வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கூடங்குளம் அணுவுலை கழிவுகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் அரசு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 11:24
பெறுநர்: எனக்கு
கூடங்குளம் வேண்டும் என வாதிட்ட மேதாவிகளுக்கு விகடனின் இந்த கட்டுரை சமரப்பணம்..

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தேசிய அணுமின் கழகம், `கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தது. ஆனால், `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் `கால அவகாசம் கொடுத்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும், கால அவகாசத்தை நீடித்து கொடுக்கக் கூடாது' என்று வாதிடப்பட்டது. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் வாதிட்டதற்கான காரணம் பற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

``2013-ம் ஆண்டு கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் எழுச்சிப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்துக்குப் பின்னர்தான் தமிழகத்தில் அதிகமான சுற்றுச்சூழல் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்போது கூடங்குளத்தில் நடந்த போராட்டத்தின்போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம். அப்போது மத்திய அரசு, `கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்' என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதி மக்கள் இரண்டு நாள்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம், தமிழகத்தில் எந்தக் கட்சிகள் எல்லாம் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றாகக் கைகோத்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தின. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு வேண்டும். ஆனால், அதிலிருந்து வெளிவரும் அணுக்கழிவுகள் கர்நாடகாவுக்கு வேண்டாம் என்பதைக் கர்நாடக மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டனர். அன்று கர்நாடக முதல்வராக இருந்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், `கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகாவின் எந்த மூலையிலும் கூடங்குள அணுக்கழிவுகளை கொட்ட விட மாட்டோம்' என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

இரண்டு நாள்கள் கழித்து மத்திய அரசு தரப்பில், `கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலாரில் கொட்டப் போவது இல்லை. கூடங்குள அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே வைக்கப்போகிறோம்' என்று மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்தியாவில் உள்ள அணுக்கழிவுகளை வைப்பதற்கான பெரிய ஆழ்நிலை கருவூலத்தை அமைக்க வேண்டும். அதேபோல கூடங்குளத்தில் உருவாகும் கழிவுகளை அங்கேயே வைக்காமல், வேறோர் இடத்தில் வைக்க வேண்டும். இதற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. 2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் படி இப்போது ஆழ்நிலை கருவூல மையத்தை அமைத்திருக்க வேண்டும். இந்நிலையில் தேசிய அணுமின் கழகம் ஒரு மாதத்துக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில், `கூடங்குளத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்' என்று கோரியது.

கூடங்குளம் அணு உலை

இங்கே நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூடங்குளம் போராட்டம் நடந்தபோது, கூடங்குளத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அணுக்கழிவுகளை உருண்டையாக உருட்டி வீடுகளில் வைத்துக் கொள்ளலாம் என்று பதில் சொன்னார்கள். மேலும், இது மூன்றாம் தலைமுறை அணு உலை, எந்தப் பிரச்னையும் கிடையாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, போராடும் மக்கள் அனைவரையும் தேச விரோதிகளாகச் சித்திரித்தனர். இன்று தேசிய அணுமின் கழகமே முன்வந்து எங்களிடம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதுதான் வேதனை தருவதாக இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அணுசக்திக் கழகம் கால அவகாசம் கோரியிருப்பதை மறுத்து பூவுலகின் நண்பர்கள் சார்பாக, `இவர்களிடம் அணுக்கழிவுகளை கையாளும் முறை முழுமையாக இல்லை. இவர்கள் 5 வருடங்களில் எப்படிக் கட்டுவார்கள் என்றும் நம்ப முடியாது. ஒவ்வோர் ஆண்டும் கூடங்குளம் இயங்கினால் அணுக்கழிவுகள் கூடிக்கொண்டே போகும். அதனால், கூடங்குளத்தில் 1 மற்றும் 2-ம் அலகின் உற்பத்தியை நிறுத்த வேண்டும். அணுக்கழிவு மேலாண்மை கட்டமைப்புகளை அமைத்த பிறகு கூடங்குளத்தை அணுசக்திக் கழகம் இயக்கிக் கொள்ளட்டும்' என்று தெரிவித்தோம். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், `கடந்த 5 ஆண்டுகள் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அணுசக்திக் கழகம் என்னென்ன செய்திருக்கிறது, இனிமேல் என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி தெளிவான அறிக்கையை ஜூலை மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எனவே, தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக