சனி, 24 பிப்ரவரி, 2018

வ.உ.சி தெலுங்கர் ஆல் இருட்டடிப்பு மபொசி மீண்டும்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் 5.9.1872
“கப்பலோட்டிய தமி்ழர்”
வ.உ.சிதம்பரனார்
பிறந்த நாள்
05.09.1872
பிரித்தானிய அரசுக்கு எதிராக “கப்பலோட்டிய தமி்ழர்” என்று வ.உ.சிதம்பரனாரை தமிழர்கள் போற்றிக் கொண்டாடி வருகிறோம். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரை பேராயக் கட்சி கொண்டாடவில்லை. இந்திய விடுதலைக்கு உழைத்த தமிழர்களை வடநாட்டுத் தலைமை கொண்ட பேராயக் (காங்கிரசு) கட்சி என்றுமே புறக்கணித்து தான் வந்துள்ளது. அதில் வ.உ.சியும் விதிவிலக்கல்ல. வ.உ.சி. தமிழராக மட்டுமல்லாமல் வர்ணதர்மத்திற்கு எதிராகவும், வகுப்புவாரி இடவொதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்ததை பிராமண காங்கிரசு தலைமையால் சீரணித்துக் கொள்ள முடிய வில்லை.
பேராயக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர் தெலுங்கு பிராமண பட்டாபி சீதாராமையா, தான் எழுதிய ‘காங்கிரசு வரலாறு’ நூலில் ஒருவரி கூட வ.உ.சி.யைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனாலும் மறைக்கப்பட்ட வ.உ.சி. வரலாற்றை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.
வ.உ.சி. திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதர்- பரமாயி அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யின் உடன் பிறந்தோர் அறுவர்; அதில் ஒருவர் தமக்கையார், இருவர் தங்கையர், தம்பியர் மூவர்.
உலகநாதர் ஒட்டப்பிடார நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் வ.உ.சி.யை அங்குள்ள திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளியின் தமிழாசிரியர் வீரப்பெருமாள் அண்ணாவியார் என்பவர் நல்ல தமிழ்நூல்கள் பல கற்பித்து வ.உ.சி.யின் தமிழுணர்வுக்கு அடித்தளமிட்டார். தமிழ்மொழியை மிக ஆர்வத்தோடு கற்று வந்த – வ.உ.சி.க்கு ஆங்கில மொழியையும் சேர்த்துப் பயில உலகநாதர் விரும்பினார். அதன்படி அதே ஊரில் – தமது சொந்த செலவில் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவி நாதபிள்ளை என்பவரை ஆசிரியராக நியமித்தார். அப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் வ.உ.சி. தூத்துக்குடி சென்று அங்குள்ள புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், கால்டுவெல் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றார்.
வ.உ.சி.யின் குடும்ப மூதாதையர்கள் பலரும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர். அதன்வழியில் வ.உ.சி.யும் செல்ல விரும்பினார். திருச்சிராப்பள்ளி சென்று கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் ஆகிய இருவரிடமும் சட்டம் பயின்று 1895இல் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்றார். ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய போது ஏழை மக்களின் சார்பாக வாதிட்டார். எவ்வித கட்டணமும் இன்றி வழக்கை நடத்தி நீதி பெற்றுத் தருவதிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதிலும் உறுதி காட்டினார். இதில் கையூட்டுப் பெற்ற நீதிபதிகளும் தப்பமுடியவில்லை. நீதிபதிகள் ஏகாம்பர ஐயர், வாசுதேவராவ், பஞ்சாபகேச ஐயர் ஆகியோருக்கும் தண்டனை பெற்றுத் தந்தார்.
1895இல் வ.உ.சி. வள்ளியம்மை என்பவரை மணமுடித்தார். திருக்குறளை பொருளோடு கூறுவதில் வள்ளியம்மை சிறந்தவர். 1901இல் எதிர்பாராத அவரின் மரணம் வ.உ.சி.யை நிலைகுலையச் செய்தது.
பின்னர், மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியன், வாலேசுவரன், ஞானாம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி- என்று இவ்விணையர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
வ.உ.சி. வழக்கறிஞர் பணி புரிந்தபோதிலும், அவரின் மனம் ஆன்மிகத்தையே நாட்டங் கொண்டது. 1900இல் வெளிவந்த “விவேகபாநு” ஆன்மிக இதழோடு தம்மை பிணைத்துக் கொண்டார். தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையிலும் உறுப்பினராக சேர்ந்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். திருக்குறள் மீதும் மிகுந்த பற்று கொண்டு விளக்க உரை நிகழ்த்தி வந்தார்.
ஆன்மிக, இலக்கியத் தேடலில் கவனம் கொண்டிருந்த வ.உ.சி.யை அப்போது திலகர் தலைமையில் நடைபெற்று வந்த சுதேசி இயக்கம் ஈர்த்தது. பிரித்தானியரின் வங்கப் பிரிவினையை எதிர்த்து அன்னிய ஆடை எரிப்புப் போராட்டம் நாடெங்கும் நடைபெற்று வந்தது. இதைக்கண்டு எழுச்சி பெற்ற வ.உ.சி. வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு சுதேசிப் போராட்டத்தில் ஈடுபட முன்வந்தார். தம்மிடமிருந்த அத்தனை அன்னிய ஆடைகளையும் தீயிலிட்டுக் கொளுத்தினார். “எரிவது ஆடையல்ல: அயலார் ஆட்சியே” என்று முழங்கினார். அயலார் பொருள்கள் எதையும் வாங்குவதில்லை என்று உறுதியும் பூண்டார்.
வட இந்தியரும் வியக்கும் வகையில் சுதேசியம் என்னும் கோட்பாட்டிற்கு அவர் தந்த செயல்வடிவம்தான் சுதேசிக் கப்பல் நிறுனமாகும். “சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி” ( Swadesi steam navigation company) என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட அந்நிறுவனம் 1882ஆம் ஆண்டின் இந்திய நிறுவனச் சட்டப்படி 16.10. 1906 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிறுவனத்தின் மூலதனம் பத்து இலட்சமாகும். பங்கு ஒன்றுக்கு ரூ 25 வீதம் 40,000 பங்குகளை விற்பனை செய்து மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொ.பாண்டித்துரையாரும், செயலாளராக H.A.R.ஹாஜி பக்கீர் முகமது சேட்டும், துணைச் செயலாளராக வ.உ.சி.யும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர் அவர்கள் ஒரு இலட்சமும், செயலாளர் அவர்கள் இரண்டு இலட்சமும் செலுத்தி அதிகளவிலான பங்குகளைப் பெற்றனர்.
சுதேசி நிறுவனத்தின் கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து மும்பை துறைமுகத்திற்கு வரவிருப்பதை அறிந்து வ.உ.சி. மும்பைக்குச் சென்றார். அப்போது அவரது மூத்த மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி பேரிடியாய் காதில் விழுந்தது. பலர் ஊருக்கு திரும்பி வரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். அவற்றைப் புறந்தள்ளி, “கப்பலுடன் மட்டுமே நான் வருவேன்” என்று உறுதிபட தெரிவித்தார்.
சில மாதங்கள் கழித்து 1907ஆம் ஆண்டு மே திங்கள் “காலியா” என்று பெயர் சூட்டப்பட்ட கப்பலோடு தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தார். அப்போது அங்கு கூடி நின்ற மக்கள் ” வீரச்சிதம்பரம் வாழ்க” என முழக்கமிட்டனர். இக்கப்பலில் 42 முதல்வகுப்பு பயணிகளும், 24 இரண்டாம் வகுப்பு பயணிகளும், 1300 சாதாரண வகுப்பு பயணிகளும் இருப்பதற்கும், 4000 மூட்டைச் சரக்குகள் ஏற்றுவதற்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது.
“லாவா” என்ற மற்றொரு கப்பலை வ.உ.சி.யின் வழிகாட்டுதலில் எஸ்.வேதமூர்த்தி என்பவர் பிரான்சுக்கு செனறு வாங்கி வந்தார். அத்தோடு இரண்டு விசைப்படகுகளும் வாங்கப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு கப்பல்களை வாங்கி சாதனை படைத்த வ.உ.சி.யை பல்வேறு இந்திய ஏடுகள் பாராட்டி எழுதின. பாரதியார் “இந்தியா” ஏட்டில் கருத்துப்படம் வெளியிட்டு சிறப்பித்தார்.
வ.உ.சி. விரும்பியபடி, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதற்கு மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு நல்கினர். இதனைக் கண்ட பிரித்தானியரின் பி.ஐ.எஸ்.என். கப்பல் நிறுவனம் பயணிகளிடம் கட்டணம் வாங்காமல் இலவசமாக ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. மக்கள் அவற்றைப் புறக்கணித்து சுதேசிக் கப்பலையே நாடினர். இதன் காரணமாக பிரித்தானிய கப்பல் நிறுவனத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 30,000 இழப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பிரித்தானியரின் அரசு, சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டியது. வ.உ.சி.க்கு இருந்த பிரித்தானிய எதிர்ப்புணர்வு – மற்ற பங்குதாரர்களிடம் இல்லை. வருவாயை நோக்கமாகக் கொண்ட பங்குதாரர்கள் அவரை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகும்படி செய்தனர். வெறும் சம்பளம் பெறும் பணியாளராக வ.உ.சி.யை வைத்திருக்கவே விரும்பினர். இதற்கு வ.உ.சி. உடன்பட மறுத்து சுதேசிக் கப்பல் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் இயங்கி வந்த போதே வ.உ.சி. 1908இல் திருநெல்வேலியில் “தேசாபிமான சங்கம்” என்னும் புதியதொரு அமைப்பைத் தொடங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்திய விடுதலைப் பரப்புரையை மேற்கொண்டிருந்தார். அப்போது எழுந்த கோரல் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டம் அவரை தொழிலாளர் இயக்கத்தின்பால் ஈர்த்தது.
27.2.1908 இல் கோரல் ஆலைத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வேலை நேரக் குறைப்பு, வார விடுமுறை கேட்டு போராட்டத்தில் இறங்கினர். வ.உ.சியோடு சுப்பிரமணிய சிவா அவர்களும் இணைந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ததால் போராட்டம் வீறு கொண்டது. ஆலை நிர்வாகம் வேறுவழியின்றி அடிபணிந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.
இதனிடையில், “வந்தே மாதரம்” இதழ் நடத்திய அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த விபின் சந்திரபால் அவர்களுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆறுமாத கால தண்டனை விதித்தது. இவர் விடுதலை அடையும் (9.3.1908 அன்று) நாளினைச் சிறப்பாகக் கொண்டாட வ.உ.சி. முடிவு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கு தடை விதித்தார். தடையை மீறி சந்திரபாலின் விடுதலை நாள் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்டது. வ.உ.சி.யின் சட்டமீறலைத் தனக்கு விடுக்கப்பட்ட சவலாகக் கருதிய ஆட்சித் தலைவர்
12.3.1908 இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
வ.உ.சியும், மற்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கேட்டு திருநெல்வேலி- தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் கோப ஆவேசத்தோடு கிளர்ந்தெழுந்தனர். இரயில் நிலையக் கடைகள் மூடப்பட்டன. அஞ்சலகங்கள், மண்ணெண்ணெய்க் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. மாவட்ட ஆட்சித் தலைவர் விஞ்சும், ஆட்சித் துணைத் தலைவர் ஆஷ்சும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் இறந்தனர். வேலைக்குத் திரும்பிய கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வ.உ.சி. கைதைக் கண்டித்து அரசியல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் செயலற்று நின்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், தொழிலாளர்கள் முதன்முதலாக வேலை நிறுத்தம் செய்தது, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள்தான் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பிறகு, திலகர் கைது செய்யப்பட்ட போது அதே ஆண்டில் மும்பைத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலை நிறுத்தம் செய்து அரசியல் ஆர்ப்பாட்டம் நடத்தியது வரலாற்றில் குறிக்கப்பட்டிருக்கிறது. அதைவிட எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், தூத்துக்குடியில் தொழிலாளர்கள் நடத்திய இந்திய விடுதலை ஆதரவுப் போராட்டம் அனைத்திந்திய அளவில் சொல்லப்படுவதில்லை.
வ.உ.சி. கைதையொட்டி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கண்டனப் போராட்டம் நடத்தியதால் மாவட்டம் செயலற்றுப் போனது.
பிரித்தானிய அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டி விட்டார் வ.உ.சி என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எந்த அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத தண்டனையை நீதிபதி ஏ.எப்.பின்ஹே அறிவித்தார்.
அரசு நிந்தனைக்கு 20 ஆண்டுகளும், சிவாவிற்கு உதவி செய்ததற்காக 20 ஆண்டுகளுமாக மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அத்துடன் நாடு கடத்தல் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். அதாவது இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனையாகும். உயர்நீதி மன்றம் மற்றும் இலண்டன் பிரிவி கவுன்சில் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் நாடுகடத்தல் நீக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாக தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.
வ.உ.சி. கோவைச் சிறையில் இரண்டு ஆண்டுகளும், கண்ணனூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளுமாக மொத்தம் நான்கரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
அவரை சுட்டெரிக்கும் வெயிலில் எண்ணெய்ச் செக்கினை இழுக்க வைத்த பிரித்தானியரின் கொடுஞ்செயல் மனித மாண்புக்கு இழுக்கானது. இதைக்காட்டிலும 24.12. 1912 அன்று கண்ணனூர் சிறையிலிருந்து வெளியே வந்த வ.உ.சி.க்கு பெரும் பாவச் செயல் ஒன்றும் நடந்தது.
வ.உ.சி.யை வாசலில் வரவேற்க பேராயக்கட்சி கூட்டமோ, மக்கள் கூட்டமோ கடலலையென ஆர்ப்பரித்து நின்று மாலை அணிவித்து வரவேற்றிருக்க வேண்டும், யாரும் வரவில்லை! வந்தவர்கள் 4 பேர். வ.உசி.யின் மனைவி, மைத்துனர், நண்பர் கணபதி, தொழு நோயாளி சுப்பிரமணிய சிவா ஆகிய நால்வரும் ஆனந்தக் கண்ணீரோடு வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
சிறைவாழ்வுக்குப் பின் மீண்டு வந்த வ.உ.சி. அவர்களை வறுமையும் பிணியுமே வாட்டி வதைத்தன. அரிசி, நெய், மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தும் மீடேற முடியவில்லை. திலகர் சுயராச்சிய நிதியிலிருந்து மாதம் ரூபாய் 50 அனுப்பி வைத்தார். செல்வத்தோடு வாழ்ந்து வந்தவர் வறுமையோடு வாழவும் பழகிக் கொண்டார்.
1920களில் காந்தியார் தலைமையில் பேராயக்கட்சி செயல்பட்ட போது அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வ.உ.சி. மறுத்து விட்டார். காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்த நிலையில், அதை ஏற்க மறுத்து பேராயக் கட்சியிலிருந்து விலகினார். அதன் பின்னர் அரசியல் பணிகளில் தன் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு தமிழ்ப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வ.உ.சி. சிறையிலிருக்கும் போதே அவர் எழுதிய சிறைப்பாடல்கள், செய்யுள் வாசகங்கள் படிப்போர் நெஞ்சைப் பிழிய வைக்கும். தந்தைக்கு.. மனைவிக்கு.. என்று தனித்தனியே எழுதி தமது அன்பை வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற ஆங்கில மொழி அறிஞர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் போன்றவை ஜேம்ஸ் ஆலனின் மூல நூல்களைப் போலவே ஒத்திருக்கும்.
வர்ணாசிரம எதிர்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி ஆதரவுக் கோரிக்கை, தமிழ்ப் பற்று, ஆகியவை வ.உ.சி. அவர்களிடம் நிரம்ப இருந்தன. வர்ணாசிரம கொள்கை எதிர்ப்பின் காரணமாக பெரியார் அவர்களோடு நெருங்கிய நட்பு வ.உ.சி.க்கு இருந்தது.
நீதி போதனையை உரைக்கும் மெய்யறிவு, மெய்யறம் நூல்கள் அவரின் எழுத்தாற்றலுக்கு சான்று பகரும். பதிப்புத் துறையிலும் வ.உ.சி. கால் பதித்தார். அவர் பதிப்பித்த திருக்குறள் மணக்குடவர் உரை, அறத்துப்பால்; தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், இளம்பூரணம்; இன்னிலை ஆகிய நூல்களைக் கற்றவர் எவரும் போற்றுவர்.
தம் வாழ்வின் இறுதியில் வ.உ.சி. கடும் நோய்வாய்ப்பட்டார். தண்ணீர் கூட பருக முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பாரதியாரின் பாடலை பாடக் கேட்டு இன்புற்றார். அப்போது, ” என்னை சிறையிலடைத்து துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடிய வில்லையே” என்று கண்ணீர் மல்கினார். மனைவி, மக்கள், சுற்றத்தார் சூழ்ந்திட 18.11.1936 இல் வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.
ஆங்கில, தமிழ் பிராமண ஊடகங்கள் வ.உ.சி.யின் மறைவை அப்போது இருட்டடிப்பு செய்தன. அவர் மறைந்த மூன்று ஆண்டுகள் வரை நினைவு நாள் கொண்டாடப்படவில்லை.
வ.உ.சி. மறைவுக்குப் பின் பேராயக்கட்சி சார்பில் கெளரவித்த பெருமை ம.பொ.சியை மட்டுமே சேரும். அவர் தான் வ.உ.சிக்கு சென்னை – பேராயக்கட்சி – அலுவலகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையில்
21.12.1939 இல் மார்பளவு சிலை வைத்து புகழஞ்சலி செலுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.
குறிப்புதவி:
1. மா.ரா. அரசு எழுதிய
“வ.உ.சிதம்பரனார்”
2. ம.பொ.சிவஞானம் எழுதிய “கப்பலோட்டிய தமிழன்”
3. அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்”
நன்றி:
வரலாறு அறிவோம், கதிர் நிலவன்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மாதமிருமுறை இதழ், (செப். 1-15, 2017)
Share this:
  வஉசி கப்பல் பொருளாதாரம் வணிகம் ஆங்கிலேயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக