வெள்ளி, 16 மார்ச், 2018

நானே அடுத்த கருணாநிதி திருமா எழுதியது போல கடிதம் சவுக்கு

aathi tamil aathi1956@gmail.com

26/11/17
பெறுநர்: எனக்கு
கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்.
BY SAVUKKU · AUGUST 17, 2010
அது என்ன சின்னக் கருணாநிதி என்று பார்க்கிறீர்களா ? கடிதத்தை
படித்தீர்கள் என்றால் விபரமாகப் புரியும். கருணாநிதிக்கு நிகராக, சின்னக்
கருணாநிதி என்ற பட்டத்தை பெற தகுதியான ஒரே நபர் என்று சவுக்கால்
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர், தொல்.திருமாவளவன் தான். இனி அவர்
கருணாநிதிக்கு எழுதிய கடிதம், சவுக்கு வாசகர்களின் அன்பு பார்வைக்கு.
அன்புள்ள கலைஞர் அவர்களே… மன்னிக்கவும் டாக்டர் கலைஞர் அவர்களே… மீண்டும்
மன்னிக்கவும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே.
எனது பிறந்த நாளில், எனக்கு இருக்கும் ஒரே ஆசையை தாங்கள் நிறைவேற்றித்
தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் இந்தக்
கடிதத்தை எழுதுகிறேன்.
நீங்கள் பிற்பட்ட சமூகத்தில் பிறந்தவர். நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தில்
பிறந்தவன். நீங்கள் தமிழர்களை ஏய்த்து முன்னுக்கு வந்தவர். நான்
தலித்துகளை ஏய்த்து முன்னுக்கு வந்தவன். மொத்தத்தில் ஏய்த்துப்
பிழைப்பதில் நான் எந்த வகையிலும் உங்களுக்கு சளைத்தவனில்லை என்பதை இந்த
நேரத்திலே சொல்லிக் கொள்ளுகிறேன்.
எனது வாழ்வை சென்னை பல்கலைகழகத்தில் தொடங்கும் போது நானும், உங்களைப்
போலவே ஏழ்மையைச் சந்தித்தவன். புறக்கணிப்பை சந்தித்தவன். கல்லூரியில்
நடக்கும் சிம்போசியத்தில் கலந்து கொள்ள நல்ல செருப்பு இல்லாமல்,
நண்பர்களின் செருப்பை வாங்கிப் போட்டுக் கொண்டு சிம்போசியத்தில் கலந்து
கொண்டவன். ஆனால், இன்று உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு வசதி
வாய்ப்போடு இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால், தலித்துகளை
ஏய்க்கும் கலையில் நான் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று என் கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். முத்தமிழறிஞராகிய நீங்கள் என்னை
“சின்னக் கருணாநிதி“ என்று அறிவிக்க வேண்டும். அதற்கு நான் தகுதியானவனா
என்பதற்கு உங்களுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதம்.
இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையில் ஏற்பட்ட
கொடுமைகளால் இறந்தவர்களில் சிட்டிபாபுவின் கல்லறை ஈரம் கூட காயாத
நிலையில் இந்திராவோடு கை கோர்த்தவர் நீங்கள்.
ஜெயலலிதாவோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நீங்கள்
வாக்குறுதி கொடுத்தது போல வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கினீர்கள்.
உடனே, வாய் கூசாமல், நான் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா ? “பெரிய டிவி
கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கையகல டிவி கொடுத்து ஏமாற்றி
விட்டார்கள்“ என்று பேசினேன். “கேபிள் இணைப்பு கொடுத்தீர்களா ? “ என்று
கேட்டேனே. கடந்த மூன்று வருடங்களாக கேபிள் இணைப்பை பற்றியோ, கையகல டிவி
என்பது பற்றியோ பேசினேனா ?
நீங்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு அந்தர் பல்டி அடித்தது போல
நான் அடிக்கவில்லையா ?
“அடங்க மறு, அத்து மீறு“ என்ற வெற்று முழக்கங்களை இன்று அறிவாலய
கழிப்பிடத்திற்குள் ஓரமாக வைத்து விட்டு உங்கள் பின்னால் நிற்கவில்லையா ?
மற்றவற்றையெல்லாம் விடுங்கள். நீங்கள் நாலு மணி நேரம் உண்ணாவிரதம்
இருந்ததை போல, நான் நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லையா ?
நீங்கள் வெற்று விளம்பரம் செய்து கொள்வதைப் போல, நான் அனைத்து காலை
மற்றும் மாலை நாளிதழ்களில் நான் படுத்துக் கொண்டிருப்பது போல போஸ்
கொடுத்து புகைப்படத்தோடு விளம்பரம் கொடுக்க வில்லையா ? அந்த
விளம்பரங்களில் “தலைவர் உயிரைக் காப்பாற்றுங்கள்“ என்று யாரிடம்
மன்றாடுகிறோம் என்பதே தெரியாமல் சிறுத்தைகள் விளம்பரம் தரவில்லையா ?
அந்த மேடையில், இனி சாகும் வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது
என்று முழங்கி விட்டு, தேர்தல் வந்ததும், கல்லெறிந்தால் இரண்டு
கால்களுக்கிடையே வாலை மடக்கிக் கொண்டு ஓடும் நாய் போல உங்கள் பின்னே ஓடி
வரவில்லையா ?
இதையெல்லாம் விடுங்கள். இலங்கை சென்ற நான் நடத்திய நாடகத்தைப் பார்த்து
நீங்களே அசந்து போயிருப்பீர்கள். இங்கே தமிழகத்தில் இருந்த வரை, கொலைகார
ராஜபக்ஷே என்றும், தமிழர்களின் ரத்தத்தை குடித்தவன் என்றும்
ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், ஊர்வலங்களும் நடத்தி விட்டு
எம்.பிக்கள் தூதுக்குழுவினரோடு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்ததும்,
மாமூல் கேட்கும், கோர்ட் ப்யூன் போல பல்லிளித்துக் கொண்டு வரவில்லையா ?
இலங்கை சென்ற எம்பிக்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கச் சென்ற
போது என்னை வேண்டுமென்றே புறக்கணித்தீர்களே ? ஒரு மூச்சு விட்டிருப்பேனா
நான் ?
இலங்கை சென்று ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, விருந்துண்டு, அவரின்
விருந்தோம்பலை மனம்விரும்பி ஏற்று, மகிழ்ந்து, மனமார இளைப்பாறி விட்டு
தமிழகம் திரும்பியவுடன், ராஜபக்ஷே சகோதரர்களை போர்க்குற்றவாளிகள் என
அறிவிக்க வேண்டும் என வாய் கூசாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை ?
சென்னை மெமோரியல் ஹால் சுவர்களைக் கேட்டால் சொல்லுமே என் இரட்டை நாக்கை.
இலங்கை சென்ற போதும் ராஜபக்ஷேவுடன் மட்டுமா அளவளாவினேன் ? சென்னை சூளை
மேட்டில் திருநாவுக்கரசு என்ற வழக்கறிஞர் ஆக விரும்பிய ஒரு தலித் இளைஞரை
பட்டப் பகலில் ஒரு தீபாவளி நாளில் சுட்டுக் கொன்று விட்டு, வழக்கை
சந்திக்காமல் இலங்கைக்கு தப்பி ஓடிய கயவன் டக்ளஸ் தேவானந்தாவுடன்
விருந்துண்டு மகிழவில்லையா ?
அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக அறிவிக்கவில்லையா ?
கொல்லப்பட்டவன் ஒரு தலித் இளைஞன், அந்தக் குடும்பம் ஒரு விளிம்பு நிலைக்
குடும்பம் கொலைகாரன் அமைச்சனாக, இலங்கையின் அதிகார பீடத்தில்
உட்கார்ந்திருக்கிறானே என்று கொஞ்சமாவது ரோஷப்பட்டேனா நான் ?
விடுதலைப் புலிகளை அன்றும் ஆதரிப்பேன், இன்றும் ஆதரிக்கிறேன், என்றும்
ஆதரிப்பேன் என்று வீர வசனங்கள் பேசிய நான், புலிகளும், தமிழ் மக்களும்
அழித்து ஒழிக்கப் பட்ட போது நீங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின் முதல்
பார்வையாளனாக இருக்க வில்லையா ?
ஈழம் சென்று பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக என்னுடன்
இருக்கும் இளைஞர்களை ஆகர்ஷிக்க பயன் படுத்திக் கொண்ட நான், பிரபாகரனின்
நெருக்கடியான நேரத்தில், அவருக்கு உதவாமல், அவரை அழித்தொழிக்க முயற்சித்த
சிங்களக் காடையர்களுக்கு உங்களுடன் சேர்ந்துதானே உதவினேன் ?
“எழும் தமிழ் ஈழம்“ என்ற தலைப்பில், சோர்ந்து போயிருக்கும் எனது
சிறுத்தைகளை உசுப்பேற்றுவதற்காக புல்லா அவென்யூவில் ஒரு மாநாடு நடத்தப்
போகிறேன் என்று அறிவித்தேன். ஈழம் என்ற வார்த்தையே ஒரு பாவச் சொல் என்பது
போல, உங்கள் காவல்துறையினர், இரவோடு இரவாக, பிரபாகரனின் படம் இருந்த
பேனர்களையும், ஈழம் என்ற வார்த்தையின் மேல் தாளை ஒட்டி அதை மறைத்தும்
நடவடிக்கை எடுத்த போது ஒரு வார்த்தை பேசினேனா ?
ஈழம் என்ற வார்த்தை என்ன அப்படி ஒரு பாவச் சொல்லா என்று வெகுண்டெழுந்தேனா
? அந்தச் சூழலில் கூட, கொஞ்ச நஞ்சம் சூடு சொரணை இருப்பது போல நடந்து
கொண்டேனா ?
சென்னை நூறடி சாலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போது அபகரித்த ஒரு
கட்டிடத்தில் சிறுத்தைகள் அலுவலகம் வைத்து நடத்தி வந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று
உத்தரவிட்ட போது, கட்டப் பஞ்சாயத்து செய்து அபகரித்த இடமாயிற்றே என்று
கொஞ்சமாவது தயங்கினேனா ? மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெற
வேண்டும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இடம் கை விட்டுப் போய்
விடக் கூடாது என்றும் எத்தனை முறை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி
இறங்கியிருப்பேன். ?
ஒரே ஒரு காடுவெட்டி குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
செய்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியே உடைந்தது.
விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டங்களின் போது கைது
செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட 16 பேர் மீது தேசிய பாதுகாப்புச்
சட்டத்தை போட்டு, அன்னை சோனியாவை திருப்தி படுத்தினீர்களே ? ஏதாவது
கேட்டேனா ? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த அந்த 16
பேரின் குடும்பங்கள் என்ன ஆயிற்று என்று கவலைதான் பட்டிருப்பேனா ?
நான் எப்போதும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது என்னுடன் கடற்கரையில்
கலந்து ஆலோசிக்கும் எனது பல ஆண்டு கால நெருங்கிய நண்பர் என்னை
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போகச் சொல்லியும் கூட,
ஜெயலலிதாவை விட மோசமான தமிழினத் துரோகி நீங்கள் தான், அதனால் உங்களுடன்
தான் கூட்டணி என்று இறுதி முடிவு எடுக்கவில்லை ? அதனால் அந்த நண்பர்
இன்று வரை என்னடன் பேசவில்லை என்றாலும் கூட, நான் என்ன நட்பை இழந்ததற்காக
கவலைப் பட்டேனா ?
அந்த நண்பரை விட, என்னை உங்களோடு இணைத்து வைத்த ஆருயிர் நண்பர் காமராஜ்
தானே இப்போது எனக்கு முக்கியமாக இருக்கிறார் ? காமராஜோடு நட்பாக இருப்பதை
விடவும், எனக்கு உங்கள் வாரிசாக இருக்க வேறு என்ன தகுதி வேண்டும் ?
பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு
கொடுக்க பட்ட போது நான் ஒரு இடத்தின் நின்றேன். இன்னோரு இடத்தை விடுதலை
சிறுத்தைகள் கட்சியில் ஆரம்பகாலம் முதல் என்னோடு உழைத்து இயக்கத்துக்காக
பாடு பட்டவர்களுக்கா கொடுத்தேன் ? வேலாயுதம் என்ற மோசடி பேர்விழிக்குத்
தானே கொடுத்தேன் ?
தலித் சமுதாயத்திற்காக பாடு படுகிறேன் என்று அரசியலுக்கு வந்து விட்டு
உங்களைப் போலவே சினிமாவில் நடிக்கிறேன் என்று சில காலங்கள் கூத்தடித்துக்
கொண்டிருக்கவில்லையா நான் ?
நீங்கள் நினைத்திருந்தால் எனக்கு ஒரு துணை அமைச்சர் பதவியையாவது வாங்கித்
தந்திருக்க முடியும் என்றாலும், நீங்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளை போல
என்னை கண்டு கொள்ளாமல் இருந்தும், ஒரு முறையாவது ரோஷப் பட்டுக்
கேட்டிருப்பேனா உங்களிடம் ? தலைவர் கொடுத்தார். நான்தான் வேண்டாம் என்று
விட்டேன் என்றல்லவா ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிகிறேன்.
தலித்துகளுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும்
கட்டுக் கதையை நம்பிக் கொண்டு, தலித் சமுதாயத்தினருக்கு உங்கள் அரசு
இழைக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கவில்லையா நான் ?
இப்போத பணி இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கும் உமாசங்கர் தலித்தாக
இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் அமைப்புகளும் அவருக்கு
ஆதரவாக திரண்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு வார்த்தை பேசியிருப்பேனா நான்
?
இப்போது சொல்லுங்கள். உங்கள் வாரிசாக என்னை விட தகுதியானவன் யார்.
அதனால், எனது பிறந்த நாளான இன்று முதல், என்னை “சின்னக் கருணாநிதி“ என்று
அழைக்குமாறு உங்கள் கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்டீர்கள் என்றால்,
இதை விட எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.

சவுக்கு

துரோகம் துரோகி விசிக திருமாவளவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக