வெள்ளி, 13 நவம்பர், 2020

சவுதி அரேபியா விவசாயம் சாதனை நீர்மேலாண்மை

 

aathi tamil aathi1956@gmail.com

வெள்., 21 ஜூன், 2019, பிற்பகல் 4:35
பெறுநர்: எனக்கு
சவுதி அரேபியா விவசாயத்தில் தன்னிறைவு பெற்றதெப்படி?
-----------------------------------------------------------------------

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவூதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தின் ராஜாளி... பரப்பில் மட்டுமல்லாது எண்ணெய் வளத்திலும் கொடிகட்டி பறப்பதால், அடித்துக் கொள்ள ஆளில்லை.

இஸ்லாமிய மக்களின் புனிதத் தலங்களான மக்காவும் மதீனாவும் அமையப்பெற்ற பூமி என்பதால், சவுதி மீது பிற இஸ்லாமிய நாடுகளுக்கு எப்போதும் ஒரு கரிசனம் இருக்கும்.முழுக்க முழுக்க பாலைவனங்கள் நிரம்பிய நாடு என்றாலும், அங்கும் ''கம்மிஸ் மஜ்ஜித்'' என்கிற கோடை வாசஸ்தலம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் சவுதி அரேபியா,சமீபகாலங்களாக நம்பவே முடியாத ஒரு முழக்கத்தை முன்வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோலிய வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதை கணக்கில் கொண்டே... இந்தப் புதிய முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

'' விவசாயத்தில் தன்னிறைவு பெறுவோம் ''

'' பாலைவனத்தை பசுஞ்சோலையாக மாற்றுவோம் ''

என்பதுதான் அந்த முழக்கங்கள்.

ஏற்கனவே பேரிச்சம் பழ உற்பத்தியில் பெரிய அளவுக்கு பொருளீட்டும் சவுதி அரேபியா, விவசாயத்தில் தன்னிறைவு பெறுவோம் என்றதும்,, அதைச் சுற்றி இருக்கிற அரபு நாடுகளால் கூட அதை நம்ப முடியவில்லை.

நீர்நிலை எண்ணிக்கை என்று பார்த்தால்,சவுதியில் நதிகளே இல்லை என்பது தான் உண்மை...ஆனாலும் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவோம் என்கிற அவர்களது நம்பிக்கையை நம்மால் புறந்தள்ளவும் முடியவில்லை.

கச்சா எண்ணெய்யை முற்று முழுதாக சார்ந்து நிற்கும் சவுதி அரேபியா, எதற்காக விவசாயம் செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

அதற்கான பதில் 2014 ஆம் ஆண்டு தொடங்குகிறது.அந்த ஆண்டு ஏற்பட்ட கச்சா எண்ணை விலை வீழ்ச்சி சவுதி அரேபியாவை ஆட்டங்கொள்ளச் செய்தது.

இயல்பிலேயே சொகுசுவாசிகளாக அறியப்பட்ட சவுதி மக்கள், இந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

நாடு அடுத்த வருவாயைத் தேடக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.துபாயைப் போல, வளங்கொழிக்கும் சுற்றுலாவிற்கு நாட்டை திறந்து விடலாம் என்றால், அதன் சட்ட திட்டம் அதை அனுமதிக்காது.பிற மத வழிபாட்டு தலங்களுக்கும் அல்லது வழிபாடுகளுக்கும் கிஞ்சித்தும் இடம் தராத, கட்டுப்பெட்டியான சட்டத்தை முதன்மையாக கொண்டிருக்கும் நாடு என்பதால், நிறைய யோசித்தார்கள்.

ஆனாலும் மாற்று வருவாய் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி அவர்களை உந்தித் தள்ளியது.

வெறும் 10 சென்டி மீட்டர் மழை மட்டுமே ஆண்டொன்றிற்கு பதிவாகும் சவுதி அரேபியாவில், வேறென்ன நம்மால் உருவாக்க முடியும் என்பதை சவாலாக எடுத்துக் கொண்டார்கள்.

உலகத்தையே கடுமையாக பீடித்திருக்கும் பருவநிலை மாறுபாட்டால், பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் கச்சா எண்ணெய், எங்கே இடம்பெயர்ந்து விடுமோ என்ற கவலையும் அவர்களைத் தொற்றிக் கொண்டது.

பெரிய அளவிற்கு சட்டவிரோதமாக குடியேறிய அயல்நாட்டு வாசிகள் கணக்கெடுப்பைத்
தொடங்கினார்கள். 6-மாத கால அவகாசம் கொடுத்தார்கள். அதற்குள் தாங்களே முன் வந்து உண்மையைச் சொன்னால், எவ்வித தண்டனையும் இன்றி, அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை அறிவித்தது சவுதி அரேபியா.கூடுதலாக உண்டியல் பணம் என்ற முறையில் சட்ட விரோதமாக நடந்து வந்த பணப் பரிவர்த்தனையையும் மொத்தமாக முடக்க திட்டமிட்டது சவுதி அரேபியா.

'' இந்த நடவடிக்கைகள் எதை காட்ட வருகிறது?'' 

என்று மன்னரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள்.

''சட்டவிரோதமாக நடக்கும் எதன் மூலமும் ஒரு அரசு சந்திப்பது இழப்பைத்தான்.அதனால் தான் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் '' என்றார் மன்னர்.

''அது சரி... நாட்டை எப்போது பசுஞ்சோலையாக மாற்ற போகிறீர்கள்''

 என்றும் கேட்டார்கள்.

'' பொறுத்திருந்து பாருங்கள்...'' 

என்ற மன்னரின் பதிலில் ஒரு கம்பீரம் உறைந்து கிடந்தது.

3,14,070 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீர்நிலைகளை கொண்டிருக்கும் இந்தியாவால் சொல்லமுடியாத ஒரு பதிலை...

4,300 மிகப் பெரிய அணைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியாவால் சொல்ல முடியாத ஒரு பதிலை...

ஜீரோ விழுக்காடு நீர்நிலைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சவுதி சொன்னது... நாங்கள் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவோம் என்று...

கச்சா எண்ணெய் வளத்தில் செழித்துக் கிடந்த சவுதி அரேபியா, 1970 களிலும் இதே முழக்கத்தை  முன்வைத்து முன்னேறியது. ரியாலின் மதிப்பு தெரியாத அன்றைய ஆட்சியாளர்கள்,, விவசாயிகள் விளையவைக்கும் ஒரு டன் கோதுமையை, 3500 ரியால் வைத்து அரசே கொள்முதல் செய்யும் என்று அறிவித்தார்கள்.

தண்ணீரே இல்லாத நாட்டில் எப்படி கோதுமை விளைந்தது என்று கேட்கிறீர்களா?விளைந்தது என்று சொன்னால் அப்படி இப்படி விளையவில்லை.மெட்ரிக் டன் உற்பத்தியை தொட்டு நின்றார்கள் சவுதி விவசாயிகள்.

1990 களில் நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை உற்பத்தி செய்து,உலகத்தையே அதிர வைத்தார்கள்.

சவுதி அரசும் அசந்து போனது. கொள்முதல் விலை அதிகம் என்பதால்,அரசு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

எல்லாம் சரிதான்.இதையெல்லாம் விளைய வைத்தவர்கள் யார்? என்ற கேள்வி பிறக்கிறது அல்லவா... அதற்கும் பதில் இருக்கிறது.எந்த சவுதியும் சட்டையை கழற்றி கோதுமை வயல்களில் இறங்குவதில்லை.

அதற்காகவே தோட்டவேலை விசாக்கள் உருவாக்கப்பட்டது. தோட்டங்களில் பெரிய அளவிற்கு எகிப்தியர்களும், சூடானியர்களும், பாகிஸ்தானியர்களும், இந்தியர்களும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். மிருக வேலைக்கு சொந்தக்காரர்களான எகிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், சவுதி அரேபியா உணவுத் தன்னிறைவை எட்டுவதற்காக களத்தில் நின்றார்கள்.

கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, குழாய்களின் வழியாக கொண்டு வந்து விவசாயத்தை அரங்கேற்றி, அசத்தியது சவுதி அரேபியா.

கோதுமைக்கு அடுத்து காய்கறி விவசாயத்தில் இறங்கினார்கள் சவூதிகள்.இந்தத் தாய்த் தமிழகத்தில் எதுவெல்லாம் விளைகிறதோ, அதுவெல்லாம் அந்த அரபு தேசத்தில் விளைந்தது. சராசரியாக சவுதிஅரேபியாவில் அடித்து நொறுக்கும் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இது எப்படி சாத்தியமானது என்பது தான் ஆகப்பெரிய விந்தை.

கோடைக்கு இதமாக கருதப்படும் தர்பூசணி பழங்கள், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்ததே கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான். ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சவுதி அரேபியாவில் தர்பூசணி தங்குதடையின்றி கிடைத்தது.

பாலைவன நீரூற்றை செயற்கைக்கோள்கள் மூலமாக கணித்து,அதை குழாய்கள் மூலமாக நாடெங்கிலும் கொண்டு சேர்த்தார்கள்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழகம்,வற்றி வறண்டு போய்க் கிடக்கிறது.ஆனால் எப்போதாவது மழை பெய்யும் சவுதி அரேபியாவோ என்னாளும் செழித்துக் கிடக்கிறது.காரணம்,நாட்டின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிற ஆட்சியாளர்கள்.
நேர்மையான,செயல்படுத்தக் கூடிய திட்டங்கள்.உற்பத்திகளில் அவர்கள் காட்டும் அக்கறை.

அடுத்து,கோதுமை உற்பத்தியை விட்டு காய்கறிக்கு சென்றவர்கள், ஒரு கட்டத்தில் ஏற்றுமதிக்கு தயாரானார்கள். ஆனால் அரசு அதற்கு தடை விதித்தது.இன்று உள்நாட்டுத் தேவைக்கு மட்டும் காய்கறிகள் பயிர் செய்யப்படுகிறது.

மஜரா என்கிற அவர்களின் விவசாய விளை நிலங்களில், செழித்துக் கிடக்கிறது தமிழ்நாட்டு தக்காளியும் கத்தரிக்காயும்.

தமிழகத்திலுள்ள சாத்தூரிலும், 
தே.கல்லுப்பட்டியிலும் கிடைக்கும், பிஞ்சு வெள்ளரிக்காய்களை, நீங்கள் சவுதி அரேபியாவிலுள்ள, தம்மாமிலும், ஜித்தாவிலும், ரியாதிலும் நினைத்த மாத்திரத்தில் வாங்கி சுவைத்து விட முடியும்.

இதையெல்லாம் விட ஒரு அதிசயம்... நாம் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கும், இயற்கை விவசாயத்தை, அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை.

தமிழகத்தைப் போல கடைவீதிகளில் கடைவிரித்து எதையும் அங்கு விற்றுவிட முடியாது.அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான மருத்துவர்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில்,நோயாளிகள் எண்ணிக்கையோ ஆயிரத்தை தாண்டவில்லை.

குறைபாடுகள் சில இருந்தாலும்,

பெண்ணுரிமை பேணப்படவில்லை என்ற கூக்குரல் எழுந்தாலும், 

ஜனநாயக காற்றை அந்த மக்களை சுவாசிக்க விட மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தாலும், 

உலகம் கற்றுக் கொள்ளுகிற அளவுக்கு சவுதியில் நிறைகள் நிறையவே இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில், அது விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதோடு, பெரிய அளவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்திலும் அந்த நாட்டு விவசாயிகள் ஈடுபடலாம்.

( இன்னும் வளரும்...)

--தமிழர் நலப் பேரியக்கம்-தமிழர் நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக