வெள்ளி, 23 மார்ச், 2018

22 டிசம்பர் 2017 தமிழ் புத்தாண்டு தென்னன் மெய்ம்மன் விகடன் பேட்டி நாட்காட்டி வானியல்

aathi tamil aathi1956@gmail.com

25/12/17
பெறுநர்: எனக்கு

‘சித்திரை 1-ம் இல்லை, தை 1-ம் இல்லை... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு!’ - தமிழ் ஆராய்ச்சியாளர் கருத்து

சித்திரை 1-ம் இல்லை... வழக்கமான தை 1-ம் இல்லை... இன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு! நிலவுப் பயணம் சொல்லும் நிஜ காலண்டர்?! கொஞ்சம் திகைப்பாகவும், குழப்பமாகவும்தான் இருக்கும். ஆனால், இது மிகவும் ஆராயப்படவேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. நம்மைப் பொறுத்தவரை இன்றைய தேதி ஆங்கில மாதத்தில் டிசம்பர்- 22. தமிழ் மாதத்தில் மார்கழி- 7. ஆங்கிலப் புத்தாண்டு இன்னும் எட்டு நாள்களில் வரவிருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை- 1. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பலருண்டு. இதேபோல தை -ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. இதை ஏற்றுக்கொள்பவர்களும் பலருண்டு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை -ஒன்றாம் தேதியைத்தான். தை -1 தமிழ்ப் புத்தாண்டு என்றால், அதற்கு இன்னும் 22 நாள்கள் இருக்கின்றன.
புத்தாண்டு
இத்தகைய குழப்பங்களுக்கு இடையில், “உண்மையில் தை ஒன்றாம் தேதி என்பது இன்றுதான் (22 டிசம்பர் 2017) ஆரம்பிக்கிறது. அதனால், தென்னன் மெய்ம்மன்தமிழர்களின் புத்தாண்டு இன்றுதான் பிறக்கிறது'' என்று புதிதாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் கோயில் கட்டடக்கலை நிபுணரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்ம்மன். ஆண்டு மற்றும் நாள்கள் குறித்து மரபு வழியிலான ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வரும் தென்னன் மெய்ம்மன், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலைக் கல்லூரியில், கட்டடக்கலைப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருப்பவர்.
“அதெப்படி? நாம் பயன்படுத்தும் காலண்டர் சொல்லும் செய்தி தவறாக இருக்க முடியும்? பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான தமிழ் மாதங்களையும், ஆண்டையும்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம்?” என்று கேட்டால், “காலண்டர் சொல்லும் செய்தி மட்டுமல்ல... காலண்டரே தவறாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அடித்துச் சொல்லும் மெய்ம்மன், தொடர்கிறார்...
“இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வானவியல் அறிவு தேவை. இதை நான் மேம்போக்காகச் சொல்லவில்லை. மரபு வழியில், இருபதாண்டுகளுக்கும் மேலாக நானும், என் குழுவினரும் வானவியல் ஆய்வுகளைச் செய்தபிறகே சொல்கிறோம். இதுகுறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாததால் எங்கள் குரலில் இருக்கிற உண்மை பலருக்கும் பிடிபடவில்லை. உண்மை தெரிந்த வானவியல் அறிஞர்கள் பலரும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களுக்குள் நாம் போகவேண்டாம். ஆனால், இன்றுதான் தை -1, இன்றுதான் தமிழர் புத்தாண்டு என்பதற்கான ஆதாரங்களைச் சொல்கிறேன். இன்று வளர்பிறை 4-ம் நாள். இன்றுதான் வானவியல் அடிப்படையில் கதிரவன் வடக்கு நோக்கித் திரும்ப (உத்தராயணம்), தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பஞ்சாங்க அடிப்படையிலான காலண்டர் சரியானது இல்லை. அதை பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை.
பெருந்தச்சு நிழல் நாள்காட்டி
வானவியல் அடிப்படையில், ஒரு வருடத்துக்கு மொத்தம் 360 நாள்கள்தாம். மாதத்துக்கு 30 நாள்கள் வீதம் 12 மாதத்துக்கு 360 நாள்கள். ஒரு மாதத்தில் ஒரு முழு நிலவு (பௌர்ணமி), ஒரு மறை நிலவு (அமாவாசை), ஒரு மூன்றாம் பிறை வரும். மாதத்தின் 12 -ம் நாள் முழுநிலவு; அதிலிருந்து 15 நாள்களுக்குப் பிறகு, அதாவது 27 -ஆம் நாள் மறைநிலவு; 30-ம் நாள் மூன்றாம் பிறை... அதோடு மாதம் முடிவடைந்து புதுமாதம் பிறக்கும்.  இப்போது, ஒரு மாதத்தில் இரண்டு நிலவு கூட வருவதைப் பார்த்திருக்க முடியும். தவறான காலண்டரை நாம் பயன்படுத்துவதால் வரும் பிரச்னைதான் இது. நம்முடைய மரபு காலண்டர்படி எல்லா முழுநிலவும் வெள்ளிக்கிழமையில் வரும். எல்லா மறைநிலவும் செவ்வாய்கிழமையில் வரும். மூன்றாம் பிறை வெள்ளிக்கிழமை மட்டுமே வரும். இதனால்தான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பெண்கள் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் வழக்கம் உருவானது.
அந்த நாள்களில் பெண்கள் இயற்கையாகவே மாதவிடாய் தேதியைக் கடந்திருப்பார்கள். இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதே பெண்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்வியல் அடிப்படையில்தான். இதற்கான ஒரு வாய்ப்பாட்டு முறை நடைமுறையில் மரபுவழியாக இருந்திருக்கிறது. அந்த வாய்ப்பாட்டைத்தான் நம் அரசர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில், சரியாக ஓராண்டில் 12 மாதங்கள், 12 முழுநிலவு, 12 மறைநிலவு, 12 மூன்றாம் பிறை வரும். புத்தாண்டும் சரியாக 360 நாள் முடிந்ததும் பிறக்கும். அதனை மன்னர்கள் முரசறைந்து அறிவிப்பார்கள். அந்தப் பழக்கம் மூவேந்தர்களிடமும் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் திருப்பறை அறைந்து அறிவிப்பு செய்திருக்கிறான் என்ற செய்தி கல்வெட்டுகளில் இருக்கின்றன. 
ஆனால், இப்படி அறிவிப்பு செய்ய வேண்டும் என்றால், நிலவு சரியான நாள்களில் வரவேண்டும். 360 நாள்கள் பூர்த்தியாக வேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக இதுகுறித்து ஆய்வு செய்தோம். 05.01.2014- ல் இருந்து 21.12.2017 வரையான மொத்தம் 1447 நாள்களில் முறையே 353, 356, 354, 355 நாள்களில் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தொங்கல் மாதமாக மொத்தம் 29 நாள்களும் உள்ளன. அதன்படி, நேற்றோடு கடந்த ஆண்டு முடிவுற்று, இன்றுதான் புத்தாண்டு பிறக்கிறது. இதனை மையப்படுத்தி நாங்கள் ‘பெருந்தச்சு நிழல் நாள்காட்டி’  என்று ஒரு நாட்காட்டியைத் தயாரித்துள்ளோம்.
சந்திரன்
வருடத்துக்கு 360 நாள்கள் வரவேண்டிய சூழலில், இப்படி குறைவாக வருவதற்கு ‘நிலவு தடுமாறுதல்’ தான் காரணம். ‘நிலவு தடுமாறுதல்’ என்பது அமாவாசை அன்று மறைந்த நிலவானது, மீண்டும் 15 நாள்களில் வராமல் முன்பே வந்துவிடுவது. கடந்த ஆண்டில் மட்டும்  இப்படி ஐந்து நிலவு தடுமாறியிருக்கிறது. இதனால்தான் வருடத்துக்கு 360 நாள்களுக்குப் பதிலாக குறைவான நாள்கள் வந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக இப்படித்தான் வருகிறது. இப்படி வரக்கூடாது. இது அனைத்து உயிர்களுக்கும் நல்லதல்ல. இப்படி குறைவாக வருவதை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் சனிக்கிழமை. நம் மரபில் சனிக்கிழமை என்ற ஒன்றே இல்லை. வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வந்துவிடும். ஆனால், பல காரணங்களால் சனிக்கிழமை என்ற ஒருநாள் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கின்றது" என்று சொன்ன மெய்ம்மன், தொடர்ந்து சொல்லும் செய்திகள், ஆச்சர்யத்தோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்புபவையாகவே உள்ளன. சொல்லப்போனால், இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வியைக்கூட எழுப்புவதாக இருக்கின்றது. அதேசமயம், நிலவுக்கும் பூமிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளின் அறிவியல் உண்மையை கலந்து யோசிக்கும்போது, இவர் சொல்ல வருவதிலும் உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள்
''நிலவு சரியாக வராமல், முந்தி வந்தால்... ஆண்டின் நாள்கள் குறையும். இப்படிக் குறையும்போது, மழை சரியாகப் பொழியாது. இயற்கைச் சமநிலை சரியாக இருக்காது. இதுபோன்று பல கேடுகள் உருவாகும். மன்னர்கள் காலத்தில் ஏராளமான நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியைச் சரிசெய்து ஆண்டு, நாள்களை சரியாகக் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் அரசு சார்ந்த அத்தனை செயல்பாடுகளும் புத்தாண்டைச் சார்ந்துதான் இருந்துள்ளன. அதற்குப் பெயர்தான், ‘கொற்றம்‘. இதைச் சரியாக ஒழுங்குபடுத்திய மன்னன்தான்  ‘கொற்றவேந்தன்’ என்று அழைக்கப்பட்டான். இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளம் உள்ளன. 
மன்னர்கள், ‘ஆண்டு ஒழுங்கு’ செய்வதற்காக தனிப்படையையே நடத்தியிருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய படை அல்ல. கலைஞர்களால், நிபுணர்களால் ஆன படை. ‘உயிர்கள் எழுப்பக் கூடிய ஒலி அலைகளின் கட்டுப்பாட்டில்தான் நிலவு இயங்குகிறது. காதுக்குக் கேட்காத இந்த ஒலியின் மூலமாகத்தான் நிலவு ஒழுங்குபடுத்தப்படுகிறது’ என்று நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. ராஜராஜன் காலத்திலும் இந்த ‘நிலவு தடுமாற்றம்‘ ஏற்பட்டுள்ளது. அதனை ஒலி அலைகளின் மூலமாக ஒழுங்குபடுத்தியிருக்கிறான் ராஜராஜன். 
தஞ்சை பெரியகோயில்
நாள்களை ஒழுங்குபடுத்துவதற்கு பத்துக்கும் மேற்பட்ட உத்திகள் உள்ளன. இதற்கு ‘துப்பு’ என்று பெயர். ஆனால், இந்த உத்திகளை தற்காலத்தில் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரிய கோயிலே ராஜராஜன் பயன்படுத்திய துப்புதான். கோயிலின் அசைவின் மூலமாக பூமியை நகர்த்தி ஒழுங்கு செய்திருக்கிறான் ராஜராஜன். அதனால்தான் அவன் பேரரசன். இதைக் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கலாம். அதுகுறித்து விவாதிக்கலாம். தஞ்சை பெரிய கோயிலில், 240 சிவயோகியர்களை கோயிலில் தங்கவைத்து, அவர்களின் வலது மற்றும் இடது மூச்சான நாடியை கட்டுப்படுத்தி அனைவரும் ஒரேநேரத்தில், ஒரேமாதிரியாக ஒன்றாக மூச்சுவிட்டு பூமியின் ஆட்டையைச் சரி செய்திருக்கிறார்கள். இதற்கு ‘சதயம் செய்தல்’ என்று பெயர்.
அதுமட்டுமல்ல, தற்போது மகாமண்டபமாக உள்ள நாடகமேடையில், 400 பெண்கள் காலை நேரத்தில் உடுக்கை ஒலிக்கேற்ப நடனம் ஆடுவார்கள். அதுபோல, மகுடி போன்ற ஓர் இசைக்கருவியின் இசையை எழுப்பி தேவாரம் போன்ற தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்கள். இதுபோன்ற பல உத்திகளைப் பயன்படுத்தி ஆட்டை (லிங்கம்) ஆடச் செய்திருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்தை, ‘ஆட்டை’ என்றுதான் கோயில் கல்வெட்டுகளில் பொறித்துவைத்திருக்கிறார்கள். ‘ஆட்டை’ ஆடும்போது அந்தக் கோயிலே ஆடும். இதற்கு ‘ஆட்டைத் திருவிழா’ என்று பெயர். அதன் மூலமாக பூமியின் ‘ஆட்டை’யைச் சரி செய்வார்கள். அதுபோல சூரியனுக்கு எதிராக வேலெறிதல். வேட்டைக்கைக் கூத்து, கோமாளிக்கூத்து நடத்தி சூரிய வெளிச்சத்தை திருப்பி அனுப்புவார்கள். சூரியனைக் கட்டுப்படுத்தி நிலவை ஒழுங்கு செய்வார்கள். 'பொருநர் காணாச் செரு' அதாவது... ‘எதிரில் எதிரியே இல்லாமல் சண்டையிடுவது’ என்று இலக்கியங்களில் இது குறிப்பிடப்படுகிறது. 
ராஜராஜ சோழன்
‘கதிரவனை வேலெறிந்து கட்டுப்படுத்துவதா?' என்று நீங்கள் சிரிக்கலாம். ஆனால், வானியல் அறிந்தவர்கள் இக்கேள்வியைக் கேட்கவும்மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். இதற்கு பல வல்லுநர்கள் இருந்தார்கள். அதில் ஒரு வகை வல்லுநர்கள்தான், நிழலை வைத்து பூமியின் செயல்பாட்டைக் கணித்த கண்டராதித்தன், குஞ்சரமல்லன், போன்ற பெருந்தச்சர்கள். கட்டடக்கலை நூல்களின் வாயிலாகத்தான் இந்தத் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் அறிந்தோம். இது ஒரு வாய்ப்பாடு. வாய் என்பது நிழலினைக் குறிப்பது. 
கதிரவன் தென்திசைக்குச் (தக்ஷிணாயனம்) சென்று, வடதிசைக்கு (உத்தராயணம்) திரும்பும் நாள்தான் தை ஒன்று. அந்த வகையில், இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு. இந்த நாளில்தான்மஞ்சுவிரட்டும் நடத்தப்பட்டது. இதுதான் நம் மரபு. இன்று நம் புத்தாண்டாக இருந்தாலும். குறை நாள்களில் ஆண்டு முழுமையடைந்துள்ளதால், இதை நாம் கொண்டாட முடியாது. வீட்டில் பொங்கல் வேண்டுமானால் வைக்கலாம். மரபு வழிகளைப் பின்பற்றும் ஓர் அரசு இங்கே இருந்தால், இந்த நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவார்கள். தற்போது உள்ளவர்கள்பஞ்சாங்கத்தில் உள்ளதை நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று சொல்கிறார் தென்னன் மெய்ம்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக