வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இராகவையங்கார் தமிழ்ப்பற்று பார்ப்பனர் தமிழ்த்தொண்டு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 12 ஜூலை, 2018, பிற்பகல் 6:09
பெறுநர்: எனக்கு
கதிர் நிலவன்
"தமிழ்மொழிப் பேராசான்" இரா.இராகவைய்யங்கார் நினைவு நாள்
11.7.1946
வீறுமிக்க புலவர்களின் சாறுதான் பேரறிஞர் இராகவைய்யங்கார். சோழ மன்னர்களின் விக்கிரமன், குலோத்துங்கன், இராசராசன் ஆகிய மூவர் அரசவைகளிலும் தலைமைப் புலவராய் ஒட்டக்கூத்தர் இருந்தார். அதுபோல சேது சமஸ்தானத்தை ஆண்ட பாசுகர சேதுபதி, முத்துராமலிங்க ராசராசேசுவர சேசுபதி, சண்முக ராசேசுவர நாகநாத சேதுபதி ஆகிய மூவரின் தலைமைப் புலவராய் வாழ்ந்து மறைந்தவர் "சேது சமசுதான மகாவித்துவான்" என்று அழைக்கப்படும் இரா.இராகவைய்யங்
கார் ஆவார்.
சிவெகெங்கை சீமைக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் இராமானுச ஐய்யங்கார்- பத்மாசனி இணையருக்கு மகனாக 20.9.1870ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் இராகவன்.
முன்பு சேது சமசுதானத்தின் அரசவைப் புலவராக இருந்தவரும் தாய் மாமனுமாகிய முத்துச்சாமி ஐயங்காரிடம் சிறுவனாகிய இராகவன் கல்வி பயின்றான். மெட்ரிகுலேசன் வரை பள்ளிக் கல்வி பெற்ற இராகவன் தாய் மாமனிடமே வடமொழியும், தமிழ்மொழியும் கற்றான். பதினேழு வயது நிறைவடைந்த போது தமிழில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தான். இவனின் மொழியறிவு கண்டு அறிஞர் உலகமோ பாராட்டியது.
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 18ஆம் அகவையில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் திருச்சி சேசையங்கார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்த போது இவரின் தமிழ்ப்புலமையை கேள்வியுற்று வியந்த சேது மன்னர் பாசுகர சேதுபதி இவரை நேரில் அழைத்து வந்து அரசவையின் தலைமைப் புலவராக அறிவித்தார். அது முதல் அனைவரும் "மகாவித்துவான் இராகவைய்யங்கார்" என்று இவரை அழைக்கத் தொடங்கினர்.
மதுரையில், 'பைந்தமிழ்ப் பாவலர்' பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச்சங்கம் நிறுவிய போது, அதற்கு உறுதுணையாக இருக்கும்படி மன்னர் பாசுகர சேதுபதி அவர்கள் இவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்ட இராகவைய்யங்கார் ஓலைச்சுவடிகளிலிருந்து நூற் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். தமிழ்ச்சங்கம் நடத்திய 'செந்தமிழ்' இதழில் 'ஆராய்ச்சி' எனும் தலைப்பில் இலக்கிய இலக்கண ஆய்வுரைகளை விடாது எழுதி வந்தார்.
'செந்தமிழ்' இதழ் மூலம் ஐந்திணையம்பது உரை, கனா நூல், வளையாபதிச் செய்யுட்கள், புலவராற்றுப் படை, இனியது நாற்பது உரை, நேமிநாதம் உரை, திருநூற்றந்தாதி, முத்தொள்ளாயிரம்
, பன்னிரு பாட்டியல், தொல்காப்பியர் செய்யுளியல் ஆகியவற்றை வெளிக் கொணர்ந்தார்.
இராகவையங்கார் மேடைச் சொற்பொழிவில் கைதேர்ந்தவர். இவரின் மேடைச் சொற்பொழிவைக் கேட்டு பல அரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யரே வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
வள்ளல் பாரியின் கதையைக் கூறும் 'பாரி காதை' எனும் பெருங்காப்பியத்
தை இராசா சர்.அண்ணாமலை செட்டியார் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். அந்நூலைப் படித்து உவப்புற்ற அண்ணாமலை அரசர் 1937ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலையின் முதல் வெளீயிடாக மலரச் செய்தார். அதனையடுத்து, இராகவைய்யங்காரின் 'தமிழ் வரலாறு' நூல் இரண்டாவதாக 1941ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சேது நாடும் தமிழும், வஞ்சி மாநகரம், புவி எழுபது, திருவடி மாலை, சீராம நாமப்பாட்டு, இராச இராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை ஆகிய நூல்களை எழுதி தொடர்ந்து தமிழுக்கு ஆக்கம் செய்யத் தவறவில்லை.
65ஆம் அகவை நிறைவான போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழின் தவப்புலவனை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவராக தத்தெடுத்துக் கொண்டது. அங்கு படித்து வந்த மாணவர் சமூகம் இவரின் தமிழறிவை கற்று தனது அறிவை கூர்தீட்டிக் கொண்டது.
தமிழுக்கு தொண்டூழியம் புரிந்து வந்த இராகவைய்யங்கார் வடமொழி நூல்களையும் விட்டு வைக்க வில்லை. காளிதாசரின் சாகுந்தலை, ரகுவம்சத்தையும் அமுதத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தார்.
கண்பார்வை குறைந்து, உடல் தளர்வுற்று தனது இராமநாதபுரம் இல்லத்தில் வாழ்ந்த போதிலும், சேது அரசவைக்குச் சென்று தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் பணியை தளர்வின்றி செய்து வந்தார்.
தமிழையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வந்த இராகவையங்கார் 75ஆம் அகவையின் போது தமது தமிழ் மூச்சினை நிறுத்திக் கொண்டார்.
'தமிழ்த்தொண்டன்' இராகவையங்காருக்
கு வீரவணக்கம்!
நூல் உதவி: குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய "தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்".

ராகவையங்கார் ராகவய்யங்கார் ஐயங்கார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக