சனி, 24 பிப்ரவரி, 2018

பணமதிப்பிழப்பு லாபம் இல்லை நட்டம் சீமான் அறிக்கை நாதக பணத்தாள் மோடி மன்னிப்பு கறுப்புப்பணம்

aathi tamil aathi1956@gmail.com

12/11/17
பெறுநர்: எனக்கு
*தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்திட்ட பிரதமர் நரேந்திர
மோடி பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்*

மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகளைக் கண்டித்து நாம் தமிழர்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஓர் ஏழைப்பிரதமர் நாட்டையாளப் போகிறார் எனப் பரப்புரை மேற்கொண்டு
ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த பாஜக, ஏழை எளிய மக்களுக்குக்
கேடுவிளைவிக்கக்கூடிய அத்தனை திட்டங்களையும் மொத்தமாக நிறைவேற்றி
அவர்களின் வயிற்றிலடித்துவிட்டது. வளர்ச்சி எனும் வர்ணம்பூசி மக்களுக்கு
விளையும் இன்னல்களை மறைக்க முயல்வதில் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதத்தை
கூடத் தன்மக்கள் நலனில் காட்டவில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.
இவ்வரசு அமுல்படுத்திய பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா
போன்ற தவறான பொருளாதார முடிவுகள் நாட்டு மக்களுக்குத் தாங்கொணாத்
துயரத்தைத் தந்து மிகப்பெரும் பொருளாதாரப் படுதோல்வியை எய்திவிட்ட
நிலையில் அவைகளை இன்னும் தனது ஆட்சியின் சாதனைகளாகக் காட்ட முயலுவது
அபத்தத்தின் உச்சமாகும்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற நாடாகவும்,
கல்வியறிவில் தன்னிறைவை எட்டாத நாடாகவும், கிராமப்புறங்களைப் பெருமளவு
கொண்டிருக்கிற நாடாகவும் விளங்குகிற இந்திய நாட்டில் மக்களின் வாழ்வோடு
நேரடித்தொடர்புடைய ஒரு மிக முக்கியப் பொருளாதார முடிவை எடுக்கிறபோது அதனை
எத்தனை முறை அலசி ஆராய்ந்து, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொண்டு எடுக்கத் துணிய வேண்டும் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாது
எல்லா மரபுகளைத் தூரத்தள்ளிவிட்டுத் தான்தோன்றித்தனமாக ஓர் நள்ளிரவில்
ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து, அதனைக் கறுப்புப்பணத்திற்கு
எதிரான போர் எனப் பிரகடனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அச்சம்பவம்
முடிந்து ஓராண்டைக் கடந்திருக்கிற நிலையில் அப்போரினால் விளைந்த நன்மைகளை
நாட்டு மக்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும். பண
மதிப்பிழப்பிற்குப் பிறகு குறிப்பிட்ட விழுக்காடு பணம் வங்கிக்குத்
திரும்பவே திரும்பாது; அதுவே கறுப்புப்பணம் என்றும், அதனைக் கண்டறிந்து
அவ்விழுக்காட்டினைப் பெற்று மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவோம்
என்றும் அள்ளி அளந்துவிட்ட நரேந்திரமோடி தற்போது கறுப்புப்பணம் முற்றும்
முழுதாக ஒழிந்துவிட்டதா என்ற பாமரனின் கேள்விக்குப் பதில் சொல்ல
வேண்டும்.

 செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் 99 விழுக்காடு பணம்,
அதாவது, புழக்கத்திலிருந்த 15,44,000 கோடி ரூபாய் பணத்தில் 15,28,000
கோடி ரூபாய் பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது
ஆண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் வங்கிக்குக் கிடைத்த
இலாபம் வெறும் 16,000 கோடி ரூபாய். ஆனால், புதிதாக ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்க ஆன செலவோ 21,000 கோடி ரூபாய் எனும்போது பண மதிப்பிழப்பில்
5,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில் எதனை
அடிப்படையாக வைத்து இதனை வெற்றிகரமான நடவடிக்கை எனப் பாஜகவினர் ஆனந்தக்
கூத்தாடுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பண மதிப்பிழப்பு
நடவடிக்கை படுதோல்வி என்று நாடு முழுக்க அறியப்பட்டுவிட்ட பிறகும்
எதற்குக் கபடவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முனைய வேண்டும்? கறுப்புப்பண
ஒழிப்பு என்றும், கள்ளப்பண ஒழிப்பு என்றும், பணமில்லா பரிவர்த்தனை
என்றும் இலக்கினை மாற்றிக்கொண்டே வந்த பாஜக அரசு, தற்போது வரிஏய்ப்புச்
செய்தவர்கள் இதன்மூலம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்று புதிய
பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கிறது. வரி ஏய்ப்புச் செய்தவர்களைக்
கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால் அதற்கு
அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையுமே போதுமே, அதற்கு எதற்குப் பண
மதிப்பிழப்பு? வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள்
வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம்
எதற்காக நடக்கிறது? எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாது 3 இலட்சம் கோடி
கறுப்புப்பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது என்று மனம்போன போக்கில் கூறிய
பிரதமர் மோடி அதுகுறித்து வெள்ளையறிக்கையை வெளியிடத் தயாரா? மேலும்,
மீட்கப்பட்டுவிட்டதாக அவர் கூறும் கறுப்புப்பணத்தினைக் கொண்டு மக்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன திட்டங்களைத் தீட்டப் போகிறார் எனக்
கூறுவாரா?

பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட சரிவிலிருந்து நாடு மீண்டு வருவதற்குள் சரக்கு
மற்றும் சேவை வரி மசோதாவை அறிமுகம் செய்வித்துத் தற்போது அதுவும்
தோல்வியில் முடிந்து இந்தியப் பொருளாதாரம் அதளப் பாதாளத்திற்குச்
சென்றிருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் சந்தை
விரிவாக்கத்திற்கு உதவும் இவ்வரிக்கொள்கையால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான
சிறுகுறு தொழில்கள் மொத்தமாய் முடங்கிவிட்டது. உலகிலேயே அதிகப்படியாக
மறைமுக வரி ( INDIRECT TAX) விதித்து மக்களின் உழைப்பைச் சுரண்டும்
இந்திய நாட்டின் வரிக்கொள்கையை மாற்றியமைக்காது 28 விழுக்காடு வரை
ஜி.எஸ்.டி. வரிபோட்டு மக்களின் இரத்தத்தை அட்டைப்பூச்சியாய் மாறி
உறிஞ்சுகிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. சரக்கு மற்றும் சேவை வரிமுறை
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநிலங்களின் பொருளியல்
உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்று தொடக்கத்திலேயே நாம் தமிழர்
கட்சி இவ்வரி முறையினை எதிர்த்தது. மேலும், அத்திவாசியப் பொருட்களின்
மீது அதிகப்படியான வரிவிதிக்கப்பட்டுள்ளதால் இது மக்களை வெகுவாகப்
பாதிக்கும்; ஆகவே, இவ்விழுக்காட்டினைக் குறைக்க வேண்டும் என்றும்
தெளிவுபடக் கூறியது. இன்றைக்கு அதனை வழிமொழிவது போல, ஜி.எஸ்.டி. வரி
கவுன்சிலானது, 178 பொருட்களின் மீதான வரியை 28 விழுக்காட்டிலிருந்து 18
விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. ஆனாலும், மாற்றுத்திறனாளிகள்
உபகரணங்களுக்கான 18 விழுக்காடு வரி, தீப்பெட்டிகளுக்கு விதிக்கப்பட்ட 18
விழுக்காடு வரி, திரைப்படங்களுக்கான அதிகப்படியான வரி போன்றவை இன்னும்
தளர்த்தப்படாமலிருக்கிறது. அவற்றின் வரிவிழுக்காட்டையும் குறைக்க
வேண்டும் என்ற சராசரி மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பிறகு மத்திய அரசு
செவிசாய்த்திடவேண்டும். இந்தத் திடீர் வரிகுறைப்பு நடவடிக்கைகளானது
குஜராத்தில் நடைபெறவிருக்கிற தேர்தல் சுய இலாபத்திற்காகத்தான் என்றாலும்,
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் மக்கள் பெருமளவு
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதையே
இதுகாட்டுகிறது. ஆகவே, மத்திய அரசானது தனது தவறான பொருளாதார முடிவுகள்
தோல்வியடைந்துவிட்டதை இனியாவது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் இந்தியா மிகப்பெரிய
பொருளாதாரச் சரிவினைச் சந்தித்திருக்கிறது என்கிறது உலக வங்கியின் தெற்கு
ஆசிய பொருளாதார நோக்கம் என்ற தலைப்பில் வெளியான ஒரு அறிக்கை. இதனை
அடியொற்றியது போல, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாய்
மோடியும், ஜெட்லியும் குலைத்துவிட்டார்கள் என்கிறார் அவர்களது கட்சியின்
மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2
விழுக்காடு வரை குறைந்து, 3 இலட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது
என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆகையினால்,
நாடு எதிர்கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியை நாட்டையாளும் பாஜக அரசு
வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தோடு, பண மதிப்பிழப்பு,
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு
மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க
மன்னிப்புக்கோர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக