திங்கள், 3 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் பலமுறை மூட உத்தரவு 22 ஆண்டுகள் போராட்டம் வழக்கு அரசியல் விகடன் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., பிற்பகல் 1:02
பெறுநர்: நான்
Posted Date : 18:54 (02/04/2013) Last updated : 18:34 (02/04/2013)
அன்றிலிருந்து இன்று வரை...ஸ்டெர்லைட் கடந்து வந்த பாதை!

குஜராத்திலும், கோவாவிலும் அனுமதி கிடைக்காமல் தவித்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆசியோடு தூத்துக்குடியில் கால் பதித்தது. ‘இந்த ஆலை மூலம் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு வரும்’ என அச்சத்தை உணர்த்திய சமூக ஆர்வலகர்கள், ஆலை நிர்வாகத்துக்கு எதிராக அந்த வருடமே போராட்டத்தையும் தொடங்கினார்கள்.

கடந்த 18.3.1996 அன்று தூத்துக்குடிக்கு வந்த ஜெயலலிதாவிற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். 
தொடர் போராட்டங்களை அடுத்து, 20.3.96 அன்று தாமிரத்தாது ஏற்றிவந்த கப்பல் திருப்பி அனுப்பபட்டது. 
10.4.96 அன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து. 
18.4.96 ‘ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வரும் கழிவுகள் கடலில் கலக்காது’ என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
 ‘மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரத்துக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும் என்றும், அதைச் சுற்றிலும் பசுமைவளையம் அமைக்கப்பட வேண்டும்’ என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை நிர்வாகத்திற்கு கண்டிப்பான உத்தரவு போட்டது.


இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜாதி கலவரம் வெடித்தது. 
கலவரத்தை ஆய்வு செய்ய வந்த முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், ‘தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை. அதனால்தான் இதுபோன்று ஜாதி கலவரங்கள் ஏற்படுகிறது’
என அறிக்கை தாக்கல் செய்தார். 

அந்த சமயத்தில் பொதுவாக ‘தொழிற்சாலைகள் வந்தால் நல்லது’ என்கிற மனநிலை உருவானது. 
இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குரல் தேவையில்லாது’ என்பது போல் பேசப்பட்டது. 
அந்த இடைவெளியில் ஸ்டெர்லைட் ஆலை துவக்கப்பட்டது.

அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார்.
 எதிர்ப்பு போராட்டத்தில் மும்முரமாக இருந்த சிலருக்கு சில சலுகைகளை செய்து கொடுத்தது ஆலை நிர்வாகம்.
 அதனால் பழைய போராட்டக்காரர்கள் அமுங்கி போக, சலுகைக்காகவே சில புதிய போராட்டக்காரர்கள் உருவாகி பின்ன்னர் அவர்களும் காணாமல் போனார்கள்.

போராட்டம் நடத்துவதில் பலனில்லை என்பதை உணர்ந்த ‘தூய சுற்றுசூழலுக்கான தேசிய அறக்கட்டளை’ என்கிற அமைப்பு, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என கடந்த 7.11.1996 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 வைகோ, மார்க்சிஸ்ட் கனகராஜ் உள்ளிட்ட சிலர் தங்களையும் அந்த வழக்கில் இணைத்துக் கொண்டனர். 
இந்தநிலையில் 5.7.1997 அன்று ஆலையிலிருந்து வெளியான விஷவாயு, அருகிலுள்ள ‘ரமேஷ் ஃப்ளவர்’ என்கிற தொழிற்சாலை ஊழியர்களையும், அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்களையும் மயக்கமடைய செய்தது.

இதைத் தொடந்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 1998 வருடம் ‘நீரி’ அமைப்பு ஆலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. 
அதன் அடிப்படையில், சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 23.11.98 அன்று ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ என உத்தரவு போட்டது. 
அதையும் சாதுர்யமாக எதிர்கொண்டது ஆலை நிர்வாகம். 
நீதிபதிகளை மாற்ற நடவடிக்கைகள் நடந்தன. 
அடுத்த மாதத்திலேயே அப்பீல் செய்து ஆலை வழக்கம்போல் இயங்க துவங்கியது.

அதன்பிறகு ஆலை விரிவாக்க பணிகள் துவங்கின.
அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. 
அதனையும் நீரி அமைப்புதான் ஆய்வு செய்தது.
 இம்முறை நீரி அமைப்பு கொடுத்த அறிக்கை ஆலைக்கு ஆதரவாக இருப்பதாக குற்றசாட்டு வெளியானது. 

அதைத் தொடர்ந்து கடந்த 21.9.04 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி குழுவே ஆய்வில் இறங்கியது. ‘கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதியில்லை. எனவே விரிவாக்கம் செய்யக் கூடாது’ என அறிக்கை தாக்கல் செய்தது அந்த குழு. 
ஆனால், மறுநாளே மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்தது. 
அதனைத்தொடர்ந்து போராட்டங்கள் சூடு பிடித்தன. 

மீனவர்கள், வியாபாரிகள், ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி என பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். 
போராட்டத்தின் உச்சமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூட இழுத்து மூடப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 28.9.2010 அன்று சென்னை உயர்நீதி மன்றம், ‘ஆலையை மூடு’ என உத்தரவு
போட்டது. 
ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 
வழக்கு விசாரித்து தீர்ப்பு வரவிருந்த வேளையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆலையிலிருந்து வெளியான விஷவாயு தூத்துக்குடி நகர் முழுவதும் பரவி மக்களை பாடாய் படுத்திவிட்டது.
 அதைத்தொடர்ந்து, போராட்டங்கள் மீண்டும் விஸ்பரூபம் எடுத்தன. 

இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளே இறங்கி விசாரணை நடத்தி ஆலையை மூட அதிரடியாய் உத்தரவிட்டது. 
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆலையை மூடுவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், ஆலையை மூடினால் தங்ங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள் கண்ணீர் மனு கொடுத்தார்கள்.

இந்தநிலையில் எதிர்பார்த்து காத்திருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியானது. ‘நாட்டின் பொருளாதார வளர்ச் சியை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். 
ஆலை மூலமாக எழும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுப்பதற்கும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட கலெக்டரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாக மூன்று மாதங்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். 
அதிலிருந்து வரும் வட்டி மூலம், மேற்சொன்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்'’ என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

''தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு மூலம் ஆலை மூடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு ஆலையை திறக்க மாட்டார்கள். 
ஆனால், நாடாளுமன்ற தேர்லுக்கு பிறகு என்ன நடக்குமோ? சொல்ல முடியாது. நிச்சயமாக அதுவரையிலும் ஆலையை திறக்க மாநில அரசு அனுமதி கொடுக்காது" என்கிறார்கள் போராட்டக் களத்தில் நிற்பவர்கள். 

தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அழுத்தமான குரலில் சொல்லி இருக்கிறார் வைகோ.

வைகோ உள்ளிட்டவர்களின் 17 ஆண்டுகால போராட்டத்திற்கு, நீதிமன்ற தீர்ப்பு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், மிரட்டும் ஆபத்திலிருந்து தூத்துக்குடி மக்களை தற்காலிகமாக காப்பாற்றி வைத்திருக்கிறது தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்!

- எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்

ஸ்டெர்லைட் தூத்துக்குடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக