வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தமிழ்மொழி பழமை மற்றும் சமஸ்கிருதம் கலப்பு பற்றி பரிதிமாற்கலைஞர்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 9 ஜூலை, 2018, பிற்பகல் 2:17
பெறுநர்: எனக்கு

இன்றைக்கு வடமொழி 26 எழுத்துகளை தமிழுக்குக் கொடுத்தும் தமிழிலிருந்து அய்ந்து எழுத்துகளை (எ,ஒ,ன,ற,ழ) பெற்றும் ஒருங்குறி (ஹிஸீவீநீஷீபீமீ) என்ற பெயரில் சமஸ்கிருதத்துக்குப் புத்துயிர் கொடுத்து, ஏற்கெனவே தமிழைக் கெடுத்தது போதாது என்று புது முயற்சியில் தமிழில் கலப்படத்தை ஏற்படுத்தும் மகாசதியில் ஈடுபட்டுள்ளனர்.
சமஸ்கிருதத்தின் இந்தப் போக்குக் குறித்து பெரும் புலவரும், பார்ப்பனருமான வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்), தமிழ் மொழியின் வரலாறு என்னும் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங் கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழ வேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும் தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழியென்று உரைப்பாராயினர். அது வடமொழியென்னப்பட்டவுடனே தமிழ்மொழி தென்மொழியெனப்படுவதாயிற்று.
தமிழரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும், சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமிழொடு மருவு முன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலே தான் தமிழ் மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.
இவ்வழி மொழிகளிலே தெலுங்குதான் வடமொழியொடு மிகவுங் கலந்து விசேடமான திருத்தப்பாடடைந்தது; தனது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங்கிலக்கணமெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்டராதிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.
இவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப் படுத்திக் கொண்டது. இதனாலன்றோ பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் அஃது இருவேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங் கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப் புலவர் பலர் இன்றுமுளர்.
இனி மலையாளமோ வெகுநாள் காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொருவனால் மிக்க திருத்தப்பாடு அடைந்தது. உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது.
மேற்கூறிய தெலுங்கு, கன்னடம், மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையுமுடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.
இனித் தமிழ்மொழியும் வடமொழியுங் கலந்தியங்கு மாற்றைபற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.
வடமொழிக் கலப்பு
வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ்மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.
முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்
என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ லையுங்காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும், மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.
தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்பாட்டிற்குப் பெரிது மிணங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்ட போதிலும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. நாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர். தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.
இவ்வாறு தமிழருட் பண்டிதராயினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார். வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வடசொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ அதையும் ஆராய்வாம்.
வடமொழி, தமிழ்மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இரு வகை வழக்குமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின் கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப் பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயிவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்தவண்ணம், ஓசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இது தானுண்மை இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.
இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப் பார்த்தும் அவற்றை விலக்குதல், முடியாது போயிற்று. போகவே தமிழ்ப் புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.
அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வடசொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தினுள்ளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.
பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய் விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிதுகாலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன.
இக்காலத்திலே தான் செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழ் இருபிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந்தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம் என்று எழுதுகிறார் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞர்.

பார்ப்பனத்தமிழர் தமிழ்ப்பார்ப்பனர் தமிழ்ப்பற்று பார்ப்பனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக