வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழகம் மொழிவழி மாநிலம் முதலில் கோரிய பார்ப்பனர் சத்தியமூர்த்தி ஐயர்

பார்ப்பனத்தமிழர்

athi tamil aathi1956@gmail.com

9/11/17
பெறுநர்: எனக்கு
மொழிவழித் தமிழகம் பிறந்த நாள்

1.11.1956

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள்.
ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா
என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய
கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட  தனி
மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில்
காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின்
முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல்  மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது.
பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க
வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம்
நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி
பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான்
முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல்  தனி ஆந்திர
காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.
திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என்று
ஆந்திரர்கள் வாதிட்டனர்.
 திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று
தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று
சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை
மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து
சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம்
தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு
தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு
எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த
நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த
முழக்கத்தை  “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார்.
தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை  காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர்
தந்தவர்  ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும்,
தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி
தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட
தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித்
தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும்,  தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால்,
நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி
கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி. சித்தூர், புத்தூர், நகரி,
ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும்,
முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம்
கையேந்தும் நிலை வந்து விட்டது.

 மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால்
கன்னியாகுமரியும்  தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின்
தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும்
போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய
காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த
செயல்  தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல்
1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து
இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட
காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு
செயல்படுவதை நாமறிவோம்! தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும்,
கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே
அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி
நடத்திய காமராசரும் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே
காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி  நடத்திய இராசாசி கூட, “சென்னையை
ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று
பேசினார். காமராசரோ “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு
பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு
கொள்ள மறுத்தார். எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை
கட்சியிலிருந்தும் நீக்கினார். நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள
சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின்
விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு
இணைக்க மறுத்தார்.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை
செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு
கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை
திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார்.
அதே வேளையில்  விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று
முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ,
திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார்
கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும்  திராவிட நாடு
கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை
முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு
,தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும்  வடவேங்கடம்,
திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம்
வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று
தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது
பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்!
தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை
மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள்
பட்டிதொட்டியெங்கும்  கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு
மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில்,
அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும்
இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை  கன்னடர்களிடமிருந்து தமிழர்கள்
கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு
வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.
இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட
தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும்
உறுதியேற்போம்!

தமிழ்ப்பற்று தமிழ்த்தேசியம் இனப்பற்று மண்மீட்பு வடக்கெல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக