன்னனாகவும் இருப்பவர்
பல்லவ வேந்தனுக்கு அதிஅரைசர் நிலையில் உள்ள மாமன்னன் நீலகண்டன்
என்பவனுடைய மகன் எனும் பொறுபபு அதிகாரியான பொன் சாத்தன் எனும் சிற்றரசன்
தண்சூர் ஆளும் அதிஅரைசர் மாமன்னன் சம்பவின்னான் என்பவனுடன் போரிட்டு
வென்ற போது பொன் உழத்தன் என்ற சிற்றரசனுடைய படைத்தலைவனும் (பெயர்
சிதைந்த) ஊரை ஆண்ட வேளும் ஆன சிற்றரையைச் சேர்ந்த வீரத்தன் (ககரத்தில்
தொடங்கும் பெயர் சிதைந்த) ஊரை அழித்து வீர சாவடைந்தான். இதில் வரும்
சிற்றரை எனும் ஊரே இன்றைய சிறுவளூர்.  வேலூர் மாவட்டம் வாணியம்பாடி
வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம்
நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ். 20, 2010, பக். 196)
கோவிசைய சீபரும்மற் கிரு / த்தொன்பதாவது ஆட்டி தி / ங்கள் புணரு பூசது
ஞா(ன்)று தகடு / ருப் பிடி மண்ணேரிக் கீழ் உடை / யாரு தண்டத்தோடு இலாட /
ரைசரோடும் மழவரைசரோடும் / எறிந்து பட்டாரு கங்கதி அ / ரைசரு சேவகரு மாதப்
பெருதிரை / சரு கன்னாடு
ஆட்டி - ஆடி; திங்கள் - மாதம்; கீழ் - கிழக்கு; தண்டம் - படை; சேவகர் -
படைத் தலைவர்; கன்னாடு - கல் + நாடு
பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி
மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக்
கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர்,
மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு
வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின்
மாதன் பெருதிஅரைசர் என்பவர். ஒரு தமிழ் நடுகல்லில் மாதமும் நட்சத்திரமும்
முதன்முதலாகக் குறிக்கப்படுவது இதுவே எனலாம். இவ்வகை பல்லவ நடுகல் செய்தி
மிக அறிதாகவே உள்ளது. கீழ்ப் பிடி மண்ணேரி அரசருடைய பெயர் கல்வெட்டில்
குறிக்கப்பட வில்லை.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கானம்பாடி எனும் ஊரில் வட்டெழுத்து
பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று
காணப்படுகின்றது. (தரும. கல். 1973/2 பக்.76)
கோவிசைய சிங்கவிண்ண பரும(ற்)கு / இருப(த்)தேழா(வ)து கொரு நாட் / டு கொண்ட
ப _ றி(த்) தொறு (க்கொ)ள உரை எறிந்து இடுவித்து (பட்டான்) வதி / செலாவன்
கல்.
கொண்ட - கவர்ந்த; இடுவித்து - விடுவித்து
பல்லவன் சிம்ம விஷ்ணுவின் இருபத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 577)
கோவூர் நாட்டைச் சேர்ந்த பகைவர் கவர்ந்து சென்ற நிரைகளை மீட்க
உறையிலிருந்து வாளை உருவிப் பகைவரை அழித்து நிரையை மீட்டு விடுவித்து வீர
சாவடைந்தான் வதி செலாவன் என்பவன். அவன் நினைவில் நடப்பட்ட நடுகல் இது.
கோவூர் என்பது கொரு எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. சிதைந்த சொல்
பன்றி என்பதா எனத் தெரியவில்லை. அப்படியானால் பன்றி மேய்த்தோரும் உளர்
எனக் கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் எனும் ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டு
தருமபுரி நடுகல் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வட்டெழுத்து பொறிப்பு
பெற்ற நடுகல். (தரு. நடு. அகழ். பக். - 32)
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய மயி / ந்திர பருமற்கு யாண் / டு ஏழாவது பெரும் /
பாண விளவரைசர் / சேவகன் நைய வ / டுகன் (சாத்துழான்) தொ / று மீட்டு
பட்டான்
மகேந்திர வர்மனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 597) அவனுக்குக்
கட்டுப்பட்ட பெரும் பாண இளவரைசனின் படைத் தலைவன் நைய வடுகன் (சாத்துழான்)
ஆநிரைகளை மீட்டுப் வீர சாவடைந்தான். வடுகர் அசோகன் தந்தை பிந்துசாரன்
காலத்தில் மௌரியப் படை தமிழகத்தின் மேல் படை எடுத்து வர உதவினர். அப்படி
வந்தவர்கள் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் குடியேறி விட்டனர் போலும்.
நய்யன் ஒரு பழந்தமிழ்ப் பெயர். மேலை நாகரிக வரலாற்றில் இடம் பெரும் ஒரு
மன்னன் பெயர் Bel Nirari 1370 BC > வேள் நய்யர்அரி என்பது.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் போத்தன் கோட்டை எனும் ஊரில்
கல்லாற்றுக் கரையில் இருந்து பெறப்பட்ட வட்டெழுத்து பொறிப்பு உள்ள ஒரு
நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 1972/23, பக்.93)
கோவிசைய மயீந்திர பருமற்கு / ப் பதினைந்தாவது கோவூர் நாட்டுக் கீ / ழ்
வழிப்ப / ள்ளகூர் இருந்து / வாழுந் நஞ்சுணி / ஆர் மகன் கொற் / றாடை தொறு
/ மீட்டுப் ப / ட்டான் கல்
கீழ்வழி - கிழக்குத் திசை வழி; இருந்து - தங்கி
மகேந்திர வர்மனின் பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 605) கோவூர்
நாட்டின் கிழக்கு வழியில் அமைந்த பள்ளக்கூர் எனும் ஊரில் தங்கி வாழும்
நஞ்சுண்ணி என்பவர் மகன் கொற்றாடை என்பவன் பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டு
வீர சாவடைந்தான். அவன் நினைவில் நிறுத்திய நடுகல் இது. ஆநிரைகளைக்
கவர்ந்தவர் குறித்த சேதி கல்வெட்டில் இல்லை. பள்ளக்கன் என்பது ஒரு பழந்
தமிழ் ஆள் பெயர். அவ்வூர் அவருக்கு கொடையாக வழங்கப்பட்டதாலோ அல்லது அவரை
அடையாளப்படுத்தியோ பள்ளக்கூர் என ஊர் பெயர் வழங்கி இருக்கலாம். கடைசியாக
ஆண்ட மேலை நாகரிக Scythia மன்னன் பெயர் Palakus > பள்ளக்கு என்பது.
இவனுடைய தந்தை அலெக்சாந்தரின் தந்தை இரண்டாம் பிலிப்பால் கொல்லப்பட்ட
Ateas 339 BC > அதிய(ன்) என்பவன். இதனால் சித்தியர் தமிழர் தொடர்பு
வலுப்பெறுகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சொரகொளத்தூர் எனும் ஊரில் ஒரு
நடுகல் கல்வெட்டு உள்ளது இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு. (தொல். வே. அர.
பக். 145)
ஸ்வஸ்தி ஸ்ரீ / கோவிசைய நந்தி விக்கிர/ ம பருமற்கி யாண்டு பதினேழாவ / து
பல்குன்ற கோட்டத்து மண் / டை குள நாட்டுச் சுரைக் குளத்துத் தொறு கொளில்
/ பட்டார் நிலம் பேறூர் நாயகர் ஆதட் / டியார் மகனார் செருவலியார்
யாண்டு - ஆண்டு; கோட்டம் - ஆட்சிப் பிரிவைக் குறிக்கும் வட்டம்; தொறு -
ஆநிரை; கொளில் - கவர்தலில்; நாயகர் - சிற்றரசர் அல்லது படைத் தலைவர்;
மகன் - படைஆள்.
இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனின் பதினேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 748)
பல்குன்றக் கோட்டத்தில் அடங்கிய மண்டைக்குள நாட்டின் பகுதியான
சுரைக்குளத்து ஊர் ஆநிரைகளைக் கவரும் போது நிகழ்ந்த பூசலில் நிலம்பேரூர்
ஆளும் சிற்றரசர் ஆதட்டி என்பவருடைய படைஆள் செருவலி என்பவன் வீர
சாவடைந்தான்.  சுரைக்குளமே இன்று சொரகுளத்தூர் எனப்படுகின்றது. வேலூர்
மாவட்டம் வாலாஜாப் பேட்டை வட்டம் கீழைசாத்து எனும் சிற்றூரில் ஒரு நடுகல்
கல்வெட்டு உள்ளது (கி. குமார், ஆவ. இதழ் 7, 1996, பக். 15)
கோவிசைய நந்தீசுர பருமற்க் / கு யாண்டு முப்பத்தேழா / வது வள்ளிப்பேடு
நாடுடைய விக் / கிரமாத்திய நாடு மாரிகப்பா / கிழார் மகன் வக்கடி பட்டான்
கிழார் - ஊர்த்தலைவன், உரிமையாளன்
இரண்டாம் நந்தி வர்மனுடைய முப்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 754)
வள்ளிப்பேடு நாட்டின் பகுதியான விக்கிரமாதித்திய நாட்டின் ஊர்த்தலைவர்
மாரிகப்பா என்பவருடைய மகன் வக்கடி என்பவன் வீர சாவடைந்தான். போர் குறித்த
மற்ற எந்த சேதியும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.  வேலூர் மாவட்டம்
குடியாத்தம் வட்டம் குழிதிகை எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டுக் கால நடுகல்
கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. (E. I. Vol. 22,No.18, Pg. 113)
ஸ்ரீ கோவிசைய நந்தி / ச்சுர பருமர்கு யாண்டு / அம்பத்திரண்டாவது /
பெருமானடிகள் மேல் / வல்லவரையன் படை வந் / து பெண்குழிக் கோட்டை அ /
ழிந்த நான்று வாணரை / யர் மாமடி திருக எனத் திரிந்து பட்டார் கற்காட் /
டு உடைய கங்கதி அரை / யர் கன்னாடு பெருங் க / ங்கர்
நான்று - ஞான்று, அப்போது ( at the time of); மாமடி - மாமன், மாமனார்;
திருக - போருக்கு செல் என ஏவல்; திரிந்து - போர் மேல் சென்று; அதிஅரையர்
- சிற்றரசர், படைத் தலைவர்.
பல்லவன் நந்தி வர்மனுடைய ஐம்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 783)
பல்லவனான பெருமானடிகள் மேல் இராட்டிரக் கூடனான வல்லவரையன் படை நடத்தி
வந்து பெண்குழிக் கோட்டையை அழித்த போது பல்லவனுக்கு அடங்கிய வாண
அரையனானத் தன் மாமன் (அ) மாமனார் போருக்கச் செல் என்று ஏவ, உடனே போர்
மேல் சென்று போரில் வீர சாவடைந்தார் கற்காட்டை ஆளும் கங்க அதி அரையர்.
அவர் நினைவில் கல்நாட்டு உடைய பெருங் கங்கர் இந்நடுகல் நிறுத்தினார்.
இக்கல்வெட்டில் குறிக்கப் பெறும் யாவரும் அரசர்களே எளியோர் எவரும் இலர்.
ஓர் அரசனுக்கு தமிழ்நாட்டில் இது போல் நடுகல் நடப்படுவது அரிதானது.
பெருங் கங்கர் தந்தையாக இருக்கலாம். கற்காடு என்பதே களக்காட்டூர் ஆகும்.
இதில் குறிக்கப்படும் இராட்டிரக்கூடன் துருவன்.  திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில்
உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர.,
பக். 147) & (செங். நடு. 71/1978)
ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு / யாண்டு ஒன்பதாவது (அரி) மிறையார்
/ வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று
மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன்
ஐகன்
கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக்
குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.) [coat of Mail]; தா - வலிமை,
தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் -
பட்டான், வீர சாவடைந்தான்.
தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி
ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர்
வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு
உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது
மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப்
படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு
வீர சாவடைந்தான்.  பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு
படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை
மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில்
தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன்வந்த பாரமதாயரின்
படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக்
காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு
என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின்
உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால்
அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace)
என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.
-- Geetha Sambasivam 11:53, 9 ஜூலை 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக