சனி, 24 பிப்ரவரி, 2018

நதிநீர் இணைப்பு கேடுகள் ஆறு அணை

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு
பாரதிசெல்வன் இலரா
நதி நீர் இணைப்பு தொடர்பாக பூவுலகு அமைப்பை சேர்ந்த ஜீயோ டாமின் எழுதிய கட்டுரை. (சில மாதங்களுக்கு முன் பூவுலகு இதழில் வெளிவந்தது).
நதிகளைப் பாய்ந்தோடவிடுங்கள்!
“காட்டாறுகள் இப்புவியின் ஏமாற்றுப் பேர்வளிகள், அவை புவியீர்ப்பை மீறுபவை, தம் சொந்த இசைக்கு நடனம் ஆடுபவை, மனித அதிகாரத்தை எதிர்ப்பவை, வெட்டிக்கொண்டு செல்பவை, இறுதியில் எப்போதும் வெற்றிபெறுபவை.”
- கிரிஸ்டியன் காலென் (ரிவர் காட்ஸ்)
மழை பொழிந்து நதிகள் பெருக்கெடுத்துவிட்டால் போதும் தம் வீடுகளில் பல மாதங்களாய் சொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர் பைப்பைக்கூட சரிசெய்ய முயலாதவர்களெல்லாம் நதி நீர் இணைப்பு பற்றியும் அணைகளில் நதிநீரை சேமிப்பதைப்பற்றியும் பேசத்தொடங்கிவிடுகின்றனர். அணைகளில் தேக்காது தண்ணீர் அனைத்தும் கடலில் கலந்து வீணாகிறதே என பெரும் கவலை கொள்கின்றனர். அணைகளைக் கட்டவும் நதிநீரை மடைமாற்றவும் அரசை நோக்கி அபயக்குரலெழுப்ப
ுகின்றனர்.
பல இலட்சம் கோடிகள் புரளும் இம்மாதிரியான திட்டங்களை அரசியல்கட்சிகள் எப்படி கையாள்வார்கள் என்பதைச்சொல்லவா வேண்டும்? எந்த கருத்துப் பேதமுமின்றி ஒற்றுமையுடன் எல்லா கட்சிகளும் பல்லை இளிக்கத் தொடங்கிவிடுகின்றன. உண்மையில் இத்திட்டம் ஆழமாக புரிந்துகொள்ளப்
பட்டிருக்கிறதா? இதைப்பற்றி பேசுபவர்கள் இத்திட்டங்களில் சொல்லப்படும் சாதகங்களையும் சொல்லப்படாத பாதகங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்களா? நதிநீர் இணைப்பு என்பது அவ்வளவு எளிதாக நாம் கடந்துவிடக்கூடியதா? இந்தியப் புவியியல் வரைபடத்தை மேசையின் மீது விரித்துவைத்துவ
ிட்டு இரண்டு நதிகளை சிவப்பு மார்க்கரால் கோடுபோட்டு இணைப்பதுபோல அத்தனை எளிதா அது? கொஞ்சம் ஆழமாக சிந்திக்கவேண்டிய தருணம் இது.
தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்
2002 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் முன்மொழிய இந்தியாவின் தண்ணீர்த்தேவைக்கான உன்னதத்திட்டமாக முன்மொழியப்பட்ட
ு மறுபிறப்பு பெற்றது இந்திய நதிகள் இணைப்புத்திட்டம். அரசாலும் ஊடகங்களாலும் அணுவிஞ்ஞானியாக தூக்கிநிறுத்தப்பட்ட கலாம் அவர்கள் சான்றளித்த கூடங்குளத்தின் ஒப்பற்ற உன்னத உலகத்தர அணுவுலைகள் ஒரு ஒற்றை குண்டுபல்புக்கான மின்சாரத்தைக்கூட உற்பத்திசெய்ய வக்கற்று மூச்சுத்திணறிக்
கொண்டிருக்க இந்த நதிநீர் இணைப்பை அவர் எவ்விதமான புரிதலுடன் அணுகினார் என்பது விவாதத்திற்குரியதே. நதிநீர் இணைப்பை விரைந்து செய்யல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட தொடர்ந்து மத்திய அரசு இந்த நாசகாரதிட்டத்தை இப்போது விரைந்து செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. “தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்” என்ற இந்த பிரம்மாண்ட திட்டம் தேசத்தின் மொத்த நதிகளையும் இரு பெரும்பிரிவுகளாக அதாவது இமாலயநதிகள் (வட இந்திய) மற்றும் பீடபூமி நதிகள் (தென்னக நதிகள்) என இரண்டு பெரும் பிரிவுகளாகப்பிர
ித்து 30 இணைப்புகளால் 37 நதிகளை இணைத்து தேசமுழுக்க 3000 அணைகள்வரை கட்டப்பட இருப்பதாகச் சொல்கிறது.
நதிநீர் இணைப்புகள் பொருளாதார ரீதியில் லாபகரமானவையோ அல்லது புயியல் ரீதியில் சாத்தியமானவையோ இல்லை என்பது மட்டுமின்றி அவை வறண்ட பிரதேசங்களை பாலைவன சோலைகளாக்கும் மந்திரச்சொலும் இல்லை என்பதை உணர்த்த பல்வேறு ஆய்வறிக்கைகளும் அனுபவங்களும் நம்முன் கொட்டிக்கிடக்கின்றன. நதிநீர் மடைமாற்றத்தால் வற்றிப்போன ஏரல் கடலோ அதை நம்பியிருந்த வறியோரின் வாழ்வாதாரமோ தந்த பாடம் எளிதில் புறந்தள்ளக்கூடியதல்ல. நதிநீர் இணைப்புகளின் சாத்தியக்கூறுகளையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் சுருக்கமாகக் காண்போம்.
சொந்த வாழிடங்களைவிட்ட
ு துரத்தப்படும் மக்கள்
நதி நீர் இணைப்புகளுக்காய் பலி கொடுக்கப்படும் பல்லாயிரம் ஹெக்டேர் விளைநிலங்களிலிர
ுந்தும் காடுகளிலிருந்தும் ஆறுலட்சம் மக்கள் வெளியேற்றப்படுவ
ார்கள் என்கிறது அரசு புள்ளிவிபரம். இந்த ஆறு இலட்சம் மக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? ஒரு நாட்டை நந்தவனமாக்க சில லடசம்பேர் வாழ்விழந்தால் பரவாயில்லை என்று வாதத்துக்கு வைத்துக்கொண்டால
ும்கூட அந்த ஒரு சிலர் யார்? நிச்சயம் நானில்லை! அப்படியானால் நீங்கள்?
நதிநீர் இணைப்பால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பவர்கள் தம் மண்ணைவிட்டுத் துரத்தப்படும் பல இலட்சம் மக்கள் மற்றும் பறிபோகும் அவர்களின் நிலங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பறிபோகும் பல இலட்சம் வேலைகளுக்கு என்ன செய்யப்போகிறார்கள்? இந்தியாவின் பெரிய அணைக்கட்டுகளுக்காய் ஏற்கெனவே தம் வாழ்விடமும் வாழ்வாதாரமுமான காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரம் பூர்வகுடிகள், நாகரீக மனிதர்களின் பாலிதீன் குப்பைகளைப் பொறுக்கி வயிற்றைக்கழுவுவதை நீங்கள் பார்த்ததில்லையா?
சாதாரண உள்ளூர் பாசனக்குளங்களை சில லட்சங்கள் செலவுசெய்து தூர்வாரவோ பராமரிக்கவோ முன்வராத அரசுகள் ஐந்தரை இலட்சம் கோடிகள் (2002 ஆம் ஆண்டு மதிப்பீடு) செலவுசெய்து வெள்ளப்பெருக்கெ
டுக்கும் ஒரு நதியிலிருந்து இன்னொரு வறண்ட நதிக்கு தண்ணீர் கொண்டுவந்து இத்தேசத்தின் வளைந்துபோன விவசாயியின் முதுகை நிமிர்த்ப்போவதாகப் பசப்புவது வேடிக்கையாக இல்லை? உண்மையிலேயே விவசாயத்தை தூக்கி நிறுத்தத்தான் அரசு இத்தனை மெனக்கெடுகிறதா?
தேசத்தை மின்னொளியில் ஒளிரவைக்கும் திட்டமா இது?
1972 ஆம் ஆண்டு அப்போதைய அணுவிஞ்ஞானியும் Atomic Energy Corporation னின் தலைவருமான ஹோமி சேத்னா 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் அணுமின் சக்தி 43,000 MW ஆக இருக்கும் என்று அறிவித்தார். ஆனால் 28 வருடங்களுக்குப்பிறகு 2000 ஆம் ஆண்டுவரை நிறுவப்பட்ட அணுமின்சக்தியோ (Installed Capacity) அதில் 7 சதவீதத்துக்கும் குறைவு. இப்படியிருக்க 2000 ஆம் ஆண்டின் நவீன அணுவிஞ்ஞானி முன்மொழிந்த நதிநீர் இணைப்பின்மூலம் 34,000 MW மின்சாரம் தயாரிக்கமுடியும் என்கின்றது நதிநீர் இணைப்புத் திட்ட அறிக்கை.
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் தேரி அணைக்கட்டுக்காக உத்தரகாண்டின் தேரி நகரமும் அதோடு நாற்பது கிராமங்கள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்
டதாகவும் எழுபத்திரண்டு கிராமங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டதாகவும் “தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்: கனவா? பேரழிவா” என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சுவாதி பென்சால். அத்தோடு வெறும் ஆயிரம் மெகாவாட் திட்டத்துக்கே இப்படி என்றால் முப்பத்திநான்காயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான அணைக்கட்டுகள் எவ்வளவு பெரிய இடரை மக்களுக்கு ஏற்படுத்தும் எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.
பழைய மின்மாற்றிகளை மாற்றுவது, மின் கடத்தலில் இழப்பைக்குறைப்பது, அனைத்து குண்டுபல்புகளையும் CFL களால் மாற்றீடு செய்வது, மின்கருவிகளின் பயனுறுதிறனை (Efficiency) அதிகரிப்பது போன்ற முயற்சிகளாலும் மரபுசாரா மின்சக்தியான சூரிய ஆற்றல், காற்றாலை போன்றவற்றை நிறுவுவதாலும் மிகக்குறைந்த செலவில் சூழலுக்குத் தீங்கின்றி இந்த மின்சாரத்தை மாற்றீடு செய்யமுடியும் என்கிறது “தெற்காசியாவின் அணைகள், நதிகள் மற்றும் மக்களுக்கான கூட்டமைப்பு”. அது மட்டுமின்றி தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்கு அதுவும் நூற்று இருபது மீட்டர்கள் உயரம்வரைக்கும் நீரை ஏற்ற வேண்டியிருக்கிறது. இதற்கான மின்சார விரையத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
காடும் காட்டுயிர் அழிப்பும்
சமீபத்தில் மத்திய அரசு அங்கீகரித்திருக்கும் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான “கென்-பெவா” நதிகள் இணைப்புக்காக மத்தியபிரதேசத்தின் 4100 ஹெக்டேர் காடுகள் அதுவும் புலிகள் வாழும் பன்னா உயிரியல் பூங்காவின் சுமார் பத்து சதவீதப் பரப்பு பத்து கிராமங்களோடு மூழ்கடிக்கப்பட இருக்கிறது. இதற்கு மாற்றீடாக 80 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இன்னொரு இடத்தில் புதிய காட்டை உருவாக்கப்போவதாக மத்திய நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது.
மனிதர்களால் மரங்களை மட்டுமே வளர்க்க முடியும். காடுகளை அல்ல. எத்தனை ஆயிரம் மரங்கள் சேர்ந்தாலும் காடுகளை உருவாக்கமுடியாது. காடு என்பது ஒரு வாழிடம். மனிதனால் காடுகளை அழிக்க மட்டுமே முடியும். எப்போதும் எப்பாடுபட்டும் அவற்றை உருவாக்க முடியாது! இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், வருடத்தின் மூன்று மாதங்கள் அதாவது மழைக்காலத்தில் மட்டுமே காடுகள் தண்ணீரில் மூழ்கியிருக்குமாம். அதனால் மற்ற நாட்களில் தரை உலர்ந்திருக்கும
்போது தாராளமாக விலங்குகள் பயன்படுத்திக்கொள்ளலாமாம். இந்த தத்துவத்தை உதிர்த்திருப்பவர் ஏதோ மூன்றாம்தர அரசியல்வாதியல்ல. மாறாக Wild life instute of india அமைப்பின் தலைவர்.
“டாமி கமான்” என்றவுடன் வாலை ஆட்டிக்கொண்டு வருவதற்கும் “கெட் அவுட்” என்றவுடன் திரும்பிப் போவதற்கும் வனவிலங்குகள் ஒன்றும் நம் வீட்டு நாய்கள் அல்ல என்ற புரிதலற்ற வனவிலங்குக் காவலர்கள்!
உடன்பட மறுக்கும் நதிகளின் புவியியல்
நதிநீர் இணைப்புத்திட்டத்தின்படி பெரும்பாலும் இரண்டு அடுத்தடுத்த இணையாகச்செல்லும் நதிகளே கால்வாய்களால் இணைக்கப்படுகின்
றன. அப்படியெனில் வெள்ளப்பெருக்கோ அல்லது வறட்சியோ இரண்டு நதிகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது அந்த நதிகளின் நீர்ப்பிடிப்புப
்பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்தாலோ (தென்னிந்திய நதிகள்) அல்லது பனி உருகினாலோ (வட இந்திய நதிகள்) இரண்டும் வெள்ளப்பெருக்கை சந்திக்கும். இல்லையெனில் இரண்டும் வற்றிப்போகும். இப்படியிருக்க நீர் வளமற்ற வறண்ட இடங்கள் நதிநீர் இணைப்பால் வளம்பெறும் என்பதும் வெள்ளப்பெருக்கு காலத்தில் ஒரு நதியின் அதிகபடியான வெள்ளம் அடுத்த நதிக்கு பகிரப்படும் என்பதும் எவ்வளவு பெரிய புரட்டு?
இந்த திட்டத்தின் 30 இணைப்புகளில் காவேரியின் உபரிநீரை(?) வைகையோடு இணைக்கும் திட்டமும் அடக்கம். கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணார், பாலாறோடு காவேரியையும் வைகையையும் இணைக்கிறார்கள். காவேரியில் வரவேண்டிய நீரையே பெற வக்கற்ற நிலையில் இது யாரை ஏமாற்றும் வேலை? கால்வாய் வெட்டி உபரிநீரை கொண்டுவந்து அப்புறம் அதில் படகுப்போக்குவரத்தாம். பிறகு அமர்க்களமாக மீன்பிடிப்பு வேறு நடக்குமாம். இதனால் வாகனப்போக்குவரத்துக்கான மரபு எரிபொருள்செலவு மிச்சமாவதுடன் மீன்பிடித்தொழிலும் சிறக்குமாம். பயிர்கள் செழிக்குமாம். உணவு உற்பத்தி பெருகுமாம். உணவுபதப்படுத்தல் மதிப்புக்கூட்டல் போன்ற தொழில்களோடு விவசாயப்பணிகளுக்கான உபகரணங்கள் உறபத்தி தொழிலும் சிறக்குமாம். கேட்க எவ்வளவு அருமையாக இருக்கிறது? மதுரையிலிருந்து கப்பலில் ஏறி நீர்வழிச்சாலைமூலம் திருச்சி செல்வது எவ்வளவு சுகமான அனுபவம்? கால்வாயில் தண்ணீர் நிறையப்போகிறதோ இல்லையோ அரசின் கஜானா வெள்ளமாய் வடிந்து பலரின் கல்லாப்பெட்டிகளில்போய் நிறையப்போகிறது.
யாருடைய நீர் யாருக்கு உபரி?
காவேரியில் “உபரிநீர்” என்று சொல்வதைவிட நம் டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்த ஏதேனும் ஒன்று இருக்க முடியுமா? “உபரி நீர்” என்ற பதமே எத்தனை அபத்தமானதாக இருக்கிறது. மனிதனின் விவசாய, வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப்போக அதிகமான நீரின் பெயர் உபரிநீராம். நாம் உற்பத்திச்செய்யாத நமக்குச்சொந்தமி
ல்லாத ஒரு பொருளை இப்புவியின் அனைத்து உயிர்களும் பங்கிடும் ஒரு பொருளை மனிததேவைக்கு அதிகமாக இருப்பதால் மட்டும் உபரி என்று யார் எப்படித் தீர்மானிக்கிறார
்கள்? கடலுக்குச்செல்லும் நீரை வீணாகிறது என எப்படிச்சொல்கிற
ார்கள்?
அமேசான் நதிமட்டுமே ஒரு நொடிக்கு இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரம் கனமீட்டர் நீரை அட்லாண்டிக் கடலில் கலக்கச்செய்கிறத
ு என்றால் உலகின் ஒட்டுமொத்த நதிகளின் நன்னீர் கடலில் கலக்கும் அளவை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். இவற்றிற்கும் கடலுக்கும் ஏதேனும் உறவிருக்குமா? இத்தனை கோடி கனமீட்டர்கள் தண்ணீரை ஒவ்வொரு நொடியும் பெற்றும் கடல் ஒன்றும் பொங்கிவிடவில்லையே? அப்படியானால் என்ன நடக்கிறது அங்கே? இந்த நீர் வரத்து நின்றுபோனால் என்ன ஆகும்? நதிகளின் மடைமாற்றம் எவ்வளவு பெரிய சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து என்ன ஆய்வுகள் இங்கு நடைபெற்றிருக்கிறது?
அதனதன் வழிகளில் பயணிக்கும் நதிகளின் நீரைப்பங்கிடுவதிலேயே மாநிலங்களுக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் இருக்க இதில் இல்லாத இணைப்புகளை உருவாக்கி புதிதுபுதிதாய் பங்கீட்டுப்பிரச
்சினைகளும் கலவரங்களும் ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறதா அரசு?
சிதையும் சூழியல் சமநிலை
ஒவ்வொரு நதியும் ஒரு பேருயிர். அதனுள் கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதலாய் பலகோடி உயிரினங்கள்வரை பொதிந்துள்ளன. அவை பல நூறு ஆண்டுகளாய் அந்த நதிநீரோடும் அது தவழ்ந்தோடும் நிலத்தோடும் அதன் மற்ற உயிர்களோடும் ஒன்றோடொன்று தொட்டுணரமுடியாத ஒரு மெல்லிய இழையால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த இழைக்கு ஏதேனும் நிகழுமானால் அதன் சங்கிலிவினைகள் நிச்சயம் விரும்பத்தகாததாக இருக்கும். ஒரு நதியின் பிறப்பிடத்திலிருந்து அது கடலில் சங்கமிக்கும் கழிமுகப்பகுதிவரை அந்த நதிக்கே உரித்தான எண்ணெற்ற உயிரினங்கள் அதற்கே உரித்தான எண்ணிக்கையில் நெடுங்காலமாக ஒரு சமநிலையுடன் வாழ்ந்துகொண்டிருக்க இன்னொரு நதியோடு அதை இணைப்பதுஅதன் உயிரியல் சமநிலையில் பூகம்பத்தையே ஏற்படுத்தும். இதனால் உணவுச்சங்கிலி பாதிக்கப்படுவதோ
டு மீன்பிடிப்பும் பாதிக்கப்படக்கூடும். அந்த குறிப்பிட்ட நிலப்பரப்புக்கு அன்னியமான தாவரங்களும் விலங்குகளும் பெருகி அதன் சூழலை கெடுக்க ஏதுவாகும். இதற்கு ஏராளமான சான்றுகள் நம்மிடமே உள்ளன.
தைல மரங்கள் நம் மழைக்காடுளின் உயிர்ப்பன்மையைச் சிதைத்ததும் ஆப்பிரிக்க மீனினங்கள் நம் நீர்நிலைகளில் செழித்திருந்த உள்ளூர் மீனினங்களை அற்றுப்போகச் செய்ததும் வெளிநாட்டு பார்த்தீனியம் சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க இங்கு ஒரு இயக்கமே நடப்பதும் நாம் அறிந்ததே.
மாற்றுவழி என்ன?
உண்மையாகவே அரசு தேசத்தின் நீர்ப்பாதுகாப்பு, உணவு உற்பத்தி மற்றும் விவசாயம் குறித்தும் கவலைப்படுகிறது என்றால் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுத்து உருப்படியாய் அதனினும் குறைந்த செலவில் செய்ய எண்ணெற்ற மாற்றுகள் இருக்கின்றன.
Ø நிலத்தடிநீரைப் பெருக்க மழைநீர் சேகரிப்பு குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற பாரம்பரிய நீர்சேகரிப்பு முறைகளைப் பின்பற்றலாம்.
Ø இருக்கும் ஆயிரக்கணக்கான பாசனக்குளங்கள் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து நீர்ப்பிடிப்பை அதிகரிக்கலாம்.
Ø மழைக்காலங்களில் அதிக தண்ணீர் தேவைப்படும் நெல் போன்ற பயிர்களையும் கோடைகாலங்களில் குறைந்த தண்ணீரே தேவைப்படும் சிறுதானியங்கள், பயிறுகள் போன்றவற்றை விழைவிக்க ஊக்குவிக்கலாம்.
Ø கரும்பு போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களின் சாகுபடியை குறைத்து உணவுப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
Ø தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு செத்துப்போன நொய்யல் போன்ற நதிகளை உருப்படியான திட்டங்கள் போட்டு மீட்டெடுத்து மீண்டும் விவாசாயத்தைப் பெருக்கலாம்.
Ø நதிகளை குளிர்பான கம்பெனிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தாரைவார்ப்பதை விடுத்து விவசாயத்துக்கு முழுமையான முக்கியத்துவம் தரலாம்.
Ø நீர்ச்சிக்கனத்துக்கான சொட்டுநீர்ப்பாசனம் போன்ற மாற்றுப் பாசனமுறைகளை முழுவீச்சில் செயல்படுத்த முயற்சி எடுக்கலாம்.
Ø நதிகளின் உயிர் குடிகொண்டிருக்க
ும் மலைகளையும் அடர்ந்த வனப்பகுதிகளையும் வளர்ச்சி என்ற பெயரில் சுரங்கங்களுக்கும் ஆய்வுகளுக்கும் தாரைவார்ப்பதைத் தவிர்த்து அவற்றின் நீர்ப்பிடிப்பை அதிகரிக்க திட்டங்கள் தீட்டலாம்.
கவர்ச்சிகரமான, நடைமுறை சாத்தியமல்லாத அழிவுத்திட்டமான இத்திட்டத்துக்கு மாற்றாக நீடித்த பலனளிக்கும் பலவழிமுறைகள் இருக்க அவற்றைத் தெரிந்துகொள்ளவும் உணரவும் மறுக்கும் அரசின் போக்கு வேதனை தருவதாக உள்ளது.
நம் சூழலையும் அழித்து பல்லுயிரின சமநிலையை கெடுத்து பல லட்சம் கோடி வரிப்பணத்தையும் வீணடிக்கும் நதிநீர் இணைப்புத்திட்டம் நிச்சயம் கைவிடப்படவேண்டும். நதிகளை இணைத்துவிட்டால் ஏதோ விவசாயம் செழித்து இந்தியாவே பச்சைப்பசேல் என மாறிவிடும் என்ற மாயையில் சிக்கியிருக்கும் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது. நதிகளை அவற்றின் போக்குக்கு பாய்ந்தோட விடுவோம். நதிகள் நமக்கானவையல்ல. நமக்குமானவை!
நேற்று, 12:20 PM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக