புதன், 20 செப்டம்பர், 2017

காந்தளூர்சாலை கலமறுத்து அதாவது வில்லங்கம் தீர்த்து காந்தளூர்ச்சாலை விரிவான பதிவு

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
எஸ். இராமச்சந்திரன் | இதழ் 35 | 02-10-2010| அச்சிடு
பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற
சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித்
தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு
தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி
செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன.
இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள்,
அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே
இக்கட்டுரை.
கி.பி. 985ஆம் ஆண்டில் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தார். இது அந்த ஆண்டு ஜூன்
25ஆம் தேதிக்குப் பிறகு நான்கைந்து நாள்களுக்குள் நடந்திருக்க வேண்டும்
என்று வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி கருதுகிறார். தமது
சிற்றப்பன் உத்தமசோழன் ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க விரும்பியதால்
க்ஷத்திரியர்களின் தர்மத்துக்கு இணங்க அவர் ஆள்வதற்கு வழிவிட்டு
இராஜராஜன் விலகி நின்றதாகவும், உத்தம சோழன் ஆட்சிக்காலம்
முடிந்தபின்னர்தாம் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டதாகவும்
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் (சுலோகம் 69-70) குறிப்பிடுகின்றன. 1
இராஜராஜனுக்கு க்ஷத்திரிய சிகாமணி என்ற பட்டம் இருந்தது என்பது
கல்வெட்டுகளால் தெரியவருகிறது. ஆயினும், இராஜராஜ சோழன் க்ஷத்திரிய
தர்மத்துக்கிணங்கப் பதவியை விட்டுக்கொடுத்தார் என்பதெல்லாம் ஆஸ்தானப்
புலவர்களின் புகழ்மொழியே தவிர வேறல்ல.
இராஜராஜ சோழன் ஆட்சி முறையில் மட்டுமின்றி, அரசியல் நெறிமுறைகளிலும் சில
புதிய போக்குகளை உருவாக்கினார் என்பதில் ஐயமில்லை. அவை க்ஷத்திரிய
தர்மப்படியான விட்டுக்கொடுத்தல் என்ற திருவாலங்காடு செப்பேட்டுப்
புகழ்மொழிக்கு நேர்மாறான நெறிமுறைகள் என்பதுதான் விசித்திரம். இராஜராஜ
சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை
கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து
(கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
“ சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “
காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு
விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள
மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள
வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில்
அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள
உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில்
அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம்
காணப்படுகிறது. இவ்வாறு அடையாளம் காணப்படுவதற்குக் காரணங்கள் இரண்டு:
1. மேற்குறித்த திருவாலங்காட்டுச் செப்புப் பட்டயம் இராஜராஜ சோழனின்
முதல் வெற்றி தென் திசை நோக்கிய திக்விஜயம் எனக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னன் அமர புயங்கனை வென்று கடலினையே அகழியாகக் கொண்டதும்
சுடர்விடுகின்ற மதில்களுடன் கூடியதும் வெற்றித் திருவின் உறைவிடமும்
எதிரிகளால் புகமுடியாததுமாகிய விழிஞத்தை வென்றார் என்று அப்பட்டயம்
குறிப்பிடுகின்றது. விழிஞம், திருவனந்தபுரத்திற்குத் தெற்கே கடற்கரையில்
அமைந்துள்ளது. எனவே, இப்பகுதியிலுள்ள காந்தளூரை வென்றதுதான்
திருவாலங்காட்டுச் செப்பேட்டால் உணர்த்தப்படுகிறது என்பது இத்தகைய
பொருள்கோடலுக்கு அடிப்படை.
2. ஆய் வேளிர் ஆட்சிப் பகுதியில், அதாவது குமரி மாவட்ட – கேரள மாநில –
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கல்விச்சாலை
ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தப் பார்த்திவசேகரபுரம் சாலை என்பது 95
சட்டர்களுக்கு (பிராம்மண மாணவர்களுக்கு) த்ரைராஜ்ஜிய வ்யவஹாரம்
(மூவேந்தர் ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகம்) குறித்த கல்வியும்,
பயிற்சியும் வழங்குகின்ற ஒரு நிறுவனம் (கல்விச் சாலை) ஆகும் என்று ஆய்
மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவசேகரபுரம் செப்பேடு (கி.பி. 866)
தெரிவிக்கிறது. இச்செப்பேட்டில் காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக்
கொண்டு பார்த்திவசேகரபுரம் சாலை அமைக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
காந்தளூர்ச்சாலை என்பது இராணுவப் பயிற்சி நிலையமும் நிர்வாகப் பயிற்சி
நிலையமும் இணைந்த, பிராம்மணர்களுக்குரிய ஒரு முன்னோடியான பயிற்சி
நிறுவனமாக இருந்திருக்க வேண்டும். காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு
இத்தகைய இராணுவப் பயிற்சி நிலையத்தை இராஜராஜன் வெற்றி கொண்ட வீரச்செயலைக்
குறிக்கும் என்பது இவ்வரலாற்று ஆய்வறிஞர்களின் முடிபாகும்.
கலமறுத்து என்பது “சேரர்களின் கப்பல்களை அழித்து, அதாவது சேரர்களின்
கடற்படைப் பலத்தைத் தகர்த்து” என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். “ வேலை
கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து ” என்று முதல் இராஜாதிராஜனின் (கி.பி.
1018-1054) மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படுவதால் இவ்வாறு
பொருள்கொள்வதற்கு உரிய முகாந்திரம் இருக்கிறது. 2 கலம் என்ற சொல்
கப்பலைக் குறிப்பதற்கு முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில்
பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையே. (“ அலை கடல் நடுவில் பல கலம்
செலுத்தி. ”) மேற்கண்ட குறிப்புகளிலிருந்து காந்தளூர்ச்சாலை என்பது சேர
நாட்டின் கடற்கரையையொட்டி அமைந்திருந்த ஓர் இடம் என்று தெரிகிறது.
ஆயினும், இது ஒரு கடற்படைத் தளமாக இருந்திருப்பின் காந்தளூர்ச்சாலை என்ற
பெயரினைக் காந்தளூர்த் துறைமுகம் என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்குச் சாத்தியமில்லை.
மேலும், காந்தளூர்ச்சாலையை முன்மாதிரியாகக்கொண்டு அமைக்கப்பட்ட
பார்த்திவசேகரபுரம் சாலைக்கு வழங்கப்பட்ட அறக்கட்டளைச் செயல்பாடு
‘சாலாபோகம் ’ என்றே மேற்குறிப்பிடப்பட்ட செப்பேட்டில்
குறிப்பிடப்படுகிறது. இது கல்விச்சாலை – பயிற்சிக்கூடம்தானே தவிர
துறைமுகத்துடன் இதற்குத் தொடர்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறது.
மேலும், “ வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டுகொண்டு
அல்லவோ” என்ற கலிங்கத்துப்பரணிப் பாடல் வரிகள் உள்ளன. விழிஞம் என்பது
கடற்கரையில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பது இதன்மூலம்
புலப்படுத்தப்படினும், இதை வைத்துக் காந்தளூர்ச்சாலை என்ற நிறுவனம்
விழிஞத்துக்கு அருகிலிருந்தது என்று பொருள்கொள்ள இயலாது. இவை சோழ
மன்னனின் படை வலிமையால் வெற்றி கொள்ளப்பட்டன என்று மட்டுமே பொருள்படும்.
எனினும், இத்தகைய காரணங்களால் பாண்டிய, சேர நாடுகளின் எல்லைப் பகுதியில்,
திருவனந்தபுரம் அருகில் கடற்கரையில் காந்தளூர்ச்சாலை இருந்திருக்க
வேண்டுமென்று அறிஞர்கள் முடிவுசெய்தனர். இன்றுவரை இக்கருத்தே
ஏற்கப்பட்டுள்ளது. கலம் என்ற சொல்லுக்கு உண்கலம், முகத்தல் அளவையில் ஓர்
அளவு, படைக்கலம் என்பன போலப் பல பொருள்கள் உண்டு. கலன் என்ற சொல்லுக்கு
வில்லங்கம் என்ற ஒரு பொருளும் உண்டு. கி.பி. 1220ஆம் ஆண்டுக் கல்வெட்டு
ஒன்றில் 3 “ இவ்வூர்க்கு எப்பேர்ப்பட்ட கலனுமில்லை; கலனுளவாய்த் தோற்றில்
நாங்களே தீர்த்துக் கொடுப்போமாகவும்” என்ற வாசகம் காணப்படுகிறது. 19ஆம்
நூற்றாண்டுவரை ஓலைச்சுவடிகளில் எழுதப்படும் நில விற்பனை போன்ற ஆவணங்களில்
“இந்த சாசனத்தில் யாதொரு கலனும் இல்லை. கலன் ஏதுமிருப்பின் நானே கலன்
தீர்த்துத் தருவேனாகவும்” என்று விற்பனை செய்பவர் எழுதிக் கையொப்பமிடும்
வழக்கம் இருந்தது.
கலன் என்ற சொல் கலம் என்பதன் திரிபு (கடைப்போலி) ஆகும். இது கலகம், கலாம்
என்ற என்ற சொற்களின் திரிபெனத் தோன்றுகிறது. பூசல், போட்டி என்ற பொருளில்
புறநானூற்றில் (69:11) ‘கலாம்’ குறிப்பிடப்படுகிறது. அத்தகைய ஒரு
பொருளில் கலமறுத்து என்பது வில்லங்கம் தீர்த்து என்ற பொருளிலோ, எந்த ஒரு
வில்லங்கத்துக்கும் இடமில்லாத வகையில் போட்டியில் வென்று என்ற பொருளிலோ
பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 4 இராஜராஜ சோழனின் தகப்பன் சுந்தர சோழனின்
ஆட்சிக்காலத்தில் வேத சாக்கைகளை ஒப்பித்து விளக்கம் சொல்லிச் சில சட்ட
நுணுக்கங்களை மெய்ப்பித்தல் என்பது ‘மெய்க்காட்டுதல்’ என்றும், இத்தகைய
போட்டிகளில் வென்று எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் ஒரு
வழக்கின் சட்டக்கூறுகளை மெய்ப்பித்தவர் “கலமறுத்து நல்லாரானார்” என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை சிவன் கோயிலில்
பொறிக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டில் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் இரவு
நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டக்கூற்றினை மெய்ப்பிக்க வல்ல வேதமறிந்த
பிராம்மண மாணவர்களிடையே போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி
பெற்றவர்களுக்குச் சிறப்புகள் செய்யப்பட்டன என்ற செய்தி பின்வருமாறு
குறிப்பிடப்படுகிறது:
ஜைமினிகள் சாம வேதத்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்ப்பாதத்து ஒரு
துருவும் கரைப்பறிச்சு பட்டம் கடத்துப் பிழையாமே சொன்னார் ஒருகாற்
கொண்டார் அல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டினார் எல்லாரும் தம்மில்
அஞ்சுபுரியிலும் சொல்லிக் கலமறுத்து நல்லாரானார் ஒருவர்க்கு வ்ருத்தியான
இக்காசு மூன்றும் இத்தேவரே குடுப்பாராக5
அப்படியாயின் காந்தளூர்ச்சாலை என்பது பேரரசர்களுக்கு ஏதோ ஒரு வகையில்
வில்லங்கமாக அமைந்திருந்தது என்றும், அத்தகைய வில்லங்கத்தைத் தீர்த்துப்
பேரரச விரிவாக்கத்திற்கு இருந்த தடையை நீக்கிய செயல்பாடு காந்தளூர்ச்சாலை
கலமறுத்து என்று குறிப்பிடப்பட்டது என்றும் முடிவு செய்யலாம். கி.பி.
8ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டுவரை சேர நாட்டில் ஆட்சி செய்த
மன்னர்கள் சேரமான் பெருமாள் என்றும், பெருமாக்கோதை என்றும்
குறிப்பிடப்பட்டனர்.6 அவர்களுடைய ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற
வடக்கன் பாட்டுகள் போன்ற பழங்கதைப் பாடல்களின் மூலம் சேரமான் பெருமாள்
பதவி என்பது, பரம்பரையாக வருகின்ற அரச பதவி அன்று என்றும், போட்டிகளின்
மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பதவியே என்றும் தெரியவருகின்றன.
மலபார்ப் பகுதியில் (இன்றைய மலைப்புரம் மாவட்டம்) பொன்னாணிக்கு அருகில்
அமைந்துள்ள திருநாவாய் என்ற திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மகாமக விழா நடைபெறுவது வழக்கம். வியாழன் சிம்மத்தில் இருக்கின்ற ஆண்டில்
மாசி மாதம் மக நட்சத்திர நாளில் மகாமகம் திருவிழா நிகழும். ‘மாமாங்ஙம்’
என்று மலையாளத்தில் வழங்கப்படும் இத்திருவிழாவின்போது க்ஷத்திரிய
வர்ணத்தவர்களுக்குள் பலவிதமான போட்டிகள் நிகழும். படைக்கலப் பயிற்சி
(களரிப் பயிற்சி) தொடர்பான போட்டிகளும், ஆட்சிக் கலை தொடர்பான பலவிதமான
நேர்முகத் தேர்வுகளும் நடைபெறும். இப்போட்டிகளுக்கு நடுவராக இருப்பவர் 63
நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் ஆவார். இந்த நாடுவாழிகள் பதவி
என்பது ஆண்வழியாக வருகின்ற பரம்பரைப் பதவியே. இத்தகைய நாடுவாழிகள்
அனைவரும் க்ஷத்திரிய வர்ணத்தவரே.
திருநாவாய் அமைந்திருந்தது வள்ளுவ நாட்டில்தான். வள்ளுவ நாடாழ்வானின்
தலைநகரமாகிய பெருந்தலமன்றம் – வள்ளுவ நகரம் (தற்போதைய பெரிந்தல்மன்னா –
அங்காடிபுரம்) வள்ளுவ நாட்டில்தான் உள்ளது. எனவே, சேரமான் பெருமாளைத்
தேர்ந்தெடுக்கிற போட்டிகள் நிகழும் இடமாக வள்ளுவ நாடாழ்வான் ஆட்சிப்
பகுதியாகிய திருநாவாய் தேர்வு செய்யப்பட்டதன் பொருத்தத்தை நாம் எளிதில்
உணர இயலும். திருநாவாயில் இத்தகைய நிகழ்வு நடந்து வந்தமைக்குக்
கேரளோல்பத்தியிலும் சான்று உள்ளது. 7 பன்னிரு ஆண்டுச் சுழற்சி, வியாழ
வட்டம் எனப்படும். கேரள மாநிலக் கல்வெட்டுகளில் வியாழ வட்டம் காலக்
குறியீடாகப் பயன்படுத்தப்படுவது மரபாகும். இது சேரமான் பெருமாள்
மன்னர்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.
சேர நாட்டில் இத்தகைய ஒரு ஜனநாயக மரபு தென்னிந்திய அரசாட்சி முறை
மரபுகளுக்கு மாறாக எவ்வாறு உருவாயிற்று என்பது ஆய்வுக்குரியது. ஆனால்,
அது குறித்த ஆய்வை மேற்கொள்ளும்முன் அத்தகைய ஒரு மரபில் இராஜராஜ சோழனின்
குறுக்கீடு ஏற்பட்ட பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம். திருநாவாய்த்
திருத்தலத்திற்கு மிக அருகில் காந்தளூர் என்ற ஊர் உள்ளதென்றும்,
அவ்வூரில் ஒரு பெரிய கோயில் உள்ளது என்றும், 1830-35ஆம் ஆண்டுக்குரிய
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி நில அளவைப் பதிவேடுகள்
குறிப்பிடுகின்றன. 8
இந்தக் காந்தளூரே மேற்குறித்த சாலை அமைந்திருந்த காந்தளூராக இருந்திருக்க
வேண்டும். இக்காந்தளூர்ச்சாலையில் போர்ப் பயிற்சியும் நிர்வாகப்
பயிற்சியும் பெற்ற மாணாக்கர்கள் க்ஷத்திரிய வர்ணத்தவராகவே இருந்திருக்க
வேண்டும். 9 பார்த்திவசேகரபுரம் சாலையைப் போன்று த்ரைராஜ்ஜிய
வ்யவஹாரத்துக்குரிய பிராம்மண மாணவர்களுக்குப் பயிற்சியளித்த நிறுவனமாக
இது இருந்திராது என நாம் ஊகிக்கலாம். ஏனெனில், திருநாவாயில் நடைபெற்ற
போட்டிகளில் க்ஷத்திரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இத்தகைய ஒரு
போட்டி நடைபெறுகிற இடமாகத் திருநாவாய் தேர்வு செய்யப்பட்ட காரணம் அல்லது
இத்திருத்தலம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நிகழ்கின்ற ஓர் இடமாக
முன்னரே உருவாகியிருக்கும் பட்சத்தில் மகாமக விழாவின்போது இங்குப்
போட்டிகளை நடத்துவதற்கு நாடுவாழிகள் முடிவுசெய்ததன் காரணம், இவ்வூர்
காந்தளூர்ச்சாலைக்கு அருகில் அமைந்திருந்ததால்தான் போலும்.
காந்தளூர் வள்ளுவ நாட்டில் அமைந்திருப்பதும் நாடுவாழிகளின் தலைவரான
வள்ளுவ நாடாழ்வான் மேற்குறித்த போட்டிகளுக்கு நடுவராக இருந்த நிகழ்வும்
தற்செயலான நிகழ்வுகள் அல்ல என நாம் புரிந்துகொள்ள இயலும்.
காந்தளூர்ச்சாலையில் பயிற்சி பெற்றோர் பிராம்மண வர்ணத்தவராக அன்றி,
க்ஷத்திரிய வர்ணத்தவராகவே, அதாவது அரச குலத்தவராகவே இருந்திருக்க
வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகமான குறிப்பு கி.பி. 8ஆம்
நூற்றாண்டுக்குரிய முத்தரையர் குலச் சிற்றரசன் சுவரன் மாறனின் செந்தலை
(சந்திர லேகைச் சதுர்வேதி மங்கலம்) பாடல் கல்வெட்டில் உள்ளது.
—வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர்
மண் தோற்ற வேந்தர் மனம்
“வண்டுகளுடைய ரீங்காரம் மேகத்தின் முழக்கம்போல ஒலிக்கின்ற காந்தளூரின்
நில உரிமையைப் பறிகொடுத்த வேந்தர்களின் மனம்” என்பது இதன் பொருளாகும்.
காந்தளூர்ச் சாலை என்பது வேந்தர் குலத்துக்குரியதே என்ற பொருளை இது
மறைமுகமாகக் குறிப்பதாகத் தெரிகிறது.10 இது பாண்டியர் – சேரர் கூட்டணியை
எதிர்த்துப் பல்லவர்கள் சார்பாக முத்தரையர் குலச் சிற்றரசன் பங்கேற்ற
போர் குறித்த பாடல் ஆகும்.
இவ்வாறு போட்டிகளின் மூலம் சேரமான் பெருமாளாக முடிசூடுபவர்
தேர்ந்தெடுக்கப்படுகிற நிகழ்வு குறித்துப் பெரியபுராணத்திலும் (வார்கொண்ட
வனமுலையாள் சருக்கம், பா. 132-135) ஒரு வகையான பதிவு உள்ளது. செங்கோற்
பொறையன் எனும் அரசனின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அம்மன்னன் துறவு
மேற்கொண்டு தவம் செய்யச் சென்றுவிட்டான் என்றும், அமைச்சர்கள் சில நாள்
கூடி ஆலோசித்துத் திருவஞ்சைக்களம் கோயிலில் சிவபெருமான் திருத்தொண்டில்
ஈடுபட்டிருந்த பெருமாக்கோதையாரிடம் சென்று ‘மலை நாட்டுச் செய்தி
முறைமை’யால் அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள் என்றும்,
அதன்படி பெருமாக்கோதையாரும் சிவபெருமானிடம் அனுமதிபெற்று அரசாட்சியை
மேற்கொண்டார் என்றும் விவரிக்கப்பட்டுள்ளன.
போட்டிகளின் மூலம் அரசன் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய நேரடியான
குறிப்பு ஏதும் பெரியபுராணத்தில் இல்லையென்பது உண்மையே. மலை நாட்டுச்
செய்தி முறைமை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசராகப்
பதவி ஏற்கும் முன்னர், போட்டியிடுவதற்குத் தகுதி பெற்றவர்கள் கோயிலதிகாரி
எனப்படும் பதவியை வகித்தனர் என்பதற்கும் சேர நாட்டு வரலாற்றில் ஆதாரங்கள்
உள்ளன. கோயிலதிகாரி என்ற பதவி இளவரசர் பதவிக்குச் சமமானது என்றே கேரள
வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுவர். சேரமான் பெருமாள்
திருவஞ்சைக்களத்தில் சிவபிரான் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்ததாகப்
பெரியபுராணம் கூறுவதை இத்தகைய கோயிலதிகாரி பற்றிய குறிப்பாகவே நாம்
கொள்ளலாம். 11 இச்சேரமான் பெருமாள் நாயனாரின் ஆட்சிக்காலம், காடவர் கோன்
கழற்சிங்கன் எனப்பட்ட இராஜசிம்ம பல்லவன் ஆட்சிக் காலமான கி.பி. 730க்கும்
கி.பி. 765க்கும் இடைப்பட்ட 12 ஆண்டுக் காலமாக இருக்க வேண்டும்.
வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வாரும் (கி.பி. 800) இவ்வாறு
பதவிக்கு வந்தவரே. தமது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அவர் துறவு
மேற்கொண்டு திருமால் வழிபாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்து கொண்டதாக அறிய
முடிகிறது. சேர (பெருமாள்) மன்னர்கள் இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டுமே பதவி வகித்தார்கள்; பதவிக் காலத்தின்போதும் அவர்கள் தமக்கென்று
தனி உடைமை ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு துறவியைப் போலவே ஆட்சி
நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் மாதவாச்சாரியாரின் ‘சம்க்ஷேப
சங்கரக்யம்’ என்று குறிப்பிடப்படுகிற சங்கர திக்விஜயம், ஆனந்தகிரியின்
சங்கரவிஜயம் ஆகியவற்றின் அடிப்படையில் சதாசிவ பிரம்மேந்திரர் (கி.பி.
16-17ஆம் நூற்றாண்டு) எழுதிய “ஜகத்குரு ரத்னமாலா” என்ற நூலில் உள்ளது.
ஆதி சங்கரர் காலடியில் பிறந்தபோது கேரள ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர்
ராஜசேகரன் என்றும், அவன் ஆசார்யன் என்றும் யாயாவரனாக இருந்தான் என்றும்
அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன12 .
ஆசார்யன் என்பது பிறருக்குப் போர்க் கலை, நிர்வாகக் கலை ஆகியவற்றைப்
போதிக்கின்ற ஆசிரியன் என்று பொருள்படும். வியாழ வட்டக்
காலக்கணக்கீட்டின்படி 12 ஆண்டுகளே ஆட்சிபுரிகின்ற அரசன் வியாழனின் (குரு)
இயல்புடையவனாகத்தானே இருப்பான்? யாயாவரன் என்பது தனக்கென ஓர் உடைமையும்
வைத்துக்கொள்ளாமல் சுற்றித் திரிகின்ற ஓர் ஆன்மீகவாதியைக் குறிக்கும்.
அத்தகைய யாயாவரன் ஓர் இல்லறத்தானாக இருக்கும்பட்சத்தில் தன்
குடும்பத்திற்குரிய ஒரு வேளை உணவுக்கான பொருளை மட்டுமே சேமிக்கலாம்.
இல்லறத்தானாக இன்றித் தனிமனிதனாக இருக்கும்பட்சத்தில் அடுத்தவேளை
உணவுக்காகக்கூட ஒரு சிறு நெல்மணியையும் சேமிக்க அனுமதிக்கப்பட மாட்டான்.
13 இவ்வாறு ராஜரிஷி போன்று எவ்வித உடைமைமீதும் பற்றின்றி ஓர் ஆட்சியாளன்
இருப்பது என்பது சோழ பாண்டிய நாடுகளில் நடைமுறையில் இல்லை. சேர நாட்டில்
மட்டும்தான் நடைமுறையில் இருந்தது.
இத்தகைய நடைமுறை ஒரு பேரரசை நிறுவித் தனக்குப்பின் தனது சந்ததியினர்
மட்டுமே தொடர்ந்து பேரரசர்களாக உலகாள வேண்டும் என்று விழைகின்ற
தன்முனைப்பும் அதிகார வேட்கையும் படைத்த ஒரு மாமன்னனுக்கு இடையூறாகவே
இருந்திருக்கும் என்பதும், அத்தகைய இடையூற்றினை முழுமையாக நீக்கினால்
மட்டுமே அம்மன்னன் தன் குறிக்கோளை எய்த முடியும் என்பதும் மிக எளிதாகப்
புரிந்துகொள்ளக்கூடிய அடிப்படை உண்மைகளாகும். இத்தகைய நடைமுறைக்கு
அடிப்படையாக இருந்த ஒரு கல்வி நிறுவனத்தைத் தம் படைபலத்தால்
கைப்பற்றுவது, அல்லது அந்நிறுவனத்தையே மூடுவது போன்ற ஒரு வீரச்செயலை
இராஜராஜன் புரிந்துள்ளார். இதனையே தம் முதன்மையான வெற்றியாக அவர்
பறைசாற்றியுள்ளார்.
“ கலமறுத்து நல்லாரானார் ” என்ற கோயில் தேவராயன்பேட்டைக் கல்வெட்டு
வாசகத்தைக் “ காந்தளூர்ச்சாலை கலமறுத்து ” என்ற வாசகத்துடன் ஒப்பிட்டு
இராஜராஜன் காந்தளூரில் இத்தகைய ஒரு போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார்
எனப் பொருள்கொள்வதற்கும் சாத்தியமுண்டு என்றும், ஆயினும் இராஜராஜ சோழனின்
வெற்றி படைபலத்தால் பெற்ற வெற்றி என்பதால் அது இத்தகைய போட்டியைக்
குறித்திருக்க வாய்ப்பிலை என்றும் அறிஞர் தி.நா. சுப்பிரமணியம்
கருதியுள்ளார். 14
கலமறுத்தல் என்பது வில்லங்கம் தீர்த்தல் என்ற பொருளில்
பயன்படுத்தப்படுவதற்கு வேறு ஓர் எடுத்துக்காட்டும் உண்டு. கன்னியாகுமரி
மாவட்டத்தில் தலைக்குளம் என்ற ஓர் ஊர் உள்ளது. இவ்வூரைப் பற்றிய ஒரு
குறிப்பு திருநந்திக்கரையிலுள்ள கி.பி. 8ஆம் நூற்றாண்டைய கல்வெட்டில்
இடம்பெற்றுள்ளது. “ திருநந்திக்கரைப் பெருமக்களும் தளி ஆள்வானும்
குருந்தம்பாக்கத்துக்கூடி தலைக்குளத்து கலமற்ற யாண்டு ஸ்ரீநந்திமங்கலம்
என்று பேரும் செய்து நம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக