வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சீமான் பேட்டி வழக்குகள் ஆமைக்கறி

aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 11:17
பெறுநர்: எனக்கு

தமிழ்நாடு
`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா?!'   - வெடிக்கிறார் சீமான்
Last Updated : 25-06-2018 14:20:27
- ஆ.விஜயானந்த்
சீமான்

அடுத்தடுத்த வழக்குகளில் சீமானைக் கைது செய்வதற்கான முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. எட்டு ஆண்டுகளுக்கு முன் பேசிய விவகாரத்தில்கூட அவருக்குச் சம்மன் அனுப்பியிருப்பதுதான் ஹைலைட். `மக்களுக்காகப் போராடும் குரல்களை ஒடுக்கினால், திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என அரசு நினைக்கிறது. கருணாநிதி, ஜெயலிலதா ஆட்சியில்கூட இப்படியெல்லாம் நடந்தது இல்லை' எனக் கொதிக்கிறார் சீமான்.

This article will continue after this advertisement

அரியலூர் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் பேசியதற்காக, சீமான்மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010 ம் ஆண்டு மீனவர் படுகொலை தொடர்பாகப் பேசியதற்காகவும், தற்போது வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்மனை எதிர்கொள்வதிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் நேரம் கழிகிறது. ``அரியலூர் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் நான் என்ன பேசினேன் எனத் தெரியவில்லை. என்னிடம் வந்த போலீஸாரிடமும் இதுகுறித்துக் கேட்டேன், `நீதிமன்றம் வந்தால் தெரியும்' என்றார்கள். அந்தக் கூட்டத்தில் நமது பண்பாட்டு வளமை, மொழியைப் பற்றித்தான் பேசினேன். இவ்வளவு நாள் கழித்து இப்போது வழக்குப்போட வேண்டிய அவசியம் என்ன? 2010-ம் ஆண்டு மீனவர் படுகொலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் நான் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துப் பேசிவிட்டேன் எனக் கூறி வழக்கு போட்டுள்ளார்கள்.

அந்தக் கூட்டத்தில் பேசியதற்காக ஆறு மாத தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துவிட்டேன். அப்போதே இந்த வழக்கையும் அதனுடன் இணைத்திருக்கலாமே? எட்டு ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளனர். வழக்குக்கு மேல் வழக்கு போட்டு நீதிமன்றங்களாக ஏறி இறங்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஐ.பி.எல் போட்டி எதிர்ப்புக்குப் பிறகு எவ்வளவோ போராட்டங்கள் நடந்துவிட்டன. இப்போது ஏன் கவுதமனைக் கைது செய்ய வேண்டும்? ஜனநாயகத்துக்கான குரல்கள் இருக்கவே கூடாது என நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட குரல் ஒலிக்கவே கூடாது என இந்த அரசாங்கம் நினைக்கிறது" எனக் கொதிப்போடு பேசத் தொடங்கிய சீமானிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

வேல்முருகன், கவுதமனைத் தொடர்ந்து நீங்களும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதே?

``ஆமாம். என்னைக் கைது செய்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். நாளையிலிருந்து மதுரையில் இரண்டு வாரம் கட்டாயக் கையெழுத்துப் போட வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. அதேநேரம், சேலம் ஓமலூரிலும் கையெழுத்துப் போட வேண்டும் என்றார்கள். இந்த இரண்டு கையெழுத்தையும் சென்னையிலிருந்தே போடுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்குள் ஏதாவது ஒரு வழக்கில் என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். சட்டப்படி முன்ஜாமீன் கேட்கிறோம். அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்காகப் போராடும் குரல்களை ஒடுக்கினால், திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என நினைக்கிறார்கள்".

உங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அவர்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததே?

எடப்பாடி பழனிசாமி``குண்டாஸ் உடைந்தபிறகு, உடனே இந்த வழக்கை போட்டுவிட்டார்கள். இடும்பவனம் கார்த்திமீதும் குண்டர் சட்டம் போட்டுள்ளனர். அவரைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது. படித்து முடித்துவிட்டுக் கிடைத்த வேலையைவிட்டுவிட்டு மக்களுக்காகப் போராட வந்த பச்சைப் புள்ளை அவன். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவர் மீதும் பத்து வழக்குகள் பதியப்படுகின்றன. வழக்குகளைப் போட்டுவிட்டுத்தான் இவர்கள் ஆள்களைத் தேடுகிறார்கள். வழக்கு என்றால், குற்றச் செயலில் ஈடுபட்டுத் தொடர்பிருந்தால் தண்டனை பெற்றுத் தருவதுதான் மரபு. இவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லையென்றால், ஒருவர் மீதே 15 வழக்குகளைப் போட்டுவிடுவது என்ன மாதிரியான அணுகுமுறை?"

ஜெயலலிதா, கருணாநிதியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

``தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராகக் கடுமையாக வேலை பார்த்தோம். அப்போது அடக்குமுறைகள் இருந்ததே தவிர, இந்தளவுக்கு இல்லை. அன்று கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள். நெருக்கடிகள் கொடுப்பார்கள். ஆனால், இந்த ஆட்சியைப் போல் அவர்கள் நடந்து கொண்டது இல்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்தளவுக்கு அவர் எங்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்ததில்லை. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலையை இந்த அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த ஆட்சியை மத்திய அரசு அப்படியே எடுத்துக் கொண்டது. ஒரு சீட்டைக்கூடப் பெறாமல், தமிழ்நாட்டை மத்திய அரசு ஆள்கிறது என்பதுதான் உண்மை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது இந்த ஆளுநர்கள் ஏன் ஆய்வுகளை நடத்தவில்லை? மத்திய அரசின் திட்டங்களை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால், மோடி ஏற்றுக் கொள்வாரா?"

பசுமை வழிச்சாலையை எதிர்ப்பதால்தான் வழக்குகள் பாய்கின்றனவா?

``ஆமாம். அளப்பறிய வளம் இருக்கும் நிலமாகத் தமிழகம் இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்கலம் வானில் ஆய்வு நடத்துகிறது. இதுவரையில் ஏதாவது படம் எடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறதா? வானத்தில் பறந்து பூமிக்கு அடியில் உள்ள வளங்களை ஆய்வு செய்வதுதான் அதன் நோக்கமாக இருக்கிறது. வளங்களைப் படம் எடுப்பதால்தான், கதிராமங்கலத்துக்கு வந்து குழாய் பதிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் விவசாய நிலங்களைக் கூறுபோடும் வேலைகள் நடந்து வருகின்றன. தஞ்சையில் ஆறு வழிச்சாலை, சேலம் பசுமை எட்டு வழிச்சாலை, ஒசூரில் விமான நிலையம் என இந்தத் திட்டங்கள் எல்லாம் சாகர்மாலா திட்டத்துக்குள் வருகின்றன. ரயில், சாலை, விமானம் என மூன்று போக்குவரத்தையும் கப்பல் போக்குவரத்துடன் இணைப்பதுதான் இவர்கள் நோக்கம். மலைகளை நொறுக்கி வளங்களை எடுப்பது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய வளங்களை விரைந்து கொண்டு செல்வதற்காகத்தான் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், `இங்கு இரண்டு கோடியே 80 லட்சம் கார்கள் வந்துவிட்டன' என்கிறார். கார் போவதைப் பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார். நீரும் சோறும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கார் இல்லை என்ற ஏக்கத்தில் எந்த நாட்டில் புரட்சி வந்துள்ளது? ஆனால், நீரும் சோறும் இல்லாத நாட்டில் புரட்சி வராமல் இருந்திருக்கிறதா? இதைக் கேட்டதற்காகத்தானே துப்பாக்கித் தோட்டாவைப் பரிசாகக் கொடுத்தார்கள். சோமாலியாவில் நடந்தது, நாளை தமிழகத்திலும் நடக்கும். வளர்ச்சி என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். பச்சைப் பசேல் என இருக்கும் விவசாய நிலங்களை அழித்து, நீராதாரங்களை அழித்து, அரணாக இருக்கும் மலைகளை அழித்துப் போடப்படும் சாலைக்கு எப்படிப் பசுமைச் சாலை எனப் பெயர் வைக்கிறார்கள்? அது கருஞ்சாலை எனப் பெயர் வைக்க வேண்டும். தங்க நாற்கரச் சாலையால் எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டன.. இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்களில் பறவைகள் கூடு கட்டுமா?"

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்த விவகாரத்தில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உங்களை விமர்சித்திருக்கிறாரே?

``அண்ணனுக்கு என்ன சூழல் என்று தெரியவில்லை. பத்தாண்டுகள் கழித்து இப்போது பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நான் மிகையாகச் சொல்கிறேன் என்றால், பிரபாகரனைச் சந்திப்பதற்காக அவர் என்னுடன் பயணித்து வந்தாரா? அங்கு என்ன நடந்தது என்பதை நான்தான் சொல்ல வேண்டும். பயண அனுபவங்களைச் சொல்வதற்காகத்தான் பயணங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு எனக்கும் என் நிலத்தில் இருந்த உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பதை நான்தான் இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். அங்கு சீமான் சொல்வது போல நடந்திருக்க வாய்ப்பில்லை என நீங்கள் சொல்ல வேண்டிய தேவை என்ன.. அரசியல் நிர்பந்தம் காரணமாக விமர்சிக்கலாம். இதைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவை இல்லை. அது ஒரு பிரச்னையும் இல்லை.

`சீமான் அங்கு போனார்; போகவில்லை; சாப்பிட்டார்; சாப்பிடவில்லை, ஆமைக்கறி சுட்டார்; சுடவில்லை, கடலில் போனார்; கப்பலில் போனார்' என்பதெல்லாம் இப்போது அவசியமில்லாத பேச்சு. ஈழத்தைவிட பேராபத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அங்கு அழித்து ஒழித்தார்கள். இங்கு ஆக்ரமித்து ஒழிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இந்த மக்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். என்னை இப்போது விமர்சிப்பவர்களால்தாம் நான் வளர்க்கப்பட்டேன். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நடந்தது என்ன என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும். இதைப் பற்றி ஒன்று நான் சொல்ல வேண்டும் அல்லது அவர்(பிரபாகரன்) சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் இது ஒரு வெட்டிப் பேச்சாகவே பார்க்கிறேன்"


Published Date : 25-06-2018 13:57:10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக